சிறப்புக் கட்டுரை: வாழ்வையே குலைத்துவிடும் மன உளைச்சல்!

Published On:

| By Balaji

கேசி பான்ட்

வயது வந்தோர்களிடையே ஏற்படும் மன அழுத்தத்திற்கான முக்கியக் காரணம் பணம் என அமெரிக்காவிலுள்ள நார்த்வெஸ்டர்ன் மியூச்சுவல் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மன அழுத்தம், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமில்லாமல் அவர்களுக்குத் தொடர்புடைய அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். இதுகுறித்து அமெரிக்காவிலுள்ள நார்த்வெஸ்டர்ன் மியூச்சுவல் என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதில், பத்தில் நான்கு பேர் பணம் தொடர்பான பிரச்சினையால், தங்கள் துணையுடன் இருக்கும் உறவு பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். மாதத்தில் ஒருமுறையாவது, மற்றவர்களுடன் நிதி தொடர்பான முரண்பாடுகள் ஏற்படுவது வழக்கம் என ஐந்தில் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பணம் தொடர்பான பிரச்சினைகள் தம்பதிகளிடையே சண்டை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையையும் அழிக்கும்.

**உடலுறவைப் பாதிக்கும் மன உளைச்சல்**

ஒரு நபர் உடலுறவில் முழுமையாய் ஈடுபடுவதற்கான திறன், நீண்ட கால மன உளைச்சலால் குறைக்கப்படலாம். தங்கள் முன் என்ன நடக்கிறது என்பதை கவனிக்காமல், எதிர்காலத்திற்குத் தேவையான பொருளாதாரம் குறித்த கவலைகள் மட்டுமே மக்களை ஆட்கொள்ளும். இதில், தாம்பத்திய உறவுகளும் அழியும் என கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவின் சமூக ஆர்வலர் அஸ்ரா அலிக் கூறினார்.

தொடர்ந்து அலுவலகத்தில் கூடுதல் நேரம் செலவிடும்போதும், பொருளாதாரம் குறித்த கவலைகளும் மனச் சோர்வை ஏற்படுத்தும். ஏனெனில், கவலைப்படுவதற்கும் திட்டமிடுவதற்கும் கூடுதல் வேலை செய்வதற்கும் அதிக நேரத்தைச் செலவிடும்போது, நல்ல மற்றும் மகிழ்ச்சியான காரியங்களைச் சிந்திப்பதற்குக் கடினமாக இருக்கும் என அஸ்ரா அலிக் தெரிவித்தார்

பணம் குறித்த மன அழுத்தம் மோசமான வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், சில தம்பதிகள் தங்களுக்குள்ளே உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, பொருளாதாரம் குறித்துப் பேசுவதையே தவிர்ப்பார்கள்.

இந்த உணர்வுகள் நாளடைவில் உறவுக்குள் ஒரு புற்றுநோயாக மாறிவிடும். இவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், அவர்களுக்குள் அந்தக் கோபம் அப்படியே இருக்கும். இதனால், தன்னுடைய துணைக்குத் தண்டனை கொடுப்பதாக அல்லது தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு அவருடன் தாம்பத்தியம் வைத்துக்கொள்வதைத் தவிர்ப்பார்கள் என உளவியலாளர் லாரன் டம்மிட் தெரிவித்துள்ளார்.

அதிக மன அழுத்தத்துக்கும் குறைவான தாம்பத்திய வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதாக அறிவியல் ரீதியாக விளக்கம் இருக்கிறது. மன அழுத்தம் ஏற்படும்போது, நம்முடைய நரம்பு மண்டலம் சண்டையிட ஆரம்பிக்கிறது. அப்போது, கார்டிசால் மற்றும் எபினிஃபின் போன்ற அழுத்த ஹார்மோன்கள் வெளியேறுகின்றன.

இந்த ஹார்மோன்கள் குறைந்த அளவிலேயே தீங்கு விளைவிக்கும் என நினைக்க வேண்டாம். இந்த நச்சு ஹார்மோன்கள் வெளியாகும்போது, நம் உடல் ஆரோக்கியம் பல வழிகளில் பாதிப்படைகிறது. உதாரணமாக கார்டிசால் என்ற ஹார்மோன் செக்ஸ் ஹார்மோனை முடக்குகிறது என டம்மிட் கூறினார்.

பொருளாதாரம் குறித்த மன அழுத்தத்தைப் போக்குவதற்கான முக்கியமான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்படிச் செய்தால் சரியான நேரத்தில் பணமும் மன அமைதியும் கிடைக்கும்; தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையும் என தம்பா பே ஆலோசனைக் கழகங்களின் உரிமையாளர் டாக்டர். பிரையன் டோனே தெரிவித்துள்ளார்.

**தூக்கமும் பொழுதுபோக்கும்**

கொஞ்ச நேரம் தூங்குவதன் மூலம் கார்டிசால் ஹார்மோன் வெளியேறும் அளவு குறையும். அதனால், தூங்குவதற்குக் கொஞ்ச நேரம் ஒதுக்க வேண்டும்.

உணர்வுகளைக் கட்டுப்படுத்தி வைப்பதற்குப் பதில், ஆரோக்கியமான முறையில் அதை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். அதனால், வீட்டைத் தாண்டி வெளியில் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். அது நடை பயணமாக இருக்கலாம், தோட்டத்துக்குச் செல்லலாம் அல்லது நீந்தலாம். மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு இவ்வாறு ஏதாவது ஒருசெயலில் ஈடுபட வேண்டும்.

உடல் இயல்பாக இல்லாத நேரத்தில், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது கடினம். அதனால், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதையும் தினமும் உடற்பயிற்சி செய்வதையும் அதிகரிக்க வேண்டும். மென்மையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், மன அழுத்தம் குறைந்து, ஹார்மோன்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு, ஆண்மை அதிகரிக்கும்.

**வெளிப்படையாகப் பேசுதல்**

பிரச்சினைகள் குறித்து மற்றவர்களிடம் உதவி கேட்பதன் மூலம் பொருளாதார நிலையிலும் மன நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும். எனவே, பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து யாரிடமாவது மனம் திறந்து பேசலாம். பொருளாதார முடிவு அல்லது உங்களுடைய வங்கி கணக்கின் நிலை குறித்து துணையுடன் பேசி முடிவு எடுக்கலாம்.

**உடலுறவில் தேக்கத்தை நீக்க**

இந்தத் தீர்வு முரண்பாடானதுபோலத் தோன்றலாம். ஆனால், மந்தமான உடலுறவு வாழ்க்கையை மேம்படுத்தச் சிறந்த வழி மேலும் மேலும் உடலுறவு வைத்துக்கொள்வதே ஆகும். முயற்சியில் ஈடுபடாமல் இருந்தால் மந்த நிலையும் ஆர்வமற்ற நிலையும் அதிகமாகத்தான் ஆகும். முதலில் அதற்கான உணர்ச்சிகள் இல்லாதது போலத் தோன்றலாம். எனினும், பின்னர் மாற்றம் தெரியும். டம்மிட் கூறியது போல, உடலுறவாலேயே மன உளைச்சலைப் போக்க முடியும்.

**நன்றி: [ஹஃபிங்டன்போஸ்ட்](https://www.huffingtonpost.in/entry/money-stress-killing-sex-life_us_5b281f35e4b05d6c16c63d58)**

**தமிழில்: சா.வினிதா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share