சிறப்புக் கட்டுரை: நீதித் துறையில் மீண்டும் எமர்ஜென்சி!

public

ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன்

2019 மே மாதம் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ராமசுப்பிரமணியம் அவர்களை நியமனம் செய்ய பரிந்துரைத்த உச்ச நீதிமன்ற கோலேஜியம் 28.08.2019 அன்று அவரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய பரிந்துரைக்கிறது. ஆனால், அவரை விட பணியில் மூத்தவரான சுதாகர் அவர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி கொடுப்பதற்கு முன்னால், அவருக்கு ஜூனியரான ராமசுப்பிரமணியம் அவர்களுக்கு கொடுக்கலாமா என்ற கேள்வியை உடனடியாக நானும் எழுப்பினேன்.

உயர் நீதிமன்றத்தில் பணியில் மூத்தவரைத் தவிர்த்து இளையவரை உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதியாக நியமனம் செய்வதற்கு ஆட்சேபனை தெரிவித்து உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி அவர்கள் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். இது பாராட்டத்தக்கது.

அவர் சுட்டிக்காட்டுவது, சீனியர் இருக்கும்போது ஜூனியர் நீதிபதியை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைப்பது நியாயமற்றது என்பதே.

நீதிபதி ராமசுப்பிரமணியம் அவர்களைவிட சீனியரான நீதிபதி சுதாகர் அவர்கள் இருக்கும்போது சுதாகரை விடுத்து ராமசுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு கொடுப்பது தவறு என்று பானுமதி சுட்டிக் காண்பித்துள்ளார். அது சரியானது என்று கருதுகிறேன்.

ராமசுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்குவதில் ஆட்சேபனையில்லை. அது சரிதான். ஆனால், சுதாகரை ஆக்கியதற்குப் பின்பு ஆக்க வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் ஒரே நேரத்தில் மூன்று நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் இருக்கலாம். ஏனென்றால் டெல்லியிலும், மும்பையிலும் குறைந்தபட்சம் மூன்று நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் எப்பொழுதும் இருக்கிறார்கள். அவற்றுக்குச் சமமான நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம். இன்னும் சொல்லப் போனால் சில நேரங்களில் டெல்லி, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஐந்து நபர் வரை உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறார்கள்.

ஆனால், கடைசி ஐந்து வருடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதி கூட உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை.

2017இல் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பால் வசந்தகுமாரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கச் சொல்லி அப்போதைய உச்ச நீதிமன்ற கொலேஜியம் பரிந்துரை செய்தது. ஆனால், மத்திய அரசு அவரை நியமிக்கவில்லை. அவர் ஓய்வு பெற்றுவிட்டார்.

இப்போது நீதிபதி சுதாகர், நீதிபதி ராமசுப்பிரமணியம் ஆகிய இருவரையுமே உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கலாம். ஆனால் இவர்களில் மூத்தவர் சுதாகர்தான். சுதாகர் 2018ஆம் ஆண்டே மணிப்பூர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ராமசுப்பிரமணியத்தைப் பொறுத்தவரை 2019 மே மாதம்தான் அவர் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டு, ஜூனில் நியமனம் செய்யப்பட்டார்..

இதுமட்டுமல்ல; சுதாகர் உயர் நீதிமன்ற நீதிபதியாக 2005இல் நியமிக்கப்பட்டார். ராமசுப்பிரமணியம் 2006இல்தான் நியமிக்கப்பட்டார். ஆக உயர் நீதிமன்ற நீதிபதி, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி என இரு நியமனங்களிலுமே சுதாகர்தான் மூத்தவர். எனவே அவரை விடுத்து, அவருக்கு இளையவரை நியமிப்பது சரியல்ல.

அவசர நிலைக் காலம் மாதிரியே, தொடர்ந்து பணியில் இளையவர்களான பலர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். இந்திரா காந்தி எப்படி பணியில் மூத்தவராக இருந்தவர்களை விடுத்து ஜூனியர் நீதிபதிகளை நியமித்தாரோ அதேபோல இப்பொழுது மத்திய அரசு செய்கிறது. அதற்கு உச்ச நீதிமன்ற கொலேஜியம் துணைநிற்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

10.05.2019 அன்று கூடிய உச்சநீதிமன்ற கோலேஜியம், மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள அகில் அப்துல் ஹமீது குரேஷி அவர்களை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது. அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த மூத்த நீதிபதி. ஆனால், அவரை இதுநாள் வரை மத்திய அரசு தலைமை நீதிபதியாக நியமிக்கவில்லை.

அதே 10.05.2019இல், சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியம் அவர்களை இமாச்சலப் பிரதேசத்தின் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது உச்ச நீதிமன்ற கோலேஜியம். அவர் அப்பொழுது ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்தார்.

நீதிபதி ராமசுப்பிரமணியம் அவர்கள் மத்திய அரசால் உடனடியாக இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் தலைமை நீதிபதியாகப் பணிபுரிந்து வருகிறார். அவரை இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கிறது உச்ச நீதிமன்ற கோலேஜியம். ஆனால், நீதிபதி குரேஷி இதுநாள் வரை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பணியாற்ற முடியாதவாறு மத்திய அரசு செயல்படுவது வருந்தத்தக்கது.

குஜராத் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் நீதிபதி குரேஷியை தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற கோலேஜியத்தின் முடிவின்படி மத்திய அரசு நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டது. அந்த வழக்கில் சமீபத்திய விசாரணையில் மத்திய அரசு , அவரை வேறு உயர் நீதிமன்றத்துக்கு நியமியுங்கள் என்று சொல்கிறது. இதை உச்ச நீதிமன்ற கோலேஜியம் ஏற்குமா அல்லது தனது பழைய நிலைப்பாட்டிலேயே இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குரேஷிக்கு ஒரு நீதி நடக்கிறது; ராமசுப்பிரமணியத்துக்கு ஒரு நீதி நடக்கிறது என்பதும்.. ராமசுப்பிரமணியம் தனது சீனியரான சுதாகரையும் தாண்டிப் போகிறார் என்பதும், இங்கே கேள்விக்குரியதாகியிருக்கிறது.

இந்த விஷயங்களை என்னைப் போன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் சொல்லுவதைவிட, பணியில் இருக்கும் பானுமதி போன்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொல்லுவது வலுவூட்டுவதாக இருக்கும் என்று நம்புகிறேன். சீனியாரிட்டியை இப்படி சுலபத்தில் தள்ளிவிட்டுப் போய்விடக் கூடாது. அது இந்த நீதித் துறை என்ற அமைப்பின் பேரில் சாதாரண மனிதனுக்கு இருக்கும் நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும்.

குரேஷி விஷயத்தில் கோலேஜியம் செய்தது, மத்திய அரசு செய்யவில்லை. சுதாகர் விஷயத்தில் கோலேஜியமே செய்யவில்லை என்பதுதான் குறிப்பிட வேண்டிய விஷயம்.

குரேஷி விஷயத்தில் மத்திய அரசு செயல்படவில்லை, அது தவறு. சுதாகர் விஷயத்தில் கோலேஜியமே தவறு செய்திருக்கிறது என்று நான் மட்டும் சொல்லவில்லை, உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி அவர்களும் சொல்லியிருக்கிறார்.

நீதித் துறையில் நிலவும் இந்தப் போக்கு எங்கே போய் முடியும் என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள். பொது வெளிகளில் ஊடகங்கள் பேசுவதன் மூலமாகத்தான் இதைத் தடுத்து நிறுத்த முடியும். நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. ராமசுப்பிரமணியம் அவர்களை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கக் கூடாது, அவருக்கு தகுதி இல்லை என்று யாரும் சொல்லவில்லை. அவருக்கு உரிய நேரத்தில் கொடுக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம். முதலில் சுதாகர் அவர்களுக்கு கொடுத்துவிட்டு, பின் அவருக்கு கொடுக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம்.

அதேபோல, மிகப் பெரிய நீதிமன்றமான சென்னை உயர் நீதிமன்றத்தில் (Judges strength-75) இருந்து மிகச் சிறிய நீதிமன்றமான மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு (Judges strength-3) மாற்றல் செய்யப்பட்டதை எதிர்த்து பதவியை துறப்பதற்கான கடிதம் அனுப்பிய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (இப்போது பதவியில் உள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் உயர் நீதிமன்ற நீதிபதியாக முதலில் 2001இல் நியமிக்கப்பட்டவர்) தகில் ரமாணியின் செயலும் கலகக்குரலே!

இப்படிப்பட்ட நிலைமை நீதித் துறையில் அவசர நிலை காலம் மட்டுமன்றி மற்ற காலங்களிலும் நிலவியது. மூத்த நீதிபதியாக இருந்தாலும் ஏ.பி.ஷா போன்றவர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனம் மறுக்கப்பட்டது. ஆனால், அது இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்தது. ஆனால் இப்போது அது தொடர் கதையாகிறது.

குரேஷி குஜராத்தி முஸ்லிம், அவருக்குக் கொடுக்கவில்லை. பால் வசந்தகுமார் கிறிஸ்தவர். அவருக்கும் கொடுக்கவில்லை.அரசைப் பற்றி இப்படி ஒரு சந்தேகம் சிறுபான்மையினர் மத்தியில் எழுகிறது. அரசு தெளிவான பதில் அளித்து தன்னை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டும்�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *