ஆர்.கோபிநாத்
கடந்த வாரம் வெளிவந்துள்ள வேளாண் கணக்கெடுப்பு 2015 -2016இன் உத்தேச முடிவுகளைப் பற்றிய பத்திரிகை செய்திகளின்படி, ஒட்டுமொத்தமாக நாட்டில் விவசாயிகளின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் பெருகியுள்ளது. ஆனால், விவசாய நிலங்களின் பரப்பளவு குறைந்துள்ளது. இந்த நிலையில், இந்த வேளாண் அறிக்கையின்படி தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் நிலைமை மாறியுள்ளதா என்பதைக் காண்போம்.
வேளாண் கணக்கெடுப்பு (Agriculture Census) என்பது மாநில வாரியாக நாட்டிலுள்ள விவசாயிகள் மற்றும் அவர்களிடமுள்ள பயிரிடப்படும் விளைநிலங்கள் பற்றிய விவரங்களைத் தொகுப்பதாகும். இந்த வேளாண் கணக்கெடுப்பின் மூலம் நாட்டிலுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களால் பயிரிடப்படும் நிலங்களின் பரப்பளவுகளில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிய முடியும். குறிப்பாக எந்த வகை விவசாயப் பிரிவினர்களிடையே மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதையும் நாம் கண்டறிய முடியும். விவசாயிகளை குறு (1 ஹெக்டேருக்கு குறைவாக நிலமுள்ளவர்கள்), சிறு (1-2 ஹெக்டேர்), அரை நடுத்தர (2-4 ஹெக்டேர்), நடுத்தர (4- 10 ஹெக்டேர்) மற்றும் பெரிய (10 ஹெக்டேருக்கு மேல்) விவசாயிகள் என்று வேளாண் கணக்கெடுப்பு வகைப்படுத்துகிறது.
ஒவ்வொரு பிரிவினரின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் விவசாய நிலங்களின் அளவுகள் தரப்படுகின்றன. மேலும், இந்த விவசாயிகளை ஆண், பெண் மற்றும் பட்டியலினத்தவர்கள் (SC) என்றும் வகைப்படுத்தி புள்ளி விவரங்கள் வேளாண் கணக்கெடுப்பில் தரப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பு 1970-71 முதல் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் மத்திய அரசால் நடத்தப்படுகிறது. இதன் சமீபத்திய கணக்கெடுப்பு 2015-16ஆம் ஆண்டில் நடத்தப்பட்டு அதன் உத்தேச முடிவுகள் (Provisional Results) தற்போது வெளிவந்துள்ளன. அந்த முடிவுகளின்படி வேளாண் கணக்கெடுப்பு 2010-11இல் இருந்து 2015-16இல், அதாவது கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்கள் பற்றிப் பார்க்கலாம்.
வேளாண் கணக்கெடுப்பில் கொடுக்கப்படும் விளைநிலங்களின் பரப்பளவு என்பது, விவசாயிகளால் பயிர் செய்யப்படும் நிலங்களின் அளவுகளாகும். விவசாயிகள் பயிர்செய்யும் நிலங்கள் அவர்களது சொந்த நிலமாகவோ, குத்தகைக்கு அல்லது ஒத்திக்கு வாங்கப்பட்ட நிலமாகவோ இருக்கலாம். எனவே, வேளாண் கணக்கெடுப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவசாயிகள் பயிர்செய்யும் பரப்பளவு என்பது அவர்களின் சொந்த நிலங்கள் என்று பொருள் கிடையாது. மாறாக அவர்களால் பயிரிடப்படும் நிலங்கள் (Operational Land) என்று பொருள்.
அகில இந்திய அளவில் விவசாயிகளின் எண்ணிக்கை 2010-11இல் இருந்து 2015-16இல் 73.8 லட்சம் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் அதே ஐந்தாண்டுகளில் 1,80,000 விவசாயிகள் குறைந்துள்ளனர் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. அதாவது தமிழகத்தில் 2010-11இல் 81,18,000 ஆக இருந்த விவசாயிகளின் எண்ணிக்கை 2015-16இல் 79,38,000 ஆகக் குறைந்துள்ளது. பெரிய மாநிலங்களோடு ஒப்பிடுகையில், விழுக்காடு அடிப்படையில், உத்தராகண்ட் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் விவசாயிகள் பெருமளவில் குறைந்துள்ளனர்.
விவசாய நிலங்கள் அகில இந்திய அளவில் 15.96 கோடி ஹெக்டேரிலிருந்து 15.71 கோடி ஹெக்டேராக 2010-11லிருந்து 2015-16இல் குறைந்துள்ளது. அதே வேளையில் தமிழகத்தில், 64.88 லட்சம் ஹெக்டேரிலிருந்து 59.71 லட்சம் ஹெக்டேராக விவசாய நிலங்கள் குறைந்துள்ளன. இங்கே குறிப்பிடப்படவேண்டியது அகில இந்திய அளவில் 1.53 விழுக்காடு குறைந்த விவசாய நிலங்கள், தமிழகத்தில் 7.98 விழுக்காடு கடந்த ஐந்தாண்டுகளில் குறைந்துள்ளது. எளிமையாகக் கூறவேண்டுமானால், சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 1,03,400 ஹெக்டேர் விளைநிலங்களைத் தமிழகம் கடந்த ஐந்தாண்டுகளில் இழந்துள்ளது.
