சிறப்புக் கட்டுரை: மக்களை வாட்டி வதைத்த பணமதிப்பழிப்பு!

Published On:

| By Balaji

பிரகாசு

பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட காலத்தில் ஏடிஎம் வரிசைகளில் நின்ற மக்கள் நாட்டுக்காகத் தியாகம் செய்கின்றனர் என்றார் மோடி. அந்தத் தியாகத்தால் என்ன பயன் விளைந்தது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி புழக்கத்தில் இருந்த 80 விழுக்காடு பணத்தை மதிப்பழிப்பு செய்து உத்தரவிட்டார் பிரதமர் மோடி. இதன்படி புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் அனைத்தும் செல்லாதவையாக்கப்பட்டன. புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் அச்சிடப்பட்டு, வங்கிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. இது சாமானியர்களுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை நாம் அனைவரும் மறந்திருக்க மாட்டோம். சாதாரண மளிகைச் செலவுகளுக்குக் கூட வேலைக்குச் செல்லாமல் விடுமுறை எடுத்து ஏடிஎம்களிலும், வங்கிகளிலும் நாள் கணக்காக நிற்க வேண்டியிருந்தது.

சிறு தொழில்கள் இயக்கம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. ரொக்கப் பண நெருக்கடியில் சிக்கிய பலர் தொழிலை விட்டு வெளியேறி தினக் கூலிகளாயினர். ஏடிஎம் வாசல்களிலும், வங்கிகளிலும் காத்துக் கிடந்தவர்கள் சிலர் உயிரிழந்த பரிதாபமும் அரங்கேறியது. நாட்டின் முதுகெலும்பு என்று கூறப்படும் விவசாயத் துறை பணமில்லாமல் தடுமாறியது. விவசாயிகள் விற்ற பொருட்களுக்குப் பணத்தைப் பெற முடியாமல் தவித்தனர். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட காசோலைகளை வங்கிகளில் செலுத்திப் பணமாகப் பெற மாதக் கணக்கில் ஆனது. அதுவரையில் அவர்களது குடும்பம் உணவின்றியும், பயிர்கள் உரமின்றியும் காய்ந்தன.

அந்தச் சமயத்தில் மக்கள் கண்ட அத்தனை துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் மோடி அளித்த ஒரு பதில், “இந்தத் துன்பங்களை மக்கள் நாட்டுக்காகத் தியாகம் செய்கிறார்கள். மக்கள் இதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்” என்பதுதான். மேலும், “வரி செலுத்தாமல் தவறான வழியில் பணத்தைக் குவித்து வைத்திருக்கும் கொழுத்த தொழிலதிபர்கள், நேர்மையற்ற அரசியல்வாதிகள், பாகிஸ்தான் தீவிரவாதிகள் போன்றோரிடமிருக்கும் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகத்தான் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என்றார் மோடி.

மக்கள் தியாகம் செய்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அந்தத் தியாகத்தால் என்ன பயன் விளைந்தது? பணமதிப்பழிப்பு செய்யப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதா என்பதைப் பற்றி இதுவரையில் மோடி வாய் திறக்கவேயில்லை. ஆனால், நாட்டின் மிகப்பெரிய சீர்திருத்தங்களில் ஒன்று *பணமதிப்பழிப்பு* எனப் பெருமையோடு பேசி வருகிறார். இது சீர்திருத்தமா அல்லது சீரழிவா என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், ‘2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.15.44 லட்சம் கோடி மதிப்பிலான பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் புழக்கத்தில் இருந்தன. அதில், பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரூ.15.31 லட்சம் கோடி வங்கிகளுக்குத் திரும்ப வந்துவிட்டது. இது அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்களின் மதிப்பில் 99.3 விழுக்காடாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.

எஞ்சியது வெறும் 0.7 விழுக்காடுதான். தற்போது ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டின்படி திரும்ப வராமல் உள்ள பழைய ரூபாய் தாள்களின் மதிப்பு சுமார் ரூ.13,000 கோடி. பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட காலத்தில் வங்கிகளில் நிலவிய நெருக்கடிகளாலும், புதிய ரூபாய் தாள்கள் விநியோகத்தில் காணப்பட்ட மந்த நிலையாலும் அரசு விதித்த காலக்கெடுவுக்குள் எத்தனை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களால் பழைய ரூபாய் தாள்களை மாற்றிக்கொள்ள இயலாமல் போனது என்பதையும் அதன் மதிப்பு எவ்வளவு என்பதையும் ஆராய்ந்து கணக்கிட்டால், எஞ்சிய 0.7 விழுக்காடு என்பது இன்னமும் கூட குறையும் அல்லது முழுமையாகப் பூர்த்தியாகலாம் என்றே தெரிகிறது.

