கார்த்திகேயன் ஹேமலதா
எப்போதும் இந்தச் சமயத்தில் தர்மபுரியில் மழை வந்திருக்கும் என்கிறார் எம்.மொலகப்பன். இவர் முன்னாள் விவசாயி. அங்குள்ள மராவடி கிராமத்தில் வசித்து வருகிறார். இந்தக் காலத்தில் பெய்ய வேண்டிய மழையை 13.5 நாட்களாகப் பிரித்து பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர் இப்பகுதி மக்கள். ஒவ்வொரு காலத்திலும் பெய்யும் மழையும் ஒன்றுடன் ஒன்று மாறுபடும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் பெய்யும் மழையை உப மழை எனவும், மார்ச் மாதத்தில் பெய்ய வேண்டிய மழையைப் பழைய மழை எனவும் அழைப்பர். ஆனால் இப்போது சரியான நேரத்தில் மழை பெய்வதே இல்லை. காலம் மாறி மாறி மழை பெய்கிறது” என்கிறார் மொலகப்பன்.
“நாங்கள் அந்த மழைகளின் பெயர்களை மறந்து விட்டோம். மழையும் எங்களை மறந்துவிட்டது” என்கிறார் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி. தர்மபுரியைச் சேர்ந்த இளைய தலைமுறை விவசாயிகள் மற்றும் நடுத்தர வயதுடைய விவசாயிகள் யாருக்கும் இந்த பல்வேறு வகையான மழைக் காலங்களின் பெயர்கள் இப்போது தெரியவில்லை. ஆனால் இவர்களுடைய முன்னோர்களுக்கு மழைக் காலங்களின் பல்வேறு விதமான பெயர்கள் நன்கு தெரியும்.
“வழக்கமான கால இடைவெளியில் மழை முறையாகப் பெய்வதில்லை. கடந்த 15 ஆண்டுகளாக இந்த மோசமான நிலைதான் நிலவுகிறது. அதனால்தான் மழைக் காலங்களின் பெயர்களை இப்போது மறந்துவிட்டார்கள்” என்கிறார் சின்னசாமி. மொலகப்பன் மற்றும் சின்னசாமி இருவருமே கடந்த காலத்தில் மழை சரியாக பெய்தபோது வேளாண் சிறப்புற்று இருந்ததையும் நம்மிடம் நினைவு கூர்கிறார்கள். அறிவியல் ரீதியான ஆய்வுகளும் இதை நிரூபிக்கின்றன. ஆனால் பருவநிலை மாற்றங்கள் இப்போது விவசாயிகளைக் கடுமையாக வஞ்சிக்கிறது.
வேளாண் துறையின் அறிக்கைகளின்படி, 2016ஆம் ஆண்டைத் தவிர மற்ற ஆண்டுகளில் 2006 முதல் தர்மபுரி மாவட்டம் சராசரி மழை அல்லது சராசரிக்கும் சற்று அதிகமான மழையைப் பெற்றுள்ளது. 2016ஆம் ஆண்டுதான் சமீப காலங்களில் தமிழ்நாடு சந்தித்த மிக வறட்சியான ஆண்டாகும். கடந்த 140 ஆண்டுகளில் சந்திக்காத வறட்சியை 2016ஆம் ஆண்டில் தமிழ்நாடு சந்தித்திருந்தது. அந்த ஆண்டில் தர்மபுரி சராசரி மழையில் பாதியைத்தான் பெற்றிருந்தது. தோராயமாக வருடத்திற்கு 853.1 மில்லி மீட்டர் அளவிலான மழையைப் பெறும். ஆனால் 2016ஆம் ஆண்டில் 397.6 மில்லி மீட்டர் மழையை மட்டுமே பெற்றது.
“இந்த வறட்சியால் மொத்த மழையில் மட்டும் இழப்பு ஏற்படவில்லை, நீர் விநியோகத்திலும் இதனால் பாதிப்பு ஏற்பட்டது. உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்க வேண்டியது விவசாயத்தில் அவசியமான ஒன்று. அதுவும் தர்மபுரியில் தோல்வியில்தான் முடிந்தது” என்கிறார் சின்னசாமி. தர்மபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் தமிழ்நாட்டில் வறட்சி பாதித்த மாவட்டங்களில் முக்கியமான மாவட்டங்களாக உள்ளன.
