சிறப்புக் கட்டுரை: பேரழிவு காலமும், பண்பாட்டு வெறுப்பும் !

Published On:

| By Balaji

h4>- விவேக் கணநாதன்

ஒரு பேரழிவு என்பது நம் எதார்த்த நிகழ்காலத்தில் இருக்கும் தார்மீக ரீதியான சமூக உறவுகளின் உண்மையான மதிப்பீடுகளை அறிந்துகொள்ள உதவுகிறது” என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஏனெனில், ஒவ்வொரு பேரழிவின்போதும், நம் சமூகத்தின் ஏதோ ஒரு பிரிவின் மீதான பழிசுமத்தலாகவும், ஒடுக்குமுறை வடிவமாகவும் பேரழிவு மாற்றப்படுகிறது.

சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளின் போது, ஒரு பொதுநெருக்கடிக்கு எதிராக மனிதர்களுக்குள் நடக்கும் இயல்பான ஒன்றிணைதல், பஞ்சம் – நோய்த்தொற்று போன்றவற்றில் இயல்பாக நடப்பதில்லை. ஏனெனில், ஊழிகள் நிலைக்குத்தலாக ஓரிடத்தில் நடப்பன; அவை பரவுவதில்லை. ஆனால், பஞ்சமும், தொற்றும் ‘பரவும் பேரழிவுகள்’.

இதனால், ஊழியின் போது இயற்கைக்கு எதிரான தங்கள் வலுவைக்காட்டிக்கொள்ளும் உந்துதலை மனிதர்கள் பெறுகிறார்கள். ஆனால், பஞ்சம் – நோய்த்தொற்று மனிதர்களின் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு இடையேயான போட்டியாகத்தான் நடக்கிறது. ஒவ்வொரு கண்டமும், தேசமும், பிராந்தியமும், ஊரும், சேரியும், ஒவ்வொரு தனிமனிதரும் தன்னுடைய உண்மையான வலுவை சோதித்துக்கொள்ளும், சமூகத்தின் முன் நிரூபித்துக்காட்டும் காலமாகத்தான் இத்தகைய பேரழிவுகாலம் இருக்கிறது.

எனவே, பேரழிவிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் பொருட்டு சமூகத்தின் ஒரு தரப்பை பலியிடும் கொடூரத்தைச் செய்யும் வழக்கத்தை வரலாறு நெடுகும் காண்கிறோம். ‘அவர்கள் தான் இதற்கு காரணம்’ என்ற பழிபோடலில் தொடங்கி, ‘அவர்கள் சாகத்தக்கவர்கள்; அவர்கள் முதலில் செத்துப்போகட்டும்’ என்கிற துவேசம் வரையில் நீள்கிறது இந்த வன்மம்.

மதச் சிறுபான்மையினர், இனச் சிறுபான்மையினர், மொழிச் சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்கள் என பல்வேறு பிரிவு வகைகளாக இந்த ஒடுக்குமுறை பிரிக்கப்பட்டாலும், அடிப்படையில் இந்த வெறுப்புக்கு பின்னால் இருப்பது பண்பாட்டு வெறுப்பு.

14ம் நூற்றாண்டு ப்ளேக்கின் போது, யூதர்கள் மீதான வெறுப்பாகவும், வன்முறையாகவும் நோய்த்தொற்றுக்கான காரணமும், அதன் விளைவுகளும் மாற்றப்பட்டன. யூதர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். படுகொலைகள் நடந்தன. சுமார் 1500 ஆண்டுகால வன்மம் அது.

உலகிலேயே மிக உயர்ந்தவர்களாக தங்களைக் கருதிக்கொண்டு, பொது வரன்முறைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக, அன்றாட வாழ்க்கையிலேயே சாமானியர்களிடமிருந்து சமூக விலக்கை கடைபிடிப்பவர்களாக இருந்த யூதர்களை, வெறுத்துக்கொண்டிருந்த பெரும்பான்மை கிறிஸ்தவர்களால் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆனால், 16,17ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ப்ளேக்கின்போது நோய்த்தொற்று யூதர்களின் மீதான வெறுப்பாக அது மாறவில்லை. மாறாக, மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான கோபமாக ப்ளேக் உருவெடுத்தது. தங்களுடைய சொந்த லாபத்துக்காக ப்ளேக்கை பரப்புகிறார்கள் என அவர்கள் குற்றம்சாட்டப்பட்டார்கள். இந்த தாக்குதல்கள் தான், அரசு பொது சுகாதார அமைப்புகளை உருவாக்குவதை நோக்கி நகர்த்தியது.

