b>
இமையம்
“தமிழ் சினிமாவில் விளக்குகள் காட்டிய வெளிச்சத்தைவிட கலைஞரின் வசனங்கள் பொழிந்த ஒளியே அந்தக் காலத்துக் கொட்டகைகளைப் பிரகாசப்படுத்தின” என்று கலைஞருடைய வசனங்கள் குறித்து இயக்குநர் கே.பாலச்சந்தர் ஒரு முறை குறிப்பிட்டார். அது மிகையான கூற்று அல்ல. இன்றுவரை நடந்துகொண்டிருக்கிற வரலாறு. முதன்முதலாகக் கலைஞர் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய ராஜகுமாரி (1947) படத்திலிருந்து அவர் கடைசியாக கதை, திரைக்கதை, வசனம் எழுதிய ‘உளியின் ஓசை’ (2008) திரைப்படம்வரை பாலச்சந்தர் குறிப்பிட்டதுதான் நிகழ்ந்தது.
குறிப்பிட்ட சினிமாப் படத்தில் யார் நடித்திருக்கிறார், யார் இயக்கியிருக்கிறார் என்ற கேள்விக்குப் பதிலாக யார் கதை வசனம் எழுதியிருக்கிறார் என்று கேட்க வைத்தது, நடிகருக்காக, இயக்குநருக்காக இல்லாமல் வசனகர்த்தாவிற்காகப் படம் பார்க்கப் போனது, நடிகர், இயக்குநரை விளம்பரப்படுத்தாமல் வசனகர்த்தாவை விளம்பரப்படுத்த வைத்தது கலைஞர்தான்; அவருடைய வசனங்கள்தான். கலைஞரின் ‘மனோகரா’, கலைஞரின் ‘பராசக்தி’, கலைஞரின் ‘மறக்க முடியுமா?’ கலைஞரின் ‘பூம்புகார், கலைஞரின் ‘உளியின் ஓசை’ என்றுதான் அன்றிலிருந்து இன்றுவரை விளம்பரம் செய்யப்படுகிறது. ஏன்? தமிழக சினிமா வரலாற்றில் இந்த நிலையை எட்டிய வேறு நபர் இல்லை. இது அறுபத்தி ஒன்பது ஆண்டுகளாகத் தொடரும் வரலாறு மட்டுமல்ல, இனிவரும் காலங்களிலும் இதுதான் வரலாறு.
தமிழ் சினிமாவின் அதிசயம்
ஒரு சினிமாவில் எழுதப்பட்ட வசனம் மொத்த சமூகத்திலும், அதுவும் அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாகத் தொடர்ந்து பேசப்படுமா என்றால் பேசப்படும் என்றுதான் கலைஞருடைய சினிமா வசனங்கள் சொல்கின்றன. மனோகரா (1954) படத்தின் வசனம், பராசக்தி (1952) படத்தின் வசனம், பூம்புகார் படத்தின் வசனம், அவன் பித்தனா? (1966) படத்தின் வசனம், மட்டுமல்ல கலைஞர் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய ஐம்பத்தியெட்டுப் படங்களின் வசனமும் எப்படித் தமிழ் மக்களின் மனங்களில் பதிந்துபோயிருக்கிறது? ஒவ்வொரு படத்தின் வசனமும் எப்படி ஓயாமல் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது? இது தமிழ் சினிமாவில் நிகழ்ந்த அதிசயம். அந்த அதிசயத்தை நிகழ்த்தியவர் கலைஞர் .
முதன்முதலாக ராஜகுமாரி (1947) படத்திற்குக் கதை வசனம் எழுதினார் கலைஞர். அதன் பிறகு வந்த ஆயிரக்கணக்கான படங்களின் வசனங்கள் பேசப்படாமல், வசனக்கர்த்தாக்கள் பேசப்படாமல் கலைஞரும், அவருடைய வசனங்களும் மட்டும் ஏன் திரும்பத் திரும்பப் பேசப்படுகிறார்கள், விவாதிக்கப்படுகிறார்கள்? காலத்தால் அழியாத தன்மையை கலைஞருடைய வசனங்கள் மட்டும் பெற்றதற்கான காரணங்கள் என்ன?