“தர்மபுரி மாவட்டத்திற்குத் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை என இரண்டு பருவத்திலும் மழை கிடைக்கும். இதனால் வருடத்தின் இரண்டு பருவத்தில் மழைநீரைக் கொண்டு இம்மாவட்டத்தில் விவசாயம் மேற்கொள்ளலாம். சில சமயங்களில் மூன்று பருவத்திலும் சாகுபடி செய்யலாம். தமிழ்நாட்டில் இதுபோன்ற காலநிலையைக் கொண்டுள்ள மற்றொரு மாவட்டம் கன்னியாகுமரி மட்டும்தான். வறட்சியான மாவட்டத்தில் மூன்று சாகுபடியும் செய்யும் ஒரு வாய்ப்பு கொண்ட புவியியல் அம்சம் தர்மபுரிக்கு உள்ளது” என்கிறார் மணி ராஜ். இவர் தர்மபுரி மாவட்ட வேளாண் அதிகாரியாவார்.
தென் மேற்குப் பருவமழை நாடு முழுவதும் ஜூன் மாதத்தில் பெய்யும். ஆனால் தமிழ்நாட்டிலும், இமாலயன் பகுதிகளிலும் மட்டும் பரவலான மழை இருக்காது. தமிழ்நாட்டுக்குள் நுழையும் ஈரப்பதமான மேகங்களை மேற்குத் தொடர்ச்சி மலை தடுப்பதே மழை தமிழ்நாட்டில் மழை இல்லாமைக்குக் காரணமாகும். இமாலயன் பகுதிகள் மிக உயரமாக இருப்பதால் அங்கும் மழை இருக்காது.
மூன்று பருவ மழை இருக்கும் போதிலும் தர்மபுரி வறட்சி மாவட்டமாக உள்ளது. பருவநிலை மாற்றமும், நீர் நிலைகளில் நிகழும் அத்துமீறலும் இந்த மோசமான நிலைக்கு முக்கியக் காரணம் என்கின்றனர் வல்லுநர்கள். “120 மில்லி மீட்டர் மழையை ஒரே நாளில் கூடப் பெறுகிறோம். இதனால் சராசரி மழைப் பட்டியலில் சேர்த்து விடுகிறார்கள். இதனால் பல நாட்கள் வறட்சியில் இருந்தாலும் கணக்கில் வருவதில்லை. இது நிலையான விவசாயத்தைப் பாதிக்கிறது” என்கிறார் மணி ராஜ்.
மழை குன்றி வருவதால் நிலத்தடி நீர்மட்டமும் வேகமாகக் குறைந்து வருகிறது. “மழைநீரும் உரிய வகையில் பாதுகாக்கப்படாமல் வீணாகிக் கொண்டிருக்கிறது. இதனால் தர்மபுரி மற்றும் மேலும் சில பகுதிகளில் நிலைமை மிக மோசமாகி வருகிறது. மழைநீர் நிலத்தடியில் சேருவதற்கான வடிகால்களோ அல்லது வேறு முறையான திட்டங்களோ ஏதும் இல்லை” என்கிறார் எஸ்.பன்னீர்செல்வம். இவர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் வேளாண் பருவ ஆராய்ச்சி மையத்தின் தலைவராக உள்ளார். “மழை நீர் சேகரிப்பு மற்றும் கால்வாய்கள் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்வதற்கான சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதுதான் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழியாகும்” என்றும் அவர் கூறுகிறார்.
தமிழ்நாட்டில் பெய்கிற மழையில் அதிகமாகக் கடலோர மாவட்டங்களில்தான் பெய்கிறது. ஆனால் தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட உள்மாவட்டங்களில் மழை குறைந்துவிட்டது. இதேபோல மாநிலம் முழுவதும் மழை குறைந்தும், இதன் தீவிரம் அதிகரித்தும் உள்ளது. “1990 முதல் 2020 வரையிலான ஆண்டுகளில் கடலோர மாவட்டங்களில் மழை 7 விழுக்காடு அதிகரித்துள்ளது” என்று ஏ.ராமச்சந்திரன் கூறுகிறார். இவர் அண்ணா பல்கலைக் கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் பருவ மாற்றத்தால் எளிதில் பாதிக்கக் கூடிய மாவட்டமாக தர்மபுரி உள்ளது. “1990-2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தர்மபுரியில் 4 விழுக்காடு மழை குறைந்துள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் 2 விழுக்காடு குறைந்துள்ளது” என்கிறார் ராமச்சந்திரன்.
மழை குறைந்தது மட்டுமின்றி வெப்பநிலையும் மாற்றம் கண்டுள்ளது. மேற்கண்ட காலகட்டத்தில் தமிழ்நாட்டின் வெப்பநிலை 0.9 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. வட கிழக்குப் பருவ வேளாண் மண்டலங்களில் வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. 2010ஆம் ஆண்டுக்குள் மழை பெய்யும் அளவு மேலும் 10 விழுக்காடு குறைந்துவிடும் என்று கூறும் ராமச்சந்திரன், இதற்கான கொள்கை நடவடிக்கைகளை இப்போதே எடுக்காவிட்டால் இப்பிரச்னைக்குத் தீர்வு காண இயலாது என்றும் எச்சரிக்கிறார்.
தர்மபுரி மாவட்ட விவசாயிகள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரையில் காத்திருக்கவில்லை. மாநில அரசின் அறிக்கைகளின்படி 2012 முதல் 2017 வரையிலான ஐந்து ஆண்டுக் காலத்தில் தர்மபுரி மாவட்டத்தில் 13,000 டன் கம்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சுமார் 10,550 ஏக்கரில் இங்கு கம்பு பயிரிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களை விடக் கூடுதலான அளவில் கம்பு உற்பத்தி செய்யும் மாவட்டமாக தர்மபுரி உள்ளது.
பருவநிலை மாற்றங்களையும் சமாளித்து கம்பு உற்பத்தியில் மிகுந்த சவாலுடன் ஈடுபட்டுள்ளனர் இப்பகுதி பெண்கள். “கடந்த 140 ஆண்டுகளாகக் காணாத அளவுக்குக் கடுமையான வறட்சியை 2016ஆம் ஆண்டு கண்டோம். கடந்த மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக கம்புக்குப் பதிலாக நெல் பயிரிட்டேன்” என்கிறார் வள்ளியம்மாள். இவர் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார். மலைப் பகுதி என்பதால் இங்கு பாசனக் கால்வாய்கள் இல்லை. மழை நீரை மட்டுமே பயிர் செய்கிறார். “கம்பு பயிரிடுவதில்தான் மகிழ்ச்சி அடைகிறேன். விளைகிற கம்பு எங்கள் குடும்பத்திற்குப் போதுமான உணவளிக்கிறது” என்றும் அவர் கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில், “மழை குறைந்தால் காட்டு விலங்குகள் அதிகமாக ஊருக்குள் வரும். அவை விளை நிலங்களைச் சேதப்படுத்தும். நான் என்னுடைய கணவரிடம் கூறி, இரவு நேரத்தில் காட்டுக்கு காவல் பணியில் ஈடுபட வைப்பேன். மயில்கள் மற்றும் பன்றிகள் விளை நிலத்துக்குள் புகுந்து விடாமல் அவர் பாதுகாப்பார்” என்கிறார் வள்ளியம்மாள்.
இங்கு நெல் எப்போதும் முதன்மைப் பயிர் அல்ல. கம்பு, பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள்தான் அதிகம் பயிரிடப்படுகின்றன. பருவநிலை மாற்றம் மற்றும் மழை குறைவு ஆகியவற்றைச் சமாளித்து பயிர் செய்ய கம்பு மற்றும் பருப்பு வகைகள் சிறந்த பயிர்களாக உள்ளன என்று மாநில திட்டக் குழு கூறுகிறது. மேலும், கலப்பு பயிரிடுதல் முறையைப் பின்பற்றவும் விவசாயிகளுக்கு மாநில அரசு ஆலோசனை வழங்குகிறது. இதன்மூலம் மண் வளத்தைப் பெருக்கலாம் என்று இந்த ஆணையம் கூறுகிறது.
“சுழற்சி முறையில் பருப்பு வகைகள் பயிர் செய்யப்பட்டு வந்தால் காலப்போக்கில் நைட்ரஜன் கலந்து மண்ணானது வளம் மிக்கதாக மாறும். அதேபோல கம்புப் பயிரும் மண்ணின் வளத்தை அதிகரிக்கும். கம்புப் பயிரானது சி4 வகைப் பயிராகும். இது கார்பன் டை ஆக்சைடை சர்க்கரையாக மாற்றும் திறன் கொண்டது” என்கிறார் ஜகன் மோகன். இவர் தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் வேளாண் கொள்கைத் தலைவராக உள்ளார். மோசமான சூழ்நிலை மற்றும் மழைக் குறைவு ஆகியவற்றால் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
நன்றி: [இந்தியா கிளைமேட் டயலாக்](https://indiaclimatedialogue.net/2018/04/09/when-dharmapuri-forgot-the-names-of-rain/)
**தமிழில்**: [பிரகாசு](https://www.facebook.com/prakash.dvk.1)
**நேற்றைய கட்டுரை:** [சண்டே சக்சஸ் ஸ்டோரி: சி.கே.குமாரவேல் – நேச்சுரல்ஸ் சலூன்](https://minnambalam.com/k/2018/05/27/11)
**மின்னஞ்சல் முகவரி**: [feedback@minnambalam.com](mailto:feedback@minnambalam.com)
�,”