சிறப்புக் கட்டுரை: டாக்டர் அம்பேத்கரின் ஆய்வு அணுகுமுறை!

public

“சூத்திரர்கள் – யார்? அவர்கள் எவ்வாறு இந்தோ-ஆரிய சமுதாயத்தில் நான்காவது வருணத்தினராக ஆயினர்?” என்ற எனது ஆய்வுக் கட்டுரை 1946ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்டது; அதன் தொடர்ச்சியே இந்த நூல். சூத்திரர்களைத் தவிர இதர மூன்று சமூகப் பிரிவினரை இந்து நாகரிகம் தோற்றுவித்துள்ளது. இத்தகைய இந்து மக்கள் இருந்து வருவது குறித்து எந்த அளவுக்கு அக்கறை காட்ட வேண்டுமோ அந்த அளவுக்கு காட்டப்படவில்லை.

மேலே குறிப்பிடப்பட்ட மூன்று சமூகப் பிரிவினர் வருமாறு:

i) குற்றப் பரம்பரையினர், இவர்களது எண்ணிக்கை சுமார் 2 கோடி சொச்சம்;

ii) ஆதிவாசிகள், இவர்களது எண்ணிக்கை ஏறத்தாழ 1.5 கோடி;

iii) தீண்டப்படாதவர்கள், இவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 கோடி.

இப்படிப்பட்ட வகுப்பினர் இருந்துவருவது ஒரு மாபெரும் மானக்கேடாகும், அவக்கேடாகும். இந்த சமூக சீர்கேடுகளின், விபரீத விளைவுகளின் வெளிச்சத்தில், பகைப்புலனில் பார்க்கும்போது, இந்து நாகரிகம் என்பது ஒரு நாகரிகம் என்று அழைப்பதற்கே அருகதையற்றதாகிவிடுகிறது! மனித குலத்தின் ஒரு பகுதியை இவ்வாறு அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவது என்பது கொடிதினும் கொடிதான, பேய்த்தனமான, அவமானகரமான ஒரு சூழ்ச்சியாகும்; அப்பட்டமான வஞ்சகமாகும். பெரும்பழி, குரூர அவமதிப்பு என்பதுதான் இதற்குச் சரியான பெயராக இருக்க முடியும். குற்றமிழைப்பதை ஓர் அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கைத் தொழிலாக ஏற்றுக்கொள்ளும்படி போதிக்கப்படுகின்ற ஒரு மக்களைத் தோற்றுவித்திருக்கும் ஒரு நாகரிகத்தைப் பற்றிவேறு என்ன சொல்லமுடியும்? நாளுக்கு நாள் வளர்ந்தோங்கி வரும் நாகரிகத்துக்கு இடையே பண்டைக்கால காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கை வாழும் அவல நிலைக்கு, இழி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மற்றொருவகை பிரிவு மக்களை உருவாக்கி இருக்கும் ஒரு நாகரிகத்தைப் பற்றி வேறு என்ன கூற முடியும்? இதே போன்று, மனித உறவுக்கு, சமூகக் கூட்டுறவுக்கு அப்பாற்பட்டவர்களாக, தொட்ட மாத்திரத்திலேயே தீட்டு ஏற்படுத்தி விடக் கூடியவர்களாக, மிக மிக இழிவானவர்களாக, ஈனமானவர்களாக நடத்தப்படும் மூன்றாவதொரு வகைப் பிரிவு மக்களைப் படைத்திருக்கும் ஒரு நாகரிகத்தைப் பற்றி வேறு என்ன சொல்ல முடியும்?

வேறு நாடாக இருந்தால் இத்தகைய வகுப்பினர் இருந்து வருவது மனச்சான்றைக் குத்தி குடைந்திருக்கும்; அவர்களது மரபு மூலம் பற்றி அழமான ஆய்வு நடந்திருக்கும். ஆனால் ஓர் இந்துவின் மனத்தில் இவை இரண்டுமே நிகழவில்லை. இதற்கான காரணம் வெளிப்படையானது, சிக்கலற்றது. இந்த வகுப்பினர் இருந்து வருவதை இரங்கத்தக்கதாகவோ, அவமானகரமானதாகவோ, இந்து கருதுவதில்லை; இந்தப் பழிபாவத்துக்குப் பிராயச்சித்தம் தேட வேண்டும் அல்லது இந்த இழிநிலை எப்படித் தோன்றிற்று, அது எவ்வாறு வளர்ந்து வலுப்பெற்றது என்பதை ஆராயவேண்டும் என்றும் அவன் உணர்வதில்லை. அதேசமயம் அவனது நாகரிகம் மிகத் தொன்மையானது மட்டுமல்ல, பல அம்சங்களில் ஈடு இணையற்றது, தன்னேரில்லாதது என்றும் ஒவ்வொரு இந்துவும் போதிக்கப்படுகிறான். தனது நாகரிகத்தைப் போற்றிப் புகழ்வதிலும் எந்த இந்துவும் ஒரு போதும் சலிப்பதில்லை, சளைப்பதில்லை. இந்து நாகரிகம் மிகப் பழமையானது என்று கூறப்படுவதைப் புரிந்துகொள்ள முடியும். அதனை ஏற்கவும் கூட முடியும். ஆனால் இந்து நாகரிகம் தன்னிகரில்லாதது, ஒப்பற்றது என்று எந்த அடிப்படையில் உரிமை கொண்டாடுகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. இந்துக்கள் விரும்பாவிட்டாலும், இந்துக்கள் அல்லாதவர்களைப் பொறுத்தவரையில், இத்தகைய உரிமையை இந்துக்கள் ஒரே ஓர் அடிப்படையில்தான் கொண்டாட முடியும். இந்து நாகரிகம் தோற்றுவித்துள்ள இந்த வகுப்பினர் இருந்துவருவதே அந்த அடிப்படை. இத்தகைய வகுப்பினர் இருந்து வருவது ஒரு தனித்தன்மை வாய்ந்த நிகழ்வுப்போக்கு என்பதில் ஐயமில்லை. எனவே எந்த இந்துவும் இதனைக் கிளிப்பிள்ளைப்போல் திரும்பத் திரும்பக் கூற வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இதனை யாரும் மறுக்கமாட்டார்கள். இது பெருமிதம் கொள்வதற்குப்பதிலாக வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம் என்பதை இந்துக்கள் உணர வேண்டும்.

இந்து நாகரிகத்தின் உயர்விலும், புனிதத்திலும், நல்லறிவாற்றலிலும், இவ்வாறு தவறான ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருப்பதற்கு இந்து கற்றறிவாளர்களின் விநோதமான சமூகக் கண்ணோட்டமே முற்றிலும் காரணம்.

இன்று அனைத்துப் புலமையும் பிராமணர்களிடமே கட்டுண்டு கிடக்கிறது. ஆனால் அப்படியிருந்தும் துரதிருஷ்டவசமாக எந்தப் பிராமண அறிஞரும் ஒரு வால்டேராகச் செயல்படுவதற்கு இதுவரை முன்வரவில்லை; எதிர்காலத்திலும் இத்தகைய ஒரு பிராமண அறிஞர் அரங்கில் தோன்றுவார் என்றும் தோன்றவில்லை. இந்த வால்டேர் யார்? கத்தோலிக்க திருச்சபையின் சித்தாந்தங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வளர்ந்தவர்; எனினும் விரைவிலேயே அந்த சித்தாந்தங்களுக்கு எதிராகவே கிளர்ந்தெழுந்து, குரல் எழுப்பும் அறிவாற்றல், நேர்மை அவரிடமிருந்தது. பிராமணர்களால் ஒரு வால்டேரை உருவாக்க முடியவில்லையே என்பது அவர்களது புலமைக்கு இகழ் சேர்க்கிறது. அவர்களது அறிவாற்றலுக்கு அவப்பெயர் தேடித்தருகிறது. பிராமண அறிஞர் என்பவர் ஒரு கற்றறிந்த மனிதரே தவிர அவர் ஓர் ஆய்வறிவாளர் அல்ல என்பதை மனத்திற் கொண்டால் இதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை. கற்றறிந்தவருக்கும் ஆய்வறிவாளருக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு இருக்கிறது. முந்தியவர் வர்க்க உணர்வு கொண்டவர். தமது வர்க்க நலன்களில் கண்ணும் கருத்தும் கொண்டவர். பிந்தியவரோ கட்டறுந்தவர்; வர்க்க நோக்கங்களுக்கு அடிமையாகாமல், ஊசலாடாமல் சுதந்திரமாகச் செயல்படக்கூடியவர். பிராமணர்கள் படித்தவர்களாக மட்டுமே இருப்பதால் அவர்களால் ஒரு வால்டேரை தங்கள் மத்தியில் தோற்றுவிக்க முடியவில்லை.

பிராமணர்களால் ஏன் ஒரு வால்டேரை உருவாக்க முடியவில்லை? இந்தக் கேள்விக்கு மற்றொரு கேள்வியைக் கொண்டுதான் பதிலளிக்க முடியும். துருக்கி சுல்தான் முகமதிய உலகின் சமயத்தை ஏன் ஒழித்துக்கட்டவில்லை? போப்பாண்டவர் கத்தோலிக்க மதத்தை ஏன் பழித்துரைக்கவில்லை? பிறக்கும்போதே இருதயக் கோளாறுகளால் பீடிக்கப்பட்டு உடல் முழுவதும் நீலம் பூத்த குழந்தைகள் அனைவரையும் கொன்றுவிடும்படி பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஏன் சட்டம் இயற்றவில்லை? சுல்தானோ, போப்போ அல்லது பிரிட்டிஷ் நாடாளுமன்றமோ இவற்றை எல்லாம் செய்யாததற்’கு என்ன காரணமோ அதே காரணத்தால்தான் பிராமணர்களாலும் ஒரு வால்டேரை உருவாக்க இயலவில்லை. ஒருவனது சுயநலம் அல்லது அவன் சார்ந்த வகுப்பினது சுயநலம் எப்போதுமே ஓர் அகக்கட்டுப்பாடாகச் செயல்பட்டு, அவனது அறிவாற்றலின் திசை வழியை நிர்ணயிக்கிறது. பிராமணர்கள் பெற்றுள்ள அதிகாரமும் அந்தஸ்தும் இந்து நாகரிகம் அவர்களுக்கு அருள்கொடையாக அளித்தவையே ஆகும்; அது அவர்களைத் தெய்வீக மனிதர்களாகப் பாவிக்கிறது; கீழ்த்தட்டுகளிலுள்ள வகுப்பினரை எல்லாவிதமான இன்னல் இடுக்கண்களுக்கும் உள்ளாக்குகிறது; அவர்கள் வீறு கொண்டெழுந்து தங்கள் மீது பிராமணர்களுக்குள்ள ஆதிக்கத்துக்குச் சவால் விடாதபடி, அதற்கு ஆபத்தை உண்டு பண்ணாதபடிப் பார்த்துக் கொள்கிறது. ஒவ்வொரு பிராமணனும் அவன் வைதிகனாக இருந்தாலும் அல்லது வைதிகனல்லாதவனாக இருந்தாலும், அவன் புரோகிதனாக இருந்தாலும் அல்லது கிரகஸ்தனாக இருந்தாலும், அவன் படித்த அறிவாளியாக இருந்தாலும், அல்லது படிக்காதவனாக இருந்தாலும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் அளவற்ற ஆர்வமும் அக்கறையும் கொண்டவனாக இருக்கிறான். அப்படியிருக்கும் போது பிராமணர்கள் எவ்வாறு வால்டேர்களாக இருக்க முடியும்? பிராமணர்களிடையே ஒரு வால்டேர் தோன்றுவது பிராமண ஆதிக்கத்தை வளர்த்து வலுப்படுத்தும் நோக்கம் கொண்ட ஒரு நாகரிகத்தைப் பேணிக்காக்கும் முயற்சிக்கு நிச்சயம் குந்தகத்தையே ஏற்படுத்தும். இங்கு நாம் கூற வந்த கருத்து என்னவெனில், ஒரு பிராமண அறிஞனது அறிவாற்றல் தனது நலனைப் பாதுகாக்க வேண்டும் என்ற கவலையால், ஏக்கத்தால் பெரிதும் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதே ஆகும். இந்த அகக் கட்டுப்பாட்டால் அவன் வெகுவாக அவதியுறுகிறான்; இதன் விளைவாக தனது அறிவாற்றல் நேர்மையோடும் நியாயத்தோடும் செயல்பட அவன் அனுமதிப்பதில்லை. தனது வகுப்பின் நலன்களும், தனது சொந்த நலன்களும் பாதிக்கப்படுமோ என்று அவன் அஞ்சுகிறான்.

ஆனால் பிராமணிய இலக்கியத்தை அம்பலப்படுத்தும் எந்த ஒரு முயற்சியின்பாலும் பிராமண அறிஞன் காட்டும் சகிப்புத் தன்மையற்ற போக்கு எவரையும் எரிச்சல் கொள்ளவே செய்யும். அவசியம் ஏற்படும்போது கூட மூட நம்பிக்கைகளைச் சாடுபவனாக அவன் நடந்துகொள்ளமாட்டான். இத்தகைய திறன்படைத்த பிராமணரல்லாத எவனையும் இத்தகைய பணியைச் செய்வதற்கும் அனுமதிக்கமாட்டான். பிராமணரல்லாத எவனாவது இத்தகைய முயற்சியில் ஈடுபட்டால் பிராமண அறிஞர்கள் ஒன்று சேர்ந்து சதித்திட்டம் தீட்டுவார்கள்; அவனுக்கு எத்தகைய மதிப்பும் மரியாதையும் தரமாட்டார்கள்; ஏதேனும் அற்பக் காரணங்களைக் கூறி அவனை அப்பட்டமாகக் கண்டிப்பார்கள் அல்லது அவனது படைப்பு பயனற்றது, சல்லிக்காசு பெறாதது என்று முத்திரை குத்துவார்கள். பிராமணிய இலக்கியத்தின் சொரூபத்தை வெளிப்படுத்திய எழுத்தாளன் என்ற முறையில் நானும் இத்தகைய கீழ்த்தரமான மோசடிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் இலக்கானவன்தான்.

பிராமண அறிவாளிகளின் போக்கு எத்தகையதாக இருப்பினும் நான் மேற்கொண்ட பணியைத் தொடர்வது எனது கடமை. இந்த வகுப்பினரது தோற்றம் இன்னமும் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒரு பொருளாக இருந்துவருகிறது. துரதிருஷ்டிசாலிகளான இந்த வகுப்பினர்களில் ஒரு பிரிவைப்பற்றி அதாவது தீண்டப்படாதவர்களைப் பற்றி இந்த நூல் கூறுகிறது. இந்த மூன்று வகுப்பினரிலும் தீண்டப்படாதவர்கள்தான் எண்ணிக்கையில் மிகவும் அதிகமானவர்கள். அவர்கள் எவ்விதம் உருவானார்கள் என்பதும் இயல்புக்கு மிகவும் புறம்பானதாக இருக்கிறது. அவர்களது தோற்ற மூலம் குறித்து இதுவரை ஆழமான, அடிப்படையான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. இந்துக்கள் இத்தகைய ஆய்வினை மேற்கொள்ளாதது முற்றிலும் புரிந்துக்கொள்ளக்கூடியதே. தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில் எத்தகைய தவறும் இருப்பதாக பழைய பழுத்த வைதிக இந்து கருதுவதில்லை, அவனுக்கு இது இயல்பான, இயற்கையான, பொது முறையான ஒரு விஷயம், இதனால் அவன் இதற்குக் கழுவாய் தேடுவதற்கோ அல்லது சமாதானம் கூறுவதற்கோ முயல்வதில்லை. ஆனால் புதிய நவீன கால இந்துவின் விஷயம் அப்படியல்ல; அவன் தவறை உணர்கிறான். எனினும் பகிரங்கமாக இது குறித்து விவாதிப்பதற்கு வெட்கப்படுகிறான்; தீண்டாமை போன்ற கயமைத்தனமான, கொடிய, அருவருக்கத்தக்க, இகழார்ந்த சமூக சட்டதிட்டங்களை இந்து நாகரிகம் தன்னுள் கொண்டிருக்கும் அவலட்சணம் எங்கே அயல்நாட்டவர்களுக்குத் தெரிந்துவிடுமோ என்று அவன் அச்சம் கொள்கிறான். ஆனால் இதில் வேதனைக்குரிய விந்தை என்னவென்றால் சமூக அமைப்புகளைப் பற்றி ஆராய்ந்துவரும் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை தீண்டாமைப் பிரச்சினை ஈர்க்கத் தவறிவிட்டதேயாகும். இது ஏன் என்று புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. எனினும் உண்மை நிலைமை இதுதான்.

எனவே, அனைவராலும் அறவே புறக்கணிக்கப்பட்டுவிட்ட ஒரு துறையை ஆராயும் ஒரு முன்னோடி முயற்சியாக இந்நூலைக் கருதலாம். ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள பிரதான பிரச்சினையின், அதாவது தீண்டாமையின் தோற்றம் குறித்த பிரச்சினையின் ஒவ்வொரு அம்சத்தையும் இந்த நூல் அலசி ஆராய்கிறது; அத்துடன் நிற்காமல், இது சம்பந்தப்பட்ட சகலபிரச்சினைகளையும் துருவித் துருவி ஆராய்கிறது. இவற்றில் சில பிரச்சினைகளை வெகுசிலரே அறிவர்; அவற்றை அறிந்தவர்கள் கூட அவற்றால் திகைப்படைகின்றனர்; அவற்றிற்கு எவ்வாறு பதில் சொல்வது என்று தெரியாது திணறுகின்றனர். பின்கண்ட சில கேள்விகளைப் பற்றி இந்த நூல் ஆராய்வதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்: தீண்டப்படாதோர் கிராமத்துக்கு வெளியே ஏன் வசிக்கின்றனர்? மாட்டிறைச்சி தின்பது ஏன் தீண்டாமைக்கு இட்டுச் செல்கிறது? இந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உட்கொண்டதில்லையா? பிராமணரல்லாதவர்கள் மாட்டிறைச்சி தின்பதை ஏன் கைவிட்டார்கள்? பிராமணர்களை சைவ உணவு உண்பவர்களாக ஆக்கியது எது? இவ்வாறு எத்தனை எத்தனையோ கேள்விகள். இந்த கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் இந்நூல் விடை அளிக்கிறது. இந்தக் கேள்விகளுக்கு இந்நூலில் தரப்பட்டிருக்கும் விடைகள் அனைத்தையும் உள்ளடக்கியவையாக இல்லாதிருக்கலாம். எனினும் பழைய விஷயங்களைப் புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு இந்த நூல் உதவுகிறது.

தீண்டாமையின் தோற்றம் குறித்து இந்த நூலில் முன்வைக்கப்பட்டிருக்கும் கோட்பாடு புதுமையாதொரு கோட்பாடாகும். அதில் பின்கண்ட முன்மொழிவுகள், கருத்துரைகள் அடங்கியுள்ளன:

1) இந்துக்களுக்கும் தீண்டப்படாதோருக்கும் இடையே இன வேறுபாடு ஏதும் இல்லை;

2) தீண்டாமை நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் ஆரம்பத்தில் இந்துக்களுக்கும் தீண்டப்படாதோருக்கும் இடையேயான வேறுபாடு குலமரபுக் குழுவினருக்கும் அந்நியகுலமரபுக் குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கும் இடையேயான வேறுபாடாக அமைந்திருந்தது. இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டவர்கள்தான் பின்னர் தீண்டப்படாதவர்களாக நடத்தப்பட்டனர்.

3) தீண்டாமைக்கு எவ்வாறு இன அடிப்படை இல்லையோ அவ்வாறே தொழில் ரீதியான அடிப்படையும் இல்லை.

4) தீண்டாமை தோன்றியதற்கு இரண்டு மூலவேர்கள் உள்ளன:

அ. பிராமணர்கள் பௌத்தர்களிடம் காட்டியது போன்று இந்த பிரிந்துசென்றவர்களிடம் காட்டிய வெறுப்பும் பகைமையும்.

ஆ. ஏனையோர் கைவிட்டு விட்ட பிறகு மாட்டிறைச்சி உண்பதைப் பிரிந்து சென்றவர்கள் தொடர்ந்து கடைப்பிடித்தது.

5) தீண்டாமையின் அடி மூலத்தைத் தேடும்போது, தீண்டப்படாதோரை தூய்மையற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காண்பதற்கு கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லா வைதிக எழுத்தாளர்களும் தூய்மையற்றவர்களை தீண்டப்படாதவர்களுடன் சேர்த்து ஒன்றாக இனம் கண்டுள்ளனர். இது தவறாகும். தீண்டப்படாதவர்கள் தூய்மையற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள்.

6) தூய்மையற்றவர்கள் ஒரு வகுப்பினராக தர்மசூத்திரங்கள் காலத்தில் தோன்றினர்; தீண்டப்படாதவர்களோ இதற்கு வெகு காலத்திற்குப் பிறகு கி.பி.400ல் தோன்றினர்.

இந்த முடிவுகள் யாவும் நான் மேற்கொண்ட வரலாற்று ஆராய்ச்சியிலிருந்து பெறப்பட்டவையாகும். ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளன் எத்தகைய குறிக்கோளை தன் முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை கெதே பின்வருமாறு வரையறுத்துக் கூறுகிறார்: (கெதேயின் ஒழுக்க விதிகளும் சிந்தனைகளும், நிர். 453,543)

“பொய்மையிலிருந்து மெய்மையையும், நிலையற்றதிலிருந்து நிலையானதையும், ஏற்க முடியாததிலிருந்து ஐயப்பாடானதையும், பிரித்துக்காணுவது வரலாற்றாசிரியனின் கடமையாகும்…. ஒவ்வொரு ஆராய்ச்சியாளரும் தீர்ப்புச் சான்றாளர் (ஜூரி) குழுவில் சேவை செய்ய அழைக்கப்பட்டவராகத் தம்மைக் கருதிக் கொள்ள வேண்டும். பிறகு அவர் தம் முன்னாலுள்ள விவரங்கள் தக்க ஆதாரங்களுடன் எந்த அளவுக்கு முழுமையாக உள்ளன என்பதை மட்டுமே பரிசீலிக்கவேண்டும். பின்னர் அவர் ஒரு முடிவுக்கு வந்து, தமது கருத்து, குழுவின் தலைவரது கருத்துக்கு இணக்கமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமது வாக்கை அளிக்கவேண்டும்.”

சம்பந்தப்பட்ட, தேவையான விவரங்கள் கிடைக்கும்போது கெதேயின் அறிவுரையின்படி நடந்து கொள்வதில் சிரமம் ஏதும் இருக்காது. அவர் தெரிவித்த ஆலோசனை மிகவும் மதிப்பு வாய்ந்தது, பெரிதும் இன்றியமையாதது என்பதில் ஐயமில்லை. ஆனால் மிக முக்கியமான நிகழ்ச்சிகளை பரஸ்பரம் சம்பந்தப்படுத்தும் இடை இணைப்புகளும், நேரடிச் சான்றுகளும் இல்லாதபோது வரலாற்றாசிரியர் என்ன செய்ய வேண்டும் என்பதை கெதே கூறவில்லை. தீண்டாமையின் அடி மூலத்தையும், சம்பந்தப்பட்ட இதர பிரச்சினைகளையும் ஆராய்வதில் நான் ஈடுபட்டிருந்தபோது, பல இடை இணைப்புகள் இல்லாததைக் கண்ணுற்றேன்; இதனாலேயே இவ்விஷயத்தை இங்கு குறிப்பிட்டேன். இத்தகைய ஒரு நிலைமையை எதிர்கொண்டவன் நான் மட்டுமே அல்ல; பண்டைக்கால இந்திய வரலாற்றை ஆராய்ந்த எல்லா வரலாற்றாசிரியர்களும் இப்படிப்பட்ட நிலைமையைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. “அலெக்சாந்தரின் படையெடுப்புக்கு முன்னர்வரை இந்திய வரலாற்றில் எந்த ஒரு பொது நிகழ்ச்சியையும் பற்றிய காலத்தை நிர்ணயிக்க முடியவில்லை. இதே போன்று முகமதியர்களின் வெற்றிக்குப் பிறகுதான் பல்வேறு செயற்பாடுகளை பரஸ்பரம் ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பார்க்க முடிந்தது” என்று மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின் ஸ்டன் கூறயிருக்கிறார். இது சோகமயமான ஓர் ஒப்புதல் வாக்கு மூலம் என்பதில் ஐயமில்லை. இங்கு ஒரு கேள்வி எழுகிறது: “அப்படியானால் ஒரு வரலாற்றாசிரியன் என்னதான் செய்வது? விட்டுப்போன கண்ணியைக் கண்டுபிடிக்கும் வரை அவன் தனது பணியை மூட்டைக்கட்டி வைத்துவிட வேண்டுமா?” நான் அவ்வாறு நினைக்கவில்லை. இது விஷயத்தில் என் கருத்து வருமாறு: இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒரு வரலாற்றாசிரியன் நிகழ்ச்சிக் கோவையில், விட்டுப்போன இடங்களை இதுவரை கண்டுபிடிக்கப்படாத கண்ணியிழைகளைக் கொண்டு ஒன்றுசேர்த்து இணைக்க வேண்டும், இதில் அவன் தனது கற்பனைத் திறனையும் உள்ளுணர்வையும் பயன்படுத்த வேண்டும், பிணைக்கப்பட முடியாத உண்மைகளை தெரிந்த உண்மைகளைக் கொண்டு பரஸ்பரம் பிணைப்பதற்கு வகை செய்யும் ஒரு தற்காலிகக் கோட்பாட்டை அவன் உருவாக்கிக் கொள்ள வேண்டும். மேற்கொண்ட பணியை நிறுத்தி வைப்பதற்குப் பதிலாக, விட்டுப்போன கண்ணிகள் தோற்றுவிக்கும் இக்கட்டைச் சமாளிப்பதற்கு இந்த வழியைத்தான் நான் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

திறனாய்வாளர்கள் இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இக்கோட்பாடு வரலாற்று ஆராய்ச்சி விதிகளுக்குப் புறம்பாக இருக்கிறது என்று கண்டிக்கக்கூடும். அவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். வரலாற்று ஆய்வுகளின் முடிவுகளை மதிப்பீடு செய்வதற்கு ஒரு விதிமுறை இருக்கும்போது, நேரடிச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் காரணத்துக்காக ஒரு கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள மறுப்பது என்பது மோசமான விதிமுறையாகும். நேரடிச்சான்றா அல்லது ஊகச்சான்றா, ஊகச் சான்றா அல்லது கற்பனைச் சான்றா என்னும் பிரச்சினையில் திறனாய்வாளர்கள் மூழ்கிப்போய் இருப்பதை விட அவர்கள் (i) இந்தக் கோட்பாடு முழுக்க முழுக்க அனுமானத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறதா (ii) இக்கோட்பாடு பரிசீலிப்பதற்குத் தகுதியுடையதுதானா, அவ்வாறு தகுதியுடைதாக இருக்குமாயின் நான் முன் வைக்கும் விவரங்களை விட அவர்கள் முன்வைக்கும் விவரங்களுக்கு அது பொருத்தமுடையதாக இருக்கிறதா என்பதில் அவர்கள் கவனம் செலுத்துவது உசிதமானதாக இருக்கும்.

முதல் பிரச்சினையைப் பொறுத்தவரையில், இந்தக் கோட்பாட்டின் சிலபகுதிகள் அனுமானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் காரணத்திற்காக அது தவறானதாகி விடாது. தொன்னெடுங் காலத்துக்கு முந்தைய தோற்றுவாயைக் கொண்ட ஓர் அமைப்பைப் பற்றி நாம் ஆராய்கிறோம் என்பதை என்னை விமர்சிப்பவர்கள் மறந்துவிடக்கூடாது. தீண்டாமையின் தோற்றத்தைப் பற்றி விளக்கும் இப்போதைய முயற்சி திட்டவட்டமான விவரங்களைத் தரும் மூலாதாரங்களிலிருந்து வரலாற்றை எழுதுவது போன்றதல்ல. எத்தகைய மூலாதாரங்களும் இல்லாமலேயே வரலாற்றைப் புனைந்தியற்றும் முயற்சி இது; அப்படியே மூலாதாரங்கள் கிடைத்தாலும் கூட அவற்றுக்கும் சம்பந்தப்பட்ட விஷயத்துக்கும் நேரடித் தொடர்பு ஏதும் இருக்காது. இத்தகைய சந்தர்ப்ப சூழ்நிலைமைகளில் ஒரு வரலாற்றாசிரியர் என்ன செய்ய வேண்டும்? இந்த மூலாதாரங்கள் எதை மறைக்கின்றன அல்லது திட்டவட்டமான முறையில் உண்மையைக் கண்டறியாமலேயே அவை எவற்றை சூசகமாகக் கூறுகின்றன என்பதை அவர்கள் முன்னுணர வேண்டும். இந்த அடிப்படையில் அவர்கள் கடந்தகால மிச்சசொச்சங்களை, மரபெச்சங்களைச் சேகரிக்க வேண்டும்; அவற்றை ஒன்றிணைத்து அவை பிறந்த கதையைச் சொல்லும்படிச் செய்ய வேண்டும். இந்தப் பணி உடைந்த கற்களிலிருந்து அங்கிருந்த நகரை நிர்மாணிக்கும் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளரின் பணியைப் போன்றது; இந்தப் பணி சிதறிக் கிடக்கும் எலும்புகளையும் பற்களையும் கொண்டு மரபற்றழிந்துபோன ஒரு தொன்மைக்கால விலங்கை உருவகித்துக் காணும் ஒரு புதைபடிவ ஆய்வாளரின் பணியைப் போன்றது; இந்தப் பணி தொடுவானத்தின் கோடுகளையும், குன்றுச்சரிவுகளின் சாயல்களையும் அப்படியே மனத்தில் படம்பிடித்துக் கொண்டு ஓர் அற்புதமான இயற்கைக் காட்சியை வரையும் ஓர் ஓவியரது பணியைப் போன்றது. இந்த அர்த்தத்தில் நோக்கும்போது இந்த நூலை ஒரு வரலாற்றுப் படைப்பு என்று கூறுவதைவிட, ஒரு கலைப் படைப்பு என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். தீண்டாமையின் அடிமூலம் மடிந்துபோன கடந்த காலத்தில் புதையுண்டு கிடக்கிறது; இதனை யாரும் அறியார். இந்த மரபு மூலத்தைக் கண்டுபிடிப்பது என்பது தொன்னெடுங்காலத்துக்கு முன்னர் அழிந்து தகர்ந்து தரைமட்டமாகிவிட்ட ஒரு நகரை அதன் மூலவடிவில் வரலாற்றுக்கு மீண்டும் அர்ப்பணிக்கும் முயற்சியை ஒத்ததாகும். இத்தகைய ஒரு பணியில் கற்பனையும் அனுமானமும் ஒரு முக்கிய பங்காற்றாமல் இருக்க முடியாது. ஆனால் இது மட்டுமே இந்தக் கோட்பாட்டை நிராகரிப்பதற்கு ஓர் ஆதார அடிப்படையாக இருக்க நியாயமில்லை. ஏனென்றால் திறமைமிக்க கற்பனையின்றி எந்த ஒரு விஞ்ஞான ஆய்வும் பலன் தராது; ஊகம்தான் விஞ்ஞானத்தின் உயிர்க்கூறு, ஆன்மா, இது பற்றி மாக்சிம் கார்க்கி கூறியதாவது: (இலக்கியமும் வாழ்வும் – மாக்சிம் கார்க்கியின் எழுத்துக்களிலிருந்து ஒரு பகுதி)

“விஞ்ஞானத்துக்கும் இலக்கியத்துக்கும் இடையே, பொதுவான அம்சங்கள் நிறைய இருக்கின்றன; இவை இரண்டிலும் கூர்நோக்கும், ஒப்பீடும், ஆழமான ஆய்வும் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தவை; விஞ்ஞானியைப் போன்றே கவின் கலைஞருக்கும் கற்பனைத்திறமும் அகத்திற உணர்வும் அவசியம் தேவை. கற்பனையும் உள்ளுணர்வும் நிகழ்வுப்போக்குகள் தொடரில் இடைவிட்டுப் போன இடங்களை இன்னமும் இனம் கண்டறியாத பிணைப்புகளைக் கொண்டு இணைக்கின்றன; ஏறத்தாழ சரியான ஊகங்களையும் கோட்பாடுகளையும் விஞ்ஞானி உருவாக்கிக் கொள்ளத் துணைபுரிகின்றன; இயற்கையின் வடிவங்கள், இயல் நிகழ்ச்சிகள் குறித்த ஆய்வில் மனத்தோட்டத்துக்கு வழிகாட்டுகின்றன. இது இலக்கியப் படைப்புகளுக்கும் பொருந்தும்; பாத்திரங்களை உருவாக்கும் கலைக்கு கற்பனையும் உள்ளுணர்வும் எதையும் மனத்தில் வாங்கி ஈர்த்துக் கொள்ளும் ஆற்றலும் வேண்டும்.”

எனவே, விட்டுப்போன கண்ணிகளை இணைத்துக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டமைக்காக நான் எவ்வகையிலும் வருந்த வேண்டிய அவசியமில்லை. அதே போன்று இதனால் என் ஆய்வு எவ்விதத்திலும் வலிமை குன்றிவிடவில்லை; ஏனென்றால் எங்குமே வெறும் ஊகத்தை அடிப்படையாக வைத்து மட்டுமே இணைப்புக் கண்ணிகளை உருவாக்கிவிட முடியாது. என் ஆய்வின் பெரும்பகுதி மெய்நிகழ்வுகளையும் அவற்றிலிருந்து பெறப்பட்ட அனுமானங்களையும் அடிப்படையாகக் கொண்டது. இவ்வாறு மெய்நிகழ்வுகளையும் அவற்றிலிருந்து பெறப்பட்ட அனுமானங்களையும் ஆதாரமாகக் கொண்டிராத இடங்களில் எனது ஆய்வு பெருமளவுக்கு நம்பக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து எனது ஆய்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வாசகர்களை நான் கோரவில்லை. நான் கூறியிருப்பது மிகப் பெருமளவுக்கு நம்பத்தகுந்தது என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறேன். மிகப்பெருமளவுக்கு நம்பத் தகுந்தது என்று கூறுவது ஒப்புக் கொள்ளத்தக்க முடிவுக்குப் போதிய ஆதாரமாகாது என்று சிலர் வாதிக்கக்கூடும். ஆனால் இது கல்விச்செருக்கு மிக்க போலிவாதமே தவிர வேறன்று.

அடுத்து, இரண்டாவது பிரச்சினைக்கு வருவோம். எனது ஆய்வுதான் இது விஷயத்தில் இறுதியானது, முற்றமுடிவானது என்று உரிமை கொண்டாடும் அளவுக்கு நான் தற்பெருமைக்காரன் அல்ல என்பதை என்னையும் எனது ஆய்வையும் விமர்சிப்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். எனது ஆய்வைத்தான் முடிவாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் அவர்களைக் கோரவில்லை. அவர்களது கருத்தின்மீது செல்வாக்கு செலுத்த நான் விரும்பவில்லை. அவர்கள் தமது சொந்த முடிவுக்கு வர அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்களிடம் நான் கூற விரும்புவதெல்லாம் இதுதான். எல்லாச் சுற்றுச் சூழல்களுக்கும் பொருந்தக்கூடியதாக இருப்பதுதான் ஓர் ஏற்றுக் கொள்ளத்தக்க ஆய்வின் இலக்கணம். அந்த அடிப்படையில் எனது ஆய்வு நடைமுறைப்படுத்தத்தக்கது இல்லையா, தற்காலிகமாகவாவது அங்கீகரிக்கதக்கது இல்லையா என்பதைப் பரிசீலித்துப் பாருங்கள். ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீட்டைத் தவிர என் விமர்சகர்களிடமிருந்து வேறு எதையும் நான் எதிர்பார்க்கவில்லை.

பி.ஆர்.அம்பேத்கர்

ஜனவரி, 1,1948

1, ஹார்டிஞ்சி அவெனியூ,

புதுடில்லி.

*டாக்டர் அம்பேத்கரை சட்டமேதை என்று கூறுவதைத் தாண்டி அவரின் பல்வேறு பங்களிப்புகளை தேடும்/பேசும் போக்கு பெருகிவருகிறது. இந்தியாவில் அதிக பக்கங்கள் எழுதிய அறிஞர் அவர். அந்தவகையில் அவரோர் ஆய்வாளர். அவர் ஆய்வு மேற்கொள்ளும் விதத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு அவர் எழுதிய தீண்டப்படாதார் யார்? என்ற நூலுக்கு அவர் எழுதிய ஆய்வு முன்னுரையை அவர் பிறந்த நாள் வெளியீடாக வெளியிடுகிறோம்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *