8 வழிச் சாலைத் திட்டம் தேவையானதா, இந்தத் திட்டம் யாருக்கானது என்பது குறித்து சமூக ஆர்வலர்கள், போராட்டக்காரர்கள் மற்றும் விவசாயிகளின் கருத்து குறித்தும், திட்டத்திற்கு எதிரானவர்களை அரசு கையாளும் விதம் நியாயமானதா என்பது குறித்தும் இந்த பாகத்தில் காணலாம்.
**கனிம வளக் கொள்ளையா?**
“சேலம் முதல் சென்னை வரை செல்ல ஏற்கெனவே மூன்று சாலைகள் இருக்கின்றன. முடிந்தால் அவற்றை மேம்படுத்தி பயண நேரத்தைக் குறைக்கலாம். தேசிய நெடுஞ்சாலையைக்கூட எட்டு வழிச் சாலையாக மாற்ற முயற்சிக்கலாம். அதுவும் போதவில்லை என்றால் ரயில் போக்குவரத்தை மேம்படுத்தலாம். ஆனால் இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியில் புதிய சாலை என்பதுதான் நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்கிறார் அபிராமன்.
போக்குவரத்தை மேம்படுத்தத்தான் இந்தச் சாலை என்பது வெற்றுப் பொய்; இதற்குப் பின்னால் வேறு ஏதோ சதி ஒளிந்திருக்கிறது என்பது விவசாயிகளுடம் உள்ள மற்றுமொரு அச்சம். சாலைகளுக்காக மட்டுமே தங்களிடம் நிலத்தை இப்படி மிரட்டிப் பிடுங்க வேண்டிய அவசியம் ஏற்பாடாது என்றும் விவசயிகள் கூறுகின்றனர். “அதோ தெரியுது பாருங்க கஞ்சமலை. அந்த மலைல நெறைய கனிம வளம் இருக்குன சொல்றாங்க” என்று தன் வீட்டிலிருந்தே கையை நீட்டி மலையைக் காட்டுகிறார் மணிகண்டன். “கஞ்சமலையில் இருக்கும் இரும்புத் தாதுக்களை 90 ஆண்டுகளுக்கு வெட்டி எடுக்கலாம் என்கிறார்” என்கிறார் அபிராமன்.
அதுமட்டுமின்றி, இந்தப் பாதை கடந்து செல்லும் பகுதியில் பிரதான மலைகளும், பாதுகாக்கப்பட வேண்டிய வனங்களும் இருக்கின்றன. “மலைகளுக்கு நடுவில் சுரங்கப் பாதை அமைக்கத் திட்டமிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மலைகளுக்கு நடுவே வெட்டி எடுத்து 400 அடி அகலத்திற்கு சுரங்கச் சாலை அமைப்பார்கள் என்றால், மலைகளுக்குள் வேறு ஏதும் செய்ய மாட்டார்கள் என்று எப்படி அச்சப்படாமல் இருக்க முடியும்?” என்று கேட்கிறார் அபிராமன். சில இடங்களில் 900 அடி அகலத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அந்த இடங்கள் பழுதான வாகனங்கள், போர் விமானங்கள் நிறுத்தப் பயன்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. போர் விமானங்கள் இங்கே கொண்டு வருவதற்கான தேவை என்ன என்பது சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் கேள்வி.
**அரசின் அடக்குமுறைகள்:**
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் ஈரம் கூட இன்னும் காய்ந்திருக்காது. அங்கு கடுமையான எதிர்ப்புகளுக்குப் பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய நிலைக்கு பழனிச்சாமி அரசு தள்ளப்பட்டதை அனைவரும் அறிவோம். அப்படியொரு வலுவான போராட்டம் எட்டு வழிச் சாலைக்கும் எழுந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறது தமிழக அரசு. போராட்டக்காரர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு காவல் துறையைக் கொண்டு மிக வேகமாக நடத்திக்கொண்டிருக்கிறது என்றும், அதற்காக ஜனநாயக வரம்புகளை மிகத் துணிச்சலாக அத்துமீறிக் கொண்டிருக்கிறது என்றும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ், கல்லூரி மாணவி வளர்மதி, திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டெல்லி பாபு, காஞ்சிபுரம் மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் மகேசு, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பாலபாரதி உள்ளிட்ட பலர் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுகின்றனர். இதுமட்டுமின்றி இந்தத் திட்டத்துக்கு எதிராக துண்டறிக்கை கொடுத்தவர்கள், போராடிய நில உரிமையாளர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல் நடுவதற்கே நூற்றுக்கணக்கான காவல் துறையினர் குவிக்கப்பட்டதாக விவசாயிகளும் நம்மிடம் கூறுகின்றனர். ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுவதும், அவர்களின் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்துவதும்கூட அரங்கேறியது. குறிப்பாக மாத்ருபூமி ஊடகவியலாளர்கள் இருவர் காவல் துறையின் தாக்குதலுக்கு உள்ளாகி, ஒரு நாள் முழுவதும் காவல் துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கே இந்த நிலை. அதுமட்டுமின்றி விவசாயிகளைக் காவல் துறையினர் மிரட்டுவது காட்சி ஊடகங்களில் நேரலைகளில் ஒளிபரப்பானது.
