பார்பரா ஹாரிஸ்-ஒயிட்
மத்திய பிரான்ஸில் இப்போது பகல் நேரம். வெப்ப நிலை 8 டிகிரி. ஆயினும், மரங்கள் இன்னமும் கோடைக்காலத்து இலைகளை உதிர்ப்பதற்கான அறிகுறியைக்கூடக் கொண்டிருக்கவில்லை. இந்தச் சூழலிலிருந்து எழுதப்படும் ஒரு கடிதத்தைத் தமிழ் வாசகர்கள் ஏன் படிக்க வேண்டும்? அசாதாரணமான சூறாவளிகளையும் வெள்ளப் பெருக்குகளையும் பற்றி நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் ஐரோப்பாவில் நிலவும் வெப்ப நிலை சரியில்லை. இங்கும் பருவநிலை மாறிக்கொண்டிருக்கிறது.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பருவ நிலை மாற்றம் குறித்து எதுவும் செய்யாமல் இந்தியாவின் பருவநிலை மாற்றம் குறித்த செயல்பாடுகளில் ஏன் இறங்குகிறீர்கள் என நீங்கள் கேட்கும் கேள்வி சரியானதுதான்.
பருவநிலை மாற்றம் குறித்த உலகளாவிய மாநாடுகள் பலவும் பயனற்ற முறையில் நடந்து முடிந்த பிறகு, உலகின் வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி என்னும் நிலையில் கட்டுப்படுத்துவதை இலக்காகக் கொள்ள வேண்டும் என 196 நாடுகள் 2015ஆம் ஆண்டில் பாரிஸில் நடைபெற்ற மாநாட்டில் ஒப்புக்கொண்டன. பசுமை இல்ல வாயுக்களின் உற்பத்தியைக் குறைக்கவும் உறுதிபூண்டன. ‘பருவநிலை மாற்றத் தொழில்நுட்ப’த்துக்காக 100 பில்லியன் (பில்லியன் – 100 கோடி) டாலர் ஒதுக்கப்படுவதாக அதே ஆண்டில் ஆடிஸ் அப்பாவில் ஐ.நா. அறிவித்தது. வெப்ப நிலை உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு 2 ட்ரில்லியன் (ட்ரில்லியன் – லட்சம் கோடி) டாலர் முதலீடு தேவை என முடிவுசெய்யப்பட்டது. வளங்குன்றா வளர்ச்சிக்கான (Sustainable Development) 2013ஆம் ஆண்டுக்கான இலக்கை எட்ட வேண்டுமென்றால் 2 முதல் 3 ட்ரில்லியன் டாலர்வரை தேவைப்படும் என்றும் கணக்கிடப்பட்டது. ‘பாரிஸ் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான பாதையில் எந்த நாடும் செல்லவில்லை’ என்று ‘நேச்சர்’ என்னும் அறிவியல் இதழின் அண்மைய வெளியீடு கூறுகிறது. வளங்குன்றா வளர்ச்சிக்கான 17 இலக்குகளை எட்டுவதற்கான பாதையில் எந்த நாடுமே பயணிக்கவில்லை என்றும் சொல்கிறது.
இது மிக நெருக்கடியான சூழல். உலக வரலாற்றில் இதுவரை இப்படி நிகழ்ந்ததில்லை.
உதாரணமாக, (ப்ரெக்ஸிட் என்னும் மாபெரும் சிக்கலுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும்) இங்கிலாந்திடம் உள்நாட்டில் வளங்குன்றா வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்த வியூகமோ, பொது ஆலோசனைகளோ இல்லை. அரசுத் துறைகளுக்கிடையே இது விஷயத்தில் ஒருங்கிணைவும் இல்லை. வளங்குன்றா வளர்ச்சி என்றால் என்ன என்பதிலேயே அவற்றுக்குக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. முன்னேற்றத்தைக் கணக்கிடுவதற்கான செயல்முறை எதுவும் வகுக்கப்படவில்லை. வளங்குன்றா வளர்ச்சியை வளர்ச்சியினின்றும் பிரித்துப் பார்க்க முடியும் என்றே இங்கிலாந்து அரசு நினைப்பதாகத் தோன்றுகிறது. ஒப்பீட்டளவில் இங்கிலாந்தில் பெரிய அமைச்சகமான சர்வதேச விவகாரங்கள் துறையிடம் நாட்டின் வளங்குன்றா வளர்ச்சிக்கான பொறுப்பை அளித்துள்ளது.
**பிரான்ஸின் முயற்சிகள்**
பிரான்ஸ் நாடு வித்தியாசமாகவே செயல்படுகிறது. “இந்த பூமியை மீண்டும் மகத்தானதாக மாற்றுவோம்” என்கிறார் அதிபர் மக்ரோன். வளங்குன்றா வளர்ச்சிக்கான இலக்குகள் எந்த நிலையில் உள்ளன என்பதைக் காட்டும் அறிக்கையை முதலில் வெளியிட்ட நாடு பிரான்ஸ்தான். பிரெஞ்ச் மக்களில் ஏழில் ஒருவர் ஏழை, 25 வயதுக்குட்பட்டோரில் கால்வாசிப் பேர் வேலையில்லாதவர்கள், ஒரே வேலைக்கு ஆண்களைவிடக் கால் பங்கு குறைவாகவே பெண்கள் சம்பாதிக்கிறார்கள் என்பதையெல்லாம் அந்த அறிக்கை ஒப்புக்கொள்கிறது. வளங்குன்றா வளர்ச்சிக்கான இலக்குகளைப் பொறுத்தவரை செயல்பாட்டில் இருக்கும் இடைவெளிகளை நிரப்புவதுதான் வளர்ச்சிக்கான பிரான்ஸின் அணுகுமுறை. புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தியையும் எரிசக்தியின் திறனையும் அதிகரித்தல், பல்லுயிர்ச் சூழலை மீட்டெடுத்தல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் ஆகியவை உள்ளிட்ட அம்சங்களும் இதில் அடக்கம்.
ஆனால், பிரான்ஸின் அயலுறவுத் துறை அமைச்சகமும் அதன் முகமை அமைப்பான ஃப்ரெஞ்ச் டெவெலப்மென்டல் எய்ட் என்னும் அமைப்பும் 2015ஆம் ஆண்டிலிருந்தே வளர்ச்சி பற்றிய கோட்பாடுகள், முன்னுதாரணங்கள் ஆகியவற்றில் முழுமையான மாறுதல்களைச் செய்ய வேண்டும் எனக் கோரிவருகின்றன. வளர்ச்சி என்பது அனைத்துவிதமான வறுமைகளையும் ஒழிப்பதுடன் சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் குறைக்க வேண்டும் என்னும் சிந்தனை உருவாகியிருக்கிறது. இது தொழில்மயமாக்கலிலும் சமூகப் பாதுகாப்பிலும் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டம் என்பது குறிப்பிடப்படவில்லை. பதிலாக, சூழலியல், எரிசக்தி, மக்கள்தொகை (புலப்பெயர்வு மற்றும் இனப்பெருக்க ஆற்றல்), மாகாண, உள்ளூர் வளர்ச்சி, பிரான்ஸில் பொறுப்புள்ள குடியாண்மை ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்த அம்சங்களில் பிரான்ஸ் உலகை வழிநடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
இதை ஒப்புக்கொண்டு இதற்கென ஒரு கொள்கையை உருவாக்குவதன் மூலம் பிரான்ஸ் தன் முயற்சியைத் தொடங்கிவிட்டது. இதற்காக நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல், அரசு அதிகாரவர்க்கம், அரசுத் திட்டப் பணியாளர்கள், வெளிநாடுகளின் பிராந்தியங்கள், பிரான்ஸின் மாநிலங்கள், தொழிலாளர் சங்கங்கள், ஆய்வு நிறுவனங்கள், குடிமைச் சமூகம், என்.ஜி.ஓக்கள், ‘உயர் மட்டத்திலான வெளிநாட்டு ஆளுமைகளைக்’ கொண்ட சர்வதேசக் கல்லூரி ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். இந்த ஒவ்வொரு பிரிவிலிருந்தும் 5 முதல் 7 பிரதிநிதிகள் வரை கலந்துகொண்டார்கள். பிரான்ஸின் அனைத்து அமைச்சகங்களிலிருந்தும் பார்வையாளர்கள் இதில் கலந்துகொண்டார்கள். இவர்கள் ஒவ்வொருவரிடமும் வளங்குன்றா வளர்ச்சித் திட்டங்கள் இருக்கின்றன. அவற்றைக் கண்காணிப்பதற்கான திறன்களும் உள்ளன. இது குறித்த சான்றுகளும் கொள்கைசார் ஆலோசனைகளும் இந்தக் கூட்டத்துக்கு முன்பே அனைவருக்கும் அனுப்பப்பட்டன. இவை விவாதிக்கப்பட்டு, ஒத்துவரக்கூடியவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இது சுவாரஸ்யமானதாகத் தோன்றுகிறதா? தமிழ்நாட்டின் கொள்கை வகுப்பின் குறிப்பிட்ட சில அம்சங்களில் இதை முயற்சிசெய்து பார்க்க முடியுமா?
**நடைமுறைசார் அணுகுமுறை**
பிரான்ஸ் நாடு, 2020ஆம் ஆண்டுக்குள் தான் வழங்கும் உதவித் தொகைகளை 12 பில்லியன் டாலராக உயர்த்த இலக்காகக் கொண்டிருக்கிறது. இது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.55%. உதவித் தொகை வழங்குவதில் ஏற்கெனவே உலகின் ஐந்தாவது பெரிய நாடாக பிரான்ஸ் விளங்குகிறது.
பெட்ரோலியப் பொருள்கள், விமானப் பயணம், நிதிப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றின் மீது பிரான்ஸ் வரி விதித்துள்ளது. இந்த வரித் தொகை பருவநிலை மாற்றத்துக்கு எதிரான பாதுகாப்புக்காகவும் பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்பதற்காகவும் செலவிடப்படும்.
எல்லாவற்றையும் சரிசெய்துவிட முடியாது என்பதால், ஆப்பிரிக்க நாடுகளில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள 17 நாடுகள் மீது பிரான்ஸ் கவனம் செலுத்த விரும்புகிறது. வளங்குன்றா வளர்ச்சி இலக்குகளிலிருந்து உடல்நலம், கல்வி, பாலினச் சமத்துவம், பருவநிலை மாற்றம் ஆகிய அம்சங்களுக்காக இந்நாடுகளில் பணிபுரியவிருக்கிறது. ஒரே இடத்தில் பலராலும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுவதைத் தவிர்த்து, எங்கே இடைவெளி இருக்கிறதோ அங்கே பணிபுரிய விரும்புகிறது.
**வளரும் நாடுகளின் நிதி நிலவரம்**
இந்த நிதி உதவிகள் சூழலியல் நெருக்கடிக்கு விரிவானதொரு பின்புலத்தில் தீர்வுகாணும் வகையில் செலவிடப்படுவதற்கு நாம் அசாத்தியமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கடைசியாகப் பதிவான புள்ளிவிவரங்களின்படி வளரும் நாடுகளுக்கு உள்ளே வரும் நிதியைக் காட்டிலும் கூடுதலாக 2 ட்ரில்லியன் டாலர்கள் வெளியே சென்றுள்ளன. அனைத்து விதமான உதவிகள், முதலீடுகள், வெளிநாடுகளிலிருந்து வரும் வருமானம் ஆகியவை உள்பட 1.3 ட்ரில்லியன் டாலர்கள் இந்நாடுகளுக்குள் வந்துள்ளன. 3.3 ட்ரில்லியன் டாலர்கள் வெளியே சென்றுள்ளன. முதலீடு, வட்டி, வர்த்தகம் ஆகியவற்றின் மூலமாக மட்டுமல்லாமல் கடன் ரத்து, ஊழியர்களால் அனுப்பப்படும் பணம், கணக்கில் வராத பெரும் தொகை ஆகியவையும் இதில் அடங்கும். 1980 முதல் 2012வரை இப்படிச் சென்ற பணத்தின் நிகர மதிப்பு 16.3 ட்ரில்லியன். இது கிட்டத்தட்ட அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்புக்குச் சமமானது.
வளரும் நாடுகள் இப்படி வெளியே செல்லும் பணத்தைத் தடுத்து நிறுத்தினால் தங்களுடைய கார்பன் மாசுவைக் குறைப்பதற்கும் சூழலியல் வளர்ச்சிக்கும் தேவையான நிதியை இதிலிருந்து பெறலாம்.
‘சுற்றுச்சூழல் நாகரிக’த்தை உருவாக்குவோம் என்ற இலக்கை நிர்ணயித்துக்கொள்வதற்கு பதில் (சீன அரசின் வளர்ச்சித் திட்டங்களில் காணப்படும் போலித்தனமான கருத்தாக்கம் இது. பெருமளவில் கார்பன் மாசுபாட்டைக் கொண்ட பட்டுப் பாதை, மத்திய ஆசியாவினூடே ரயில், ஆழ்குழாய் திட்டங்கள் ஆகியவற்றைச் செயல்படுத்திக்கொண்டே சுற்றுச்சூழல் நாகரிகம் பெற்றிப் பேச முடியாது) தற்போதுள்ள நிதி உதவிகளுக்கும் அரசியல் நோக்கங்களுக்கும் உட்பட்டு யதார்த்தமான முறையில் வளங்குன்றா வளர்ச்சி இலக்குகளான 17 அம்சங்களை – இவற்றில் பல குறைகள் இருந்தாலும் – அடைய முயல வேண்டும்.
இதையெல்லாம் செய்ய வேண்டுமானால் வலுவான அரசு வேண்டும். நவ தாராளவாத அரசு அல்ல.
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.
(கட்டுரையாளர் பார்பரா ஹாரிஸ்-ஒயிட், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி குறித்த ஆய்வுகள் துறையின் முன்னாள் பேராசிரியர். வோல்ஃப்ஸன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர். தெற்காசிய ஆய்வுத்துறை சார்ந்த அறிஞர். மின்னம்பலம் இதழுக்காக அவர் எழுதிய பிரத்யேகமான கட்டுரை இது. அவரைத் தொடர்புகொள்ள: barbara.harriss-white@qeh.ox.ac.uk)
தமிழில்: அரவிந்தன்
�,”