மாநில அரசின் பருவ மற்றும் பயிர் அறிக்கையின்படி (Season & Crop report) தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பரப்பளவில் தரிசாகப் போடப்பட்டுள்ள நிலங்களின் பரப்பளவு 2010-11இல் 25.95 லட்சம் ஹெக்டேராகும். அதாவது மொத்தப் பரப்பளவில் 20 விழுக்காடு தரிசு நிலங்களாகும். இதன் அளவு 2014-15இல் மேலும் அதிகரித்து 27.32 லட்சம் ஹெக்டேராக (21%) அதிகரித்துள்ளது. அதாவது பயிரிடத்தகுந்த நிலங்கள் தரிசுகளாகக் கிடக்கும் அளவு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இவ்வகை நிலங்கள் காலப்போக்கில் வேளாண்மையிலிருந்து வேறு தேவைகளுக்காக உபயோகப்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதாவது, விவசாய நிலங்கள் தரிசுகளாகப் பல காலங்கள் இருக்கும்போது அவை விவசாயத்தை விட்டு வெளியேற்றப்படும் அபாயம் அதிகமாக உள்ளது. இதைத்தான் வேளாண் அறிக்கையும் சுட்டிக்காட்டுகிறது.
சரி, விவசாயிகளின் உட்பிரிவுகளின் நிலை என்ன? குறு விவசாயிகள் (1 ஹெக்டேருக்கு குறைவாக விவசாயம் செய்பவர்கள்) மட்டும் தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் எண்ணிக்கையில் 2015-16இல் 78 விழுக்காடு உள்ளனர். ஆனால், இவர்களிடமுள்ள விளைநிலங்களின் அளவு, மொத்த விளைநிலங்களில் 36 விழுக்காடு மட்டுமே. அதேபோல, சிறு விவசாயிகள், மொத்த விவசாயிகளில் 14 விழுக்காடு உள்ளனர். இவர்களிடத்தில் 26 விழுக்காடு விளைநிலங்கள் உள்ளன.
சமூகத்தின் அடித்தட்டு நிலையிலுள்ள பட்டியலினத்தவர்களிடையே (SC) நிலம் வைத்திருப்பவர்கள் மிகக் குறைவான அளவிலேயே உள்ளனர். தமிழகத்தில் பார்க்கையில், 2015-16இல் மொத்த விவசாயிகளில் 10 விழுக்காட்டினர்தான் பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர்கள். இந்தப் பட்டியலின விவசாயிகளில் குறு விவசாயிகளாக இருப்பவர்கள் 84 விழுக்காட்டினர். பட்டியலினத்தில், சிறு மற்றும் குறு விவசாயிகள் மொத்தமாக 96 விழுக்காடு உள்ளனர். அதாவது, வெகுசில பட்டியலின விவசாயிகள்தான் 2 ஹெக்டேருக்கும் அதிகமான விளைநிலங்களைக் கொண்டவர்களாகத் தமிழகத்தில் உள்ளனர்.
இந்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம்(NSSO), 2014இல் வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவில் ஒரு ஹெக்டேருக்கும் அதிகமாக விவசாயம் செய்யும் விவசாயக் குடும்பத்திற்குத்தான் மாதாந்தர வருமானம் என்பது (உற்பத்திச் செலவு மற்றும் நுகர்வுச் செலவு போக) அதிகமாகக் கிடைக்கிறது என்று கூறுகிறது. வருமானக் கண்ணோட்டத்தில் பார்க்கையில், தமிழகத்தில் 78 விழுக்காடு விவசாயிகள், அதாவது நான்கு விவசாயிகளில் மூன்று பேருக்கும் மேல் விவசாய வருமானம் என்பது போதிய அளவுக்கு இல்லாமல் கடனில் செல்லும் நிலையில் உள்ளனர் என்பதை அறியலாம். அதிலும், பட்டியலின விவசாயிகளில் செலவைவிட வருவாய் குறைவாக உள்ள விவசாயிகள் 84 விழுக்காட்டினர் எனும்போது, ஏற்கெனவே சமூகக் கட்டமைப்பில் அடித்தட்டு நிலையில் உள்ளவர்களின் வாழ்வாதாரச் சூழல் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை நம்மால் உணரமுடியும்.
தமிழகத்தில் விவசாயத்திலிருந்து வெளியேறும் நபர்கள் அதிகமாக இருப்பதற்குச் சகாயமான வருவாய் ஈட்ட முடியாத நிலையும் முக்கியமானதாகும். இதன் மூலம் வேளாண் துறையின் எதிர்கால ஆபத்தையும் உணரலாம். எனவே, சிறு/குறு விவசாயிகள் அதிக வருவாய் ஈட்டுவதற்கான திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளைத் தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்துவதே தற்போதைய அவசியமான தேவையாக உள்ளது.
**கட்டுரையாளர் குறிப்பு:**
*ஆர்.கோபிநாத், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்*
*இவரை gopidina@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.*
**நேற்றைய கட்டுரை:** [தொழில்நுட்ப வளர்ச்சியைப் பெறுமா இந்தியா?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/30/11)�,”