பொதுத் துறை மருத்துவச் சேவைகளை அதிகம் நுகரும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. மாநில சுகாதாரத் துறையின் அறிக்கையின்படி 2005-06ஆம் ஆண்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புற நோயாளிகளாகச் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 123 ஆக இருந்துள்ளது. ஆனால் 2011-12ஆம் ஆண்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்ற புறநோயாளிகளின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல 2002ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கணக்குப்படி தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனை படுக்கைகளில் 78 விழுக்காடு அளவைப் பொதுத் துறை மருத்துவமனைகள்தான் கொண்டுள்ளன. இது மற்ற இந்திய மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பான முன்னேற்றமாகும்.
தமிழகப் பொது மருத்துவமனைகளில் சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள் தொடர்ச்சியாக அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருந்துகளைப் பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் 10.4 விழுக்காட்டினர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமின்றி புற்றுநோய், இதய அடைப்பு உள்ளிட்ட நோய்களுக்கும் சிறப்பு சிகிச்சைகள் பொது மருத்துவமனைகளிலேயே வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஸ்டான்லி மருத்துவமனை, சேலம் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்டவற்றில் இன்றளவிலும் சிகிச்சைக்காக வரும் வடஇந்திய மக்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. ஆனால், சிகிச்சைக்காக வடஇந்தியாவில் உள்ள பொது மருத்துவமனைகளுக்குத் தமிழ்நாட்டு மக்கள் செல்லும் நிலை இதுவரையில் ஏற்பட்டதே கிடையாது.
**மருந்து விநியோகச் சேவைகள் மற்றும் ஸ்கேனிங்:**
தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் கழகம் (டிஎன்எம்எஸ்சி) 1990களின் இடைப்பகுதியில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு முறை உருவாக்கப்பட்ட பிறகு தமிழகப் பொதுச் சுகாதார நிலையங்களில் மருந்து விநியோகம் நிலையாக அதிகரித்துள்ளது. 2012-13ஆம் ஆண்டு எஸ்ஹெச்எஸ் ஆய்வின்படி தமிழ்நாட்டில் 61 சிடி ஸ்கேன் மையங்கள் உள்ளன. மாவட்டத்திற்கு ஒன்றுக்குக் குறையாமல் உள்ளது. மேலும், 15 எம்ஆர்ஐ ஸ்கேன் மையங்களும், 2 லித்தோடிரிப்சி மையங்களும் உள்ளன.
இந்த மருந்து விநியோகக் கழகத்தின் மூலம் நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகள் சந்தை விலையைவிடக் குறைவான விலைக்கு நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. அத்தியாவசிய மருந்துகள் ஒவ்வோர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேம்படுத்தப்பட்டுப் புதுப்பிக்கப்படுகின்றன. குழந்தைகள் நலம், மகப்பேறு வசதிகள், பாதுகாப்பான கருக்கலைப்பு ஆகியவற்றுக்குப் புதுப்புது மருந்துகள் கொண்டுவருவதும் இதில் அடங்கும்.
மருந்துப் பொருட்களுக்கான நிதி ஒதுக்கீடும் நிலையாக அதிகரித்து வந்துள்ளது. 2008-09ஆம் நிதியாண்டில் ரூ.175 கோடியாக இருந்த மருந்துப் பொருட்களுக்கான நிதி ஒதுக்கீடு 2013-14ஆம் நிதியாண்டில் ரூ.350 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழக மருந்து விநியோக அமைப்பில் 650 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். *மருந்துக் கிடங்குகள் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிடங்கிலும் ஐந்து மாதங்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.*
**தேசிய நோய்த்தடுப்புத் திட்டங்கள்**:
தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் எல்லா நோய்த்தடுப்புத் திட்டங்களையும் செயல்படுத்தும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. குறிப்பாக எளிதில் பரவும் தன்மைகொண்ட நோய்களைக் கட்டுப்படுத்துவதில் தமிழக சுகாதாரத் துறை சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கான சில ஆதாரங்களையும் நமக்குத் தருகிறது 2018 மனிதவள மேம்பாட்டு அறிக்கை. குறிப்பாக 2012 முதல் 2015 வரையிலான நான்கு ஆண்டுகளில் மலேரியாவால் ஒருவர்கூட தமிழ்நாட்டில் இறக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த நான்கு ஆண்டுகளில் 48,332 ஆக உள்ளது. 2012ஆம் ஆண்டில் 18,869 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2015ஆம் ஆண்டில் படிப்படியாகக் குறைந்து 5,653 ஆகக் குறைந்துவிட்டது.
இதே காலகட்டத்தில் சிக்குன் குனியாவாலும் தமிழ்நாட்டில் ஒருவர் கூட இறக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2015ஆம் ஆண்டில் 329 ஆகக் குறைந்துள்ளது. 2013ஆம் ஆண்டில் 859 பேர் தமிழ்நாட்டில் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் டெங்குவால் 81 பேர் இறந்துள்ளனர். இதில் 2012ஆம் ஆண்டில் மட்டும் 66 பேர் இறந்துள்ளனர். 2013ஆம் ஆண்டில் ஒருவர்கூட இறக்கவில்லை. 2014ஆம் ஆண்டில் 3 பேரும், 2015ஆம் ஆண்டில் 12 பேரும் இறந்துள்ளனர்.
தொழுநோயால் புதிதாகப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கடந்த 10 ஆண்டுகளில் ஓரளவு குறைந்துள்ளது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2006-07ஆம் ஆண்டில் ஒரு லட்சத்திற்கு 8.1லிருந்து 2015-16ஆம் ஆண்டில் 6.7 ஆகக் குறைந்துள்ளது.
எச்ஐவி சோதனைத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தும் மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. 2012ஆம் ஆண்டில் 80 விழுக்காடு டிபி நோயாளிகள் எச்ஐவி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எச்ஐவி சோதனை மேற்கொள்வோர் பற்றியும், அவர்களின் சிகிச்சை விவரங்களைப் பாதுகாப்பதிலும் தமிழக சுகாதாரத் துறை மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறது என்றே கூற வேண்டும். இவர்கள் பற்றிய எவ்விதத் தகவல்களும் அரசு நிர்வாகத்தால் வெளியிடப்படுவதில்லை. தேசிய காசநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 2000ஆம் ஆண்டுக்கு முன்பே 84 விழுக்காடு அளவுக்கு காசநோயைக் கட்டுப்படுத்தி, மருத்துவ வசதிகளை அளித்துள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
**காப்பீட்டுத் திட்டம்**
உயர் மருத்துவச் சிகிச்சைகளுக்கான செலவுத் தொகையைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசுக் காப்பீட்டுத் திட்டம் 2009ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2011ஆம் ஆண்டு கணக்குப்படி தமிழ்நாட்டில் உள்ள 1.36 கோடி குடும்பங்களை உள்ளடக்கிய காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி ஆண்டொன்றுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரையில் காப்பீடு வழங்கப்படுகிறது. இதில் 40 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் நிலையில் உள்ளவர்களாவர். இவர்களின் ஆண்டு வருவாய் ரூ.72,000க்கும் குறைவாகும்.
இந்தத் திட்டத்துக்கான முழு பிரீமியம் தொகையையும் அரசே செலுத்துகிறது. இந்தத் திட்டத்துக்கு ரூ.700 கோடிக்கு மேல் செலவாகிறது. இதில் 30 விழுக்காடு மருத்துவ சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படுகிறது என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்துக்கு தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்திலிருந்து எவ்வித நிதியும் பெறப்படுவதில்லை.
இதுமட்டுமின்றி, ஒன்றிய அரசின் காப்பீட்டுத் திட்டமான ராஷ்ட்ரீய ஸ்வஸ்திய பீமா யோஜனா திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 2010-11ஆம் நிதியாண்டில், 2.2 லட்சம் பேரும், 2012-13ஆம் நிதியாண்டில் 3.3 லட்சம் பேரும் காப்பீடு வசதிகளைப் பெற்றுள்ளனர்.
**(நாளைய கட்டுரையில் பெண்களுக்கான சுகாதாரத் திட்டங்கள் குறித்துக் காண்போம்)**
**நேற்றைய கட்டுரை:** [கிராமங்களில் எளிதில் கிடைக்கும் மருத்துவம்!](https://minnambalam.com/k/2018/07/18/14)
**மின்னஞ்சல் முகவரி**: [feedback@minnambalam.com](mailto:feedback@minnambalam.com)
�,”