17ம் நூற்றாண்டு ப்ளேக், பிரதேசங்களுக்கும், தேசங்களுக்கும் இடையிலான வன்மத்தைக் காட்டுவதாக இருந்தது. தேசங்களின் மேலாண்மைக்கும், இனமேட்டிமைக்கும், செல்வாக்குக்கும் இடையிலான போட்டியாக இருந்த சமூகச் சூழலில்,

இத்தாலியில் அது பிரான்ஸ் நோய் என்றும், பிரான்ஸில் ‘நியோபாலிட்டன் நோய்’ என்றும் ( தெற்கு இத்தாலியின் முக்கியமான பணம் கொழிக்கும் நகரமான நேப்பிளின் பெயரையொட்டி இப்பெயர் உருவானது) என்றும், ஜெர்மனியில் போலிஷ் நோய் என்றும், போலந்தில் ஜெர்மன் நோய் என்றும் அழைக்கப்பட்டது.

ஆனால், 18ம் நூற்றாண்டுக்கு பிறகான சூழலில், பேரழிவு காலத்தில் பழிபோடும் தன்மை என்பது கணிசமாக மாறியது. ஏகாதிபத்தியங்கள் உச்சத்திலிருந்த இக்காலகட்டத்தில், இனங்களையோ, மதங்களையோ குற்றம்சாட்டுவதைத்தாண்டி, நேரடியாக அரசாங்கங்களின் மீது மக்கள் குற்றம் சுமத்தத் தொடங்கினர். அரசுக்கு எதிரான போராட்டமாக, நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மாறின. 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காலாரா நோய் பரவலின்போது, இந்தியர்களின் கிணறுகளில் பிரிட்டிஷார் நச்சைக் கொட்டிவிட்டனர் என்ற கருத்துருவாக்கம் பிரபலமாக இருந்தது.

18,19 நூற்றாண்டு இந்திய பஞ்ச பேரழிவுகள் பிரிட்டிஷ் அரசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதற்கான ஆவணங்களும், ஆய்வுகளும் இன்றளவும் தொடர்கின்றன. பஞ்ச காலத்தில் இறந்தவர்களில் கோடிக்கணக்கான பேர் அடித்தள மக்கள். அடித்தள மக்களுக்குத் தேவையான உணவை பதுக்கியதில், பிரிட்டிஷ் அரசின் அதிகார உறுப்புகளில் இருந்த உயர்சாதியினருக்கும், வணிக சாதிகளுக்கும் பெரும்பங்கு உண்டு. பஞ்ச காலத்திலும் நடந்த சாதிக்கொடுமைகளின் அவலத்திற்கு மத்தியில் மதமாற்றம் என்பது கணிசமாக நடந்தது. இந்திய உயர்சாதி மனநிலை நடத்திய ‘அவர்கள் சாகத்தக்கவர்கள்’ எனும் வகையிலான, அடித்தள மக்கள் மீதான இந்த பண்பாட்டு ஒடுக்குமுறையால், பஞ்சத்துக்கு எதிரான மனநிலை அரசுக்கு எதிரான போராட்டமாக பெருமளவில் திரளாது தடுக்க உதவியது. இல்லையென்றால், அது பசிக்கு மத்தியில், பிரிட்டிஷ்க்கு எதிரான பெரும் போராட்டத்தை உருவாக்கியிருக்கும்.

1896ல் ஏற்பட்ட ப்ளேக் பரவலின்போது, கொல்கத்தா, மும்பை, புனே நகரங்களில் அரசுக்கு எதிராக கலவரங்கள் நடந்தன. கவர்னர் மாளிகைகளும், அரசு அலுவலகங்களும் தாக்குதலுக்குள்ளாகின.

