ஆரா
அந்தந்த நேரத்து நியாயங்கள்தான் வாழ்க்கை என்று சொல்லுவார்கள். அதுபோல, இன்றைய பொது விவாதங்களும் அந்தந்த நேரத்து நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே நடக்கின்றன. தேநீர்க் கடைகள் முதல் செல்போன் சாட்டிங் வரை இப்போது லோக் ஆயுக்தா என்பது பற்றிப் பேசுகிறார்கள்.
அது என்ன, அதன் பின்னணி என்ன, அதனால் என்ன ஆகும் என்பதைப் பற்றியெல்லாம் பேசுபவர்களில் பெரும்பாலானவர்களுக்குக் கவலையில்லை. ஆனால், நானும் பேசினேன் என்று பேசுகிறார்கள். தேநீர்க் கடைகள் மட்டுமல்ல, சட்டமன்றத்திலும் இதுதான் நிலைமை.
இந்த வகையில்தான் இந்த வாரத்து வார்த்தையாக மாறிப் போயிருக்கிறது லோக் ஆயுக்தா. தினமும் செல்லும் மின்சார வண்டியில் மாதுளம்பழம் விற்கும் பாட்டிகூட, ‘என்னப்பா ஏதோ லோக்கல் சட்டம் கொண்டாந்திருக்காங்களாமே? இனிமே தப்பு நடக்காதாமே?’ என்று என்னிடம் கேட்டார். நான் பதில் சொல்வதற்குள் பழக் கூடையைப் பார்த்துவிட்டு மாமூலுக்காகத் துரத்தி வந்த ரயில்வே போலீஸ்காரரிடமிருந்து தப்பிக்க அவசரமாகச் சென்றுவிட்டார்.
மாதுளம்பழம் விற்கும் பாட்டிக்குக்கூட நாட்டில் ஊழல் நடக்கிறது என்பதும் அதைத் தடுப்பதற்காக ஒரு சட்டம் வந்திருக்கிறது என்றும் தெரிகிறது. அந்தப் பாட்டிக்கே இவ்வளவு அக்கறையும் ஆர்வமும் இருக்கும்போது அரசியலில் புழங்குவதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு எவ்வளவு இருக்க வேண்டும்? இருக்கிறதா?
அரசு ஊழியம் செய்ய வந்தவர்கள் அட்டூழியம் செய்யக் கூடாது என்பதற்காக 1966ஆம் ஆண்டு நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் அன்றைய மத்திய அரசால் நிறுவப்பட்டது. அப்போதைய மத்திய அமைச்சர் மொரார்ஜி தேசாய் தலைமையில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் நன்கு ஆராய்ந்து கொடுத்த அறிக்கையில்தான் மத்திய அரசில் ஊழலை ஒழிக்க லோக் பால், மாநில அரசுகளில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
உண்மையிலேயே தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவே வெட்கப்பட வேண்டும். ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்று 1966இல் செய்யப்பட்ட பரிந்துரை, 47 ஆண்டுகள் கழித்துதான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அரை நூற்றாண்டு காலம் கழித்து 52 ஆண்டுகள் கழித்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதிலும் பற்பல குறைபாடுகள் என்று பல விமர்சனங்கள். இப்படிப்பட்ட ஒரு லோக் ஆயுக்தா, ஊழலை ஒழிக்குமா என்ற அந்தப் பழக் கூடைப் பாட்டியின் கேள்வியில் ஆயிரம் நியாயம் இருக்கிறது.
**தமிழக அரசின் ஆர்வம்!**
லோக் ஆயுக்தா விஷயத்தில் தமிழக அரசு எத்தகைய ஆர்வம்கொண்டிருக்கிறது என்பதற்கு சில சம்பவங்களைப் படித்தாலே போதும்.
லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் கடந்த 2013ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது, 2014 ஜனவரி முதல் அமலுக்கு வந்தது. முதன்முதலில் மகாராஷ்ராவில்தான் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 15 மாநிலங்களில் இந்த அமைப்பு செயல்பட்டுவருகிறது என்பதெல்லாம் நமக்குத் தெரியும். ஆனால், லோக் ஆயுக்தாவை அமல்படுத்தாத மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இதை எதிர்த்துப் பல பொதுநல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் லோக் ஆயுக்தா அமைக்காத மாநிலங்களுக்குச் சரமாரியான கேள்விகளை எழுப்பியது.
கடைசியாக, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி உச்ச நீதிமன்றம், “லோக் ஆயுக்தா அமைக்காமல் இருப்பதற்குத் தமிழக அரசு முன்வைக்கும் காரணங்கள் ஏற்கத்தக்கதாக இல்லை. ஜூலை 10ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அன்று தமிழக அரசு லோக் ஆயுக்தா பற்றி எடுத்த நடவடிக்கையை நீதிமன்றத்துக்குக் கறாராகத் தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது. லோக் ஆயுக்தா அமைக்காத மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு இந்த உத்தரவிடப்பட்டது.
தமிழ்நாடு அரசு தமிழகச் சட்டமன்றத்தில் உச்ச நீதிமன்றக் கெடு முடியும் நாளான ஜூலை 10ஆம் தேதிக்கு முதல் நாள் ஜூலை 9ஆம் தேதி லோக் ஆயுக்தாவைத் தாக்கல் செய்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின் மீதும், ஊழலை ஒழிப்பதின் மீதும் எவ்வளவு அக்கறை இருந்தால் தமிழக அரசு லோக் ஆயுக்தாவை அறிமுகப்படுத்த இந்தத் தேதியை தேர்ந்தெடுத்திருக்கும்.
**சட்டமன்றத்தில் நடந்தது என்ன?**
ஜூலை 9ஆம் தேதி நடந்து முடிந்தது தமிழகச் சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாள். பொதுவாகவே கடைசி நாள் என்றால் பல உறுப்பினர்கள் வர மாட்டார்கள். ஆனால், அன்று அதிசயமாகப் பெரும்பாலான உறுப்பினர்கள் வந்திருந்தனர். நாளை உச்ச நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இன்று தாக்கல் செய்யப்பட்டது லோக் ஆயுக்தா. ஆளுங்கட்சிக்கு இவ்வளவு ஆர்வம் இருந்திருந்தால், எதிர்க்கட்சியின் லோக் ஆயுக்தா ஆர்வம் எப்படி இருந்தது தெரியுமா?
ஜூலை 9 காலை 10 மணிக்கெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட சபைக்கு வந்த அத்தனை உறுப்பினர்களின் மேஜைகளிலும் லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவுப் புத்தகம் வைக்கப்பட்டது. ஆனால், காலை 11.30 வரை யாரும் அதை பிரித்துப் படிக்கவில்லை. அதன்பிறகு எ.வ.வேலு அதைப் பிரித்துப் படிக்கிறார். தனக்கு முன்பக்கம் அமர்ந்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் ஏதோ பேசுகிறார். இந்த அளவில்தான் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்களிப்பு இருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த வாதங்கள் முக்கியமானவை. மசோதா மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “லோக் ஆயுக்தா சட்ட மசோதாவைக் கொண்டு வந்ததில் மகிழ்ச்சி. லோக் ஆயுக்தா அமைப்பைச் சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும். மசோதாவில் திருத்தங்கள் தேவைப்படுவதால் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்” என்று வலியுறுத்தினார். ஆனால், மசோதாவைத் தேர்வுக் குழுவுக்கு அனுப்பத் தேவையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.
ஆனால், இதை முன்வைத்து சட்டமன்றத்தில் திமுக பெரிய போராட்டம் நடத்தவில்லை, ஓங்கிக் குரல் எழுப்பவில்லை. 90 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு லோக் ஆயுக்தாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பித் திருத்தங்கள் செய்யப் போராடவில்லை. மாறாக வெளிநடப்பு செய்துவிட்டார் ஸ்டாலின். “இது அதிகாரம் இல்லாத அமைப்பாக, பவரும் பல்லும் இல்லாத லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவை இங்கே நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். எனவேதான், செலக்ட் கமிட்டிக்கு (தேர்வுக் குழு) அனுப்ப வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கிறேன். அது பற்றி அமைச்சர்கள் எவ்வித பதிலும் சொல்லவில்லை. இதற்குப் பதில் சொல்லாத சூழ்நிலையில், செலக்ட் கமிட்டிக்கு அனுப்ப முடியாது என்ற நிலையில் நீங்கள் இருந்தால் நாங்கள் வெளிநடப்பு செய்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று தான் சட்டமன்றத்தில் சொன்னதை தனது அறிக்கையில் நினைவுபடுத்தியிருக்கிறார்.
**வெளிநடப்போடு முடிந்துவிட்டதா?**
பல் இல்லாத லோக் ஆயுக்தா பாஸ் ஆகிவிட்டது. திமுக வெளிநடப்பு செய்துவிட்டது. இதோடு இந்தப் பிரச்சினை முடிந்துவிட்டதா? பொறுத்தார் பூமியாள்வார் என்று சொல்லும் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபின் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். இதைத்தான் அதிமுகவும் எதிர்பார்க்கிறது. ஆளுங்கட்சியாக இருக்கும் எந்தக் கட்சியும் இப்படிப்பட்ட நீர்த்துப் போன லோக் ஆயுக்தா நீடிப்பதையே விரும்பும். இதில் நீதிமன்றம் தலையிட்டால்தான் உண்டு. அதுவும் சட்டத்தை மாற்றுவதில் நீதிமன்றம் எந்த அளவுக்கு அதிகாரம் படைத்தது என்ற சட்டச் சிக்கலும் தொக்கி நிற்கிறது.
அதிமுக இந்த விஷயத்தில் ஊழலை ஆதரிக்கும் கட்சி என்று நிரூபித்திருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சியான திமுக தான் ஊழலை எதிர்க்கும் கட்சி என்பதை நிரூபித்தாக வேண்டும். அதற்கு தற்போதைய லோக் ஆயுக்தாவின் பலவீனங்கள் பற்றித் தமிழகம் முழுவதும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.1971-76 ஆட்சிக் காலத்தில், ‘பொதுவாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் குற்றத் தடுப்பு சட்டம்’, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டது. அது பின்னாட்களில் என்ன ஆனது என்பதை எண்ணிப் பார்த்தால் திமுகவும் அதிமுகவும் லோக் ஆயுக்தா கொண்டுவருவதில் எப்படிப்பட்ட எண்ணத்தில் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக இருந்திருக்கின்றன என்பது தெரியும்.
இன்று தமிழகத்தில் ஆளுங்கட்சியும், ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சியும் இருக்கின்றன. ஆனால் ஊழலுக்கான எதிர்க்கட்சி எங்கே என்பதுதான் தெரியவில்லை!�,”