சிறப்புக் கட்டுரை: பரியேறும் பெருமாள்களின் கவசம் “அசுரன்”

public

பிரதாப் பாஸ்கரதாஸ்

கடவுள்களாலும், தேவர்களாலும், ஆண்ட அரசர்களாலும் வதம் செய்யப்பட்ட அசுரர்கள் எதனால் அசுரர்கள் ஆனார்கள் என்பதை தற்கால புனைவாக எழுத்தாளர் பூமணியின் நாவலான வெக்கையின் துணையோடு வெற்றி மாறன் இயக்கத்தில் திரைப்படமாகக் காட்டியது அசுரர் குலத்தின் தற்கால பிம்பமான “அசுரன்”.

எழுபது, எண்பதுகளில் பண்ணையார்களினாலும் நிலச்சுவாந்தார்களினாலும் தலித்துகளிடம் பஞ்சமி நிலங்களாக ஆங்கிலேய அரசாங்கத்தால் வழங்கப்பட்டு மிஞ்சியிருந்த நிலங்கள் எந்த வகையில் கைமாற்றப்பட்டது என்பதே படத்தின் மூலக்காரணி.

தலித் இயக்கங்கள் மற்றும் சில இடதுசாரி முற்போக்கு இயக்கங்கள் மூலம் பஞ்சமி நிலங்கள் மீட்பு நடவடிக்கைகள் பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடந்துகொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் ஒரு மேடையில் பஞ்சமி நிலங்களைப் பற்றி பேசியதன் வினையாக பஞ்சமி நிலத்தைப் பற்றிய பேச்சுகளும் விவாதங்களும் மீண்டும் பரவலான பிறகுதான் அசுரனைக் கையிலெடுத்தார் இயக்குநர் வெற்றி மாறன். பா.ரஞ்சித் பேசிய அந்தப் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஆதிக்க சாதிகளிடம் இருந்து மட்டும் வந்திராமல் சில தமிழ் தேசிய இயக்கங்கள் மற்றும் சில இடதுசாரிகளிடம் இருந்தும் வந்தது மிகக் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இன்று அசுரன் படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்பது தமிழ்ச் சமூகத்தில் நிலவும் சாதிய சூழல்களுக்கு அப்பாற்பட்டு கிடைக்கப்பெற்ற வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இருந்தபொழுதும் இங்கே “என்ன பேசுகிறோம் என்பதை விட , யார் என்ன பேசுகிறார்கள்” என்பது தான் முக்கியம் என்பதை அசுரன் மீதான குறைந்தளவு எதிர்ப்பு உறுதிப்படுத்துகிறது.

சமத்துவத்தை முன்னிறுத்தும் படங்களுக்கு அதிகம் கிடைக்காத பார்வையாளர்கள் ரீதியான வெற்றியை அசுரன் பெற்றபொழுதும் அசுரன் மீது சில ஆதிக்கசாதி இயக்கங்கள் கடிந்து கொண்ட அதே சமயத்தில் சில முற்போக்கு எழுத்தாளர்கள் எனப்படுவோரும் படத்தில் பேசப்பட்டிருந்த கதைக்களம் மீது அதீத உண்மைத்தன்மை அளவுகோல் அடிப்படையில் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.

இங்கே அசுரன், காலா, கபாலி என சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட கதைகளைக் கொண்ட திரைப்படங்களை விமர்சிக்கும் முன்பாக தமிழ் சினிமாவின் வரலாற்றையும், அதைத் தீர்மானித்த, தீர்மானிக்கப்பட்டு பழக்கப்படுத்தபட்ட பொதுபுத்தியையும் புரிந்துகொள்ளவேண்டியது மிக அவசியம்.

**தலித் சினிமாக்கள் சந்திக்கும் விமர்சனங்கள்**

அசுரனில் உள்ள கதைப் பிரச்சினையை வரலாறு ரீதியான கண்ணோட்டத்தில் முற்போக்குவாதிகள் விமர்சிப்பது போன்று கபாலி, காலா ஆகிய படங்களுக்கும் அசுரனை விட பன்மடங்கு விமர்சனக்கணைகள் பிற்போக்காளர்களைவிட முற்போக்குவாதிகளிடமிருந்தே வந்தன.

சாதிய ஒடுக்குமுறைகளைக் கேள்வி கேட்பது, சாதியால் ஒடுக்கப்படுபவர்களை திருப்பி அடிக்கும் மாதிரியான படங்கள், அவ்வொடுக்குதலுக்கு ஆளாக்கப்பட்டவர்களில் இருந்துவந்த இயக்குநர்களால் சினிமாவாக எடுக்க முடியாது அல்லது அதிகபட்சம் தமிழ் சினிமா அவர்களுக்குக் கொடுத்த சுதந்திரம் என்னவென்றால் அது கடந்த காலகட்ட கதைகளாகவும் அல்லது வேறு நாட்டிலோ அல்லது வேறு மாநிலத்தில் நடப்பது போன்று எடுக்க அனுமதிப்பது மட்டும்தான்.

அந்த வகையில் அசுரன் கடந்த காலக் கதையாக நின்றுவிட்டாலும் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக வெகுண்டெழுந்து திருப்பி அடிக்கும் பாணியில் பரியேறும் பெருமாள், மாவீரன் கிட்டு போன்ற படங்களிலிருந்து வேறுபடுகிறான். இந்த வேறுபாடுகளுக்கான காரணமும், அசுரனுக்கு முன்பு வந்த சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான படங்களுக்கு நடந்த விமர்சன விவாதங்களுக்கும் தொடர்பிருக்கின்றன. அசுரனுக்கு முந்தைய நிலம் சார்ந்த கதைகளைப் பேசிய படங்களான காலாவும் கபாலியும் தமிழகத்தில் நடக்கும் பிரச்சினைகளைப் பேசாமல் சம்பந்தமில்லாத நிலப்பரப்பு பிரச்சினைகளைப் பேசுகிறது, ரஜினிகாந்துக்கான அரசியல் காய்நகர்த்தலுக்கு பா.ரஞ்சித் உதவுகிறார் என முற்போக்காளர்களிடையேயே விமர்சிக்கப்பட்டன.

இங்கேதான் தற்கால வணிக தமிழ் சினிமாவானது, சினிமாவின் வழக்கமான பொதுபுத்தியை உடைக்கும் மாறுபட்ட சினிமாக்களுக்குக் கொடுத்துவந்த சினிமா சுதந்திரத்தைப் பற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும். தற்பொழுது சாதியமுறைக்கு எதிரான சமூக சமத்துவத்தை முன்னிறுத்தும் படங்களுக்கு வாய்த்திருக்கும் பார்வையாளர் கூட்டம் சில ஆண்டுகளுக்கு முன்புதான் தோற்றுவிக்கப்பட்டன என்பதை புரிந்தால் எப்படி தற்போது அசுரன் மாதிரியான உண்மையான சமூகப் பிரச்சினையைப் பேசும் படங்களைத் தயாரிக்க தயாரிப்பு நிறுவனங்களும் முன்வருகின்றன என்பது புலப்படும். இதன் பின்புலத்தில்தான் ரஜினியை பா.ரஞ்சித் இயக்கியதில் இருக்கும் விளைவுகளிலேயே இந்த மாற்றங்களுக்கான அடிப்படை இருக்கிறது என்றும் புரியும்.

தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு தமிழ்ச்சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிய படங்கள் சில வந்திருந்தாலும் அது சாதியப் பிரச்சினைகளை மறைத்து வர்க்க பிரச்சினைகளாகவும், பாதுகாப்பான சினிமாப்புரட்சியான கம்யூனிசக் கதைக்களங்களைக் கொண்ட படங்களாகவும் மட்டுமே வந்திருக்கின்றன.

தலித்துகளின் வாழ்வியலில் அதுவரை அழுக்காகவும், வன்முறைக்களமாகவும் மட்டுமே பதிவு செய்து வந்த தமிழ் சினிமாவில், பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் ஒரு புதுமுக நடிகரைக்கொண்டு முதன்முறையாக ஒரு தலித் கதாபாத்திரத்தைப் படம் முழுக்க அனைவராலும் ரசிக்கப்பட்ட கதாநாயகனைக் கொண்ட படமாகப் பதிவு செய்தது. பெரும்பாலும் தலித்திய திரைப்படங்கள் எனப்படும் படங்களில் பெரிய நடிகர்கள் நடிக்க விருப்பம் இல்லாத அல்லது பொது சமூக வியாபாரம் கருதி நடிக்க அஞ்சும் காரணங்களுக்காக புதுமுக நடிகர்களையே இயக்குநர்கள் உபயோகிப்பார்கள்.

அந்த வகையில் மெட்ராஸ் பட நாயகன் தன் முந்தைய படங்களின் தோல்வியால் புதிதாக முயற்சிக்க மெட்ராஸ் படத்தைத் தேர்வு செய்ததை போலவே ரஜினிகாந்த்தும் தன் முந்தைய படங்களின் தோல்வியால் புதிய முயற்சியாக கபாலியை எடுக்க பா.ரஞ்சித்தைப் பணித்தார். அந்த நிகழ்வு இன்று அசுரனுக்கு வித்திட்டது என்றால் அது நிச்சயம் மிகையாகாது.