முதல் உலகப்போருக்கு பிறகான, 1917-19 ஸ்பானிஷ் காய்ச்சல் பரவலின்போது, அமெரிக்கா வரலாற்றிலேயே மிகமோசமான பாஸ்டன் நிறவெறி கலவரத்தைச் சந்தித்தது. இந்தியாவிலும், முதல் உலகப்போரில் எஞ்சிய ஆயுதங்களின் நச்சு வாயுவை பரப்பி, பிரிட்டிஷார் இந்தியர்களை கொல்கிறார்கள் என்ற வதந்தி பரவியது. இந்தியாவில் 1.2 கோடிபேரை மூன்றே மாதத்தில் காவுவாங்கிய ஸ்பானிஷ் காய்ச்சல், 1920களில் பிரிட்டிஷுக்கு எதிராக இந்திய சுதந்திர போராட்டம் வேகமெடுக்க முக்கிய காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

1980களில் எய்ட்ஸ் பரவியபோது, இரத்தத் தேங்கல் நோயுள்ளவர்களுக்கு, இரத்த மாற்று சிகிச்சை செய்யும்போது, பாதிக்கப்பட்ட இரத்தங்களை பயன்படுத்தியதால் அமெரிக்காவில் நோய் பரவியது என நிரூபணமானது. இதனால், பாதிக்கப்பட்ட சுமார் 8000 அமெரிக்கர்களுக்கு தலா 1 லட்சம் அமெரிக்க டாலர் நிவாரணம் வழங்க வேண்டி வந்தது.

ஆனால், 1980களில் ஆய்வக அறிவியல் கணிசமாக வளர்ந்தபிறகு, நோய்த்தொற்று பரவல் என்பது ஆய்வகங்களிலிருந்தது பரப்பப்படுகிறது என்ற கருத்துருவாக்கம் அரசுகளுக்கு எதிரான போராட்டத்தை கணிசமாக குறைத்திருக்கிறது. ஒருநாட்டை அழிக்க, இன்னொரு நாடு நடத்தும் ‘உயிரியல் போர்’ எனும் கருத்தாக்கமும், அது சார்ந்த வெறுப்புவாதமும் வலுவடைந்தது. 14ம் நூற்றாண்டு ப்ளேக்கிலிருந்தே இந்தக்கருத்தாக்கம் இருக்கிறது என்றாலும், ஒரு அறிவியல் போராக அதைக்கருதும் வழக்கம் இப்போதே வலுவானது.

சார்ஸ் நோயின்போது, அமெரிக்கா திட்டமிட்டு வைரஸை பரப்புகிறது என ரஷ்ய ஆய்வாளர்கள் குற்றம்சாட்டினர். சார்ஸ் என்பது தட்டம்மை வைரஸிலிருந்து உருவாக்கப்பட்டது என்றனர் ரஷ்ய ஆய்வாளர்கள். சார்ஸ் நோயால், சீனா – ஹாங்காங் – தைவான் நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டன; ஆனால், அமெரிக்காவின் நேச நாடுகள் பாதிக்கப்படவில்லை என்கிற வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், சார்ஸ் ஒரு கொரோனா வைரஸ் என்பதும், கொரோனா வைரஸை தட்டம்மை வைரஸிலிருந்து உருவாக்க முடியாது என்றும் பின்னர் கண்டறியப்பட்டது.

இன்றும் கொரோனா வைரஸ் குறித்து ஏராளமான கட்டுக்கதைகள் உள்ளன. அவற்றில் பிரதானமானது ‘சீன இன வெறுப்பையும், பண்பாட்டு வெறுப்பையும்’ அடிப்படையாகக் கொண்டவை. சீனர்களின் உணவுப்பழக்கத்தையும், வாழ்க்கை முறையையும் கேலி செய்பவை.