பணப் பரிவர்த்தனைகளின் மூலம்தான் இந்தியாவின் பெரும்பகுதி வர்த்தகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே பணமதிப்பழிப்பு நடவடிக்கை மிகப்பெரிய பணத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி 15 லட்சம் வேலையிழப்புகளை உண்டாக்கிவிட்டது என்று டெல்லியைச் சேர்ந்த இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் கூறியுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு; வேலையிழப்புகள் இதைவிட அதிகமாக இருக்குமென்பதே பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

**இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க, அரசின் நோக்கமும், மக்களின் தியாகமும் என்னவானது என்பதுதான் இதில் முதன்மையானதாக உள்ளது.**

கறுப்புப் பண ஒழிப்புக்காகவா?

கறுப்புப் பணம் என்றால் என்ன? அது எப்படி உருவாகிறது என்பது தெரிந்தால்தான் கறுப்புப் பணத்தை ஒழிக்கப் புழக்கத்தில் உள்ள பணத்தைச் செல்லாமல் ஆக்கினால் போதுமா என்பதைப் புரிந்துகொள்ள முடியும். *கறுப்புப் பணம் என்பது திரைப்படங்களில் காட்டப்படுவது போல் மலைபோல ஓர் இடத்தில் குவித்து வைக்கப்பட்ட பணக்கட்டுகள் அல்ல* என்று மின்னம்பலத்தில் வெளியான [கறுப்புப் பணம் ஒழிந்துவிடுமா?](https://minnambalam.com/k/2016/11/17/1479321068) என்ற கட்டுரையில் விளக்குகிறார் பொருளாதார ஆய்வாளரும், மின்னம்பலம் ஆசிரியர் குழு ஆலோசகருமான ஜெ.ஜெயரஞ்சன்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “கறுப்புப் பணம் என்பது பெட்டிகளிலும், சாக்குப் பைகளிலும், கண்டெயினர்களிலும் அடுக்கி வைக்கப்பட்டுத் தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளப்படுவது போல நமது கற்பனைகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நியாயமான வழிகளுக்குப் புறம்பாக, பணத்தைச் சம்பாதித்தவர்கள், அந்தப் பணத்தை எப்படி நிலமாகவும், பங்களாக்களாகவும், தோட்டங்களாகவும், நகைகளாகவும், முதலீடுகளாகவும், கல்லூரிகளாகவும், வியாபார நிறுவனங்களாகவும் மாற்றிச் செயல்படுகின்றனர் என்ற செய்திகளும் பரவலாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஊழல் வழக்குகளில் அனைத்திலும் *வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது* என்ற ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுவதிலிருந்தே கறுப்புப் பணம் சொத்தாக மாறி விடுகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்” என்கிறார்.

எனவே, கறுப்புப் பணம் என்பது பணமல்ல; அத்தகைய பணம் முதலீடு செய்யப்பட்டுச் சொத்தாக மாறிவிடுகிறது. அதனால்தான் மதிப்பழிப்பு செய்யப்பட்ட பணம் எங்கும் மறைந்துவிடாமல் கிட்டத்தட்ட முழுமையாக வங்கிகளுக்கு வந்துவிட்டது. பணத்தைச் செல்லாமல் ஆக்கிவிட்டால் அந்தச் சொத்துகள் எதுவும் முடங்கிவிடாது. கொழுத்த தொழிலதிபர்களும், நேர்மையற்ற அரசியல்வாதிகளும் கறுப்புப் பணத்தை சேர்த்திருப்பார்கள் என்று மோடி கருதும் எந்தச் சொத்துக்கும் எள்ளளவிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. கறுப்புப் பண ஒழிப்பு என்பது மிகப் பெரிய பொய்தான் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கவா?

கறுப்புப் பணம் ஒழிப்பு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஏற்க மோடி அரசுக்கும், மோடி ஆதரவாளர்களுக்கும் மனம் இருக்காதுதான். அதனால்தான் பணமதிப்பழிப்புக்குப் பல்வேறு காரணங்களைக் கூறி நியாயம் கற்பித்து வருகிறார்கள். அதில் ஒன்றுதான் மின்னணு பரிவர்த்தனை. ரொக்கப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தி, ரொக்கப் பணத்தின் தேவையைக் குறைப்பதுதான் இதன் நோக்கம். அது நிறைவேறியுள்ளது என்று பாஜகவும், மோடி ஆதரவாளர்களும், இதுசார்ந்த அரசுத் துறைகளும் கூறி வருகின்றன. இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக ஒன்றிய அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் ஆகஸ்ட் 31ஆம் தேதி *ஏஎன்ஐ* ஊடகத்திடம் பேசுகையில், “பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரொக்கப் பணப் பரிவர்த்தனை குறைந்துள்ளது. ரொக்கப் பரிவர்த்தனைகளில் ஏற்படும் மோசடிகள் குறித்து மக்களிடையே பயம் அதிகரித்துள்ளது. இது பணமதிப்பழிப்பின் வெற்றி அல்லவா?” என்று கூறியுள்ளார்.

இதுவும் எவ்வளவு பெரிய பொய் என்பதைக் காட்ட, ரிசர்வ் வங்கியின் அறிக்கையே போதுமானது. ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு ஜூன் இரண்டாவது வாரத்தில் வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 1ஆம் தேதி கணக்குப்படி நாட்டில் ரூ.19.3 லட்சம் கோடி ரொக்கப் பணம் புழக்கத்தில் உள்ளது என்று கூறியுள்ளது. இது பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட காலத்துக்கு முந்தைய ரொக்கப் பணத்தை விட மிக அதிகமாகும். 2016ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி ரூ.17.9 லட்சம் கோடி ரொக்கப் பணம் மட்டுமே புழக்கத்தில் இருந்தது.

