மணிகண்டன் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து தகவல் கொடுக்க இரண்டு மகளிர் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவர் வீட்டிற்கு வந்து விசாரித்துக் கொண்டிருந்தார்கள். இருவர் கையிலும் இளநீர். சேலம் – சென்னை எட்டு வழிச் சாலைக்காக பறிக்கப்படவிருக்கிற விவசாய நிலத்தில் வளர்ந்த தென்னை மரத்திலிருந்து அந்த இளநீர் பறிக்கப்பட்டது. இது சேலம் மாவட்டத்தின் வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட உத்தமசோழபுரம் பகுதி. சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் வி.எஸ்.ஏ கல்லூரிக்கு எதிரே இருக்கிறது இந்த உத்தமசோழபுரம். முன்னாள் அமைச்சரான மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்திற்குச் சொந்தமான கல்லூரி அது.
**ஜீரோ பாயின்ட்:**
இந்தக் கல்லூரிக்கு நேர் எதிரே இருந்துதான் சேலம் – சென்னை எட்டு வழிச் சாலைக்கான தொடக்கப்புள்ளி தொடங்குகிறது. இந்தக் கல்லூரிக்கு எதிரே இருக்கும் ஊர்தான் உத்தமசோழபுரம். கல்லூரிக்குப் பின்பகுதியில் கனிம வளங்கள் நிறைந்த கஞ்சமலை. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பார்த்தால் உள்ளே ஓர் ஊர் இருப்பதே தெரியாது. கண்ணுக்கு எட்டிய வரை வெறும் தென்னை மரங்கள் மட்டுமே தென்படும். ஊருக்குள் சென்றால் முதல் வீடே மணிகண்டன் வீடுதான். காவல் துறை அதிகாரிகள் சென்ற பிறகு மணிகண்டனிடம் நம் விசாரணையைத் தொடங்கினோம்.
நாம் செல்வதற்கு முதல்நாள்தான் இங்கு எட்டு வழிச் சாலைக்கு முட்டுக் கல் நடும் பணி முடிந்திருக்கிறது. சில மணி நேரங்களுக்கு முன்பே கல் நட அதிகாரிகள் ஊருக்குள் நுழைந்துவிட்டார்கள், அடுத்து இங்கேதான் வரப் போகிறார்கள் என்பதை அறிந்த மணிகண்டன் தற்கொலை செய்துகொள்ள பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். இதை அந்தப் பகுதியில் நோட்டம் இட்டிருந்த உளவுத் துறை அதிகாரிகள் கண்காணித்து மேலிடத்திற்குத் தகவல் சொல்ல, அடுத்த சில நிமிடங்களில் காவல் துறை பட்டாளமே குவிந்துவிட்டது இவரது வீட்டில். இவரைச் சமரசம் செய்ய ஓர் அணி, கல் நட வந்த அதிகாரிகளுடன் ஓர் அணி என இரு பிரிவாகக் காவல் துறையைக் குவித்து வெற்றிகரமாகக் கல் நட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். இதையடுத்துதான் அடுத்த நாள் மணிகண்டன் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவர் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்.
“எனக்கு இப்போ 41 வயசு. ஆறாவது தலைக்கட்டா நாங்க இந்த ஊர்ல இருக்கோம். எங்க வீட்டுல மொத்தம் ஆறு பேர். விவசாயத்தைத் தவிர வேற எந்த வேலையும் எங்களுக்குக் கிடையாதுங்க. எங்ககிட்ட 3 ஏக்கர் 40 சென்ட் நிலம் இருக்கு. இப்போ ஒன்றே முக்கால் ஏக்கர் நிலம் போகும்போல தெரியுது. அதுல 100 தென்னை இருக்கு. முக்கால் ஏக்கருக்கு கரும்பு இருக்கு. பைபாஸ் ஒட்டி இருக்கிறதால எங்க நிலம் நல்ல விலைக்குப் போகும். போன வருஷமே ஏக்கர் இரண்டரை கோடி ரூபாய்க்கு கேட்டாங்க. ஆனா, எங்களுக்கு விவசாய பூமியைத் தர மனசில்ல. தரமாட்டோம்னு சொல்லிட்டோம். வீட்டை ஒட்டியே புது ரோடு வருது. ஒருவேளை ரோடு வந்துட்டா வீடும் புதுசாத்தான் கட்டணும். அரசாங்கம் குடுக்கப்போற பணத்தை வைச்சு முழுசா வீடுகூட கட்ட முடியாது. இவுங்க குடுக்குற பணம் எங்களுக்கு வேண்டாம். நான் பொறந்து வளர்ந்த பூமி இது, எனக்கு இந்த பூமி மட்டும் போதும்” என்று கொந்தளிக்கிறார் மணிகண்டன்.