ஒருபுறம் சீனாவின் சாவு எண்ணிக்கை குறித்த சர்ச்சை உள்ளது; இன்னொருபுறம் சீனா தான் இந்த வைரஸையே உருவாக்கியது என்கிற சர்ச்சை உள்ளது.

சீனாதான் வைரஸை உருவாக்கியது என்றால், எப்படி சொந்தநாட்டில் கோடிக்கணக்கான மக்கள் சாவார்கள்? அதற்காகத்தான் வயதானவர்களை மட்டும் கொல்லத்தக்க வகையில் வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறி வியக்க வைக்கிறார்கள் கட்டுக்கதையாளர்கள்.

ஒரு பொது வெறுப்பைக் கட்டமைக்க இரண்டு முரணான வெறுப்பு ஒரே நேரத்தில் கட்டமைக்கப்படுகிறது. அமெரிக்காவில் மட்டுமல்ல, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளிலும் சீனர்களுக்கு எதிரான இந்த வெறுப்பு அலை வீசுகிறது.

இந்தியாவில், நோய் பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவித்தபோது, வடகிழக்கு மாநிலங்களில் மொத்தமே 2 பேருக்குதான் தொற்று இருந்தது. ஆனால், மிகப்பெரும் பதற்றம் அங்கு நிலவியது. காரணம், இந்தியா முழுவதும் பரவி வேலைபார்க்கும் ‘சீனர்களைப் போன்ற’ தோற்றம் கொண்ட தங்களின் குழந்தைகள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுமோ என்கிற அச்சம், வடகிழக்கு மாநிலங்களை பீடித்திருந்ததுதான்.

எவ்வளவு அறிவியல்பூர்வமாக விவாதித்தாலும், மாற்ற முடியாத அளவுக்கு சீனர்களின் உணவுப்பழக்கம் குறித்த வெறுப்பு இன்று மண்டியிருக்கிறது. இந்த வெறுப்பு, உலகம் முழுக்க புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த சட்டங்களிலும், எதார்த்த வாழ்க்கையில் ஒழுங்குநடவடிக்கைகளிலும், கட்டுப்பாடுகளிலும் வரும்காலத்தில் எதிரொலிக்கக்கூடும். இதனால் கிடைக்கும் அனுகூலங்கள் வலதுசாரிகளுக்கான வாய்ப்புக்கதவு.

சீனா மீதான சர்ச்சை குறித்து இந்தியா எந்தக்கருத்தும் தெரிவிக்கவில்லை. மாறாக, இந்தியாவுக்குள் கொரோனா தொற்று என்பது இசுலாமியர்களுக்கு எதிரானதாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. தப்லீக் ஜமாத் கூடலை முன்வைத்து பாஜக பிரமுகர்களும், ஊடக தரகர்களும் ஒட்டுமொத்த இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பாக தொலைக்காட்சிகளில் ஊளையிடுகிறார்கள்.

தாராளமயமாக்க பொருளாதாரம் உலகம் முழுக்க கிளைபரப்பிக் கொண்டிருந்த 1980கள் தொடங்கி, இன்றுவரை இப்படியான நோய்த்தொற்று கால கட்டுக்கதைகள் அரசின் மீதான வெறுப்பைக் குறைத்தன. ‘நம்மை அழிக்க இன்னொரு நாடு இருக்கிறது. எனவே, நம்மை நாம் காத்துக்கொள்வோம்’ என்கிற தேசியவாத உணர்ச்சிகளை அரசுகளை நோக்கி மக்களிடம் போலியாகவேனும் உருவாக்கின.

ஆனால், இன்று நிலைமை அப்படி அல்ல. இது ‘Post Truth Period’. இன்றும் கொரோனா தொற்று குறித்து ஏராளமான கட்டுக்கதைகளும், வெறுப்பு அலைகளும் உள்ளன. ஆனால், அவை இறுதியில் அரசு என்கிற அமைப்பின் மீதே அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. கொரோனா தொற்றால் உருவாக்கப்படும் கட்டுக்கதைகளும், அவநம்பிக்கைகளும் ‘அரசு எனும் நிறுவனத்தை மதிப்பிழப்பைச் செய்வதாக’ டெக்ஸாஸ் பல்கலை பேராசிரியர்கள் அறிக்கை அளித்துள்ளனர்.

