நா.ரகுநாத்
உள்நாட்டில் பொருட்களுக்குப் போதிய கிராக்கி (Demand) இல்லாததால் இந்தியப் பொருளாதாரம் வேகமிழந்துள்ளது என்று ஒரு தரப்பினர் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில், உலகப் பொருளாதாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதால்தான், இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளது என்று இன்னொரு தரப்பினர் விளக்கமளிக்கின்றனர். இந்தியப் பொருளாதாரம் 2003-04 – 2011-12 காலத்தில் வேகமாக வளர்ந்ததற்கும், கடந்த சில ஆண்டுகளாக வேகமிழந்து செயல்படுவதற்கும் ஏற்றுமதி முக்கிய காரணம் அல்ல என்பதையும், அந்த வேகமான வளர்ச்சியை சாத்தியப்படுத்திய காரணி எது என்பதையும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
**பொருளாதாரத்தில் ஏற்றுமதியின் பங்கு**
இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் பொருட்கள் ஏற்றுமதியின் பங்கு (Goods Export to GDP Ratio) 2003இல் 10 விழுக்காடு; அடுத்த பத்தாண்டுகளில் அதன் பங்கு வேகமாக வளர்ந்து 2013இல் 18 விழுக்காடாக உயர்ந்தது. அடுத்த ஆறாண்டுகளில் அதன் பங்கு சரிந்து, 2019இல் 11 விழுக்காடாகக் குறைந்துள்ளது. 2003-2013 காலத்தில் ஏற்றுமதியின் பங்கு அதிகரித்ததால், சீனாவுக்கு அடுத்ததாக வேகமாக வளரும் பொருளாதாரமாக உருவெடுத்த இந்தியப் பொருளாதாரம், இன்று அமெரிக்க – சீன வர்த்தகப் போரின் காரணமாக நிலவும் நிச்சயமற்ற உலக வர்த்தகச் சூழலால் பெரியளவில் பொருட்களை உற்பத்தி செய்து உலகச் சந்தையில் விற்க முடியாத நிலையில் இருக்கிறது எனும் புரிதல் ஏற்படுகிறது. இது சரியான புரிதலா?
முதலாவதாக, நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் பொருட்கள் / சரக்கு ஏற்றுமதியின் பங்கு அதிகரித்து, பின் சரிந்த இந்த காலத்தில், உலக ஏற்றுமதியில் இந்தியா செய்யும் ஏற்றுமதியின் பங்கு சராசரியாக 1.5 – 2 விழுக்காடாகத்தான் இருந்தது. தங்கள் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் சீனா, பிரேசில், இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா போன்ற மற்ற வளரும் நாடுகளின் பொருட்கள் / சரக்கு ஏற்றுமதியின் பங்கு இந்தியாவில் இருப்பதைவிட சராசரியாக 5-10 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகம்.
இரண்டாவது, இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி வேகமாக வளர்ந்த காலத்திலும், மற்ற பொருட்களின் டாலர் மதிப்பைவிட, பெட்ரோலியப் பொருட்களின் டாலர் மதிப்பு வேகமாக உயர்ந்ததன் காரணமாகவே ஏற்றுமதியின் மதிப்பும் அதிகரித்தது என்பதை கவனிக்க வேண்டும். இந்தியாவின் உற்பத்தித் துறை (Manufacturing Sector) மற்ற நாடுகளின் உற்பத்தித் துறையோடு உலகச் சந்தையில் போட்டிபோட்டு வெற்றிபெற முடியாததையே இந்த விவரங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.
**கடன் வாங்கி மேற்கொள்ளப்பட்ட நுகர்வு, முதலீடுகள்**
இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்ததற்கு ஏற்றுமதி பங்களிக்கவே இல்லை என்பது நம் வாதம் அல்ல. பொறியியல் சாதனங்கள், ரசாயனப் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி அதிகரித்தது உண்மைதான். ஆனால், வேகமான வளர்ச்சிக்கு பிரதான காரணம் அவை அல்ல. உள்நாட்டில் மக்களின் நுகர்வும், உள்நாட்டு தனியார் நிறுவனங்களின் முதலீடுகளும்தாம் வேகமான வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தின. ஆனால் அந்த வளர்ச்சியின் தன்மையைப் நாம் புரிந்துகொள்வது அவசியம்.
