சிறப்புக் கட்டுரை: பரியேறும் பெருமாள் ஏற்படுத்திய மாற்றம்!

public

ஸ்டாலின் ராஜாங்கம்

திரைப் பாடல்களில் மாற்றுக் கதையாடல்கள் – பகுதி 3

*திரைப் பாடல்களில் உள்ளூர்க் கதையாடல்கள் மெல்ல சாதிப் பெருமை பேசும் போக்காக உருபெற்றதைப் பற்றிப் பேசிய நேற்றைய [கட்டுரையின்](https://minnambalam.com/k/2018/11/11/12) தொடர்ச்சியாக அதன் மாற்றங்களையும் இன்றைய போக்கையும் அலசுவோம்.*

இதன் தொடர்ச்சியில் சசிகுமார் இயக்கிய சுப்பிரமணியபுரம் (2008) என்ற மதுரை வட்டாரப் படத்தின் பாடலைக் கூறலாம். படத்தில் இடம்பெறும் திருவிழாவை ஒட்டி நாடகம், ஆடல் பாடல், கரகாட்டம், நையாண்டி ஆகியவை இடம்பெறும். இந்தக் கலவையில் ‘மதுரை குலுங்க குலுங்க, நீ நையாண்டி பாட்டு பாடு’ என்ற பாடல் அமைகிறது. பருத்தி வீரன் பாடலின் தொடர்ச்சியில் அமைந்தாலும் இந்தப் பாடலில் கூடுதல் சினிமாத்தனம் கலந்திருந்தது. எனினும் இந்தப் பாடலின் மொத்தப் பண்பில் தனி இசை வகைமை சார்ந்ததாகவே உருவாக்கப்பட்டது. வேல்முருகன், சுசித்ரா, மதுரை பானுமதி ஆகிய உள்ளூர் பாடகர்களின் பங்களிப்பில் இது உருவானது. இந்தப் பாடலில் வெளிப்படையாக வட்டார பிம்பங்கள் இடம்பெறாவிடினும் ‘வந்தாரை வாழவெச்ச ஊரு / புயல் வந்தாலும் அசையாது பாரு / எங்க தென்னாட்டு சிங்கம் வந்து / முன்னேத்தி கொண்டு வந்த / பொன்னான கதை உண்டு கேளு” என்ற மறைமுகமான உள்ளூர் அடையாளப் புகழ்-தொனி இழையோடுகிறது.

இந்தத் தனி இசை வகைமையின் உச்சம் என்று ‘உன்னை வணங்காத நேரமில்லை” என்ற மதயானைக் கூட்டம் (2013) படப் பாடலைக் கூறலாம். மதுரைக்கு மேற்கே உள்ள உசிலம்பட்டி வட்டாரத்தில் வாழும் பிரமலைக் கள்ளர் சாதியை மையப்படுத்திய இனவரைவியல் கதையாடல் படம் இது. அந்த வகையில் அச்சாதியின் வழக்கங்கள், எண்ணங்கள், ‘குணாம்சங்கள்’ என்பனவற்றை இந்தப் படம் கையாண்டுள்ளது. படத்தின் முதல் காட்சியே சாவு வீட்டில் தொடங்குகிறது. அடக்கத்திற்காகப் பிணம் கொண்டுசெல்லும் வரையிலும் உள்ளூரில் அதற்கென ‘ஒதுக்கப்பட்ட’ சாதியைச் சார்ந்த கலைஞர்கள் கொட்டு அடித்து, மைக் ரேடியோ கட்டி, இறந்தவரைப் பற்றிக் கதை கட்டிப் பாடுவது வழக்கம். அவ்வாறு சாவு வீட்டுப் பாடலோடு படம் தொடங்குகிறது. நாட்டுப்புறப் பாடகரான வேல்முருகன் பாடியிருக்கும் இந்தப் பாடலை இந்த வட்டாரத்தைச் சேர்ந்த ஏகாதசி எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படமே குறிப்பிட்ட சாதியை மையப்படுத்துவதாக இருக்கும்போது தனியாகச் சாதி பிம்பத்தைப் புகழும் அவசியம் பாடலில் இடம்பெறவில்லை. அதற்கு மாறாக, அக்குறிப்பிட்ட சாதியின் குணாம்சங்கள் என்று சிலவற்றைப் பாடல் வரிகள் அழுத்தமாக வரையறுக்கின்றன. முரடர்கள், ஆனால் குணமானவர்கள் என்பதான சித்திரங்களே அவை (இந்தப் பாடலை போலச்செய்தே தர்மதுரை (2016) படத்தில் உள்ளூர் கலைஞரான மதிச்சியம் பாலாவை வைத்து ‘மக்க கலங்குதப்பா’ பாடல் அமைந்தது).