அரசின் மீதான அவநம்பிக்கையும், தொற்றுக்கே காரணம் குறிப்பிட்ட தேசத்தின் – இனத்தின் பண்பாடுதான் என்ற புரளியும், நிரந்தரமான பண்பாட்டு வெறுப்பை உருவாக்குகின்றன. எல்லா தேசத்தவர்களும் கலந்து உழைக்கும் தாராளமயமாக்க பொருளாதாரத்தில், குறிப்பிட்ட தேசத்தவர் மீதான அருவருப்பை இது உருவாக்குகிறது. ஆமாம். யூதர்களுக்கு எதிரான Antisemitism, இசுலாமியர்களுக்கு எதிரான Islamophobia போல, Cultural Phobia (பண்பாட்டு வெறுப்பு நோய்) உருவாகிக்கொண்டிருக்கிறது.

இந்த Cultural Phobia-வை இந்தியாவில் இசுலாமியர்களுக்கு எதிராக கட்டமைக்கும் வாய்ப்பாக கொரோனோ தொற்று பயன்படுத்தப் படுகிறதோ என்கிற அச்சம் எழுகிறது. இசுலாமியர்கள் மீது மத ரீதியான காழ்ப்புணர்ச்சியை கடுமையாக எதிர்ப்பவர்கள்கூட, இந்த பண்பாட்டு வெறுப்புக்கு பலியாகிறார்கள் என்பதே அதில் கவலைக்குரிய செய்தி.

ஒரு பண்பாட்டு கீழ்மை உணர்வை இசுலாமியர்கள் மீது கடைபிடிக்கும் பெரும்பான்மை கலாச்சார ஆதிக்க மனப்பான்மைக்கு கொரோனா தீனி போடுகிறது.

நோய் பரவலைத் தடுப்பதற்கு முக்கிய நடவடிக்கையாக ‘சமூக விலக்கம்’ முன்னிறுத்தப்படும் நேரத்தில், இசுலாமியர்கள் ஒன்றுகூடுகிறார்கள் என்கிற தோற்றம் உருவாக்கப்படுகிறது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்தில்

சமூக விலக்கம் என்பதை முன்னிறுத்தி,

ஷாகின்பாக் போராட்டக் குழுவின்மீது இந்துத்துவர்கள் தாக்குதல் நடத்தியது நாடு செல்லும் திசையைக் காட்டுகிறது. உ.பி-யில் சுமார் 156 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. மதுரையில் சாதாரண காய்ச்சல் கொண்ட ஒரு இசுலாமியரை, மன அழுத்தத்துக்கு ஆளாக்கி சமூக கொலை செய்திருக்கிறார்கள். நெல்லை மேலப்பாளையம் இசுலாமியர்கள் பெரும்பான்மை கொண்ட 1.2 லட்சம் பேர் வாழும் பகுதி. அங்கு சுமார் 17 பேருக்கு தொற்று என்கிறது அரசு. சிலநாட்களுக்கு முன்புவரை அந்த பகுதி இசுலாமியர்கள் தான், பசியோடிருந்தவர்களுக்கு ‘ஊரடங்கு சோறு’ போட்டிருக்கிறார்கள். ஆனால், ‘டெல்லி சென்று வந்தவர்கள்’ என்ற பரப்புரை மொத்த பகுதி மீதும் விலக்கை கடைப்பிடிக்கும் சூழலுக்கு இட்டுச்சென்றுள்ளது.

வளரும் இப்போக்கை, சீனாவின் மீது பழிபோடுவதில் மும்முரம் காட்டும் அமெரிக்காவே, சிறுபான்மையினருக்கு எதிரானதாக கொரோனா சித்தரிக்கப்படுவதாகக் கண்டித்துள்ளது.

கொரோனா உருவாக்கியுள்ள பொருளாதார பேரழிவின் அச்சம், உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கிறது. நிலைமை இப்படியே சென்றால் இத்தாலியில் புரட்சி வெடிக்கும என மக்கள் கொந்தளிக்கிறார்கள். இந்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து எழ ஆப்பிரிக்காவுக்கு குறைந்தது 3 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள்.

சீனா இந்த கொரோனாவை எதிர்த்து வென்றதன் அடிப்படை மூலமே, உள்நாட்டு அமைதியையும், நம்பிக்கையையும் தக்கவைக்கும் வலிமையான தலைமையும், உறுதியான அரசாங்கமும் இருந்துததான்.

ஆனால், இவ்வளவு மோசமான சூழலில் உள்நாட்டு மதக்கலவரத்துக்கான விதையை தங்கள் பண்பாட்டு வெறுப்பிலிருந்து தூவிக்கொண்டிருக்கிறார்கள் இந்துத்துவர்கள்.

குடியுரிமை போராட்டம் நடந்துகொண்டிருக்கும் சூழலில், இசுலாமியர்கள் ஜனநாயக ரீதியில் இணையவேண்டிய முக்கியத்துவத்தை அதிகம் உணர்ந்திருக்கிறார்கள். இந்நிலையில், இசுலாமியர்கள் கூடியதால்தான் நோய் பரவியது என்கிற தோற்றத்தை உருவாக்குவது, அரசியலமைப்பு உரிமைகளை ஒடுக்குவதற்கான சாக்காக பயன்படக்கூடிய ஆபத்தான வாதம்.

தொற்று நோய்க்கு பிறகான காலத்தில், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் போன்ற இசுலாமியர்களின் ஜனநாயக செயல்பாடுகள் மீதே ‘பண்பாட்டு வெறுப்பை’ இது உருவாக்கக்கூடும்.

மோடி அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இயல்பாகவே உயர்சாதி கலாச்சார பாணி இருக்கிறது.உத்தரபிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்களை தீட்டுக்கழித்த திமிர் அதன் ஒருபகுதி.உலகின் பலநாடுகளின் அரசுகள் தொற்றுநோய் காலத்தில் பரவிவரும் இனவாதத்தை சமாளிக்க திட்டமிட்டு வரும்வேளையில், இந்தியாவில் மட்டும் தான் நாட்டின் அரசாங்கமே வகுப்புவாதத் தன்மையுடன் இருக்கும் திட்டங்களை அறிவிக்கிறது.

பேரழிவுகள் உருவாக்கும் புதிய பழக்கவழக்கங்களும் சமூகப் பொருளாதார மாற்றங்களும், பேரழிவுக்குப் பிறகான சமூக பண்பாட்டை கணிசமாக பாதித்துள்ளன. பேரழிவு காலத்தில் உருவாகும் சொற்கள், சமூகத்தின் திசைப்போக்குகளையும், உளவியலையும் பாதித்துள்ளன.

போப் ஆண்டவர் தி கிரேட் கிரிகாரியன் நோயாளிகள் குணமடைய பயன்படுத்திய ‘God Bless You’ என்ற வாசகம் பின்னாளில் ப்ளேக் நோய் பரவலின்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் சொற்களானது. 18,19ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ஏராளமான பஞ்சங்களே இந்தியாவில் யார் ஒருவரைச் சந்திக்கும்போதும், ‘சாப்பிட்டீர்களா?’ என்று கேட்கும் வழக்கத்தை உருவாக்கியது.

நவீன தொழில்நுட்ப யுகத்தின் மாபெரும் தொற்றுப் பேரழிவாக கொரோனா உருவெடுத்திருக்கும் நிலையில், கொரோனாவைச் சுற்றி உருவாகும் சொற்கள் கவனத்திற்குரியதாக இருக்கின்றன. ‘சமூக விலக்கம்’ என்ற சொல்லாடல் மிகப்பெரும் தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறது. இந்தியாவின் அடிப்படைவாத தீண்டாமை உணர்வுகளையும், ஒடுக்குமுறைகளையும் அரசியல்படுத்தும் சொற்களாக ‘சமூக விலக்கம்’ மாறிவிடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தோடு, பண்பாட்டு வெறுப்புக்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது !

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share