முசாதிர் அகமது
ஜம்மு காஷ்மீரின் பாம்பூரில் ரியாஸ் மசூதி என்பவர் நான்காம் தலைமுறையாகக் குங்குமப்பூ விவசாயம் செய்துவருகிறார். உலகின் மிக விலையுயர்ந்த நறுமணப் பொருளான குங்குமப்பூ விவசாயத்தில் இவர் ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளார். 2014ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் குங்குமப்பூ விவசாயத்தில் பெரும் நட்டம் ஏற்பட்டதையும் இவர் நினைவுகூர்கிறார்.
“எனக்கு நினைவுள்ளவரையில், கடந்த பருவம் உண்மையிலேயே மிக மோசமான பருவமாக அமைந்துள்ளது. குங்கமப்பூவைப் பொறுத்தவரையில் மிகவும் பாதுகாப்பாகக் காக்கவேண்டிய ஒன்றாகும். 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அக்டோபர் வரையில் வறட்சி நீடித்ததால் குங்குமப்பூ உற்பத்தி பாதிக்கப்பட்டது. கடந்த பருவத்தைப் பொறுத்தவரையில் 90 சதவிகிதம் இழப்பைக் கண்டோம். உற்பத்திக்கான செலவைக்கூட ஈட்ட இயலவில்லை” என்கிறார் ரியாஸ்.
காஷ்மீரைப் பொறுத்தவரையில் 226 கிராமங்களைச் சேர்ந்த 16,000 பேர் இத்தொழிலைச் சார்ந்து வாழ்கின்றனர். நறுமணப் பொருள்களின் ராஜா என்று அழைக்கப்படும் குங்குமம் இந்தியாவைப் பொறுத்தவரையில் காஷ்மீரில்தான் அதிகம் விளைகிறது. காஷ்மீரைப் பொறுத்தவரையில் பம்போரின் கரேவாஸ் கிராமத்திலும், புத்கம் மற்றும் ஸ்ரீநகரிலும் அதிகம் விளைகிறது. குங்கமப்பூவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு குங்குமப்பூவும் மூன்று, நான்கு சூலகங்களைக் கொண்டிருக்கும். இவை அறுவடை செய்யப்பட்டு தனித்தனியாகப் பிரிக்கப்படுகிறது. இந்தக் குங்குமப்பூக்கள் சமையலுக்கும், மத ரீதியான பயன்பாடுகளுக்கும், மருந்து தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது.
“2000ஆம் ஆண்டில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவிய சிறப்பான கால நிலைகளால் குங்குமப்பூ மகசூல் சிறப்பாக அமைந்தது. நீர்ப்பாசன வசதியும் நன்றாகவே அக்காலகட்டத்தில் இருந்தது. ஆனால், இப்போது இழப்புகள் அதிகரித்துள்ளது. உற்பத்தி மூன்று டன்னுக்கும் குறைவாகவே உள்ளது” என்கிறார் அல்தாஃப் ஐஜாஷ் அன்ட்ராபி. இவர் வேளாண் சங்கத்தின் இயக்குநராகவுள்ளார்.
1996ஆம் ஆண்டில் குங்கமப்பூ சாகுபடி முதன்முறையாக 5,707 ஹெக்டேர்களாக அதிகரித்தது. அந்த ஆண்டில் உற்பத்தி 15.95 மெட்ரிக் டன்களாக அதிகரித்தது. இதுதான் காஷ்மீரின் அதிகபட்ச குங்குமப்பூ உற்பத்தி என்று வேளாண்துறை அமைச்சகத்தின் தரவுகள் கூறுகின்றன. . ஐந்தாண்டுகள் கழித்து 2002ஆம் ஆண்டு உற்பத்தி 0.30 டன்கள் குறைந்தது. அதே ஆண்டில் சாகுபடி பரப்பும் 2,710 ஹெக்டேராகக் குறைந்தது. உற்பத்தியும் ஏக்கருக்கு 1.5 கிலோகிராம் முதல் 2 கிலோகிராமாக குறைந்துள்ளது. 1997ஆம் ஆண்டில் ஓர் ஏக்கருக்கு 4 கிலோ உற்பத்தியானதே அதிகபட்சமாகவுள்ளது.
காஷ்மீரைப் குங்குமப்பூவைப் பொறுத்தவரையில் அதன் நறுமணம் மற்றும் சர்வதேச தரம் குறித்த அக்கறையின்மையே அரசாங்கத்துக்கு அதிகமாகவுள்ளது. அதுவே காஷ்மீர் குங்குமப்பூவின் சரிவுக்குக் காரணமாக உள்ளது. அதுமட்டுமின்றி விவசாயிகளின் பாரம்பர்ய முறை, மண் சிதைவு, பூச்சித் தாக்குதல், அமைப்புசாரா சந்தைப்படுத்தல், பக்கத்துக் கிராமங்களில் கொண்டுவரப்பட்டுள்ள சிமென்ட் ஆலைகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவையும் குங்குமப்பூ உற்பத்தியைப் பாதித்துள்ளன.
2000ஆம் ஆண்டுகளில் உற்பத்தி சரிந்ததற்கு மழை முக்கியக் காரணமாகவுள்ளது. “2000ஆம் ஆண்டில் இடைவிடாது பெய்த கனமழை குங்குமப்பூ அறுவடையை முற்றிலும் பாதித்தது. சிறப்பான வளர்ச்சியில் இருந்த குங்குமப்பூ சாகுபடி அந்த ஆண்டில்தான் பெரும் சரிவைக் கண்டது” என்கிறார் அப்துல் மஜீத் வானி. 2000ஆம் ஆண்டில் காஷ்மீர் 1,500 மில்லிமீட்டர் மழையைப் பதிவு செய்திருந்தது. தற்போது 400 முதல் 500 மில்லிமீட்டர் மட்டுமே மழை பதிவாகியுள்ளது.
பின்னர் குங்குமப்பூவுக்கான தேவை இந்தியாவில் 40 டன்னாக அதிகரித்தது. பல விவசாயிகள் வருவாய் குறைவால் குங்கமப்பூ சாகுபடியைக் கைவிட்டு மாற்றுத்தொழிலுக்குச் சென்றனர். விவசாய நிலங்கள் விற்பனை நிலங்களாக மாறின. நகர மயமாதலால் 250 ஹெக்டேர் விவசாய நிலங்கள் இழக்கப்பட்டுள்ளது என்று பம்போரே வருவாய் துறை அதிகாரி கூறுகிறார்.
குங்குமப்பூ விவசாயி முஷ்தக் அகமது பட் கூறுகையில், “என்னுடைய மகன் வேலைக்காகக் குங்குமப்பூ சாகுபடி செய்து வந்த நிலத்தின் ஒரு பகுதியை விற்றுவிட்டேன். இது இருபதாண்டுகளுக்கு முன்னர் நினைத்துக் கூட பார்க்க முடியாதது. ஆனால், இது நீண்ட கால வாழ்வாதாரத்துக்குப் போதுமானதாக இல்லை” என்றார்.
“பொதுவாக குங்குமப்பூ விவசாயம் செய்கிற நிலத்தை விற்பனை செய்ய சட்டத்தில் இடமில்லை. பிறகு எப்படி இவர்கள் நிலங்களை விற்றனர்? ஒட்டுமொத்த அமைப்பும் ஊழலில் உள்ளது. இவர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு குங்குமப்பூ விவசாய நிலங்களில் கட்டுமானப் பணிக்கு அனுமதியளித்து விட்டனர்” என்கிறார் வானி. சில வருடங்களுக்கு முன்னர் 137.5 ஏக்கர் குங்குமப்பூ விவசாய நிலத்தைக் கட்டுமான நிறுவனத்திடமிருந்து அரசாங்கம் கைப்பற்றியது.