சினிமா படத்தின் வசனங்கள் அப்போது மட்டுமே கேட்டு அப்போது மட்டுமே ரசித்துவிட்டு, மறந்துவிட்டுப் போகக்கூடிய நிலையை மாற்றியது கலைஞருடைய வசனங்கள்தான். சமூகத்தில் பெரிய மாற்றத்தை, தாக்கத்தை, சிந்தனையை உருவாக்கியது மட்டுமல்ல, சினிமாப் படக் கதை, வசனத்திற்கு இலக்கியத் தகுதியைப் பெற்றுத் தந்தது கலைஞருடைய வசனங்கள்தான். வசனமே ஒரு படத்தை வெற்றி பெற வைக்கும் என்பதற்குச் சாட்சியாக இருப்பது அவருடைய வசனங்கள்தான். கலைஞருடைய கதை, திரைக்கதை, வசனங்கள் பெறுமதியான ஓர் இடத்தைப் பெற்றதற்குக் காரணம், பெரியாரையும், அம்பேத்கரையும், மார்க்ஸையும் முழுமையாக அவர் படித்தது மட்டுமல்ல, முழுமையாக உள்வாங்கிக்கொண்டது மட்டுமல்ல, மூன்று பேரினுடைய கொள்கைகளைத் தன்னுடைய வாழ்வியல் நெறிமுறைகளாக ஏற்று, பின்பற்றியதுதான்.
பணத்திற்காக, புகழுக்காக எழுதப்படுவது ஒருவகை எழுத்து, சமுக மேம்பாட்டிற்காக எழுதுவது ஒருவகை எழுத்து. கலைஞர் எழுதியது சமூக மேம்பாட்டிற்கான, சமூக நீதிக்கான எழுத்து. அதனால்தான் அவருடைய வசனங்கள் தொடர்ந்து பேசப்படுகின்றன. கொண்டாடப்படுகின்றன. இது தமிழ் சினிமாவில் வேறு எந்த வசனக்கர்த்தாவுக்கும் நிகழாத அதிசயம்.
பெண்களின் உரிமைகளுக்கான குரல்
கலைஞருடைய கதை, வசனம் என்பது சமூக மேம்பாட்டுக்காகப் பேசுவது, நிகழ்கால அரசியல் விமர்சனம், சமூக இழிவுகளுக்கு, பிற்போக்குத்தனங்களுக்கு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராகப் பேசுவது என்பதாக இருக்கிறது. பூமாலை (1965) படத்தில் “இயற்கையே இனிமேலாவது பெண்களுக்கு சிங்கத்தின் பற்களைக் கொடுத்துவிடு, புலியின் நகத்தைக் கொடுத்துவிடு, மத யானையின் பலத்தைக் கொடுத்துவிடு” என்று கேட்டு எழுதுகிற கலைஞர் ‘திரும்பிப் பார்’ (1953) படத்தில் “பேசத் தெரிந்த பெண்களையே பேசா மடந்தைகளாக்கிவிடும் இப்பைத்தியக்கார சமூகம் ஊமைகளையா உயிரோடு விட்டுவிடப் போகிறது” என்று எழுதுகிறார். இதைவிட வலுவாக, அதுவும் தமிழ் சினிமாவில் பெண்ணுரிமைக் கருத்துகளை, பெண்களுடைய நிலையைப் பேசிவிட முடியுமா? கலைஞருடைய வசனங்கள் – எந்தவொரு இடத்திலும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவோ, கேலி செய்யும் விதமாகவோ அமைந்ததில்லை. அவருடைய வசனங்கள் பெண்மையை எப்போதும் போற்றும் விதமாகத்தான் அமைந்திருக்கின்றன.