**எது தேவை?**
“சேலம் நகரிலிருந்து கிராமத்திற்குச் செல்லும் சாலைகள், கிராமங்களிலிருந்து தொலைதூரக் கிராமங்களை இணைக்கும் சாலைகள், நகர்ப்பகுதிக்குள் நீண்டகாலமாகக் கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் மேம்பாலங்கள், புதிதாகக் கட்ட வேண்டிய பாலங்கள் போன்றவற்றைக் கட்டி முடிக்க வேண்டும் என நாங்கள் நீண்டகாலமாக கேட்டுக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ். ஆனால் மக்கள் கேட்காத 8 வழிச் சாலையை மக்கள்மீது திணிக்கிறார்கள் என்றும் இவர் குற்றம் சாட்டுகிறார்.
மேலும் இவர் கூறுகையில், “இப்போது சேலத்திலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலை. இந்த 4 வழிச் சாலைக்குத்தான் சுங்கக் கட்டணமும் வாங்குகிறார்கள். ஆனால் இந்தச் சாலை உளுந்தூர்பேட்டை அருகே 2 வழிச் சாலையாகக் குறுகிவிடுகிறது. மக்களிடம் வாங்கும் கட்டணத்திற்கு முறையான சாலை அளிக்கட்டும் முதலில். பிறகு மக்களுக்குத் தேவை இருந்தால் 8 வழிச் சாலை குறித்து யோசிப்போம்” என்கிறார்.
**ஜப்பானியர்கள் குடியேறவா 8 வழிச் சாலை?**
கனிம வளக் கொள்ளை, ராணுவத் தளவாடம் என்றெல்லாம் அடுக்கடுக்கான சந்தேகங்களை இந்த 8 வழிச் சாலை மக்களிடம் எழுப்பியிருக்கிறது. அதில் ஒரு சந்தேகம்தான் இந்த ஜப்பானியர்கள் குடியேற்றமும். இந்த எட்டு வழிச் சாலைக்கான முக்கிய நோக்கமே தொழில் துறை வளர்ச்சிதான் என்று முதல்வர் பழனிச்சாமி சட்டப் பேரவையிலேயே தெரிவித்துவிட்டார். “8 வழிச் சாலை அமையும் பகுதிகளைத் தொழில் துறை நகரங்களாகவும், முதலீட்டு மையங்களாகவும் உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். இப்பகுதிகளில் தொழில் துறை நிறுவனங்களை அமைத்து ஜப்பானியர்களும், கொரியர்களும் குடியேறுவார்கள் என்று நமக்கு சந்தேகம் வருகிறது.
அதற்காகவே சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிலும் ஈடுபட்டிருக்கலாம். இந்த விமான நிலையத்தையும், பொன்னேரி துறைமுகத்தையும் இணைக்கும் விதமாகவே 8 வழிச் சாலை அமைக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆயுதம் ஏந்திக் காலனிகள் அமைத்த காலம் மலையேறிவிட்டது. இப்போது இதுபோன்ற பொருளாதார ஏகாதிபத்தியங்களை அமைக்கும் யுக்தியைத்தான் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் கையாண்டு வருகின்றன. அவர்களுக்காகத்தான் இந்த உள்கட்டமைப்பு மேம்பாடுகள் என்றே நமக்குத் தோன்றுகிறது” என்கிறார் பியூஷ்.
“புல்லெட் ரயிலுக்கு ஜப்பானிடம் கடன் வாங்கியதற்குக் கைம்மாறாக அந்நாட்டுத் தொழில் நிறுவனங்களை நம் நாட்டில் அனுமதிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டில் சில நிறுவனங்களுக்கு அனுமதியளித்திருக்கலாம். அவர்கள் வசதியாக வந்து செல்லும் விதமாகத்தான் இந்த சாலையைப் போடுகிறார்கள் என்று நமக்கு சந்தேகம் வருகிறது” என்கிறார் அபிராமன். “சாலை அமைக்கவே 7500 ஏக்கர் வரை கையகப்படுத்தும் இவர்கள், நாளை தொழில் துறை நிறுவனங்கள் வந்து குவிய 75,000 ஏக்கரைக் கையகப்படுத்தமாட்டார்களா?” என்று கேள்வி எழுப்புகிறார் பியூஷ்.
**போராட்டம் தொடரும்!**
காவல் துறையின் பல்வேறு அடக்குமுறைகளையும் தாண்டி மேற்கண்ட ஐந்து மாவட்டங்களிலும், இந்தத் திட்டம் குறித்துக் கேள்விப்பட்ட நாள் முதல் போராட்டம் நடந்து வருகிறது. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ், திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான், பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த மாணவி வளர்மதி ஆகியோர் தற்போது பிணையில் வெளிவந்துவிட்டனர். விவசாயிகளின் போராட்டமும் நாளுக்குநாள் தொடர, கைது நடவடிக்கையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் தாங்கள் உயிரோடு இருக்கும்வரை, இந்தத் திட்டத்தை அரசு கைவிடும் வரை போராடுவோம் என்கின்றனர் விவசாயிகள்.
“எங்களை இந்த நிலத்துக்குள்ளையே புதைச்சிட்டு தாராளமா ரோடு போடச் சொல்லுங்க” என்கிறார் மோகனசுந்தரம். “10 கோடி ரூபாய் குடுத்தாலும் எங்களுக்கு பணம் வேண்டாம், இந்த ரோடும் வேண்டாம். எனக்கு என் காடு மட்டும்தான் வேணும். அத நான் விட்டுக் குடுக்க மாட்டேன். அதுக்காக நான் போராடுவேன்” என்கிறார் மணிகண்டன். “நெலத்த குடுக்க முடியாதுனு கிணத்துல குதிச்சுலாம் போராட்டம் நடத்திட்டோம். காட்டப் பிடிங்கிட்டு எங்கள அகதியா தொரத்தி விட பாக்குறாங்க; அதுக்கு நாங்க ஒத்துக்க மாட்டோம். இந்த திட்டத்த கைவிடர வரைக்கும் நாங்க போராடுவோம்” என்கிறார் விநாயகம்.
**தமிழ்த்தாயின் மார்பில் போட்ட வடு!**
இந்தத் திட்டத்தால் கிடைக்கப்போகிற பெரும் கமிசன் தொகைக்கு ஆசைப்பட்டுத்தான் தமிழக ஆட்சியாளர்கள் இதை ஆதரிக்கிறார்கள் என்று கூறும் அபிராமன், “இந்தத் திட்டம் மணல் கடத்தல்காரர்களும், லாரி உரிமையாளர்களும் லாபமீட்டத்தான் பயனளிக்கும்” என்கிறார். ஆக மொத்தத்தில் இந்த 8 வழிச் சாலை பசுமை வழிச் சாலை அல்ல. இது ‘தமிழ்த்தாயின் மார்பில் போடப்பட்ட வடு’ என்பது இவருடைய கருத்து.
நம் நாட்டில், ’சாலை போடுங்கள்’ என்று கேட்டுத்தான் மக்கள் போராடியிருக்கிறார்களே தவிர, சாலை வேண்டாம் என்று கேட்கும் முதல் போராட்டமாக இதுதான் இருக்கிறது. காரணம் இதை மக்களுக்கான சாலை என்று மக்கள் எண்ணவில்லை. இது மக்களுக்கான சாலைதான் என்றால் அதற்குரிய விளக்கத்தை மக்களுக்கு அளிக்கலாமே ஒழிய மக்களை அச்சுறுத்துவதும், ஊடகவியலாளர்களைத் தாக்குவதும், போராட்டக்காரர்களை கைது செய்து சிறையிலடைப்பதும் எவ்வகையிலும் நியாயமாகாது.
“இந்த ஒடுக்குமுறைதான் மக்களிடம் திட்டம் குறித்த அச்ச உணர்வை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. அதுதான் போராட்ட உணர்வை மக்களிடம் அதிகரித்து போராட்டத்தை வேகமாக எடுத்துச் செல்கிறது” என்று கூறி முடிக்கிறார் பியூஷ் மானுஷ்.
[பசுமையை அழிக்கும் சாலை! (பாகம் – 1)](https://minnambalam.com/k/2018/07/12/37)
[பசுமையை அழிக்கும் சாலை! (பாகம் – 2)](https://minnambalam.com/k/2018/07/12/70)
**மின்னஞ்சல் முகவரி**: [feedback@minnambalam.com](mailto:feedback@minnambalam.com)�,”