இன்றளவிலும் நாட்டின் 98 விழுக்காடு வர்த்தகம் ரொக்கப் பணத்தை மட்டுமே சார்ந்திருக்கிறது என்பதுதான் யதார்த்தம். மின்னணு பரிவர்த்தனை உயர்வது தொழில்நுட்ப வளர்ச்சியின்படித் தானாக நிகழப் போவதுதான். வளர்ந்துவரும் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்த வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும். இதை ஒட்டுமொத்தமாக அனைத்து மக்களுக்கும் கட்டாயப்படுத்தித் திணிப்பது நியாயமில்லை. அதை ஏற்பது மக்களுக்கும் சாத்தியமில்லை. அதனால்தான் ரொக்கப் பணப் புழக்கம் முன்பைக் காட்டிலும் அதிகரித்திருக்கிறது. ரொக்கப் பணப் புழக்கத்தை குறைக்காமல், மின்னணு பரிவர்த்தனை அதிகரித்திருக்கிறது; அதனால் பணமதிப்பழிப்பு வெற்றிபெற்றிருக்கிறது என்று கூறுவது மக்களை ஏமாற்றும் வேலைதான்.

வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை உயர்த்தவா?

ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்குப் பிறகு பணமதிப்பழிப்பின் தோல்வி குறித்துப் பரவலாகப் பலரும் தங்களது கருத்துகளைக் கொட்டித் தீர்த்துவிட்டனர். எனவே, அதை மறுக்கும் விதமாக ஒன்றிய அரசின் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது கருத்தையும் முன்வைத்துள்ளார். ஆகஸ்ட் 31ஆம் தேதி அவர் தனது முகநூல் பதிவில், “பணமதிப்பழிப்பின் முக்கிய நோக்கமே வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான். இது இந்தியப் பொருளாதாரத்தை முறைப்படுத்தியுள்ளதோடு, கறுப்புப் பணப் புழக்கத்தையும் குறைத்துள்ளது. 2014ஆம் ஆண்டின் மார்ச் மாதம் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 3.8 கோடியாக இருந்தது. 2017-18 நிதியாண்டின் முடிவில் அந்த எண்ணிக்கை 6.86 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பணமதிப்பழிப்பின் விளைவாக வருமான வரி ரிட்டன் தாக்கல்கள் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளன” என்று கூறியுள்ளார்.

2017-18ஆம் நிதியாண்டில் நேரடி வரி வசூல் 17.1 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பதைக் கொண்டே இந்த வாதத்தை அருண் ஜேட்லி முன்வைக்கிறார். இது உண்மைதான் என்றாலும் அதற்கு முந்தைய ஆண்டுகளையும் சற்றே ஒப்பிட வேண்டியுள்ளது. 2016-17ஆம் ஆண்டில் நேரடி வரி வசூல் 14.6 விழுக்காடும், 2015-16ஆம் ஆண்டில் 8.9 விழுக்காடும், 2014-15ஆம் ஆண்டில் 6.9 விழுக்காடும் வளர்ச்சி கண்டுள்ளன. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சிக் காலமான 2013-14ஆம் நிதியாண்டில் நேரடி வரி வசூல் 14.3 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அதற்கு முந்தைய 2010-11ஆம் நிதியாண்டில் 18 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டிருந்தது. அப்போது எந்தவிதமான பணமதிப்பழிப்பும் செய்யவில்லை என்பதை நாம் குறிப்பிட்டாக வேண்டும்.

எனவே, பணமதிப்பழிப்புக்கு பிந்தைய வரி வசூலில் ஏற்பட்ட சிறு அளவிலான உயர்வுக்காக மட்டுமே பணமதிப்பழிப்பின் நோக்கம் வெற்றிபெற்றுவிட்டது என்று கூறுவது முட்டாள்தனமானது. வருமான வரி செலுத்தக் கூடிய, செலுத்திய வேண்டிய மக்களை நெறிப்படுத்துவதற்காக ஒட்டுமொத்த மக்களும் தண்டிக்கப்பட்டார்கள் என்பது ஏற்கத்தக்கதல்ல. ஒட்டுமொத்த மக்களும் செய்த தியாகத்தை மோடி அரசு வீணடித்திருக்கிறது என்பதைத்தான் இவை யாவும் நமக்கு உணர்த்துகின்றன. ஆகவே, பணமதிப்பழிப்பு ஒரு சீர்திருத்தம் அல்ல, அது மிகப் பெரிய சீரழிவு!

**மின்னஞ்சல் முகவரி**: [feedback@minnambalam.com](mailto:feedback@minnambalam.com)

**முந்தைய கட்டுரை:** [பொருளாதார வளர்ச்சியும் வேலைவாய்ப்பின்மையும்!](https://minnambalam.com/k/2018/09/01/38)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share