பாட்டாளிகளின் உரிமைகளுக்கான குரல்
பெண்ணியத்தை எந்த அளவுக்கு உயர்த்தி எழுதினாரோ அதே அளவுக்கு அவர் மார்க்சியக் கருத்துகளையும் பேசியிருக்கிறார். மார்க்சியக் கருத்துகளை இவ்வளவு தீவிரமாக 1953லேயே பேசமுடியுமா, அதுவும் தமிழ் சினிமாவில் பேச முடியுமா என்றால், பேச முடியும், பேசி ஜெயிக்க முடியும் என்று கலைஞர் நிரூபித்திருக்கிறார்.
‘திரும்பிப் பார்’ (1953) படத்தில் “ஒரு நாட்டின் முதுகெலும்பு பாட்டாளி வர்க்கம். ஒரு தேசத்தின் உயிரே தொழிலாளி வர்க்கம்தான். அதைத் துவண்டுபோக விடக் கூடாது” என்றும், ‘அவன் பித்தனா?’ (1966) படத்தில் “ஒற்றுமை பேசி வேற்றுமை வளர்ப்போர், ஊரையடித்து உலையில் போடுவோர், ஒருவர் தேவைக்கே இவ்வுலகு உண்டென்று கூறுவோர், வண்ணத் தமிழ் அழிப்போர், வளர்த்தொழில் வாழாது கெடுப்போர், ஏமாற்றக் கற்றவர், ஏமாறி இளைத்தவர். இவர்களுக்கு மத்தியிலே கொள்கைச் சிங்கங்கள், கொடுமை கண்டு அஞ்சாத இலட்சியத் தங்கங்கள் இவர்கள் அத்தனை பேரும் பைத்தியக்காரர்கள் என்றால் நானும் பைத்தியக்காரன்தான்” என்று ஒரு வசனம்.
இந்த இரண்டு வசனங்களையும் எழுதியவர் யார்? மார்க்சியத்தைப் படிக்காதவரால், மார்க்சியக் கொள்கைகளைப் பின்பற்றாதவரால் இதுபோன்ற உயிர்ப்பான வசனங்களை எழுத முடியாது, ஒரு நிஜமான கம்யூனிஸ்ட்டால்தான் இப்படியான வசனங்களை எழுத முடியும். கலைஞர் சந்தர்ப்பவாத கம்யூனிஸ்ட் அல்ல. நிஜமான கம்யூனிஸ்ட்.
ஒரு தத்துவத்தை மேடையில் பேசுவது என்பது வேறு, தத்துவத்தையே வாழ்க்கை நெறியாக மேற்கொண்டு வாழ்வது வேறு. மார்க்சியத்தைத் தன் வாழ்வியல் நெறிமுறையாக ஏற்று வாழ்ந்த காரணத்தினால் இதுபோன்ற வசனத்தை அவரால் எழுத முடிந்திருக்கிறது. 1953இலிலும், 1966இலிலும் எழுதப்பட்ட வசனம் எப்படி இன்றும் பொருத்தமுடையதாக இருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்.
அம்பேத்கரை எதிரொலித்த கலைஞர்
எல்லாக் காலத்துக்கும் பொருத்தமான கருத்துகளை எழுதுபவன்தான் நிஜமான, சமூகத்திற்கான எழுத்தாளன். அம்பேத்கருடைய பெயரைப் பொதுவெளியில் பயன்படுத்தத் தயங்குகிற சமூகச் சூழலில்தான் கலைஞர் ‘ஒரே ரத்தம்’ (1987) என்ற படத்தில் “ஒரு போராளியின் பயணம் இது…. அம்பேத்கர் மொழியிலே பேசுவோம்” என்று ஒரு பாடல் எழுதியிருக்கிறார். இப்பாடல் அம்பேத்கரைக் கலைஞர் எந்த அளவுக்கு உள்வாங்கி இருக்கிறார் என்பதற்கு அடையாளம்.
அரசியலை, சமூக இழிவுகளை சினிமாவின் மூலம் அதிகம் பேச வைத்தவர் கலைஞர் மட்டும்தான். தமிழ்நாட்டில் அவர் அளவுக்கு அரசியலை சினிமாவின் மூலம் மக்களுக்குக் கொண்டுசென்றவர் வேறு யாருமில்லை. குறவஞ்சி (1960) படத்தில் “காகிதப் பூ மணக்காது, கயவர்களின் நியாயம் ஜெயிக்காது” என்றும், ‘அரசிளங்குமாரி’ (1961) படத்தில் “வாள் கையிலேதான் இருக்க வேண்டுமே தவிர, நெஞ்சிலே இருக்கக் கூடாது. நெஞ்சிலே இருக்க வேண்டியது அன்பு, அடக்கம், நற்பண்பு” என்றும் ‘வீரன் வேலுத்தம்பி’ (1987) படத்தில் “கோவில்ல சிலை திருடுறவங்கள வுட்டுடுங்க, கற்பூரம் திருடுறவங்கள புடிச்சுக்குங்க” என்பன போன்ற வசனங்களும் எதைச் சொல்கின்றன? அரசும் அரசு நிர்வாகமும் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இந்த வசனங்கள் சான்றாக இருக்கின்றன.
சினிமாவைப் பாடமாக மாற்றியவர்
சினிமாவை நாம் வெறும் பொழுதுபோக்குச் சாதனமாக மட்டுமே பார்க்கப் பழகியிருக்கிறோம். பயன்படுத்தியிருக்கிறோம். ஆனால் கலைஞர் சினிமாவை அரசியல் பாடம் நடத்தும் பள்ளியாகப் பார்த்திருக்கிறார். அரசியல் பள்ளியாகவே நடத்தியிருக்கிறார்.
‘மணமகள்’ (1951) படத்தில் வரும் “பூனைக்கு வீணை வாசிக்கத் தெரியுமா? பானையை உருட்டத்தான் தெரியும்.” என்ற வசனம் அன்றைய அரசியலுக்கு மட்டுமல்ல இன்றைய அரசியல் சூழலுக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்பதைப் பார்க்கும்போதுதான் கலைஞரின் வசனத்தின் பெருமை புரியும். “மூடுபனி சூரியனை மூடி வைக்க நியாயமில்லை” என்று ஒரு வரி எழுதியிருக்கிறார். மூடுபனி சூரியனை மூடி வைத்துவிடுமா? அப்படித் தோற்றம்தான் தரும். அதுவும் எவ்வளவு நேரத்திற்கு?
சமூகத்தின் மீது, மக்களின் மீது ஈடுபாடும், அக்கறையும் இல்லாதவர்களால் காத்திரமான எழுத்தை ஒருபோதும் எழுத முடியாது. சமூகத்தின் மீதான ஈடுபாடும், அக்கறையும்தான் எழுத்தாளனுக்கு ஆற்றலைத் தரும் பெரும் சக்தியாக இருக்கிறது. குறவஞ்சி (1960) படத்தில் “மக்களை நிம்மதியாக வாழவைக்க முடியாதவர்களுக்கு, மாபாவிகளைத் தண்டிக்கத் தகுதி இல்லாத மரபொம்மைகளுக்கு தலையிலே ஒரு மணி மகுடம், மகுடத்திற்கு மதிப்பு, மரியாதை, அந்தஸ்து, ஆடம்பரம், அதிகாரம்” என்று ஒரு வசனம். தகுதியற்றவர்கள் தகுதியான இடத்திற்கு வரும்போது, தகுதியான இடம் எப்படித் தகுதியை இழந்துபோகிறது என்பதை இதைவிட நேர்த்தியாகச் சொல்ல முடியாது.
மக்கள் விரோதப் போக்கை விமர்சித்தல்
ஓர் எழுத்தின் அடிப்படையான நோக்கம் என்பது மக்கள் விரோதப் போக்கை விமர்சிப்பதுதான். புதுமைப்பித்தன் (1957) படத்தில் “திமிங்கலம் கடலில் மட்டுமல்ல, நாட்டிலும் உண்டு. ஆனால் மனித உருவத்தில். அது கப்பலை மட்டுமல்ல தேசத்தையே அழித்துவிடும்” என்று வரும் வசனம் பிற்காலத்தில் தமிழகத்தில் என்னென்ன இழிவுகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே தீர்க்கதரிசனமாக 1957இலேயே எழுதியிருப்பது ஆச்சரியம். சமூகத்தின்மீது அக்கறையோ, ஈடுபாடோ இல்லாதவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது, ஒரு நாடு எப்படிச் சீரழிந்துபோகும் என்பதற்கு இதைவிட சிறந்த விமர்சனம் இருக்க முடியாது.
மனிதர்கள் வேறு, மர பொம்மைகள் வேறு. அழகாக இருக்கும் என்பதைத்தவிர மர பொம்மைகளால் என்ன நன்மை விளைந்துவிடும்? மர பொம்மை எப்போதும் மர பொம்மையாகத்தான் இருக்கும். புதிய பராசக்தி (1996) படத்தில் “என்னதான் சூடு போட்டாலும் நாயைப் புலியாக்க முடியாது” என்று ஒரு வசனம் வருகிறது. ‘வண்டிக்காரன் மகன்’ (1978) படத்தில் “கிளிஞ்சலை யாராவது கிரீடத்தில் வைப்பார்களா?” என்ற கேள்வி சினிமா வசனத்தில் மட்டும் கேட்கப்பட்ட கேள்வி அல்ல, சமூகத்திடம் கேட்கப்பட்ட கேள்வி. ஓர் இனம், ஒரு சமூகம் எப்போதெல்லாம் வீழ்ச்சியை நோக்கித் தள்ளப்படுகிறதோ அப்போதெல்லாம் அதிகார அமைப்பை நோக்கி முதல் கேள்வியைக் கேட்பவனாக இருப்பவன் எழுத்தாளன்தான். மற்ற எவரையும்விடக் கூடுதலான அக்கறையுடனும் கூடுதலான ஈடுபாட்டுடனும் சமூகத்தை நேசிப்பவன் எழுத்தாளன் மட்டும்தான். அதனால்தான் அவனால் முதல் கேள்வியை எழுப்ப முடிகிறது. ஒரு கேள்வியை அல்ல, தான் எழுதிய ஒவ்வொரு சினிமாப் பட வசனத்தின் மூலமும் நூற்றுக்கணக்கான கேள்விகளைச் சமூகத்திடம் கலைஞர் ஓயாமல் கேட்டுக்கொண்டேயிருக்கிறார். இக்கேள்விகளைக் கேட்பதின் நோக்கம் – சமூக மேம்பாடு, சமூக உயர்வு.
மூடநம்பிக்கைகளுக்கு எதிரான குரல்
அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாகக் கலைஞருடைய வசனங்கள் தொடர்ந்து அதிக வெளிச்சத்தோடு ஒளிர்வதற்குக் காரணம் அது உண்மையைப் பேசியது மட்டுமல்ல, சமூக மேன்மையை, சமூக இழித்தனங்களைப் பேசியதும்தான். தமிழ்ச் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்வரை, சாதியப் பிற்போக்குத்தனங்கள் இருக்கும்வரை, சமயம் சார்ந்து மூடநம்பிக்கைகள் இருக்கும்வரை கலைஞருடைய வசனங்களும் உயிரோடு இருக்கும்.
பூமாலை (1965) படத்தில் “தெய்வம் இல்லாத கோவிலுக்குத் தங்கக் கலசம் எதற்கு?” என்ற வசனமும், “ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை” என்ற பாடல் வரியும் எதற்காக எழுதப்பட்டது? பெரியாருடைய கொள்கையை, இதைவிட எளிமையாக, செறிவாக மக்களுக்குப் புரியவைத்துவிட முடியுமா? தமிழ்ச் சமூக வாழ்வில் சமயம் சார்ந்த, சமயத்தால் பின்பற்றப்பட்டு வரும் சாதி சார்ந்த நம்பிக்கைகள் பின்பற்றப்படும் நடைமுறைகளுக்கு எதிராக “தெய்வம் இல்லாத கோவிலுக்குத் தங்கக் கலசம் எதற்கு?” என்ற வசனமும் “ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை” என்ற வரியும் சமூகத்தில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். ‘நியாயத்தராசு’ (1989) படத்தில் “நாள், நேரம், நட்சத்திரம், ராகுகாலம், சூலம் எல்லாம் பார்த்துத்தான் ராக்கெட் பறக்கவிட்டாங்க. அது ஆகாயத்திலே போகாம கடலுக்குள் விழுந்தது” என்று ஒரு வசனம்.
வாழ்வியல் அறங்கள்
கலைஞருடைய கதை வசனத்தில் அரசியல் மட்டுமல்ல; வாழ்வியல் சார்ந்த அறநெறிகளும் அதிகமாகவே இருக்கும். தத்துவம் பேசுகிற பண்பும் இருக்கும். வாலிப விருந்து (1967) படத்தில் “மரத்தோட நிழல் மரத்துக்குப் பயன்படாது. மரத்திற்குத் தேவை மேகத்தோட நிழல்” என்ற வசனமும், ‘ராஜா ராணி’ (1956) படத்தில் “பட்டமரம் தளிர்க்காது, கெட்ட பால் சுவைக்காது” என்ற வசனமும் பாடாத தேனீக்கள் (1988) படத்தில் “கெட்ட பழக்கம் முதலில் விருந்தாளி மாதிரி வரும், பிறகு முதலாளியாகிவிடும்” என்ற வசனமும், ‘மாடி வீட்டு ஏழை’ (1961) படத்தில் வரும் “சம்சார விளக்கு எரியாத வீட்டில் மின்சார விளக்கு எரிஞ்சி என்னா பிரயோசனம்?” என்ற வசனமும் சிந்திக்க சிந்திக்க பொருள் தருபவை.
உளியின் ஓசை (2008) படத்தில் “போர்க்களத்தில் அடையும் வெற்றிகளை எல்லாம் சரித்திரம் கொலைப் பட்டியலில் சேர்த்துவிடும்” என்று ஒரு வசனம். இந்த வசனத்தை எழுதுவதற்குப் பெரிய வரலாற்று அறிவும், படிப்பும் வேண்டும். அதைவிடவும் மனித குலத்தின் மீது மகத்தான அன்பு கொண்டிருக்கிற ஒரு மனிதனால்தான் இந்த வசனத்தை எழுத முடியும். குறுகிய மனதிற்கு, நோய் கொண்ட மனதிற்கு, தான்தான் எல்லாம் என்ற மனதிற்கு இப்படியான மகத்தான அன்பை அறிவதற்கான, பகிர்வதற்கான வாய்ப்பில்லை.
மாறுபட்ட பரிமாணங்கள்
கலைஞருடைய அரசியல் வசனங்களில், ஆழமான கருத்துகள், சமூக விமர்சனங்கள்தான் இருக்கும். பெரியாருடைய, அம்பேத்கருடைய, மார்க்சினுடைய கொள்கைகளுடைய சாரம்தான் வெளிப்படும் என்று மட்டும் சொல்ல முடியாது. சீரிய கருத்துப் பிரச்சாரம் இருக்கும் அதே அளவுக்குக் கருத்தாழம் மிக்க நகைச்சுவை உணர்வும் காதல் உணர்வும் வெளிப்படும் என்பதற்கு அவர் கதை வசனத்தில் வெளிவந்த எல்லா படத்திலுமே உதாரணங்கள் இருக்கும். அது மாதிரியான வசனங்களைக் கேட்பதற்கும் படிப்பதற்கும் ரசனையாக இருக்கும். தனியாக இருக்கும்போது சிரிக்கவைக்கும். திரும்பத் திரும்பச் சொல்ல வைக்கும்.
அரசியல் கருத்துகள் எந்த அளவுக்கு பலம் பொருந்தியவையோ அதே அளவுக்கு அவருடைய காதல் சார்ந்த கருத்துகளும் பலம் பொருந்தியவையாகும். காஞ்சித் தலைவன் (1963) படத்தில் “மாமல்லபுரத்து கடலலைகளை அடக்கச் சொல்லுங்கள், நானும் எனது காதல் நினைவலைகளை அடக்கிக்கொள்கிறேன்” என்ற வசனமும், மருதநாட்டு இளவரசி (1950) படத்தில் “பூக்காட்டைப் புறங்காணும் பூங்குழலாள் எங்கேயோ போய்விட்டாள். சாக்காட்டின் அடிவாரத்திலும் அவளைச் சந்திக்க முடியாத பாவியாகிவிட்டேன்” என்ற வசனமும் எளிதில் மறக்கக்கூடியன அல்ல. காதலர்களுக்கு எதிர்ப்பு இருக்கும்வரை காதலுக்கு எதிர்ப்பு இருக்கும்வரை, சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் காதலுக்கு எதிர்ப்புகள் இருக்கும்வரை, இந்த வசனமும் உயிரோடு இருக்கும்.
பல பொருள்கள் பொதிந்த வசனங்கள்
கலைஞர் எந்த வசனத்தை எழுதினாலும் மொண்ணையாகவும், ஒரே பொருள் தரக்கூடியதாகவும் எழுத மாட்டார். ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் ஆழ்ந்த பொருள் இருக்கும், உவமை இருக்கும், ஒப்பீடு இருக்கும். உவமை, உருவகங்கள், சிலேடை இல்லாமல் எந்தவொரு வசனமும் இருக்காது. ‘பாசமழை’ (1989) படத்தில் “பாசம் என்பது எண்ணெயும் தண்ணீரையும் போல ஒட்டாத உறவு இல்லீங்க. தேனும் பாலும்போல பிரிக்க முடியாத உறவு” என்ற இந்த வசனம் படித்தவர்களுக்குத்தான் புரியும், படிக்காதவர்களுக்குப் புரியாது என்பதில்லை. படித்தவர்களும், படிக்காதவர்களும் புரிந்துகொள்ளும் வகையில், வசனத்தைப் புரிந்து ரசிக்கின்ற வகையில் எழுதுவது ஒரு கலை. அது கலைஞருக்கு மட்டுமே கைவந்த கலை.
எழுதுகிறவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல. மொழியைக் கையாளத் தெரிந்தவனே எழுத்தாளன். எழுதுவதைவிட சவாலானது, எழுதியதை மக்கள் மனதில் நிற்க வைப்பது. அதிலும் காலம் கடந்து நிற்க வைப்பது. அடுக்குத் தொடருக்குப் பெயர்பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் கலைஞர் மட்டும்தான். அடுக்குத் தொடர் என்ற பெயரில் அர்த்தமற்ற சொற்களை அடுக்குவதல்ல. அர்த்தச் செறிவுள்ள, பொருட் செறிவுள்ள சொற்களை அடுக்குவது. மொழியின் வலிமையை அதன் உச்சத்திற்கே சென்று தொட்டவர். மொழியின் அழகைப் பாமரனுக்கும் புரியவைத்தவர். “கன்னியரை மயக்கக் கட்டழகா வேண்டும்? கலைஞரின் கன்னித் தமிழ் போதாதா?” என்று இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கேட்டார். அது பொய்யில்லை என்பதைத்தான் கலைஞருடைய எல்லாச் சினிமா வசனங்களும் நிரூபித்துக் காட்டுகின்றன.
‘மனோகரா’ (1954) படத்தில் “வாள் வேண்டாம் தாயே, வாய்மொழி ஒன்றுபோதும், படை வேண்டாம் தாயே, தாயின் தடை நீங்கினால் போதும், கட்கம் தர வேண்டாம் தாயே, ஒரு கண் சாடை போதும், உங்களுக்கும், எனக்கும், எல்லாருக்கும் விடுதலை” என்று வரும் இந்த வசனத்தைப் படிக்கும்போதுதான் தெரிகிறது, கலைஞர் என்றால் தமிழ், தமிழ் என்றால் கலைஞர் என்று ஏன் தமிழ்ச் சமூகம் கொண்டாடுகிறது என்பது.
இன, மொழி உணர்வு
கலைஞருடைய ஒவ்வொரு வசனத்திலும் அவருடைய உயிர் மூச்சான இன உணர்வு, மொழி உணர்வு வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கும். தூக்குமேடை (1982) படத்தில் “கடவுளைத் தமிழால் அர்ச்சிக்கக் கூடாது என்று விதி இல்லை. இது சிலர் செய்த சதி. ஆய்ந்துபார்க்கும் மதி இழந்த காரணத்தால் ஏமாந்தனர் தமிழர்” என்ற இந்த ஒரு வசனம் போதும், கலைஞருடைய இன உணர்வு, மொழி உணர்வு எப்படிப்பட்டது என்பதை அறிவதற்கு. இன உணர்வு, இன மேம்பாடு, மொழி உணர்வு, மொழி மேம்பாடு என்ற தன்னுடைய லட்சியத்திலிருந்து இதுவரை ஒரு நூல் அளவுகூட அவர் விலகியதில்லை.
தன்னுடைய லட்சியம் குறித்து என்ன நினைக்கிறார்? பாலைவன ரோஜாக்கள் (1986) படத்தில் வரும் “இலட்சியவாதிகள் அழிக்கப்படலாம். ஆனால் இலட்சியத்திற்கு என்றுமே அழிவில்லை” என்ற வசனம் கலைஞர் யார் என்பதைச் சொல்கிறது.
சினிமாவுக்கான அவருடைய வசனங்கள் இன உணர்வு, மொழி உணர்வு என்ற குறுகிய எல்லைக்குள் மட்டும் நின்றுவிடவில்லை. உலகளாவிய மனித உணர்வை, மனித உரிமையை, சமத்துவத்தையும் பேசியது. உலகளாவிய பார்வைதான் கலைஞரைக் கலைஞராக்கியது. அவருடைய வசனங்கள் சினிமாக் கொட்டகைகளுக்கு ஒளியை மட்டும் பொழியவில்லை. பள்ளி மாணவர்களுக்குப் பாடமாகவும், படிப்பாகவும் இருந்தன என்பதை ஈழத்து எழுத்தாளர் ஷோபா சக்தி “என் கிராமத்துத் திருவிழாக்களின்போது உயரிய பனைமரங்களில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளுக்குள்ளிருந்து குணசேகரனாகவும், மனோகரனாகவும், செங்குட்டுவனாகவும் எனக்குத் தமிழ் ஏடு தொடக்கி வைத்த கலைஞர் மு.கருணாநிதிக்கு என்று எழுதி தன்னுடைய ‘கண்டி வீரன்’ சிறுகதைத் தொகுப்பைக் கலைஞருக்குச் சமர்ப்பித்திருக்கிறார். ஷோபாசக்திக்கு மட்டுமல்ல, இன்று தமிழ் மொழியைப் பேசுகிற, எழுதுகிற பலருக்கும் கலைஞருடைய வசனங்கள்தான் பேசுவதற்கும், எழுதுவதற்கும் தொடக்கமாக இருந்தது, இன்றும் இருக்கிறது.
இன்று தமிழ் சினிமா பிரமாண்டமான தொழில்நுட்பமும் அதிகபட்சமான விளம்பரங்களும் கொண்ட கோடிகோடியாகப் பணம் புரளும் தொழில். இது எதுவுமே இல்லாது, கலைஞருடைய வசனங்கள் தொடர்ந்து தமிழ் சமூக வாழ்வின் அசைவியக்கத்தைப் பிரதிபலிப்பதாக இருப்பதற்குக் காரணம் காலத்தால் அழியாத சொற்களால் அவற்றை உருவாக்கியதுதான். காலத்தால் அழியாத சொற்களை உருவாக்குபவன்தான் எழுத்தாளன். கலைஞன்.
அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாகத் தொடர்ந்து தமிழ்ச் சமூகத்தைத் தன்னுடைய எழுத்தால் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த ஒரே எழுத்தாளர் கலைஞர் மட்டும்தான். அவரைத் தமிழ் சினிமா தாண்டாது, தாண்ட முடியாது. காரணம், அவர்தான் தமிழ் சினிமாவின் ஒலியாக, வெளிச்சமாக இருக்கிறார்.
�,”