சிறப்புக் கட்டுரை: மலம் அள்ளும் அவலம் – புதிய தொழில்நுட்பம்!

Published On:

| By Balaji

கபிர் அகர்வால்

அண்மையில் நடைபெற்ற ‘இந்தியா சேனிடெக் ஃபோரம்’ நிகழ்வில், மனிதனின் மலத்தை மனிதனே அள்ளும் அவலத்தைப் போக்குவதற்காகப் பலராலும் உருவாக்கப்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. இவற்றில், பாதாள சாக்கடைக்குள் ரோபோ இறங்கிக் கழிவுகளை சுத்தம் செய்வது, திடமான கசடுகளை உடைப்பதற்கு ரிமோட் கண்ட்ரோல் கருவிகளைப் பயன்படுத்துவது, பாதாள சாக்கடைக்குள் இருக்கும் வாயுக்கள் விஷத்தன்மை உடையதாக மாறினால் எச்சரிக்கை விடுக்கும் கருவிகள் போன்றவை அடங்கும்.

பாதாள சாக்கடை போன்ற கழிவு அமைப்புகளைச் சுத்தம் செய்வதற்கு மனிதர்களை நியமிப்பதற்குச் சட்டம் தடை விதிக்கிறது. எனினும் இன்னும் பல ஆயிரக்கணக்கானோர் மனிதக் கழிவுகளை அள்ளுவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். ராஷ்ட்ரிய கரிமா அபியான் அமைப்பின் தகவலின்படி, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்ட 600 நபர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் செப்டிக் டேங்க் மற்றும் பாதாள சாக்கடைகளைச் சுத்தம் செய்கையில் 11 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

பேண்டிக்கூட் என்று பெயரிடப்பட்டுள்ள ரோபோ ஒன்றைக் கேரள பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர். பாதாள சாக்கடைகளுக்குள் நுழைந்து சுத்தம் செய்யும் திறனை இந்த ரோபோ பெற்றுள்ளது. ஜென்ரோபோட்டிக்ஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம்தான் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் நான்கு நிறுவனர்களில் ஒருவரான ரஷித் பேசுகையில், “பாதாள சாக்கடைக்குள் மனிதன் இறங்கும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்பதே எங்களது எண்ணம். இந்த ரோபோ ஒரு பாதாள சாக்கடைக்குள் நுழைந்து முழுமையாக சுத்தம் செய்யும் தன்மை கொண்டது.

இந்த ரோபோ பாதாள சாக்கடைக்குள் நுழைந்தபிறகு கைகளை விரித்து திட மற்றும் திரவ கழிவுகளைச் சுத்தம் செய்துவிடும். இந்த ரோபோவுடன் இணைக்கப்பட்டுள்ள ரிமோட் கண்ட்ரோல் வாயிலாக இதை இயக்க முடியும். தற்போதைய நிலையில் ஒரு பேண்டிக்கூட் ரோபோவின் விலை ரூ.12 லட்சமாக உள்ளது. இதன் விலையை மேலும் குறைப்பதற்கு வடிவமைப்பாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த மூன்று நகராட்சிகளில் சில ரோபோக்கள் வாங்கப்பட்டுள்ளன. “இதற்கான வரவேற்பு நன்றாகவே உள்ளது. இந்த ரோபோ சிறப்பாகப் பணியாற்றி வருகிறது” என்று கூறினார்.

சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தை (ஐஐடி) சேர்ந்த திவான்ஷு குமார் என்ற இளம் பொறியியலாளர் மற்றொரு படைப்பைக் காட்சிப்படுத்தினார். இந்தக் கருவியை செப்டிக் டேங்கிற்குள் இறக்கி சுத்தம் செய்ய முடியும். கழிவுகள் தங்கி பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும் கூட இந்தக் கருவி அவற்றைச் சுத்தம் செய்துவிடும். திடமான, சிமெண்ட் போலத் திடமான கழிவுகளைக் கூட இந்தக் கருவி உடைத்து சுத்தம் செய்துவிடும் என்று இந்தக் கருவியை வடிவமைத்த 21 வயது பொறியியலாளரான திவான்ஷு குமார் கூறுகிறார்.

அண்மையில் வடிவமைக்கப்பட்ட இந்தக் கருவியை திவான்ஷு குமார் நீரில் மட்டுமே சோதனை செய்துள்ளார். சோதனையில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன. இந்தக் கருவி மின்சாரத்தில் இயங்குவதால், செப்டிக் டேங்குகளுக்குள் இருக்கும் நச்சு வாயுக்களால் இந்தக் கருவி வெடித்துச் சிதறக்கூடும். ஆகையால் இந்தத் தொழில்நுட்ப சவாலைச் சரிசெய்ய வேண்டிய தேவை அவருக்கு உள்ளது. “இது ஒரு மாதிரி மட்டுமே. வெடிக்காதவாறு கருவியை மாற்றியமைப்பதற்கான வழிமுறைகளை நான் நெருங்கிவிட்டேன். சில மாதங்களில் அது தயாராகிவிடும்” என்கிறார்.

இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான பாலகிருஷ்ணனும் தனது படைப்பைக் காட்சிப்படுத்தினார். அவர் ஓய்வு பெற்ற பிறகு அவரும் அவருடன் பணியாற்றிய ஜெர்மியா ஓங்கொலூவும் இணைந்து அஜந்தா டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தை அமைத்தனர். இந்தியாவில் மனிதனின் மலத்தை மனிதனே அள்ளும் அவல நிலையை ஒழிப்பதற்காகவே இந்த நிறுவனத்தை அவர்கள் அமைத்தனர். நச்சு வாயுக்களைக் கண்டறிந்து, சாக்கடைகளைச் சுத்தம் செய்து துப்புரவுத் தொழிலாளர்களுக்கான தேவையை முற்றிலுமாக ஒழிப்பதற்காக சில கருவிகளை இவர்கள் வடிவமைத்துள்ளனர்.

முதலில், பாதாள சாக்கடைகளில் உள்ள நச்சு வாயுக்களின் அளவைக் கண்டறிந்து தகவல் கொடுப்பதற்கு ஒரு கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. துப்புரவுத் தொழிலில் ஈடுபடும்போது உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் நச்சு வாயுக்களை நுகர்ந்ததாலேயே உயிரிழந்துள்ளனர். துப்புரவுத் தொழிலாளர் சாக்கடைக்குள் இறங்காவிட்டாலும் கூட அவை மிகவும் அபாயமானவை. வெளியே வரும் நச்சு வாயுக்கள் தோல் நோய்களை ஏற்படுத்தும். இந்தக் கருவியைக் கொண்டு நச்சு வாயுக்களின் அளவைக் கண்டறிந்தால் அதுபோன்ற அபாயங்களைத் தவிர்க்க முடியும்.

மற்றொரு கருவி ஜெட் சக்தி கொண்ட இயந்திரமாகும். இந்த இயந்திரம் சாக்கடையைச் சுத்தம் செய்யக்கூடியது. பாலகிருஷ்ணன் பேசுகையில், “சாக்கடையில் வேலை செய்யும்படி இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாக்கடையில் தேங்கியுள்ள கசடுகள், சேறு போன்றவற்றை முற்றிலுமாக அகற்றிவிடும். இந்தக் கருவியில் பிளேடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பிளேடுகள் அடைப்புகளை அறுத்துவிடும்” என்று தெரிவித்துள்ளார். இந்தக் கருவியை சோதனைக்கு உட்படுத்தியபோது திருப்திகரமான முடிவுகள் கிடைத்துள்ளன.

“தெலங்கானா அரசுடன் நாங்கள் சில சந்திப்புகளை மேற்கொண்டோம். அவர்கள் எங்களது தயாரிப்புகளை சோதனை செய்துள்ளனர். முடிவுகளும் நல்ல விதமாகவே வந்துள்ளது. எங்களது பொருட்களை தெலங்கானா அரசு ஆர்டர் செய்து பயன்படுத்தத் தொடங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன” என்று பாலகிருஷ்ணன் கூறுகிறார்.

சாக்கடையைச் சுத்தம் செய்யும்போது நச்சு வாயுக்களிலிருந்து பாதுகாப்பதற்காக முழு உடலையும் அடக்கும் உடுப்பு ஒன்றை பாலகிருஷ்ணனும், ஓங்கொலூவும் இணைந்து வடிவமைத்து வருகின்றனர். பாலகிருஷ்ணன் பேசுகையில், “பாதாள சாக்கடைக்குள் நுழையாமல் சாலை மட்டத்திலேயே நின்று கொண்டு வேலை பார்க்கும் தொழிலாளர்களும் நச்சு வாயுக்களால் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் சாக்கடையைத் திறந்த உடனேயே நச்சு வாயுக்கள் வெளியேறிவிடுகின்றன. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்காக உடுப்பு ஒன்றை நாங்கள் வடிவமைத்து வருகிறோம்” என்று கூறினார்.

**நன்றி:** [தி வயர்](https://thewire.in/labour/technological-solutions-including-robots-aim-to-end-manual-scavenging)

**தமிழில்: அ.விக்னேஷ்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share