அதுவரை தமிழ்ச் சாதிய சூழல்களைப் படமாக்க அஞ்சிய தமிழ் சினிமாவின் சூழலானது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஒரு தலித் கதாபாத்திரமாக நடிக்கும்போது உடைக்கப்பட்டது. தமிழ் சினிமா நாயகர்களும் தயாரிப்பு நிறுவனங்களும் அதுவரை தலித் சினிமா பற்றிய தங்களைச் சுற்றியுள்ள வேலியானது மீண்டும் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக பா.ரஞ்சித்துடன் இணையும்பொழுது உடைக்கப்பட்டு, தலித் சினிமா மீதான பார்வையாளர்கள் அறிவும், வணிகமும் தமிழகத்தில் இருப்பது நிரூபணமானது.

ஆனால், அந்தப் படங்களின் மீது வைக்கப்பட்ட பல்வேறு விமர்சனங்களில் மிக முக்கியமானது, ரஜினியின் அரசியல் காய்நகர்த்தலுக்கு பா.ரஞ்சித் மூலம் தலித் வாக்குகளைக் குறி வைக்கிறார் என்ற கேள்வியும், கபாலியும் காலாவும் தமிழகப் பிரச்சினையைப் பேசாமல் ஒன்றுக்கும் உதவாதவற்றைப் பேசுகிறது என்ற கேள்வியும் தலித் சினிமா பற்றிய எதிர்விவாதங்களை கிளப்பியது. ரஜினிகாந்த்தை பா.ரஞ்சித் பயன்படுத்தினாரா அல்லது பா.ரஞ்சித் ரஜினிகாந்த்தை பயன்படுத்தினாரா என்ற கேள்விக்கு தலித் மக்கள் ரஜினிகாந்துக்கு ஒரு நன்றியை மட்டும் தெரிவித்துவிட்டு, படத்தில் உள்ள அரசியலைப் பேசியதின் மூலம் அதற்கான பதில் அமைந்தது மிகக்குறிப்பிடத்தக்கது.

**நிலப்பரப்பைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கும் சிக்கல்கள்**

கபாலியும் காலாவும் தமிழகப் பிரச்சினை பேசாமல் சம்பந்தமில்லாத பிரச்சினையைப் பேசுகிறது என்ற கேள்விக்குப் பதில்தான் அசுரனுக்கும் கபாலிக்கும் அசுரனுக்கும் பரியேறும் பெருமாளுக்கும் பா.ரஞ்சித்துக்கும் வெற்றி மாறனுக்குமான வேறுபாடாகும். கபாலி, காலாவை தமிழ்நாட்டுக் கதைக்களமாகக் காட்டியிருக்கக்கூடிய அனைத்து சாத்தியக்கூறுகளும் இருந்தபொழுதும் அது வேறொரு நிலப்பரப்பில் நிகழ்வது போன்று காட்சிப்படுத்திய காரணம் என்னவென்றால், அது அந்தப் படத்தில் நடித்த நடிகருக்கும் படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் இருந்த அந்தப் படம் சந்திக்கப்போகும் பொது சமூகம் மீதான பயம்தான்.

காரணம், தலித் அல்லாதவர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் தமிழகத்தில் ஒரு பெரிய உச்சநட்சத்திர நடிகர் உள்ளூர் சாதிவெறி தலைவர்களைச் சந்தித்து எதிர்த்து வசனம் பேசி அடித்தால் அது எத்தகைய கலவரங்களைக் கட்டவிழ்க்கும் என்பதனால் வியாபாரச் சூழலை மையமாகக்கொண்ட தமிழ் சினிமாவில் பெரும்பான்மை பார்வையாளர்களுக்கும் பிடிக்கவேண்டி, தொடர்பில்லாத கதைக்களங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன. அதற்கான காரணம் என்னவென்றால் தமிழ் சினிமாவானது அதன் ஆதிகாலத்திலிருந்தே சாதி ஒழிப்பு சினிமாக்களைக் கொடுத்து பார்வையாளர்களைப் பழக்கப்படுத்தியிருக்கவில்லை.

அந்தப் படங்களை எடுப்பதற்கான பொருளாதார வசதியும் சாதி ஒழிப்பை முன்னிறுத்தும் மனிதர்களுக்கு வாய்த்திடவில்லை. அதனாலேயே கபாலி மலேசியாவிலும், காலா மும்பையிலும், மாவீரன் கிட்டு எண்பதுகளிலும், பரியேறும் பெருமாள் 2005-லும் சமரசம் செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர். அசுரனும் இந்தப் பட்டியலில் மாட்டிக்கொண்டுவிட்டாலும் இந்தப் படங்களிலிருந்து (ரஜினிகாந்தின் பொது சமூக பின்புலத்திற்காக மாற்றப்பட்ட கபாலி, காலாவைத் தவிர்த்து) அசுரனை வேறுபடுத்திக் காட்டுவது என்னவென்றால் அது ஒடுக்கப்பட்ட கதாநாயகனாக இருந்தாலும் அவன் சாதியத்தை எதிர்த்து கேள்வியெழும்போதும், கோபம்கொண்டு எதிர்த் தாக்குதல் புரியும்பொழுதும் ஓரளவுக்காவது அதை ஏற்றுக்கொள்ளப்படும் பார்வையாளர்களின் மனநிலைதான்.

இது ஒருவகையில் வெற்றி மாறனுக்கு தமிழ் சினிமா பார்வையாளர்கள் கொடுத்திருக்கும் சுதந்திரமாக இருந்தாலும் அது ஒரு வகையில் பார்வையாளர்களினுடைய சாதிய மனநிலை ஆகவே பார்க்கப்பட வேண்டும். மாரி செல்வராஜ் பரியனைக் கட்டுப்படுத்தியே அந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கினர் என்றாலும், கார் கண்ணாடியை உடைத்து ‘ஜோ’வின் தந்தையிடம் பேசும் வசனம் முடித்து காட்சியுடன் படத்தை முடித்து இருந்தால் அது அசுரனாக மாறி இருக்கும்.

அதனாலேயே பொது சமூகப் பார்வையாளர்கள் அதை ஏற்க மாட்டார்கள் எனவும் தன்னுடைய மற்றுமொரு மாற்றான சமாதான விவாதத்தை முன்வைத்து முடித்திருப்பார் மாரி செல்வராஜ். ஆனால், ஒரு மனிதனின் கோபத்தை அப்படியே பதிவு செய்த விதத்தில் அசுரன் மூலம் வெற்றி மாறன் ஒரு சுதந்திரப் படைப்பாளியாக முன்நிற்கிறார். அந்த வகையில் சமூகத்தின் முக்கிய பிரச்சினையான சாதியப் பிரச்சினையை முன்னிறுத்தும் திரைப்படங்கள் மீது இப்பொது சமூகம் தலித் படைப்பாளிகளுக்கும், தலித் அல்லாத படைப்பாளிகளுக்கும் கொடுக்கும் குறைந்தபட்ச சுதந்திரத்திலேயே அவரவர்களின் கருத்தியல் வெளிக்காட்டுதல்கள் இருக்கிறது என்பது புலப்படும்.

**அசுரன் திறந்த புதிய கதவு**

தமிழ்ச் சமூக சாதியப் பிரச்சினைகளைப் பேசும் தலித் படைப்பாளிகளுக்கு இருக்கும் சமூகப் பாதுகாப்பின்மையை ஒரு தலித்தல்லாத படைப்பாளி சாதியத்தை எதிர்த்துப் படைப்பாகும்பொழுது அது அந்த தலித் படைப்பாளிகளுக்குக் கவசமாக மாறும். அந்த வகையில் நுட்பமான அரசியல் பேசும் காளிகளுக்கும், பரியேறும் பெருமாள்களுக்கும், மாவீரன் கிட்டுகளுக்கும் அசுரன்களே கவசமாவார்கள்.

அந்த வகையில் சாதியப் பிரச்சினைகளை தலித் படைப்பாளிகள் மட்டுமே வெளிப்படையாகப் பேசி வந்த நிலையில் வெற்றி மாறனின் அசுரன் சமத்துவ சமூகத்துக்கான கதவை இன்னும் சற்றே திறந்து இருக்கிறது என்றே கூறமுடியும்.

அந்த வகையில் கிடைக்கப்பெற்ற படைப்புச் சுதந்திரத்தில் உருவாக்கப்பட்ட இந்தத் தற்காலத்தைச் சாராத, தமிழகத்தைச் சாராத இக்கதைக்களங்களை நாம் நம் தற்கால சமூகப் பிரச்சினையோடு தொடர்புப்படுத்திக்கொள்வதும், இம்மாதிரி படங்கள் மீது எதிர்வினைகளையும், விமர்சனக்கணைகளையும் ஏவாமல், சாதி பேதம் ஒழிக்கப்பாடுபட்ட தலைவர்களின் தேரை முன்னிழுத்துச் செல்ல முற்படுவதும், முன்னெடுத்துச் செல்வதும் அறிவார்ந்த பார்வையாளர்களிடத்திலேயே இருக்கிறது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *