சிறப்புக் கட்டுரை: டெங்குக் காய்ச்சலும் சித்த மருத்துவமும்!

Published On:

| By Balaji

கடந்த சில மாதங்களாக, நாடு முழுவதும் பரவிவரும் டெங்கு மற்றும் காய்ச்சலைத் தடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு தெரு முனைகளில், பேருந்து நிலையங்களில், ரயில் நிலையங்களில் பழுப்பு நிற மூலிகைக் கஷாயத்தை விநியோகித்து வருகிறது. நிலவேம்புக் குடிநீர் என்று குறிப்பிடப்படும் இந்தக் கஷாயம் ஒன்பது மூலிகைகள் கலந்து தயாரிக்கப்பட்டது.

மத்திய ஆயுஷ் அமைச்சகமும் தமிழக அரசும் நிலவேம்புக் குடிநீர் அருந்துவது குறித்து மருத்துவ ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன. டெங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கும் இந்தக் காய்ச்சல் அறிகுறியுடன் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் தினமும் சிறிதளவு நிலவேம்புக் குடிநீரை அருந்துமாறு இந்த ஆலோசனையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக டெங்குக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்தாக இதைத் தமிழக சுகாதார அதிகாரிகள் விநியோகித்து வருகின்றனர். 2015இல் சென்னையையும் தமிழகத்தின் பல பகுதிகளையும் கடுமையாகப் பாதித்த வெள்ளத்துக்குப் பிறகும்கூட நிலவேம்பு விநியோகிக்கப்பட்டது.

ஆனால், இந்த மருந்தின் குணப்படுத்தும் தன்மை குறித்து சந்தேகங்களும் எழுந்துள்ளன. இது பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா, இது விஷக் காய்ச்சல் தொற்றை முறையான அலோபதி சிகிச்சை மூலம் கட்டுப்படுத்துவதற்கான மாற்று மருந்தல்ல என்ற விழிப்புணர்வு போதுமான அளவு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளதா என்பவையே இந்த சந்தேகங்கள்.

முறைப்படுத்தப்பட்டுள்ள அலோபதி அடிப்படையில் பார்த்தால், டெங்குக் காய்ச்சலை குணப்படுத்த முடியாது. நோயாளி இந்த நோயிலிருந்து மீளும்வரை அதன் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சைதான் உள்ளது. நிலவேம்புக் குடிநீர் அருந்துவதைப் பரிந்துரைக்கும் அரசின் ஆலோசனைகளும், இந்தச் சித்த மருந்து அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் என்பதையும் காய்ச்சலைக் குறைக்கும் வகையில் இது செயல்படும் என்பதையும், வேதனையைக் குறைக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. சித்த ஆலோசனை அறிக்கைகளில் பப்பாளிச் சாற்றைப் பயன்படுத்துவது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எண்ணிக்கையை இந்தச் சாறு அதிகரிக்கும் என கருதப்படுவதால் இது, கை வைத்திய முறையாகப் பின்பற்றப்படுகிறது.

**அறிவியல் பின்னணி**

நிலவேம்புக் குடிநீரைக் காய்ச்சல்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருந்தாக, 13 ஆண்டுகளுக்கு முன்னரே தாங்கள் கொடுக்க ஆரம்பித்துவிட்டதாகச் சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவ மையத்தின் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். 2013இல் இந்த மருத்துவ மையத்தின் சித்த ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வு நடத்தினர். இந்த மருத்துவ மையத்தின் ஒரு மருத்துவமனைக்குக் காய்ச்சலுடனும் காய்ச்சல் இல்லாமலும் வந்த பலர் அடங்கிய ஒரு குழுவிடம் மூலிகை மருந்தை அவர்கள் உட்கொண்டிருந்தனரா எனக் கேட்டுத் தகவல் திரட்டினர். நிலவேம்புக் குடிநீரை அருந்தியவர்களிடத்தில் இந்த மருந்தின் நோய்த்தடுப்பு சக்தி குறைந்திருந்ததாக இந்த ஆய்வு நடத்தியவர்கள் முடிவுக்கு வந்தனர். ஐந்து நாள்களுக்கு மேலாக நிலவேம்பை அருந்திய குழுவிடம் ஆய்வு நடத்தியதில் விஷக் காய்ச்சல் தொடர்பானவற்றைத் தடுப்பதில் இந்த மருந்தின் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்தது.

இந்த ஆய்வு அறிக்கையின் இணை ஆசிரியரான இந்த மருத்துவ மையத்தின் மூத்த ஆய்வாளர், எம்.சுப்பிரமணியம், “தமிழக அரசு, இந்த ஆய்வை அடிப்படையாகக்கொண்டு நிலவேம்புக் குடிநீரைப் பயன்படுத்தி டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தலாம் என அறிவித்தது” என்று கூறினார்.

ஒரு மருந்தைப் பரிசோதிப்பதற்கான முறையான வழிமுறை இந்த ஆய்வில் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்பதையும், இந்த ஆய்வு எப்படி பலவீனமாக உள்ளது என்பதையும் இந்த ஆய்வின் மீதான ஓர் அலசல் சுட்டிக்காட்டுகிறது.

சென்னையில் உள்ள இ.எஸ்.ஐ.சி. மருத்துவ கல்லூரி மற்றும் போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்ட்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் உயர் மருத்துவக் கல்லூரி நிறுவனத்தின் கம்யூனிட்டி மெடிசின் துறை உதவிப் பேராசிரியர் விஜயபிரசாத் கோபிசந்திரன், இந்த ஆய்வு குறித்து பல முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இந்த ஆய்வு அறிக்கையின் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளபடி, காய்ச்சல் இல்லாமல் வந்த குழுவினர், நிலவேம்புக் குடிநீரை குடித்ததில் பெரும் பலன் அடைந்ததாகத் தெரிகிறது. ஆனால், அந்தக் குழுவினர் டெங்கு பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளிலிருந்தும் கொசு உற்பத்தி குறைவாக உள்ள பகுதிகளிலிருந்தும் வந்திருக்கக்கூடும். அல்லது சிறந்த சமூக -பொருளாதார நிலையில் உள்ளவர்களாக அவர்கள் இருக்கலாம். அல்லது கொசுக்கடியைத் தடுப்பது குறித்த சிறந்த விழிப்புணர்வு உள்ளவர்களாகவும் இருக்கக்கூடும்.

“காய்ச்சல் உள்ள குழுவினர், காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்ட குழுவினர் ஆகிய இரு குழுவினரிடமும் இந்த அனைத்து அம்சங்களும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டதா என்பது இந்த ஆய்வு அறிக்கையில் தெளிவுபடுத்தப்படவில்லை, எனவே, காய்ச்சல் நிலவரத்தில் இந்த இரண்டு குழுவினருக்கு இடையே காணப்படும் வித்தியாசத்துக்கு நிலவேம்புக் குடிநீர்தான் காரணம் என்பதை திட்டவட்டமாகக் கூற முடியாது” என கோபிசந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அனைத்து நோயாளிகளும் சித்த மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள். எனவே, இந்த ஆய்வு முடிவுகள் பாரபட்சமானவையாக இருக்கக்கூடும். “இந்த ஆய்வை, காய்ச்சலுடனும் காய்ச்சல் இல்லாமல் இருக்கும் பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் இடத்தில் நடத்தியிருக்க வேண்டும்” என்றும் கோபிசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

டெங்குக் காய்ச்சல் உறுதிசெய்யப்பட்ட 10 நோயாளிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவர்களின் பிளேட்டேட் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த 10 பேரின் நோயை மூலிகை மருந்து எப்படி குணப்படுத்தியது என்பதற்கான வலுவான ஆதாரம் எதுவும் இந்த ஆய்வில் முன்வைக்கப்படவில்லை.

இந்த ஆய்வறிக்கை, International Journal of Pharmaceutical Sciences and Research என்ற இதழில் வெளியிடப்பட்டது, இதன் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இடைவிடாமல் ஆய்வறிக்கைகளை வெளியிட வேண்டும் என்ற நிர்பந்தத்தில் அறிவியலாளர்கள் சிக்கியுள்ள நிலவரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களிடம் கட்டணம் பெற்றுக்கொண்டு, ஆய்வுக் கட்டுரையை வெளியிடும் ரகத்தைச் சேர்ந்தது இந்த இதழ்.

“சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவ மையத்தின் பெரும்பாலான கட்டுரைகள் இப்படிப்பட்ட இதழ்களில்தான் வெளியிடப்படுகின்றன” என School of Pharmacy and Natural History Museum, University of Osloவின் ஆராய்ச்சி மாணவரான ஜி.எஸ்.சீதாபதி குற்றம்சாட்டியுள்ளார்.

**பக்க விளைவுகள்?**

நிலவேம்புக் குடிநீரைப் பயன்படுத்துவதால் மலட்டுத்தன்மை உள்ளிட்ட சில பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என சில ஆய்வுகளில் தெரியவந்துள்ளதைச் சுட்டிக்காட்டி மற்ற மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் Memorial Sloan Kettering Cancer Centre நடத்திய ஆய்வு, நிலவேம்புக் குடிநீருக்கு ஆதாரமான ஆன்ட்ரோகிராபி பேனிகுலட்டா என்ற முக்கிய மூலிகை, ஆபத்தான சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால், அரசின் எந்த ஓர் அறிவிப்பிலும் நிலவேம்புக் குடிநீரால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தோ பக்கவிளைவுகள் குறித்தோ எதுவுமே குறிப்பிடப்படவில்லை.

தேசிய சித்த மருத்துவமனை இயக்குநர் டாக்டர் வி. பானுமதி, இந்த மையம் நிலவேம்புக் குடிநீரை விநியோகித்துவரும் இந்த 13 ஆண்டுகளில் பக்கவிளைவுகளால் யாரும் பாதிக்கப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை என கூறியுள்ளார். நிலவேம்புக் கஷாயம் தயாரிப்பதில் சித்த மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றாத தனியார் மருத்துவமனைகளால்தான் பிரச்னை ஏற்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

“பல தனியார் மருத்துவமனைகள் வெளிர் ஆரஞ்சு நிறத்தில் ஒரு கஷாயத்தைத் தயாரிக்கின்றன. இந்த நிறத்தில் அது இருக்கக் கூடாது. தவறான முறையில் தயாரிக்கப்பட்டால் அது பலன் தராது. நிலவேம்புக் கஷாயம் தயாரிக்கும் நுட்பம் நமது தலைசிறந்த சித்தர்களால் உருவாக்கப்பட்ட வழிமுறையாகும். இதை தகுதி வாய்ந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனைபடிதான் அருந்த வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

**மருத்துவர்களின் கண்ணோட்டம்**

நிலவேம்புச் சிகிச்சையைப் பெருவாரியான மக்களுக்கு ஒட்டுமொத்தமாக அளிப்பது பரிந்துரைக்கப்படவில்லை என தமிழகத்துக்கு வருகை தந்து டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்த மத்திய அரசின் ஐந்து உறுப்பினர் குழு தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழ் செய்தி வெளியிட்டது. இது ‘தரப்படுத்தப்பட்ட சிகிச்சை’ அல்ல என்று சுருக்கமாக அந்தக் குழு கூறியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் உள்ள அனைத்து அலோபதி மருத்துவமனைகளுக்கும் நிலவேம்பை விநியோகிப்பதில் தமிழக அரசு முனைப்புடன் செயல்படுவது, இந்த மருந்துக்கான அறிவியல்பூர்வமான நம்பகத்தன்மைக்குச் சான்று என்று பானுமதி கூறியுள்ளார். “சித்த மருத்துவச் சிகிச்சையை மக்கள் நாடுவதை சிலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. எந்த ஆதாரமும் இல்லாமல் எந்த அரசாவது இந்த மருந்தைப் பரிந்துரைக்க முன்வருமா?” என இவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிலவேம்புக் குடிநீர் பயன்படுத்துவதை தேசிய சித்த மருத்துவ நிலையமும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் நியாயப்படுத்தினாலும் இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழ்நாடு கிளை உள்ளிட்ட மற்ற அமைப்பினர் இந்த மூலிகை மருந்தின் குணப்படுத்தும் தன்மையை அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும் எனக் குரலெழுப்பி வருகின்றனர்.

நன்றி: [scroll.in](https://scroll.in/pulse/854724/tamil-nadu-government-promotes-siddha-medicine-for-dengue-but-doubts-loom-about-its-scientific-basis)

தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share