ஸ்பெயின் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் சந்தை போட்டி காஷ்மீர் விவசாயிகளுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. சாகுபடி முறைகளும் இவ்விவசாயிகளுக்கு பின்னடைவை அளிப்பதாகக் கூறப்படுகிறது.
2010ஆம் ஆண்டில் மத்திய அரசு ரூ.371 கோடியை தேசிய குங்குமப்பூ திட்டத்துக்கு ஒதுக்க அனுமதியளித்தது. இந்த நிதியின் மூலம் குங்குமப்பூ சாகுபடிக்குப் புத்துயிர் அளிக்க அரசாங்கம் முடிவெடுத்தது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த நிதி ரூ.411 கோடியாக அதிகரிக்கப்பட்டது. பாசன வசதியை அதிகரிக்கவும், மருந்துத் தெளிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் இத்திட்டம் முக்கியத்துவம் அளித்தது. விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்க ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.4.94 லட்சம் வழங்கவும் இத்திட்டம் வழிவகை செய்தது. அதுமட்டுமின்றி ரூ.22 கோடியில் குங்குமப்பூ பூங்கா, தரக் கட்டுப்பாட்டு சோதனைக் கூடம், வரிசைப்படுத்தல் வசதி, விதைகள் மற்றும் காலநிலை நிலையங்கள் மற்றும் 758 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் நான்காண்டுகளில் முடிக்கப்பட்டது. காஷ்மீர் அரசு இத்திட்டங்களை நிறைவேற்ற இரண்டு ஆண்டுகள் கூடுதலாக எடுத்துக்கொண்டது.
தற்போது இத்திட்டம் முழுவதும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அன்ட்ராபி கூறுகையில், “மொத்தமாக 2,300 ஹெக்டேர் நிலத்தில் குங்குமப்பூ சாகுபடி புத்துயிர் செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது இயந்திரமாக்கல் வசதியும் அதிகரித்துள்ளது” என்கிறார்.
ஆனால், உண்மையில் அரசாங்கம் இந்தத் திட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. கடந்த எட்டாண்டுகளில் இதுவரை 3,797 தண்ணீர் தெளிப்பான்கள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. 128 ஆழ்துளைக் கிணறுகளில் 120 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றபோதிலும், விளைநிலங்களில் இன்னும் முழுவதுமாக அவை பொருத்தப்படவில்லை. அதேபோலவே பல பொருள்களும் பயன்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளன. சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பதில் அரசாங்கம் தோல்வியையே கண்டுள்ளது.
ஆனால், ஒதுக்கப்பட்ட நிதியில் (ரூ.411 கோடி) 70 சதவிகிதம் செலவிடப்பட்டுள்ளது. இவ்வளவு செலவிடப்பட்டும் இத்துறை மிகப்பெரும் சரிவைக் கண்டுள்ளது” என்று அம்மாநில நிதியமைச்சர் ஹசீப் திரபு கூறியுள்ளார். மேலும், குங்குமப்பூ விவசாயத்தைப் பாதுகாக்க பாரம்பர்ய முறையைக் கையாளுமாறு பலரிடம் கூறியுள்ளார்.
அரசாங்கம் ஏக்கருக்கு 6 கிலோகிராம் குங்குமப்பூ உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், உற்பத்தி இரண்டு கிலோகிராமுக்கும் கீழாகக் குறைந்துள்ளது. இலக்கை அடைவதில் பல அரசுத் துறையினருக்கே நம்பிக்கை இல்லை. இந்த இலக்கு மிகைப்பட்டதாக இருந்தாலும், இந்த இலக்கை அடைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
நன்றி: [தி வயர்](https://thewire.in/214312/late-save-kashmirs-purple-fields/)
தமிழில்: [பிரகாசு](https://www.facebook.com/prakash.dvk.1)
மின்னஞ்சல் முகவரி: prakash@minnambalam.com
�,”