2003-04 தொடங்கி, அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் வணிக வங்கிகள் நுகர்வுக்கும், தொழில் முதலீடுகளுக்கும், குறிப்பாக உட்கட்டமைப்பு முதலீடுகளுக்கும் சகட்டுமேனிக்குக் கடன் வழங்கியதன் விளைவாகவே வேகமான பொருளாதார வளர்ச்சி சாத்தியமானது. நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2003-04இல் சுமார் 30 விழுக்காடாக இருந்த வங்கிக் கடன்களின் பங்கு, 2011-12இல் கிட்டத்தட்ட 60 விழுக்காடாக உயர்ந்தது; 1991-92 – 2002-03 காலத்தில் அதன் பங்கு 22 விழுக்காட்டில் இருந்து 30 விழுக்காடாக மட்டுமே உயரந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் எதிர்மறை விளைவு? மலைமலையாகக் குவிந்திருக்கும் செயல்படாத சொத்துகளும் (Non-performing Assets – NPA), வாராக்கடன்களும் (Bad Loans). நிதித்துறை நெருக்கடியில் தத்தளிப்பதால் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொருளாதார ஆய்வறிக்கை 2019-20 ஒப்புக்கொள்கிறது.
வணிக வங்கிகளால் எப்படி இந்த அளவுக்குக் கடன்களை வழங்க முடிந்தது என்ற கேள்வி எழுகிறது. இறக்குமதியைவிட ஏற்றுமதி அதிகமாக இருக்கும்பட்சத்தில் உபரி அந்நியச் செலாவணி (Foreign Exchange) நம்மிடம் இருக்கும். பொதுவாகவே, இந்தியாவின் ஏற்றுமதியின் மதிப்பைவிட, இந்தியா செய்யும் இறக்குமதியின் மதிப்பு எல்லா நிதியாண்டுகளிலும் அதிகமாக இருப்பதால், நாட்டின் நடப்புக் கணக்கில் துண்டு விழுகிறது. இதை நடப்புக்கணக்கு பற்றாக்குறை, அதாவது Current Account Deficit (CAD) என்பார்கள். இந்த பற்றாக்குறையைச் சமாளிக்க நமக்கு அந்நியச் செலாவணி தேவை.
அதனால்தான் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் இந்திய அரசுகள் அவ்வளவு ஆர்வம்காட்டுகின்றன. ஆனால், நீண்டகால முதலீடுகள் செய்து, நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டுவந்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கும், புதிய உற்பத்தியை மேற்கொள்ளும் அந்நிய நேரடி முதலீடுகள் (Foreign Direct Investments – FDI) எதிர்பார்த்த அளவுக்கு நம் நாட்டுக்கு வருவதில்லை. மாறாக, இந்தியாவுக்கு வரும் அந்நிய முதலீடுகளில் குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்க இங்கு வரும் அந்நிய நிதி நிறுவன முதலீடுகளின் (Foreign Institutional Investments – FII) பங்குதான் மிக அதிகம். இந்தியப் பங்குச் சந்தை மற்றும் இந்திய அரசு, பெருநிறுவனங்களின் கடன் பத்திரங்களில் FIIs முதலீடு செய்யும் பணம், இந்திய நாட்டுக்கு அந்நியச் செலாவணி. 2003-04க்குப் பிறகு அதன் வருகை பன்மடங்கு பெருகியது.
நாட்டுக்குள் அந்நியச் செலாவணியின் அளவு அதிகரிக்கும்போது, ரூபாயின் மதிப்பு உயரும். ரூபாயின் மதிப்பு உயர்ந்தால், உலகச் சந்தையில் இந்திய நாட்டுப் பொருட்கள், இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு விலையுயர்ந்ததாகிவிடும்; அதனால் ஏற்றுமதி பாதிக்கப்படும். ஆகவே, அந்த அந்நியச் செலாவணியின் ஒரு பகுதியை ரிசர்வ் வங்கி சந்தையிலிருந்து வாங்கிக்கொள்ளும்; அது ரிசர்வ் வங்கியின் இருப்புக் கணக்கில் (Balance Sheet) சொத்தாக (Asset) அமர்ந்துகொள்ளும். சொத்துகளின் மதிப்பு அதிகரிக்கும்போது, ரிசர்வ் வங்கியின் கடன்களின் (Liabilities) மதிப்பும் அதிகரித்தால்தான் இருப்புக் கணக்கு Balance ஆகும். ரூபாய் நோட்டு என்பது நாட்டு மக்கள் வட்டி வாங்காமல் ரிசர்வ் வங்கிக்கு அளிக்கும் கடன். அதனால், வாங்கிய அந்நியச் செலாவணிக்கு நிகரான மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடும்.
இந்தப் பணம் வங்கிகளுக்கு டெபாசிட் வடிவில் வரும். டெபாசிட்களின் அளவு வளரவளர, அந்த டெபாசிட்களுக்கு வங்கிகள் தரவேண்டிய வட்டியின் அளவும் அதிகரிக்கும். கடன்கள் வழங்கி அதிலிருந்து வட்டியாகக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் டெபாசிட்களுக்கான வட்டியைச் செலுத்த முடியும். எனவே, வங்கிகள் வழங்கும் கடன்களின் அளவும் வேகமாக வளர்ந்தது. நுகர்வு, தொழில்துறை மற்றும் உட்கட்டமைப்புக்கு வழங்கப்பட்ட கடன்கள் பொருளாதார வளர்ச்சியை உந்தித்தள்ளின என்பதுதான் உண்மை. வழங்கப்பட்ட கடன்களில் பல, வாராக்கடன் ஆனதன் விளைவாக 2013க்கு பிறகு வங்கிகள் பெரிய கடன்கள் வழங்கும் வேகம் குறைந்ததை அட்டவணை 2 ஊர்ஜிதப்படுத்துகிறது.
**நெருக்கடியில் நிதித்துறை**
செயல்படாத சொத்துகளைச் செயல்படவைக்க வங்கிகள் முயற்சி செய்தபோதும், அவற்றில் பல சொத்துகள் வாராக்கடன் (Bad Debts) ஆகிவிட்டன. கடன் வாங்கிய நிறுவனங்களின் இருப்புநிலைக் கணக்கில் (Balance Sheet), திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகையின் அளவு அதிகரித்தது; கடன் கொடுத்த வங்கிகளின் இருப்புநிலைக் கணக்கில், திரும்பி வரவேண்டிய சொத்துகளின் அளவு அதிகரித்தது. முந்தைய தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த சுப்ரமணியன் தலைமையில் தயாரிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை 2015-16 இதை இரட்டை இருப்புநிலைக் கணக்கு நெருக்கடி (Twin Balance Sheet Problem) என்றழைத்தது.
2017-18 நிதியாண்டின் முடிவில் வங்கிகள் வழங்கிய மொத்த கடன் தொகையில் செயல்படாத சொத்துகளின் பங்கு 11.5 விழுக்காடு. அது அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, 2019 செப்டம்பர் முடிவில் 9.5 விழுக்காடாக இருந்தது. கடந்த ஐந்தாண்டுகளில் இந்த வங்கிகளின் மறுமுதலாக்கத்துக்கு (Recapitalization) கிட்டத்தட்ட ரூ.3.5 லட்சம் கோடி அரசு வழங்கியுள்ளது. எல்லாம் நாம் செலுத்தும் வரிப்பணம்தான். அதன் விளைவாக, இந்த ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட ரூ.7.2 லட்சம் கோடி மதிப்பிலான வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் ரூ.9.2 லட்சம் கோடி மதிப்பிலான செயல்படாத சொத்துகள் வங்கிகளிடம் உள்ளன. இவை செயல்படும் சொத்துகளாக மாறுமா, இல்லை, இந்தத் தொகையில் ஒரு கணிசமான பகுதி வாராக்கடன் ஆகி தள்ளுபடி செய்யப்படுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.
நிதித்துறை – வங்கிகள் + வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் – சந்திக்கும் இந்த நெருக்கடியைச் சரி செய்யாமல் பொருளாதாரத்தை இயல்புநிலைக்குக் கொண்டுவருவது என்பது இயலாத காரியம். பொருளாதார இயந்திரம் தொடர்ந்து செயல்படுவதற்கு அவை வழங்கும் நிதி மிகவும் அவசியம். அந்த நிதியின் ஓட்டம் தேங்கிவிட்டால் பொருளாதாரம் ஸ்தம்பித்துவிடும். ‘சீர்திருத்தம்’ என்ற பெயரில் நாம் கடந்த முப்பதாண்டுகளாகச் செய்துவந்த மாற்றங்கள்தாம் இன்று நிதித்துறை நெருக்கடியில் இருப்பதற்குக் காரணம்.
இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் இரண்டு:
உற்பத்தித் துறையை வலுப்படுத்தாமல், ஏற்றுமதியையும் அதிகரிக்க முடியாது; இறக்குமதியையும் குறைக்க முடியாது.
உற்பத்தி ஏதும் மேற்கொள்ளாத, குறுகிய காலத்தில் கொள்ளை லாபம் ஈட்ட விரும்பி நாட்டுக்குள் வரும் அந்நிய நிதி மூலதனத்தைக் (Foreign Finance Capital) கட்டுப்படுத்தாமல், பொருளாதார நெருக்கடிகளைத் தவிர்க்க முடியாது; அதைச் செய்யாமல் நாட்டின் பொருளாதார மேலாண்மையைத் திறம்பட மேற்கொள்வதென்பது சாத்தியமாகாது.
**கட்டுரையாளர் குறிப்பு**
நா.ரகுநாத், பொருளியல் முதுகலைப் பட்டதாரி. இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்வதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தற்போது, பட்டயக் கணக்காளர் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பொருளியல் பாடங்களில் பயற்சி அளித்து வருகிறார்.
மின்னஞ்சல் முகவரி: raghind@gmail.com�,”