கார்த்திக் ராம் மனோகரன்
1948ஆம் ஆண்டிலே, ஒரு திராவிட செயற்பாட்டாளரின் மனைவி பத்மாவதி காசநோயால் அவதிப்படுகிறார். எனினும், அருகாமையிலுள்ள சிறு நகரத்தில் நடக்கும் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அந்தச் செயற்பாட்டாளர் அவரை விட்டுவிட்டுப் புறப்பட்டுச் செல்கிறார். அவர் திரும்பியபோது பத்மாவதி இறந்துவிடுகிறார். அந்த திராவிடச் செயற்பாட்டாளர்தான் முத்துவேல் கருணாநிதி. அப்போது, 24 வயதே ஆன கருணாநிதிக்கு குடும்ப உறவுகளை விடவும் திராவிட இயக்கத்துக்கான பணிகளே முக்கியம் வாய்ந்ததாகத் தெரிந்துள்ளது. அவர்தான் பிற்காலத்தில் தனது கட்சி உறுப்பினர்களையும், நிர்வாகிகளையும் ‘உடன்பிறப்புகள்’ என்று அன்புடன் அழைத்து வந்தார்.
உண்மையாகவே, முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான முத்துவேல் கருணாநிதி தனது இறுதி மூச்சை சுவாசிக்கும்பொழுது ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகள் சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனைக்கு முன் குவிந்தனர். ’கலைஞர்’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் கருணாநிதி எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர், கட்சித் தலைவர், முதலமைச்சர், 13 முறை சட்டமன்ற உறுப்பினர் என பன்முகத் தன்மை கொண்டவர். பத்திரிகை, பிரச்சாரம், திரைப்படங்கள் எனப் பல வழிகளில் திராவிட சித்தாந்தத்தை பெருந்திரளான மக்களுக்குக் கொண்டு சேர்த்தவர் கருணாநிதி. இவர் எழுதிய திரைப்படங்களில் தமிழ் பெருமை, சமத்துவத்துக்கான தாகம், சமூக மேம்பாடு போன்ற திராவிடக் கோட்பாடுகள் பதியப்பட்டுள்ளன.
சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின் தங்கிய சமூகத்திலிருந்து வந்த கருணாநிதி, தந்தை பெரியாரின் நாத்திகக் கொள்கைகளால் பெரிதும் கவர்ந்திழுக்கப்பட்டார். பெரியார் மீது கருணாநிதி இறுதி வரை பெரும் மரியாதை கொண்டிருந்தார். ஆனால், கருணாநிதியின் அரசியல் ஆசானான அண்ணாதுரை 1949ஆம் ஆண்டில் பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தேர்தல் அரசியலில் பங்கேற்க முடிவு செய்தார்.
இந்திக்கு எதிரான கிளர்ச்சியில் கருணாநிதி தனது பெயரைப் பதித்துக் கொண்டார். 1937ஆம் ஆண்டில் ராஜாஜியின் அரசு மெட்ராஸ் மாகாணத்தில் இந்தியைக் கட்டாயமாக்கியபோது, பெரியார், அண்ணா இருவருமே உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்தனர். 1938ஆம் ஆண்டில் கருணாநிதி தனது 14ஆவது வயதில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைக் கையிலெடுத்தார். பின்னர், 1940ஆம் ஆண்டில் கட்டாய இந்திக் கல்வி கைவிடப்பட்டது. எனினும், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த முறை இந்தி தனக்கு வல்லமைமிக்க எதிரிகளை உருவாக்கிக் கொண்டது.
1955ஆம் ஆண்டில் அலுவலக மொழிகள் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் முதல் தலைவராக பி.ஜி.கெர் நியமிக்கப்பட்டார். இந்த ஆணையத்தின் இந்தி சார்புக் கொள்கைகளை திராவிட சித்தாந்தவாதிகள் கடுமையாக விமர்சித்தனர்.
அக்காலத்தில் சிறிதாக முளைத்து வந்த இயக்கமாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தில், தமிழ் உணர்வுடன், இந்திய மொழிக் கொள்கை மீது அதிருப்தி கொண்ட பல வலிமைமிக்கத் தலைவர்கள் இருந்தனர். தமிழ் பெருமை, மாநில சுயாட்சி, சமூகநீதி போன்ற கொள்கைகளுடன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை வெகுஜன மக்களிடத்தில் கொண்டுசேர்த்தது திராவிட முன்னேற்றக் கழகம்.
காங்கிரஸ் பெருந்தலைவரான காமராசருக்கு தந்தைப் பெரியார் ஆதரவளித்த போதிலும், 1957ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கருணாநிதி முதன்முறையாக குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றம் புகுந்தார். அப்போது அவருக்கு 33 வயது. அதற்குப் பிறகு இறுதி வரை அவர் தேர்தலில் தோல்வியுற்றதே இல்லை. ஏறத்தாழ 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்து விட்டு மறைந்தவர் கருணாநிதி.
1962ஆம் ஆண்டில் மொழி சிறுபான்மையினரின் கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதாக நேரு உறுதியளித்த போதிலும், திமுகவுக்கு திருப்தியில்லை. 1963ஆம் ஆண்டில் கருணாநிதி தலைமையில் இந்தி எதிர்ப்புக் குழுவை திமுக அமைத்தது. பின்னர், இந்தி எதிர்ப்புக்கான போராட்டத்தில் படைத்தலைவராக இருக்கும்படி கருணாநிதிக்கு வெள்ளி வாளையும், கேடயத்தையும் அண்ணா வழங்கினார்.
1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை இந்தி எதிர்ப்புப் போராட்டம் மாநிலத்தையே உலுக்கியது. போராட்டக்காரர்கள் போலீஸ் அராஜகத்தைச் சந்தித்தனர். 1963 டிசம்பர் மாதத்தில் அண்ணாவும், கருணாநிதியும் கைது செய்யப்பட்டு ஆறு மாதகாலம் சிறையில் அடைக்கப்பட்டனர். அதற்குப் பின்னரும் திமுக மீதும், அதன் தலைவர்கள் மீதுமான ஒடுக்குமுறை ஓய்ந்தபாடில்லை. 1965ஆம் ஆண்டு குடியரசு தினத்தின் போதும், 1965ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கிளர்ச்சியாளர்களை மாநில அரசு கொத்துக்கொத்தாக கைது செய்த போதும் முன்னெச்சரிக்கையின் பேரில் கருணாநிதி கைது செய்யப்பட்டார்.
ஆனால், இந்த சமயத்தில் திமுக சக்தி வாய்ந்த இயக்கமாக உருமாறி தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தது. திமுகவின் ஆதிக்கம் எந்த அளவுக்கு இருந்ததென்றால், 1967ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் காமராஜரை திமுகவின் ஒரு மாணவத் தலைவர் எதிர்கொண்டு வெற்றிகண்டார். அந்த ஆண்டில் முதன்முறையாக திராவிடக் கட்சியான திமுக தமிழகத்தில் 137 தொகுதிகளுடன் வலுவான வெற்றியைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
1969ஆம் ஆண்டில் அண்ணா மறைந்தபிறகு கருணாநிதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆட்சியிலிருந்த போது, மத்திய அரசுடன் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது திமுக. இந்த சமயத்தில் திமுகவின் அரசியல் மோதலும், சமரசமும் கலந்ததாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1976ஆம் ஆண்டு ஜனவரியில் திமுகவின் அரசு இந்திரா காந்தியால் கலைக்கப்பட்டது. அதிகாரத்திலிருந்த கட்சிகளில் அவசர நிலைப் பிரகடனத்தை எதிர்த்த ஒரே கட்சி திமுக மட்டுமேயாகும். 1980ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியுடன் கருணாநிதி கூட்டணி அமைத்தார். தேர்தல் ஜனநாயகத்தில் சித்தாந்த திடத்தன்மையை விட அரசியல் தந்திரங்களே முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதற்கு திமுக, பாஜக இடையேயான குறுகிய கால கூட்டணியே ஒரு சான்று.
2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழகத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு திமுக முக்கியப் பங்காற்றியுள்ளது. தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளையும் திமுக-காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. 2009ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதே கூட்டணி 27 தொகுதிகளை வெற்றிகொண்டது. 2011ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் திமுக படுதோல்வியடைந்தது.
இந்தித் திணிப்பை திமுக எதிர்த்தாலும் கூட, இந்தி எதிர்ப்பையும், தமிழ் பெருமையையும் இந்தியாவின் பன்முகத்தன்மையின் தனித்துவ அடையாளமாகவே கருணாநிதி கருதினார்.
கடந்த காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் கூட, இன்றளவிலும் சிறுபான்மையினரின் கட்சியாகவே திமுக பார்க்கப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு அளித்ததால் திமுகவுக்கு அவர்களின் பெரும் ஆதரவு கிட்டியது. கருணாநிதி தனது வாழ்வின் இறுதி வரையில் பிராந்திய தலைவர்களான மம்தா பேனர்ஜி, சித்தராமைய்யா, லலு பிரசாத் யாதவ் போன்றவர்களுடன் மாற்றுக் கூட்டணி அமைத்து இந்தியாவின் பன்முகத்தன்மையையும், மதச்சார்பற்ற தன்மையையும், கூட்டாட்சி முறையையும் வலுப்படுத்த முயன்றார்.
கருணாநிதியின் மறைவு இந்திய ஆட்சி முறைக்கே ஒரு பேரிழப்பாகும்.
நன்றி: [டெலகிராஃப் இந்தியா](https://www.telegraphindia.com/india/a-dravidian-leader-for-a-plural-india-250821?ref=hm-new-stry)
நேற்றைய கட்டுரை:[நவீன மணிமேகலை!](https://minnambalam.com/k/2018/08/08/31)
தமிழில்: அ.விக்னேஷ்�,”