பெருந்தேவி
ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’ சிறுகதையின் சிறப்பம்சம் அது பெண் எதிர்கொள்ளும் வல்லுறவை மாத்திரமல்ல, அந்த வல்லுறவின் ஞாபகத்தையும் அவளிடமிருந்து கழுவப் பார்க்கிறது, “கெட்ட கனவு மாதிரி இதெ மறந்துடு…. உனக்கு ஒண்ணுமே நடக்கல்லே…” என்று அம்மா, வல்லுறவுக்காளான தன் பெண்ணிடம் சொல்கிறாள். “உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி… அதை நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே” என்கிற வார்த்தைகள் வல்லுறவு பற்றிய ஞாபகத்தையும் கழுவ முயல்கின்றன, முனைகின்றன. அந்த அம்மாவின் குரலை மாத்திரம் வல்லுறவுக்கு ஆளாகியிருப்பவர்களால் சுவீகரித்துக்கொள்ள முடிந்தால், எப்பேர்ப்பட்ட நன்மையாக அது இருக்கும்!
தவிர, முக்கியமாக அந்தக் கதை வல்லுறவு என்ற நிகழ்வை நூதனமான வகையில் நோக்க வழிசெய்கிறது. அந்தக் கதையின் அசலான புரட்சிகரம் என்பது வாசகர்கள் பலரும் கருதுகிறபடி மரபை, ஆசாரங்களை மீறி ஒரு தாய் நடந்துகொள்வதல்ல; பெண் கற்பை உடல் சார்ந்ததாக இல்லாமல் அவள் உள்ளம் சார்ந்ததாக மாற்றிப் பார்த்தது மட்டுமல்ல. அந்தக் கதையின் புதுமையும் புரட்சிகரமும் வல்லுறவு என்ற வன்முறை நிகழ்விலிருந்து பாலியலை அப்புறப்படுத்துவதில் இருக்கிறது.
கதையில் பெண்ணின் அம்மா இப்படி கூறுவது கவனிக்கத்தக்கது: *“தெருவிலே நடந்துவரும்போது எத்தனை தடவை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம். அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம்?”* இந்த வார்த்தைகளில் ஒன்று, பாலியல் வல்லுறவு ஒரு சாதாரண அன்றாட நிகழ்வாக இங்கே மாற்றப்படுகிறது. கூடவே, கால் என்கிற உவமானத்தால், பால் உறுப்புக்கு, குறிப்பாக பெண்ணின் பால் உறுப்புக்கு நம் சமூகப் பண்பாட்டில் தரப்பட்டிருக்கும் ரகசியத் தன்மை களையப்படுகிறது; அதற்குத் தரப்பட்டிருக்கும் ஒரு தனித்துவமான இடத்திலிருந்து அது அப்புறப்படுத்தப்படுகிறது. காலைப் போல அது இன்னொரு உறுப்பு, அவ்வளவுதான். *“அதனால் என்ன, கழுவினால் முடிந்தது,”* என்பதைப் போல.
**பூக்கோவும் ஜெயகாந்தனும்**
இந்தக் கதையை வாசிக்கும்போது தத்துவ அறிஞர் மிஷேல் பூக்கோவின் வல்லுறவு பற்றிய கருத்தாக்கத்தைத் தமிழில் வாசிப்பதைப் போல உணர்கிறோம். ஒரு வட்டமேசை விவாதத்தில் பூக்கோ வல்லுறவு என்பது உடல்ரீதியான வன்முறையாக மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார் (பாரிஸில் வெளியிடப்பட்டது இந்த விவாதம், “La folie encerclee” 1977). அதாவது, பாலியல் குற்றமாக வல்லுறவைப் பார்ப்பதை அவர் எதிர்த்தார். ஒரு சாதாரண வன்முறையாக அத்துமீறலாக மாத்திரமே வல்லுறவு தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பூக்கோவின் வாதமாக இருந்தது. முகத்தில் முட்டியால் குத்துவதற்கும் பால் உறுப்பில் ஆண் குறியைத் திணிப்பதற்கும் அடிப்படையில் வேறுபாடில்லை என்றார். அப்படியில்லாமல், முகத்தில் முட்டியால் குத்துவதைவிட வல்லுறவு வித்தியாசமானது, மோசமானது, தீவிரமானது என்று சொன்னோமானால், “உடலில் பாலியலுக்கு அதிமுக்கியமான இடத்தைக் கொடுத்துவிடுகிறோம்” என்றார்.
பால் உறுப்பு கையை, மூக்கை அல்லது தலைமுடியைப் போன்றது அல்ல எனும்போது மற்ற உடலுறுப்புகளுக்கு இல்லாத ஒரு சட்டப் பாதுகாப்பை அதற்குத் தர வேண்டியிருக்கிறது, எந்தச் சூழ்நிலையிலும் தண்டனையின் தனிப்பட்ட கவனத்தில் அல்லது இலக்காக, பாலியல் இருக்கக் கூடாது என வாதிட்டார். அரசின் ஒழுங்குபடுத்தும் அதிகாரத்திலிருந்து, சட்டத்தின் அதிகாரத்திலிருந்து, சமூகக் கண்காணிப்பிலிருந்து பாலியல்களை விடுவிக்க வேண்டும் என்ற தத்துவப் பார்வையின் அடிப்படையில் வைக்கப்பட்டது அவர் வாதம்.
எந்த ஒரு சமூகத்திலும், வல்லுறவுக்குத் தரப்படும் அர்த்தம் பாலியல் தளத்தில், பாலியல் சார்ந்த சொல்லாடலைப் பொறுத்தே இருப்பதால், வல்லுறவுக் குற்றத்திலிருந்து பாலியலை எவ்வாறு நீக்க இயலும்? மேலும் வல்லுறவு என்கிற செயல்பாடு பல தருணங்களில் ஏற்கெனவே சமூகத்தில் ஸ்திரப்பட்டுவிட்ட ஆண் / பெண் பால் வித்தியாசங்களைப் பொருட்படுத்தித்தானே நடக்கிறது? தவிர, பொதுவாக, உடல்களைக் கண்காணிக்கும் வகைமுறைகள், நடவடிக்கைகள் எல்லாமே பால் பாகுபாட்டைக் கணக்கிலெடுத்துக்கொள்ளும்போது, வல்லுறவு விஷயத்தில் மட்டும் பாலியலை ஏன் நீக்கம் செய்ய வேண்டும் என்பது போல வாதங்கள் பெண்ணியவாதிகளால் வைக்கப்பட்டன. இவையெல்லாம் தனியாக விவாதிக்கப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.
ஆனால் பூக்கோவின் கருத்தாக்கத்தில், மனித சமத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் உள்வாங்கிக்கொள்ள வேண்டிய விஷயம்: எந்த அளவுக்கு நாம் குழந்தைகளும் பெண்களும் பால் சிறுபான்மையரும் இங்கே பரவலாக எதிர்கொள்கிற, எதிர்கொள்ள நேர்கிற பாலியல் வல்லுறவின் மீது சமூகக் கவனத்தைக் கோருகிறோமோ, அதே அளவுக்கு வல்லுறவைச் சுற்றியே இவர்களின் பாலியலும் சரி, வாழ்க்கைக் கதையாடல்களும் சரி, அமைந்துவிடக் கூடாது என்பதில் அக்கறை கொள்ள வேண்டியதும் அவசியம். இது சிக்கலான பணிதான். ஆனால், இப்படியொரு சிக்கல் இருக்கிறது என்பதை முதலில் அங்கீகரிக்கவாவது வேண்டும். இல்லாவிட்டால், வலுவான பெண்ணியக் கரிசனைகளை, இப்போது அவற்றைப் போர்த்து மூடியிருக்கும் மொண்ணையான, ஒற்றையான “ஆணாதிக்கம்” என்ற மட்டையடி லேபிளிலிருந்து விடுவிக்கவே முடியாது. அல்லது, நம்மால் பால்களின் வித்தியாசத்தை இயல்பு என ஏற்றுக்கொள்ளும் இன்றைய கருத்தியல் நிலையிலிருந்து அடுத்த புள்ளிக்கு நகரவே முடியாது.
பூக்கோவின் தத்துவ நிலைப்பாட்டின்படி வல்லுறவிலிருந்து, பாலியலை நீக்கிவிட்டுப் பார்க்கும்போது, வல்லுறவுக்கு ஆளாகக்கூடியவர்கள், வல்லுறவைச் செய்பவர்கள், இரு தரப்பும் ஒருவகையில் சமப்படுத்தப்படுகிறார்கள். நொய்மை – பெண்மை / வலிமை – ஆண்மை என சில குணாம்சங்களை, இரு பால்களோடு இயற்கையாகக் கருதி அடையாளம் காண்பது தவிர்க்கப்படுகிறது. ஒருவகையில் வலிமை, எதிர்ப்பு போன்ற குணாம்சங்கள் ஆண்மைக்கென்று எழுதிவைக்கப்படவில்லை, யாருமே இவற்றை சுவீகரிக்க முடியும், இத்தகைய குணாம்சங்களோடு சுய அடையாளத்தை வளர்த்துக்கொள்ள முடியும் என்பதை முன்னிட்ட வாதமாகவும் பூக்கோவின் வாதமிருக்கிறது.
ஆனால், இவ்வாறு பேசும்போது, எச்சரிக்கையோடு பேச வேண்டிய தேவையும் கூடவே நமக்கிருக்கிறது. பாதிக்கப்படுபவர்களையே அல்லது பாதிக்கப்படக் கூடியவர்களையே அந்த வன்முறையை எதிர்த்துப் போராடும்படிக்கு, அல்லது அந்த வன்முறையைத் தவிர்க்கும்படிக்கு, அவர்கள்மீது கூடுதல் சுமையைச் சுமத்திவிடாமல் இதையெல்லாம் முன்வைக்க வேண்டிய பொறுப்பும் நமக்கிருக்கிறது.
**பெண்ணிடம் கோரப்படும் ஜாக்கிரதை உணர்வு**
‘அக்கினிப் பிரவேசம்’ கதை, வல்லுறவின் ஞாபகத்தைக் கழுவப் பார்க்கிறது, அதன் மூலமாக, அதை மையப்படுத்திப் பெண் தன்னிலையாகக் கட்டமைப்பதைத் தவிர்க்கிறது, அதே நேரத்தில், கூடுதல் கவனத்தோடு, சுமையோடுதான், பெண்பால் தன்னிலை கட்டமைக்கப்படுகிறது என்பதைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
*“அவள் கல்லூரிக்குப் போய்க்கொண்டிருக்கிறாள். அவள் செல்லுகின்ற பாதையில் நூற்றுக்கணக்கான டாம்பீகமான கார்கள் குறுக்கிடத்தான் செய்கின்றன. ஒன்றையாவது அவள் ஏறிட்டுப் பார்க்க வேண்டுமே! சில சமயங்களில் பார்க்கிறாள். அந்தப் பார்வையில் – தன் வழியில் அந்தக் காரோ அந்தக் காரின் வழியில் தானோ குறுக்கிட்டு மோதிக்கொள்ளக் கூடாதே என்ற ஜாக்கிரதை உணர்ச்சி மட்டுமே இருக்கிறது.”*
என்று கதை முடிகிறது. இத்தகைய ஜாக்கிரதை உணர்வுதான் எந்தெந்த விதங்களில் பெண்களிடம் சமூகத்தில், சமூகத்தால் கோரப்படுகிறது. இரவில் வெளியே செல்லக் கூடாது, தனியாக வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும், முன்பின் தெரியாதவர்களிடம் பேசக் கூடாது, உடல் தெரியும் வகையில் ஆடைகளை அணியக் கூடாது, ஆண்களைத் தூண்டும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது… இன்னும் எத்தனை, எத்தனை!
‘அக்கினிப் பிரவேசத்தில்’ அந்தப் பெண்ணின் வாழ்க்கை பெரிதாக மாறிவிடவில்லை. கறை துடைக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், எச்சரிக்கையோடுதான் அவள் இனி இருக்க வேண்டும். இந்த எச்சரிக்கை வளையத்தில் அவள் அன்றாடத்தின் செயல்பாடு தெளிவாக வடிவமைக்கப்படுவதோடு கதை முடிகிறது.
இத்தொடரில், என்னுடைய முந்தைய கட்டுரை ஒன்றில் எதிர்ப்பாலியல் நியதிகளின் வழியே செயல்படும் அதிகாரம் (heteronormative power), சமூகச் செயற்பாடுகளின் வாயிலாகத் தொடர்ந்து ஆண்பால், பெண்பால் தன்னிலைகளை ஒரு படிநிலையில் (hierarchy) வைத்து, உருவாக்குவதை, reinforce செய்வதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். மேலே கதையில், கதை பிரதிபலிக்கும் எதார்த்த வாழ்வில் இத்தகைய எச்சரிக்கை உணர்வை சுவீகரித்துக்கொள்ள வைப்பது என்பது, பெண்பால் தன்னிலையை உருவாக்கும் வகையில் அதிகாரத்தின் இன்றியமையாத உத்தியாக (technique) உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். யதார்த்த வாழ்வின் ஒரு அம்சமாக இந்த உத்தியைத் தவறாமல் பரிந்துரைத்துவிட்டே அக்கினிப் பிரவேசம் கதை முடிகிறது.
எதிர்ப்பாலியல் நியதிகளின் வாயிலாகச் செயல்படும் அதிகாரத்தை, அக்கினிப் பிரவேசம் சிறுகதை கேள்விக்கு உள்ளாக்கவில்லைதான், ஆனாலும் பெண் எதிர்கொள்ளும் வல்லுறவிலிருந்து பாலியலை அகற்றியதில், இந்தக் கதை பெரிய சாதனை செய்திருக்கிறது.
ஆனால், இந்தச் சிறுகதையை எழுதியிருக்கும் ஜெயகாந்தன், அவர் மொழியில் சொன்னால், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலில் வேறொரு ஆட்டத்தையும் ஆடிப் பார்த்திருக்கிறார். அந்த ஆட்டத்தில், கங்காவுக்கு நேர்ந்த வல்லுறவில் பாலியலை முதன்மைப்படுத்துகிறார், நொய்மையான, ஊறுபடத்தக்க தன்னிலையாகத்தான் கங்காவை நாவலில் ஜெயகாந்தன் உருவாக்கியிருக்கிறார். அதேநேரத்தில், கூர்மையாக வாசிக்கும்போது வல்லுறவு எப்படி தனித்த (singular) நிகழ்வாக இல்லை என்பதையும் நாவல் அம்பலப்படுத்துகிறது. மேலும், பால் கட்டமைப்புகளை, குறிப்பாக பிரபு மற்றும் கங்காவின் மாமா போன்ற கதாபாத்திரங்களின் வாயிலாக ஆண்பால் கட்டமைப்பைக் கலைத்தும் ஆடுகிறது.
தொடர்ந்து பார்ப்போம்.
**#MeToo இயக்கத்தை முன்வைத்து பெருந்தேவி எழுதியுள்ள இதர கட்டுரைகள்:**
[ஆண்மையச் சமூகக் கொள்ளை நோய்!](ttps://www.wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/15/26)
[காமத்தின் பேரம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/16/24)
[#MeToo மேட்டுக்குடிப் போராட்டமா?]( https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/19/24)
[பாலியல் வன்முறையை எப்படி வரையறுப்பது?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/22/27)
[பாலியல் துன்புறுத்தல் இயல்பாக்கப்படும் விதம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/23/20)
[பாலியல் வன்முறைகளின் அடிப்படை எது?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/30/23?fbclid=IwAR2Yt5aAErYcniiJX9-Yjc35fQV3Q5T-9qf0LH3OGIpSWRGdVQSlVyF99rE)
[சமூக உதாசீனம் என்னும் பனிக்கட்டி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/11/01/20)
[வல்லுறவும் இடி என்னும் உருவகமும்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/11/01/20)
[பாலுறவில் சம்மதம் என்னும் சிக்கல்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/11/05/16)�,”