இவர் தனது நிலத்தில் கரும்பு, தென்னை மட்டுமின்றி கத்திரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறி வகைகளையும் பயிரிட்டு வருகிறார். இவற்றை சேலம் சந்தையில் விற்பனை செய்கிறார். திருமணிமுத்தாறு இப்பகுதியின் வழியே கடந்து செல்வதால் இப்பகுதி முழுவதுமே நிலத்தடி நீருக்குப் பஞ்சமில்லை. 10 அடி முதல் 20 அடிக்குள் நிலத்தடி நீர் இந்தப் பகுதிகளில் கிடைக்கிறது. இதனால் இப்பகுதி முழுவதுமே பசுமை போர்த்திய பூஞ்சோலையாகத்தான் காட்சியளிக்கிறது.
**எட்டு வழிச் சாலை:**
இந்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி ஒன்றிய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தமிழகம் வந்திருந்தார். அப்போது கட்கரியும், தமிழக முதல்வர் கே.பழனிசாமியும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அந்தச் சந்திப்பில்தான் சென்னை முதல் சேலம் வரை 274 கிலோமீட்டர் தொலைவில் ரூ.10,000 கோடி செலவில் எட்டு வழிச் சாலை அமைக்கப்படவுள்ளதாக கட்கரி கூறினார். சேலத்திலிருந்து சென்னை வர ஏற்கெனவே மூன்று சாலைகள் இருந்தாலும், அதன் போக்குவரத்து நெருக்கடிகள் அதிகரித்துள்ளதாலும், 6 மணி நேரப் பயண நேரத்தை 3 மணி நேரமாகக் குறைக்கும் விதமாகவும் திருவண்ணாமலை வழியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக பழனிசாமி அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.
இதையடுத்து இப்போது அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த எட்டு வழிச் சாலை சென்னைக்கு அருகே உள்ளே வண்டலூர் சுற்றுச் சாலையில் தொடங்கி, சேலம் மாவட்டத்தின் அரியனூர் பகுதி வழியாகக் கடந்து செல்லும் சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் முடிவுறுகிறது. அரசாங்கம் வெளியிட்டுள்ள சாத்தியக்கூறு அறிக்கையின்படி சேலத்தில் 18 கிராம ஊராட்சிகளும், தருமபுரியில் 24 ஊராட்சிகளும், கிருஷ்ணகிரியில் ஒரு ஊராட்சியும், திருவண்ணாமலையில் 74 ஊராட்சிகளும், காஞ்சிபுரத்தில் 42 ஊராட்சிகளும் இந்த எட்டு வழிச் சாலை வழித் தடத்தில் அடங்குகின்றன. மொத்தமாக 854 கிராமங்களை இந்தச் சாலை கடக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, உத்திரமேரூர் ஆகிய தாலுகாக்களின் வழியாக 59.11 கிலோமீட்டரிலும், திருவண்ணாமலையில் செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி, திருவண்ணாமலை, செங்கம் ஆகிய தாலுகாக்களின் வழியாக 119.58 கிலோமீட்டரிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை தாலுகா வழியாக 3.67 கிலோமீட்டரிலும், தருமபுரியில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாக்களின் வழியாக 59.27 கிலோமீட்டரிலும், சேலத்தில் ஏற்காடு, வாழப்பாடி, சேலம் தாலுகாக்களின் வழியாக 35.67 கிலோமீட்டரிலும் இந்த எட்டு வழிச் சாலை அமையவுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தச் சாலையின் நீளம் 277.300 கிலோமீட்டர். மொத்தமாகக் கையகப்படுத்தப்படவுள்ள நிலம் 2791 ஹெக்டேர்.
**அழியும் பசுமை:**
மணிகண்டன் வீட்டைத்தாண்டி ஊருக்குள் சென்றால், இருபுறமும் தென்னையும், கரும்பும், சோளமும் சூழ நடுவில் பயணிக்கிறது பசுமை வழிச் சாலை. ஆங்காங்கே வேளாண் நிலங்களுக்கு நடுவில் வீடுகள். ஊருக்குள் சென்றால் உத்தமசோழபுரத்திலிருந்து பூலாவரி செல்லும் வழியில் இருக்கிறது பிரவீனின் வீடு. இவருக்கு வயது 25. வேலை தேடிக்கொண்டிருக்கும் பொறியியல் பட்டதாரியான இவர் தனது தங்கை மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். இந்த எட்டு வழிச் சாலை இவர் வீட்டை விழுங்குகிறது. இதனால் செய்வதறியாது மொத்த குடும்பமும் திகைத்துப் போயிருக்கிறது.
“எங்ககிட்ட நிலம் எடுக்கறதை பத்தி எங்களுக்கு எந்தத் தகவலுமே கொடுக்கலைங்க. யார் நிலத்துக்குள்ள இந்த ரோடு வர்லையோ அவுங்களுக்கு மட்டும் நோட்டீஸ் குடுத்தாங்க. ஆனா எங்களுக்கு முன்னாடியே எந்தத் தகவலும் கொடுக்கலை. திடீர்னு 300 போலீஸுக்கு மேல கூட்டிட்டு வந்து கல் நட்டுட்டுப் போயிட்டாங்க. நாங்க என்ன சொல்றோம்னு எதையுமே அவங்க காது குடுத்து கேட்கல. நாங்க பக்கத்துல போனாலே போலீஸ் எங்களை மிரட்டுது” என்கிறார் பிரவீன்.
தந்தை இல்லாத சூழலில் இவரின் தாய் மட்டுமே குடும்பத்தைத் தாங்கி நிற்கிறார். “அம்மா விவசாயம் பாக்குறாங்க. மாட்டுப் பண்ணை ஒண்ணு வெச்சிருக்கோம். அப்பா இல்லை. இப்போ வீடு போச்சுன்னா இன்னிக்கு இருக்கிற நிலைமையில புது வீடுல்லாம் கட்ட முடியுமா? இங்க எதுக்கு இந்த ரோடு போடுறாங்க? யார் இவங்ககிட்ட எட்டு வழிச் சாலை வேணும்னு கேட்டாங்க?” என்று வீட்டைப் பறிகொடுக்கத் தயாராக இல்லாத ஆதங்கத்துடன் கேட்கிறார் பிரவீன்.
அப்படியே பூலாவரிக்குள் நகர்ந்தால் நிலைமை இன்னும் மோசமாகிறது. பெரும் பொருளாதாரச் சேதத்திற்கு ஆளாவதைத் தாங்கிக்கொள்ள இயலாமல் வீட்டு வாசலில் அழுது புலம்பிக்கொண்டிருந்த மோகனசுந்தரத்தின் தாயைக் கண்டோம். தன்னுடைய ஏழு ஏக்கர் நிலத்தை இரண்டாகப் பிளந்து, அதில் 3.50 ஏக்கர் வரை எட்டு வழிச் சாலைக்குப் பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கவலைப்படுகிறார் 58 வயதான மோகனசுந்தரம். அதுமட்டுமல்ல, இவர் பறிகொடுக்கவிருக்கிற நான்கு ஏக்கர் நிலத்தில்தான் இவர் ஓராண்டுக்கு முன்பு புதிதாகக் கட்டிய அந்த அழகான வீடும் இருக்கிறது.
“எங்க நெலத்தை ரெண்டாப் பொளந்து இந்தச் சாலை போகுதுங்க. இந்த சாலைக்குப் போக ரெண்டு பக்கமும் ஒன்றே முக்கால் ஏக்கர் நிக்குதுங்க. எந்த அறிவிப்பும் கொடுக்காம வந்து நெலத்தைப் பிடுங்குறாங்க. இந்த நெலத்தை அப்பா 1960ல வாங்குனாரு. காடு, மேடா இருந்த பூமிய வெட்டி சமப்படுத்தி, கிணறு தோண்டவே எங்க அப்பாரு காலம் முழுசா முடிஞ்சு போச்சுங்க. அன்னிக்குலாம் டிராக்டர்கூட இல்ல. படிப்படியா வளர்ந்து இப்பத்தான் நல்ல நிலைமைக்கு வந்திருக்கோம். அதுக்குள்ள இப்படியொரு திட்டத்தைக் கொண்டு வர்றாங்க. யாருங்க கேட்டா இந்த ரோட்ட? எந்த மக்களுக்காக இந்த ரோடு போடுறாங்க?” என்கிறார் மோகனசுந்தரம். “இப்பவாவது ஜேசிபி எந்திரம்லாம் இருக்கு. ஆனா, அன்னிக்கு கரடு முரடா கிடந்த நிலத்த கையாள திருத்தி சரி பண்ண எவ்ளோ கஷ்டப் பட்டிருப்போம்னு இந்த அரசாங்கத்துக்குப் புரியாது. இப்ப வந்து நோகாம நெலத்தப் பிடுங்கி ரோடு போடப் பாக்குறாங்க” என்கிறார் மணிகண்டன்.
**(அடுத்த பாகம் மதியம் 1 மணி அப்டேட்டில்…)**
**நேற்றைய கட்டுரை:** [ஜிஎஸ்டியில் பெட்ரோல் – இழப்பு யாருக்கு?](https://minnambalam.com/k/2018/07/11/17)
**மின்னஞ்சல் முகவரி**: [feedback@minnambalam.com](mailto:feedback@minnambalam.com)�,”