பெருந்தேவி
சென்ற [கட்டுரையில்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/11/09/10) பூக்கோவைச் சுட்டி வல்லுறவில் பாலியல் நீக்கம் பற்றி வைத்த ஒரு கருத்தாக்கத்தை முன்வைத்து முதலில் கொஞ்சம் எழுத நினைக்கிறேன். அந்தக் கட்டுரையிலேயே நான் குறிப்பிட்டது போல, அக்கருத்தாக்கத்தின் பிரச்சினைகளைப் பலரும் விமர்சித்திருக்கிறார்கள். பெண்ணியவாதிகள் லின்டா அல்காஃப், தெரஸா டி லாரடிஸ், மோனிக் ப்ளாஸா போன்றவர்களால் பூக்கோவின் பார்வை கடும் விமர்சனத்துக்குள்ளானது. சமூகத்தில் பெரும்பாலும் வல்லுறவுக்கு உள்ளாவது பெண்களே என்பதைச் சுட்டி, அவர் பார்வை நடைமுறையில் ஆண்களின் மேலாதிக்கத்துக்கே உதவும் என்று வாதிடப்பட்டது. பாலினங்களை ஒழுங்குபடுத்துவதில் ராணுவம் உள்ளிட்ட நிறுவனப்படுத்தப்பட்ட செயல்முறைகளை பூக்கோ கருதத் தவறுகிறார் என்று விமர்சிக்கப்பட்டது.
தவிர, இதர வன்முறைச் செயல்களைப் போல வல்லுறவு என்பதில் எப்போதும் corroborative evidences, (அதாவது முகத்தில் குத்தினால் கருரத்தம் கட்டுவதைப் போல அல்லது உடைந்த மூக்கைப் போலக் காணக் கிடைக்கும் தடயங்கள்) கிட்டச் சாத்தியமில்லை என்கிறபோது, இதர வகை வன்முறைகளோடு அதை எவ்வாறு ஒப்பிட முடியும் என்ற சந்தேகங்களும் எழுப்பப்பட்டன.
இந்தக் கட்டுரைத் தொடர் பூக்கோவின் கருத்தாக்கத்தை முன்னிலைப்படுத்தி ஆராய்வது அல்ல, தனித்த ஒரு புத்தக விவாதத்துக்கு உரியது அந்தக் கருத்தாக்கம். என்றாலும், ஒரு சுருக்கமான அவதானிப்பை இங்கே முன்வைக்கலாம். பெண்ணுடைய பாலியல் பற்றிய சொல்லாடலை, வன்முறை என்ற நிகழ்வையும் அதைச் சார்ந்த நினைவையும் மையப்படுத்தி, அவற்றைச் சுற்றியே அதை அமைப்பதிலிருந்து, உரையாடுவதிலிருந்து விடுவிப்பதாக அது அமைகிறது. என்னைப் பொறுத்தவரை அதன் ஒரு பெரும்பயனாக நான் கருதுவது, “முகத்தில் குத்துவதைப் போல வல்லுறவை ஏன் கருதக் கூடாது?” என்கிறபோது, அத்தகைய ஒப்பீட்டின் மூலம் வல்லுறவு என்பதை மலினப்படுத்தாமல், அதேநேரத்தில், பாதிக்கப்பட்டவர் நிலையிலிருந்து, சுய விடுபடுதலுக்காக, ஒரு உத்திபோல தம்மளவில் பெண்கள் இந்த ஒப்பீட்டைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதே நான் சொல்லவருவது.
**வல்லுறவைப் புரிந்துகொள்ளுதல்**
முக்கியமாக, பெண்ணுக்குப் பாலியல் ரீதியான வன்முறை என்ற அளவில் வல்லுறவைப் புரிந்துகொள்வது எளிமைப்படுத்தப்பட்ட புரிதல் எனக் கருதுகிறேன். ஒரு தனிநபரின் கட்டுமான அடையாளமாக (foundational identity) பால் அடையாளத்தை அப்படியே சாராம்சமாக, இயற்கையாக ஏற்பது பிரச்சினையானது. பெண்பால் தன்னிலைகள், சமூகச் செயற்பாடுகள் (social practices) பலவற்றால் இடையறாது கட்டியமைக்கப்படுகின்றன. நொய்மையான, ஊறுபடத்தக்க (weak and vulnerable) தன்னிலைகளாக இவை கட்டியமைக்கப்படுகின்றன. வல்லுறவு என்பது இத்தகைய தன்னிலை உருவாக்கச் சமூகச் செயற்பாடுகளில் ஒன்றாகப் பிற செயற்பாடுகளின் தொடர்ச்சியில் உள்ளது. இவற்றையெல்லாம் கருத வேண்டியது அவசியம்.
வல்லுறவில் பாலியலை முதன்மைப்படுத்தி தனிப்பட்ட குற்ற அந்தஸ்தை அதற்குக் கோரும்போது, வல்லுறவோடு தொடர்ச்சியாக இருக்கும் வேறு பல பால் பாகுபாட்டுச் சமூகச் செயற்பாடுகளைத் தவறவிடக்கூடிய அபாயம் உள்ளது. எடுத்துக்காட்டாக மொழிச் செயற்பாடுகள். இந்தக் கட்டுரையின் கடைசியிலேயே மொழிச்செயற்பாட்டின் ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம்.
மேலும், இனவெறி வலுத்த சமூகச் சூழல்களில், அடிமைத் தன்னிலைகளை உருவாக்கும், நிலைநிறுத்தும் விதத்திலும் வல்லுறவு செயல்பட்டது. எடுத்துக்காட்டாக, பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில், அமெரிக்கக் கண்டத்தில், கறுப்பின ஆண்களை வெள்ளையர்கள் குழுவாக வல்லுறவுக்கு ஆளாக்கி இன மேலாண்மையை நிறுவினர். ஆகவே, வல்லுறவு என்பது பால் தன்னிலைகளைப் படிநிலையில் கட்டமைப்பதோடு மட்டுமல்லாமல், இனம் போன்ற அலகுகள் சார்ந்தும், சமூகப் படிநிலையைக் கட்டமைக்கிறது. ஆகவே, பால் படிநிலைகளோடு கூடவே இனம், வர்க்கம், சாதி போன்ற அலகுகளிலும் படிநிலைகளை நிறுவுவதில், வல்லுறவு குறுக்குவெட்டாக (intersectionality) பங்கு வகிக்கிறது. வல்லுறவு நிகழ்வுகளின் இத்தகைய பல்வேறு பரிமாணங்களை பாலியல் என்ற ஒரு லேபிளில் வைத்துக் குறுக்கிவிட முடியாது.
மேற்கூறியவை வல்லுறவு என்பதைப் பாலியல் வன்முறையாக வைத்துப் பேசுவதன் சில சிக்கல்களைக் குறித்தது. ஆனால் ஜெயகாந்தனின் நாவலான சில நேரங்களில் சில மனிதர்களில் பால் படிநிலை அளவுக்கு, மேலே கூறிய பிற பரிமாணங்களின் படிநிலைகளுக்கு இடமில்லை.
என் முந்தைய கட்டுரையில், ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசத்தில், பாலியல் வல்லுறவிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும், பால் பாகுபாட்டோடு பெண் தன்னிலையை அந்தச் சிறுகதை எவ்வாறு கடைசியில் கட்டமைக்கிறது என எழுதியிருந்தேன். கதையின் இறுதிப் பகுதி, வல்லுறவு நிகழாமல் காத்துக்கொள்ளும் பொறுப்பைப் பெண்ணிடம் மாத்திரமே சுமத்துகிறது. அப்பகுதியில் பெண்ணுக்கு ஜாக்கிரதை உணர்வைக் கற்பிக்கிற கதை, அவள் பாதையில் குறுக்கிடும் “கார்களுக்கு” (அதாவது, காரில் இருக்கும் ஆண்களுக்கு) எந்த விதச் சமூகப் பொறுப்புணர்வையும் தருவதில்லை.
**வாழையும் முள்ளும்**
‘வாழை ஆடினாலும் வாழைக்குச் சேதம், முள் ஆடினாலும் வாழைக்குத்தான் சேதம்’ என்ற ஒரு பழமொழி அக்கினிப் பிரவேசம் சிறுகதையில் தலையைக் காட்டுகிறது. ஆனால் போகிற போக்கில் வருகிற அந்தப் பழமொழியைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு சிறுகதையின் கரு நிற்பதில்லை. அதுதான் அந்தக் கதையின் தனித்தன்மை. ஆனால், அந்தக் கதையின் பெரும்பகுதியை எடுத்தாளும் ‘சில நேரங்களில்…’ நாவலில், முள்ளால் சேதத்துக்கு ஆளாகும், முள்ளைத் தேடும் வாழையாகவே கங்கா தொடர்ந்து காட்டப்படுகிறாள். இதை ஆராயும் முன், இந்த உருவகத்தின் பயன்பாட்டைச் சற்று விவாதிக்கலாம்.
பெண்ணுக்கும் வாழைக்கும் போலவே ஆணுக்கும் முள்ளுக்குமான உருவகத்தை நோக்கினால் வலிமை / ஆதிக்கம், நொய்மை / அடங்கிப்போதல், இந்தக் குணாம்சங்கள் ஆணோடும் பெண்ணோடு தொடர்புறுத்தி எதிரெதிரே நிறுத்தப்படுகின்றன. மட்டுமல்லாமல் இயற்கையை முன்வைக்கிற உருவகம் இது என்பதால் இந்தக் குணாம்சங்கள் இரு பால்களின் வேறுபட்ட, ஆனால், இயற்கையான குணாம்சங்களாகச் சித்திரிக்கப்படுகின்றன.
வாழையிலை – முள் என்கிற உருவகத்தை சற்றுக் கூர்ந்து நோக்கலாம். முள் வாழையிலையைக் கிழிக்கத்தானே செய்யும்? அதாவது ஆதிக்கம் என்பது உள்ளுறையான பண்பாக மட்டுமல்லாமல், முள்ளிடமிருந்து வெளிப்பட்டுவிடுகிற இயல்பான செயலாகவும் நீட்சி பெறுகிறது. அதாவது இத்தகைய உருவகத்தின் மூலம், ஆணுடனான நெருக்கம் அமைகிற சூழலில், வல்லுறவு போன்ற பாதிப்பை பெண் எதிர்கொள்ள நேரலாம் என்ற சாத்தியத்திலிருந்து (possibility), அத்தகைய பாதிப்பு நேர்ந்தேவிடும் (inevitability) என்ற உறுதிப்பாட்டுக்கு ஒரு சொல்லாடல் வழுக்குதல் (discursive slippage) சட்டென்று நடக்கிறது. (புழக்கத்தில் இருக்கும் பஞ்சு-நெருப்பு உருவகத்தையும் இவ்வகையில் வாசித்துப் பார்க்கலாம்)
இந்தச் சொல்லாடல் வழுக்குதல், பெண்பால் தன்னிலையை, நொய்மையான ஊறுபடத்தக்க தன்னிலையாக மட்டுமல்லாமல் அச்சத்தின் அடிப்படையிலான தன்னிலையாகவும் கட்டமைக்க முனைகிறது. அத்தோடு, அச்சத்தின் பாற்பட்டு, தற்காத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தமும் இந்தத் தன்னிலையின் உள்ளடக்கமாகிறது.
இதில் கவனிக்க வேண்டிய ஒன்று, வல்லுறவு நேரும் என்ற அச்சம் இல்லாது போனால், அல்லது அத்தகைய அச்சம் சந்தேகத்துக்கு இடமானால், அதை ஒரு முத்திரை போலப் பதிக்கும் வகையிலான சமூகச் செயற்பாடாகவும் வல்லுறவு செயல்படுகிறது. இதைப் புரிந்துகொள்வது அவசியம். தில்லியில் நிர்பயாவைக் கூட்டு வல்லுறவு செய்தவர்களில் ஒருவரான பேருந்து ஓட்டுநர் கூறியது நினைவிருக்கிறதா? “ஒரு கண்ணியமான பெண் இரவு ஒன்பது மணிக்கு வெளியில் சுற்ற மாட்டாள். ஆணைவிடப் பெண்ணுக்குத்தான் வல்லுறவில் பொறுப்பு” என்று கூறினார் அவர். பாதிக்கப்பட்டவரையே குற்றம்சாட்டுதல் (victim blaming) என இந்தக் கூற்றை எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் அதைவிட, இந்தக் கூற்றை, பொருண்மையான விளைவுகளை ஏற்படுத்தும் மொழிச் செயற்பாடாக நான் கருதுகிறேன்: அச்சத்தை அடித்தளமாகக் கொண்ட பெண் தன்னிலையை மீளுருவாக்கும் சமூகத்தின் மொழிச் செயற்பாடு இது.
**அச்சத்தைப் பெருக்கும் குறியீடுகள்**
சிறுமி நந்தினிக்கு நடந்த கூட்டு வல்லுறவையும் இங்கே எண்ணிப் பார்க்கலாம், கருவில் இருந்த குழந்தையின் தகப்பனை, அவரது சாதி அடையாளத்தை நந்தினி பொதுவெளியில் அம்பலப்படுத்திவிடக் கூடாது என்ற முதன்மைக் காரணத்தால்தானே வல்லுறவு நடந்தது? நந்தினியின் வாயில் திணிக்கப்பட்ட துணி, பால் மற்றும் சாதி அதிகாரத்துக்கான எதிர்ப்புப் பேச்சை முளையிலேயே களையும் குறியீடாகவும் உள்ளது. வல்லுறவு எனும் சமூகச் செயற்பாடும் அத்தோடு தொடர்புடைய இத்தகைய குறியீடுகளும், குற்றலைகளைப் போல, அச்சத்தை உள்ளடக்கமாகக் கொண்ட பெண் தன்னிலைகளைப் பெருக்க வல்லன.
இந்த இடத்தில், வல்லுறவு செய்பவர்களுக்கு உச்சபட்ச மரண தண்டனை போன்ற கருத்துகளோடு எனக்கு உடன்பாடு இல்லாததற்கான காரணத்தைப் பகிர நினைக்கிறேன். எதிர்ப் பாலியல் நியதிகளின்படியும், நம் சூழலில் சாதி அமைப்பின்படியும், குடும்ப அமைப்பை நீட்டிக்கும் வகையில், இரு பால் தன்னிலைகளை நிறுவும் சமூகத்தின் அச்சு அசல் பிரதிநிதிகளாக இந்த வல்லுறவாளர்களை நான் பார்க்கிறேன். அம்புகளுக்கு ஆகப் பெரிய தண்டனை கொடுத்து என்ன பயன்?
**#MeToo இயக்கத்தை முன்வைத்து பெருந்தேவி எழுதியுள்ள இதர கட்டுரைகள்:**
[ஆண்மையச் சமூகக் கொள்ளை நோய்!](ttps://www.wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/15/26)
[காமத்தின் பேரம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/16/24)
[#MeToo மேட்டுக்குடிப் போராட்டமா?]( https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/19/24)
[பாலியல் வன்முறையை எப்படி வரையறுப்பது?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/22/27)
[பாலியல் துன்புறுத்தல் இயல்பாக்கப்படும் விதம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/23/20)
[பாலியல் வன்முறைகளின் அடிப்படை எது?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/30/23?fbclid=IwAR2Yt5aAErYcniiJX9-Yjc35fQV3Q5T-9qf0LH3OGIpSWRGdVQSlVyF99rE)
[சமூக உதாசீனம் என்னும் பனிக்கட்டி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/11/01/20)
[வல்லுறவும் இடி என்னும் உருவகமும்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/11/01/20)
[பாலுறவில் சம்மதம் என்னும் சிக்கல்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/11/05/16)
[வல்லுறவிலிருந்து பாலியலை விலக்குதல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/11/09/10)�,”