மொத்தத்தில் இதுவரையிலான இத்தகைய பாடல்களில் பெருமிதங்கள் மட்டுமே இனவரைவியல் தன்மையாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன எனலாம்.

இவ்விடத்தில்தான் பரியேறும் பெருமாள் படத்தில் இடம்பெற்ற ‘வணக்கம் வணக்கமுங்க’ பாடலை நாம் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது. மேற்கண்ட தனி இசை வகைமையைச் சார்ந்ததே இந்தப் பாடல். ஆனால், மேற்கண்ட படங்களைப் போல் சாதியைப் பெருமைப்படுத்துவதாகவோ மௌனம் காப்பதாகவோ இந்தப் படம் அமையவில்லை. மாறாக சாதியின் கொடூரத்தை நுட்பமாக விளக்கி ஒடுக்கப்பட்டோர் நோக்கிலிருந்து சாதியைக் கைவிடுவதைப் பற்றி உரையாடல் நடத்த அழைக்கிறது. அதனால் இதை வட்டாரத்திலிருந்து விலக்கி பேச முடியாது. அந்த வட்டாரத்திலிருந்தே பேச விழைகிறது. அதுவே இயல்பானதாகவும் இருக்க முடியும். அதன்படி அக்கதையாடலுக்கான வட்டாரத்தை திரைப்பிரதி தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறது.

வழக்கம்போல் தென்தமிழகத்தின் கிராமப் பகுதியே அந்த வட்டாரம். அந்த வட்டாரத்தின் தன்மையை கொணரும்பொருட்டு மேற்கண்ட படங்களைப் போலவே தனி இசை வகைமையிலான இந்தப் பாடலை கொணர்ந்து பொருத்தியிருக்கிறது. படத்தில் கிராமத்துக் கூத்துக் கலைஞர்கள் பாடுவதாகவே இந்தப் பாடல் அமைகிறது. வடிவம் என்ற அளவில் மேற்காட்டிய பாடல்களைப் போலவே நிலப்பரப்பு, வந்தனம் ஆகியவற்றை வரையறுத்துக் கொள்கிறது.

பருத்தி வீரன் படத்தின் டங்கா டுங்கா பாடலில் “கூடும் சபையோரே, குணத்தில் பொதியோரே, வந்தனம் வந்தனம், வந்த சனம் எல்லாம் குந்தணும்” என்ற வரிகளும் மதயானைக்கூட்டம் படப்பாடலில் “சீரும் சிறப்புமா நிகழ்ச்சி அமைய, சின்னவங்க பெரியவங்க அமைதி காக்கணும்” என்ற வரிகளும் வருகின்றன. இதே வடிவத்தில் பரியேறும் பெருமாள் படப்பாடலிலும் ‘கூடும் பெரியோரே குணமுள்ள தாய்மாரே, கும்பிட்டோம் கும்பிட்டோம் கோடி வணக்கமுங்க” என்ற வரிகள் அமைகின்றன. ஏறக்குறைய இவ்வகைப் பாடல்களில் மெட்டு, வரிகள், பாடும் முறை ஆகியவை ஒரே மாதிரி அமைகின்றன. எனவே, மேற்கண்ட பாடல்களைத் தழுவி இந்தப் பாடல் அமைந்தது என்று பார்ப்பதைவிட இவ்வகையான பாடல்களின் பொதுத்தன்மை கருதியே இவ்வாறு அமைந்துள்ளது. அதேபோல இந்தப் படத்தின் பிற பாடல்கள் பட இசையமைப்பாளரின் உருவாக்கமாக அமைய, இந்தப் பாடல் மட்டும் உள்ளூர்ப் பாடகர்களைக் கொண்டு அவர்கள் ஏற்கெனவே ஊரில் பாடிவந்த பாடலை அப்படியே திருப்பிப் பாடுவதாக அமைந்துள்ளது.

படம் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ள தென்தமிழக ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலோடு ஒன்றிக் கிடக்கும் கலை நடைமுறையைச் சொல்வதாக இது அமைகிறது. அதன்படி இந்தப் பாடலில் சொல்லப்படும் நிலப்பரப்பும், குணாம்சச் சித்திரிப்பும் ஒடுக்கப்பட்டோருக்குரியது. தென்தமிழகத் திரைப்பட வரலாற்றில் இந்த வகையில் இந்தப் பாடல் புதிது. ஒடுக்கப்பட்டோர் வாழ்வியலை, கலையைச் சொல்லுகிற அதேவேளையில் அது குணாம்ச ரீதியாகப் பிறவற்றிலிருந்து வேறுபட்டும் வெளிப்பட்டிருக்கிறது. அதாவது சாதிப் பெருமை பேசுவதாக இந்தப் பாடல் மாற்றப்படவில்லை. சாதிப் பெருமையாக மாறிவிடக்கூடிய வாய்ப்புகளிலிருந்தும் அதிலிருந்து விலகி படத்தின் மொத்தக் கதையாடலுக்கேற்பப் பாடல் தனக்குரிய வரையறையைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.

அதேவேளையில் முற்றிலும் விலகிவிட்டது என்று கூற முடியாத அளவுக்கு அந்தப் பாடலில் அம்மக்களுக்கான பிம்பம் ஒன்றையும் முன்வைக்கிறது. “என் குருவு பேரு ஆர்.கே.ஆருங்க” என்று அவ்வரி அமைகிறது. ஆர்.கே.ஆர் என்பது ஆர்.கே.ராஜா என்பதின் சுருக்கம். பாடலில் குறிப்பிடப்படுபவர் புளியங்குளத்தைச் சேர்ந்தவர். அப்பகுதி ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாகச் செயல்பட்ட வட்டாரத் தலைவர். மேற்கண்ட பாடல்களில் சாதியாதிக்கத்தைத் தக்கவைப்பதற்கான பிம்பங்கள் முன்வைக்கப்பட, இந்தப் பாடல் அந்த அம்சத்தில் வேறுபட்டு, சாதியாதிக்கத்திற்கு எதிராகச் செயல்பட்ட தங்களின் பிம்பம் ஒன்றை முன்வைக்கிறது. இவ்வாறு மேற்கண்ட தனி இசைவகைமை பாடல்களின் தொடர்ச்சியைக் கொண்டிருந்தாலும் அதிலிருந்து விலகிய அம்சத்தையும் இந்தப் பாடல் கொண்டிருக்கிறது.

சாதி பற்றி இந்தப் படம் முன்வைக்கும் மொத்த அர்த்தப்பாட்டிலிருந்து பார்க்கும்போதும் இந்த விலகலை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இவ்விடத்தில் விதிவிலக்கான உதாரணம் ஒன்றையும் இணைத்துப் பார்க்கலாம். இந்தத் தனி இசைவகைமை என்பது வட்டார சினிமாக்களுக்கு உரியதாகவே இருந்துவருகிறது. இதில் கானா என்பது சென்னை வட்டார விளிம்பு நிலை மக்களின் பாடல் வகைமையாக இருந்துவருகிறது. எனினும் இதனைத் தென்தமிழக வட்டார இசை வகைமை போல் நாம் கருதியதில்லை. ஏனெனில் கானாவை ‘வித்தியாசமான’ அனுபவத்திற்காகவே சினிமா கையாண்டு வந்திருக்கிறது. மேலும் சினிமா சட்டகத்திற்கேற்ற கானாவையும் அது படைத்துக்கொண்டது. அதனால், அதில் தென்தமிழக வட்டார சினிமாவில் போல இனவரைவியல் தன்மை இருந்ததில்லை. அதனால் தனி இசை வகைமையாக அதைப் பார்க்க முடிந்ததில்லை.

ஆனால், இப்போக்கில் மெட்ராஸ் திரைப்படப் பாடல்கள் ஒரு மாற்றத்தை நிகழ்த்தின எனலாம். “சென்னை வடசென்னை, கறுப்பா, தமிழ் மண்ணை” என்று தொடங்கும் அந்தப் படத்தின் பாடலில் ஒரு வரி, “எங்க ஊரு மெட்ராசு, அதுக்கு நாங்க தானே அட்ரசு” என்கிறது. கால்பந்து, குத்துச்சண்டை, கேரம் போர்டு, கபடி, வீடுகள், மொட்டை மாடி என்ற அடையாளங்கள் மீது உரிமை கோருகிறது. இதுவரையில் சினிமாக்களில் புறக்கணிக்கப்பட்ட அல்லது இழிவாகக் காட்டப்பட்ட தங்கள் அடையாளத்தைப் புதுப்பித்து நிலவியலோடும் சமூகக் கூறுகளோடும் இணக்கும் ஓர்மையிலிருந்து இப்போக்கு பிறந்தது.

பரியேறும் பெருமாளின் இந்தப் பாடலுக்கும் இந்நிலைப்பாட்டை அப்படியே பொருத்த முடியும். தென்தமிழக சினிமாக்களில் சொல்லப்படாத அல்லது ஆதிக்க சாதி பிம்பங்களை எல்லாமனதாகக் காட்டிவந்த போக்கிற்கான மாற்று நிலைபாடுதான் இந்தப் பாடலும். தென்தமிழகப் படங்களில் முத்துராமலிங்கத்தேவர் பிம்பம் காட்டப்பட்டுவந்த நிலையில் பரியேறும் பெருமாள் ஆர்.கே.ராஜா என்ற வட்டார பிம்பத்தை முன் வைக்கிறது. அதேபோல நேர்முரணாக இம்மானுவேலை முன்வைக்காத இந்தப் படம் அவ்விடத்தில், பதிலாக வட்டாரத்தின் அசல் தன்மைக்கேற்ப ஆர்.கே.ராஜாவை முன்வைத்திருப்பது போல் தோன்றுகிறது. அதே வேளையில் இம்மானுவேல் நினைவாகத் தென்தமிழகத்தில் பாடப்படும் ‘எங்கும் புகழ் துவங்க” என்ற பாடல் பட இயக்குநர் மாரி செல்வராஜேயாலேயே தழுவப்பட்டு காதல் பாடல் போல மாற்றப்பட்டுள்ளது. படைப்பூக்கம் உள்ள மாற்று வடிவம் இந்தப் பாடல். அந்த வகையில் இந்தப் பாடல் சினிமா பிரதிபலித்து வந்த வட்டார அரசியலின் இணைபிரதி. (மெட்ராஸ் படத்திலும் இதுபோன்றதொரு பாடல் இருக்கிறது. ஜோதியின் அரசியலைப் பிரதிபலிக்கும் அன்பு வெட்டிக் கொல்லப்பட்டுவிடும்போது கானா பாலாவின் குரலில் “இறந்திடவா நீ பிறந்தாய்” என்ற பாடல் ஒலிக்கிறது. இந்தப் பாடல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் வட்டாரங்களைப் பிரதிபலித்த தலித்தலைவர் பூவைமூர்த்திக்காக எழுதப்பட்டிருந்தது. அந்தப் பாடலைத் தழுவி இந்தப் பாடல் அமைத்துக் கொள்ளப்பட்டது).

இத்தகைய விரிந்த பின்னணியில் பரியேறும் பெருமாள் படத்தின் ‘வணக்கம் வணக்கமுங்க” பாடலைப் பொருத்திப் பார்க்க இடமிருக்கிறது. ஒடுக்கப்பட்டோர் அரசியலில் மட்டுமல்ல. வெகுஜனக் கலை முயற்சியிலும் இது குறிப்பிடத்தக்க தருணம். அவர்கள் தங்களைப் பற்றிய – தங்களைச் சார்ந்த கதையாடல்களை முன்வைக்கும்போது அவற்றில் வெளிப்படும் அரசியல் கருத்துகள் சார்ந்து மட்டுமல்ல பிரதியினுள் ஊடாடும் இத்தகைய முயற்சிகள் மூலமும் மாற்றுக் கதையாடல்களை உருவாக்குகிறார்கள். இதுவரையிலான பிம்பங்களைத் தங்களின் மாற்று பிம்பங்கள் மூலம் எதிர்கொள்கிறார்கள். இவை அவர்களால் திட்டமிட்டோ, திட்டமிடாமலோ, தொடர்ச்சி காரணமான வணிகச் சூழல் சார்ந்தோ எப்படியும் அமையலாம்.

ஆனால், இவற்றில் எல்லாமும் முற்றிலும் புதிதானதில்லை. ஏதோவொரு வகையில் கடந்த காலத்தின் தொடர்ச்சியிலிருந்து சில விஷயங்களில் விலகியும் சில விஷயங்களில் விலகாமலும் பயணிக்கிறார்கள். இங்கு பழையதிலிருந்து விடுபட்டுவிட்டோம் என்றோ முற்றிலும் புதிதாக உருவாக்கிவிட்டோம் என்றோ சொல்லிவிட முடியாது. ஆனால், முயற்சியும் எதிர்கொள்ளலும் நடக்கின்றன என்பதையே இப்பிரதிகளும் அதன் உள்ளீடுகளும் காட்டுகின்றன. ஏற்கெனவே இருந்து வந்தவற்றை அப்படியே ஒப்புக்கொள்ளாமல் அதன்மீது புதுப்புது கதையாடல்கள் புதுப்புது அர்த்தங்கள் எழுகின்றன. சமூகதளத்தில் எப்போதும் நடந்துவரும் போராட்டத்தின் அங்கம் இது. திரைப்பிரதிகள் வழியாக நடக்கும் எதிர்கொள்ளல்.

(கட்டுரையாளர் ஸ்டாலின் ராஜாங்கம், ஆய்வாளர், எழுத்தாளர். கள ஆய்வுகள், தலித் வரலாறு, தமிழ் பௌத்தம், உள்ளிட்ட வரலாற்று ஆய்வுகளில் ஈடுபட்டுவருபவர். அயோத்திதாசர் வாழும் பௌத்தம், ஆணவக் கொலைகளின் காலம் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.)

[திரைப் பாடல்களில் மாற்றுக் கதையாடல்கள்- பகுதி 1](https://www.minnambalam.com/k/2018/11/10/25)

[திரைப் பாடல்களில் மாற்றுக் கதையாடல்கள்- பகுதி 2](https://minnambalam.com/k/2018/11/11/12)�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *