ரோஹன் ஆப்ரஹாம்
மும்பையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 82.48 ரூபாயாக இருக்கும் நேரத்தில் (மே 13 நிலவரப்படி), பாகிஸ்தானில் லிட்டர் 50.8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெயின் சர்வதேச விலை மிகக் குறைவாக பேரலுக்கு 100 டாலருக்கும் குறைவாக இருந்தது. இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டில்தான் இந்த விலை விகிதத்தில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்பட்டது.
எண்ணெய் உற்பத்தி நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்ததாலும், விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகளாலும், மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட குழப்பங்களாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைக் கண்டது. எனினும், பெட்ரோல், டீசலின் சில்லறை விற்பனை விலையில் பெரும் பங்கு அரசுகள் விதிக்கும் வரியாகவே உள்ளது.
ஜிஎஸ்டி வரி வளையத்துக்குள் பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டுவருவதற்கான கோரிக்கையை பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் ஏப்ரல் மாதத்தில் முன்வைத்தார். எனினும், பெட்ரோலியப் பொருட்களுக்கு ஒரே வரி விகிதத்தை விதிப்பது என்பது தற்போதைய குழப்பங்கள் மிகுந்த வரி முறையில் சாத்தியமற்றதுபோல் தோன்றுகிறது. ஏனெனில், நாட்டில் பல்வேறு இடங்களில் பெட்ரோலியப் பொருட்களுக்கு வெவ்வேறு விகிதங்களில் வரி விதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலியப் பொருட்களுக்கு வசூலிக்கப்படும் மொத்த வரி வருவாயை மத்திய அரசும், மாநில அரசுகளும் பகிர்ந்துகொள்கின்றன. பெட்ரோலியப் பொருட்கள் வாயிலாக மாநில அரசுகள் வசூலிக்கும் மதிப்புக் கூட்டு வரி அவற்றின் பட்ஜெட்டைச் சமாளிக்க மிக அவசியமாகிறது. பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி வளையத்துக்குள் கொண்டுவந்து குறைவான விகிதத்தில் வரி வசூலித்தால் நுகர்வோரின் பிரச்சினைகளுக்கு தற்காலிகத் தீர்வு ஏற்படும் என்றாலும்கூட, மாநில அரசுகளின் கருவூலத்தில் கடும் இழப்புகள் ஏற்படும் சூழல் உள்ளது.
தற்போதைய நிலையில், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகிய பொருட்கள் ஜிஎஸ்டிக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளன. திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG), மண்ணெண்ணெய், நாப்தா போன்றவை ஜிஎஸ்டி வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளன. திரவ பெட்ரோலிய எரிவாயு, நாப்தா, மண்ணெண்ணெய் ஆகிய பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் 18 விழுக்காடு வரி வசூலிக்கப்படுகிறது. எனினும், பொது விநியோக அமைப்பு வாயிலாக விநியோகிக்கப்படும் மண்ணெண்ணெய்க்கும், வீட்டுப் பயன்பாட்டுக்காக விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயுவுக்கும் 5 விழுக்காடு வரி மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
ஏப்ரல் 4ஆம் தேதியன்று, டெல்லியில் பெட்ரோலின் சில்லறை விற்பனை விலை லிட்டருக்கு 73.95 ரூபாயாகவும், டீசலின் சில்லறை விற்பனை விலை லிட்டருக்கு 64.82 ரூபாயாகவும் இருந்துள்ளது. இதன் மீது விதிக்கப்பட்ட மொத்த வரி விகிதத்தை இரு பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒன்று, மத்திய அரசு வசூலிக்கும் கலால் வரி; மற்றொன்று, மாநில அரசுகள் வசூலிக்கும் மதிப்புக் கூட்டு வரி. கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி, டீலர்களுக்கு வழங்கப்படும் விலை, டீலர்களுக்கான கமிஷன் இவையனைத்தும் ஒருங்கிணைந்துதான் பெட்ரோல், டீசலின் சில்லறை விற்பனை விலையாக உள்ளது.
ஏப்ரல் 4ஆம் தேதியன்று, டெல்லியில் உள்ள டீலர்களுக்கு பெட்ரோல் லிட்டருக்கு 35.15 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 37.42 ரூபாய்க்கும் வழங்கப்பட்டுள்ளது. இப்பொருட்களுக்கு விதிக்கப்பட்ட மத்திய, மாநில வரிகளை மொத்தமாகக் கணக்கிட்டால் லிட்டருக்கு 35.2 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலுக்கு இது சுமார் 100 விழுக்காடு வரி விதிப்பு என்பது தெளிவாகிறது. டீசலுக்கோ 66.48 விழுக்காடு வரி வசூல்.
2014ஆம் நிதியாண்டில், பெட்ரோலியப் பொருட்களுக்கு உலகளவில் தேவை அதிகரித்ததால், கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 107 டாலராக உயர்ந்தது. அப்போது, டீலர்கள் ஒரு லிட்டர் டீசலுக்கு 52.68 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதத்திலோ ஒரு லிட்டர் டீசலுக்கு 37.42 ரூபாய் மட்டுமே டீலர்கள் செலுத்த வேண்டியிருந்தது. எனினும், இன்றளவில் டீசலின் சில்லறை விலை லிட்டருக்கு 65.93 ரூபாயாக உள்ளது. இது 2014ஆம் நிதியாண்டின் சில்லறை விலையைவிடக் கிட்டத்தட்ட 10 ரூபாய் கூடுதலாகும். டீலர்களுக்கான விலை மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளபோதிலும், அதற்கேற்ப சில்லறை விலை குறைக்கப்படவில்லை. மாறாக, சில்லறை விலை மிகுதியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், லிட்டருக்கு 8.37 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த மானியமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
**யாருக்கு லாபம்?**
பெட்ரோலியப் பொருட்களுக்கு வரி விதிப்பதால் மத்திய, மாநில அரசுகளுக்குக் கணிசமான வருவாய் கிடைக்கிறது. ஜிஎஸ்டிக்கு வெளியே பெட்ரோலியப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதால் அவற்றுக்குப் வெவ்வேறு விகிதங்களில் வரி விதிக்கப்பட்டு சில்லறை விலை உயர்கிறது. இதன் விளைவாக மாநில அரசுகளின் கல்லா நிறைகிறது. இந்த வெவ்வேறு விகிதங்களிலான வரி முறையால்தான் பெட்ரோலியப் பொருட்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு சில்லறை விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுக் குழுவின் (Petroleum Planning and Analysis Cell -PPAC) தகவலின்படி, பெட்ரோலியப் பொருட்கள் வாயிலாக 2017ஆம் நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட மொத்த வரி வசூல் 4.63 லட்சம் கோடி ரூபாய். இதில் மாநில அரசுகளின் வரி வருவாய் பங்கு ரூ.1.90 லட்சம் கோடியாகும். இது மொத்த வரி வசூலில் 40 விழுக்காடாகும். மத்திய அரசு ரூ.2.73 லட்சம் கோடியை வரி வருவாயாக எடுத்துக் கொண்டுள்ளது.
மறுபுறம், 2015ஆம் நிதியாண்டில் மானியங்களுக்காகச் செலவிடப்பட்ட தொகை ரூ.60,269 கோடியாகும். இதில் பெட்ரோல், டீசலுக்கு வழங்கப்பட்ட மானியமும் அடங்கும். எனினும், பெட்ரோல், டீசலுக்கு வழங்கப்பட்ட மானியம் அக்டோபர் 18, 2014 முதல் கைவிடப்பட்டது. 2017ஆம் நிதியாண்டில் எரிவாயு மானியத்துக்கு அரசு செலவிட்ட மொத்த தொகை ரூ.27,539 கோடி மட்டுமே. இது அந்த நிதியாண்டின் ஒட்டுமொத்த வரி வருவாயில் வெறும் 5.94 விழுக்காடு மட்டுமே ஆகும்.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வளையத்துக்குள் கொண்டு வருவது குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. தற்போது, ஜிஎஸ்டியில் 5 விழுக்காடு, 12 விழுக்காடு, 18 விழுக்காடு, 28 விழுக்காடு ஆகிய நான்கு விகிதாச்சாரங்களில் வரி விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டுவந்தால் மத்திய, மாநில அரசுகள் வரி வருவாயில் பெரும் பங்கை இழக்க நேரிடும். அதன் விளைவாக பட்ஜெட்டில் சிக்கல்கள் உருவாகும். தற்போது பெட்ரோலுக்கு 100 விழுக்காடு வரியும், டீசலுக்கு 66 விழுக்காடு வரியும் வசூலிக்கப்படுகிறது.
பெட்ரோல் மீதான ஜிஎஸ்டி வரியை 90 விழுக்காடாக நிர்ணயித்தால், மத்திய அரசும், மாநில அரசுகளும் 45 விழுக்காடு வருவாய் இழப்பைச் சந்திக்க நேரிடும். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஒரு லிட்டர் எரிவாயுவிற்கு 15.82 ரூபாய் கிடைக்கும். சில்லறை விலை 4.8 விழுக்காடு குறைந்து 70.39 ரூபாயாகச் சரியும். அதேபோல பெட்ரோல் மீது 80 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதித்தால், சில்லறை விலையில் 9.6 விழுக்காடு சரிவு ஏற்படும்.
ஜிஎஸ்டியின் மிக உயர்வான விகிதாச்சாரமான 28 விழுக்காடு வரியை பெட்ரோல், டீசல் மீது விதித்தால், பெட்ரோலின் விலை லிட்டருக்கு 48.59 ரூபாயாகவும், டீசலின் விலை லிட்டருக்கு 50.41 ரூபாயாகவும் குறையும். அதற்கேற்ப பெட்ரோலின் சில்லறை விலையில் 34.29 விழுக்காடு சரிவும், டீசலின் சில்லறை விலையில் 22.23 விழுக்காடு சரிவும் ஏற்படும்.
**மாநில அரசுகளின் நிலை என்னவாகும்?**
ஜிஎஸ்டி வரி முறையில் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்பட்டால் நுகர்வோர் மகிழ்ச்சியடைவர் என்றாலும், மாநில அரசுகளே கடுமையாகப் பாதிக்கப்படும். உதாரணமாக கேரளாவை எடுத்துக் கொள்வோம். தற்போது கேரளாவில் டீலர்களுக்கான விலை (லிட்டருக்கு 35.15 ரூபாய்) மீது 32.8 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது. இதோடு லிட்டருக்கு ஒரு ரூபாய் விற்பனை வரியும், ஒரு விழுக்காடு செஸ் வரியும் விதிக்கப்படுகிறது. இதனால் டீலருக்கான விலை லிட்டருக்கு 11.97 ரூபாய் (34.06%) உயர்கிறது. இதற்குப் பதிலாக 28 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டால், கேரளா உள்பட அனைத்து மாநில அரசுகளுக்கும் 14 விழுக்காடு மாநில ஜிஎஸ்டி வரி வாயிலாக லிட்டருக்கு 4.921 ரூபாய் மட்டுமே வருவாய் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு லிட்டருக்கும் 7.049 ரூபாய் வருவாயைக் கேரள அரசு இழக்கும். அதாவது ஒவ்வொரு லிட்டருக்கும் 59 விழுக்காடு வருவாய் இழப்பு ஏற்படும்.
கேரள நிதியமைச்சகத்தின் இணையதளம் வழங்கும் தகவல்களின்படி, 2016-17ஆம் நிதியாண்டில் பெட்ரோலியத் துறை வாயிலாக வசூலிக்கப்பட்ட மொத்த மதிப்புக் கூட்டு/விற்பனை வரியின் மதிப்பு ரூ.6,899 கோடியாகும். மேலும், கேரளாவின் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்மாநில உற்பத்தியில் (GSDP) 3.5 விழுக்காடாக இருந்துள்ளது. பெட்ரோல், டீசல் மீது 28 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டால், கேரளாவின் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்மாநில உற்பத்தியில் 4.4 விழுக்காடாக உயரும்.
டெல்லி மிகக் குறைவான இழப்பையே சந்திக்கும். ஏனெனில், டெல்லியின் நிதிப் பற்றாக்குறை 0.5 விழுக்காட்டிலிருந்து 0.74 விழுக்காடாக மட்டுமே உயரும். ராஜஸ்தான் மிகப்பெரும் இழப்புகளைச் சந்திக்கும். ஏனெனில், ராஜஸ்தானின் நிதிப் பற்றாக்குறை 6.48 விழுக்காடாக உயரும். பெட்ரோல், டீசலின் வாயிலாக அதிகப்படியான வருவாயாக ரூ.23,160 கோடியை ஈட்டி வரும் மகாராஷ்டிராவின் நிதிப் பற்றாக்குறை 2.2 விழுக்காட்டிலிருந்து 2.78 விழுக்காடாக மட்டுமே உயரும். பெட்ரோலியப் பொருட்கள் மீது குறைவான ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டால், அதன் தாக்கம் வளர்ச்சியடையாத மாநிலங்கள் மீது கடுமையாக இருக்கும். ஏனெனில், வளர்ச்சியடையாத மாநிலங்களின் வருவாயில் பெரும் பகுதி, பெட்ரோல், டீசல், மதுபானம் போன்ற பொருட்களுக்கு விதிக்கப்படும் கலால் மற்றும் மதிப்புக் கூட்டு வரியை நம்பியே உள்ளது.
ஒரே வரி முறை என்ற கொள்கையுடன் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை, நான்கு விகிதாச்சாரங்களால் ஏற்கெனவே ஏமாற்றப்பட்டுள்ளது. பெட்ரோலுக்கும், டீசலுக்கும் 28 விழுக்காடு வரி விதிக்கப்பட்டால், மாநில அரசுகளின் கருவூலங்களுக்கு ஏற்படும் இழப்பு மிகக் கடுமையாக இருக்கும். எனினும், பெட்ரோல், டீசலுக்கு புதிய வரி விகிதாச்சாரம் உருவாக்கப்பட்டால், ’ஒரே நாடு, ஒரே வரி’ என்ற ஜிஎஸ்டியின் அடிப்படை நோக்கம் சிதைந்துவிடும்.
**நன்றி:** [தி இந்து](https://www.thehindu.com/news/national/how-state-budgets-will-fare-if-petrol-diesel-are-brought-under-gst/article23871826.ece)
**தமிழில்: அ.விக்னேஷ்**
**நேற்றைய கட்டுரை:** [கல்விக்குத் தமிழகம் அளித்த முக்கியத்துவம்!](https://minnambalam.com/k/2018/07/10/32)�,”