விவேக் கணநாதன்
*(ஸ்டாலினின் தலைமைப் பண்புகள் குறித்து [நேற்று](https://minnambalam.com/k/2018/09/02/14) வெளியான அலசலின் தொடர்ச்சி)*
2017 ஜனவரியில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை திமுக கூர்மைப்படுத்தியிருந்தது. ஆனால், அந்த நேரத்தில் அரை நூற்றாண்டுக்குப் பிறகு மாபெரும் மக்கள் எழுச்சிகண்ட போராட்டமாக மெரினா போராட்டம் மாறியது. மெரினா போராட்டம் சிக்கலான சமூக உளவியல் பின்புலத்துடன் தொடர்புடையது. வெளித் தோற்றத்தில் ஜல்லிக்கட்டு என்கிற கலாச்சார உணர்வுக்காகக் கூடியது; ஆனால், அதற்குப் பின்னால் உள்ளார்ந்த சமூக – பொருளாதாரக் காரணிகள் பல இருந்தன.
திமுக நேரடியாகச் சமூக – பொருளாதாரக் காரணிகளோடு தொடர்புடைய நீட் தேர்வை எதிர்த்துப் போராடியது. ஆனால், நீட் எதிர்ப்பு என்பது ஒரு பரந்த தளத்தில் கலாச்சார – பண்பாட்டு விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியது. வெளிப்புறத்தில் நீட்டைவிட ஜல்லிக்கட்டுக்கான ஆதரவுத்தளம் அதிகம். ஆனால், இறுதி விளைவு என்கிற அளவில் நீட் ஏற்படுத்தும் விளைவுகள் அதிகம். இந்தச் சிக்கலுக்கு மத்தியில் திமுகதான் ஜல்லிக்கட்டு தடைக்கே காரணம் என்கிற அவதூறும் கிளம்பியிருந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை ஜல்லிக்கட்டுக்காக திமுக ஒத்திவைத்தது. ஸ்டாலின் விருப்பங்கள், சமூக இயக்கத்தில் சட்டென எழுச்சிபெறும் கருத்தாக்கங்கள் இரண்டுக்குமான இடைவெளியை இதில் நாம் புரிந்துகொள்ளலாம்.
பொதுப்புத்தி செயல்படும் விதம்
இந்த இடைவெளியின் ஆழமும், வேர்களும் பொதுப்புத்தி இயக்கத்தோடும், அதற்குப் பின்னால் இருக்கும் சமூகப் பண்பாட்டுக் காரணிகளோடும் தொடர்புடையவை.
பொதுப்புத்திக்கு காத்திரமான அரசியல் புரிதல்கள் தேவையில்லை. ஆனால், பொதுப்புத்திதான் ஒரு தலைவரைக் குறித்த ஆளுமை பிம்பத்தை உருவாக்குகிறது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கின்றோம் என்றும் நாத்திகத்துக்குள் ஆத்திகம் செய்ய அண்ணாவை மாற்றியது மக்களின் பொதுப்புத்தி. எல்லா விதமான விமர்சனத்துக்கும் ஆளான பிறகும், இந்தியாவில் இருக்கும் அதிகார முரண் பற்றி எந்தப் புரிதலும் இல்லாமல், கருணாநிதி நினைத்தால் எல்லாம் முடியும்; ஆனால் செய்ய மாட்டார் எனச் சொல்லிக்கொண்டே இருந்தது பொதுப்புத்தி.
அரசாங்க வருவாய் இழப்புகளைச் சமாளிக்கத் தெரியாதவர் எம்ஜிஆர் என ஆய்வாளர்கள் விமர்சித்துக்கொண்டிருந்தபோது, கையில் நோட்டுக் கட்டுக்களை வைத்துக்கொண்டு ஏழைகளுக்கு அள்ளிக்கொடுப்பதாகக் காட்டிக்கொண்ட அவரை வள்ளல் என்றது பொதுப்புத்தி. அதிகாரம் போய்விடுமோ என்கிற அச்சத்தில் உடன் இருந்தவர்கள் அத்தனை பேரையும் சந்தேகப்பட்டு சர்வாதிகாரம் செய்த ஜெயலலிதாவை, ’இரும்புப் பெண்மணி’ எனச் சொல்லியது பொதுப்புத்தி.
பொதுப்புத்தியின் அபாயமும் உபாயமும் தெரிந்தவர் அண்ணா. அதனால்தான், ‘தம்பி, மக்களிடம் போ, அவர்களிடம் இருப்பதிலிருந்து தொடங்கு’ என ஆணையிட்டார். ஆனால், கருணாநிதி பெரும்பாலும் பொதுப்புத்திகளைப் பற்றிக் கவலைப்படுபவரில்லை. பொதுப்புத்தியின் முரண்களுக்குள் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் சூத்திரம் கருணாநிதிக்கு வாய்த்தது. அந்தச் சூத்திரம் சுணங்கியபோதுதான், ஈழத்தில் போராட்டக் குழுக்களுக்கிடையே நடந்த படுகொலைகள் குறித்து சகோதர யுத்தம் என அவர் கருத்து சொன்னபோது, அவரது தமிழினத் தலைவர் பட்டத்தை பொதுப்புத்தி கேள்வி கேட்டது.
அண்ணா வழியில் ஸ்டாலின்
ஸ்டாலினுக்கு பொதுப்புத்தியைக் கையாள்வதில் இருக்கும் சிக்கலுக்குக் காரணம், அவர் கடைப்பிடிக்க நினைப்பது 50 ஆண்டுகளுக்கு முந்தைய அண்ணாவின் நடைமுறை; ஆனால், பெரியாரிய நடைமுறையாளரான கருணாநிதியின் சகாப்தத்துக்குப் பிறகு அதைச் செய்ய வேண்டியிருப்பது இயல்பாகவே பண்பியல் மாற்றமாகவும், முரணாகவும், உறுத்தலாகவும் தோற்றம் தருகிறது.
ஸ்டாலினுக்கு பொதுப்புத்தியை கையாளுவதில் எழும் சிக்கல் என்பது அவரது தனிப்பட்ட குணாதிசயத்திலிருந்து எழும் சிக்கல். ஆரம்ப காலத்தில் ஸ்டாலின் பொறுப்புணர்ச்சிகளால் தீவிரத்தன்மை அடைபவராகவும், அதிகார உறவுகளோடு பதற்றம் நிறைந்தவராகவும், அரசியல் நட்புகளில் ரகசியத் தன்மை வாய்ந்தவராகவும் இருந்திருக்கிறார். ஆனால், திமுக என்பது இந்தச் சிக்கல்களின் எதிர்ப்புலத்தில் இயங்கப் பணிக்கும் மிகுந்த பொறுமையும், தேர்ந்த நகர்வும், அழுத்தமான குணப்பாங்கும், வெளிப்படைத்தன்மையும் கோரும் ஓர் இயக்கம்.
திமுகவின் அமைப்பும், கருணாநிதியின் கடுமைகளும் ஸ்டாலின் மீது செலுத்திய விசைகளே அவரது பொறுப்புணர்ச்சியை நிதானமாகவும், செயல்விளைவுகளில் தவறு நேர்ந்துவிடக் கூடாது என்கிற பதற்றத்தை அக்கறையாகவும், சந்தேகங்களைக் கலந்து ஆலோசிக்கும் குணமாகவும், விருப்பு வெறுப்பு எல்லைகளை அரவணைப்பாகவும் மாற்றிக் கொடுத்துள்ளன.
ஸ்டாலினின் சுமை
கருணாநிதி இயங்கிக்கொண்டிருந்த நாட்களில் கட்சி – ஆட்சித் தலைமையாகத் தன்னால் செயல்பட முடியும் என நம்பிக்கொண்டிருந்த ஸ்டாலின், கருணாநிதி இருந்த இடத்தில் தான் இருக்கப் போகிறோம் என்கிற பதற்றத்தைச் செயல் தலைவரான பிறகே உணர்ந்தார்.
அதன் வெளிப்பாடுதான், “களத்துல எவ்வளவு சுமையையும் சுமந்துடலாம். முடிவு எடுக்குறது எவ்வளவு பெரிய சுமைன்னும் கிட்டத்தட்ட ஐம்பது வருஷங்கள் இந்தச் சுமையை அவர் சுமந்திருக்கிறது எவ்வளவு பெரிய வலிங்கிறதும் இப்போதான் புரியுது! கோடிப் பேரைக் கொண்ட இயக்கம் இது. எந்த முடிவையும் எடுக்கும்போது எட்டுக் கோடி மக்களைக் கணக்குல எடுத்துக்கணும். தேர்தல் அரசியலுக்கு வந்து ஓட்டுக்காக சமூகச் சீர்திருத்தம் பேசுற இயக்கம் இல்லை இது; சமூகச் சீர்திருத்தத்துக்காகத் தேர்தல் அரசியலுக்கு வந்த இயக்கம். இந்த இரண்டுக்குமான இடைவெளி நிச்சயமா பெரிய சவால். எல்லோரையும் கலந்து, ஒவ்வொரு முடிவையும் நாலு முறை பரிசீலிச்சுட்டுதான் எடுக்குறேன். தப்பாயிடக் கூடாதுங்கிற எண்ணம்தான் பெரிய நெருக்கடி!” என்பது தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஸ்டாலின் அளித்த பதில்.
இந்தப் பதற்றமே அவரை செயல்விளைவுகளின் மீதான அச்சத்தோடு கடும் நிதானத்தைக் கடைப்பிடிக்க நிர்பந்தித்தது. ஆனால், ஸ்டாலின் ஒருவகையில் கொடுத்து வைத்தவர். வெறுமனே தேர்தல் அரசியலுக்கான வாக்குப் போராட்டமாக மட்டுமே இல்லாமல், களத்தில் சித்தாந்தத்தை முன்னிறுத்த வேண்டிய நிர்பந்தத்தைப் புறச்சூழல் ஏற்படுத்தியது.
தேர்தல் வாக்குறுதி சவாலைக் கடந்த ஜனநாயகச் செயல்பாடுகளைக் கோரிய இந்த இடத்தில்தான் ஸ்டாலின் இயங்குவதற்கான ஆதரவுத்தளம் விரிவானது. அவரது குறைகளையும் விமர்சனங்களையும் சரிசெய்துகொள்ளும் வாய்ப்பை வழங்கியது. ஸ்டாலினுக்கு அணுக்கமாக மாற்றுக் கட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தியது. கூட்டுச் செயல்பாடுகளைக் கோரியது. அரவணைப்பை நிர்பந்தப்படுத்தியது. 2016இல் தன்னுடைய குணாதிசயத்தால் கூட்டணியைத் தவறவிட்டார் என விமர்சிக்கப்பட்ட ஸ்டாலின் இந்த இடத்தில் தேறினார். சித்தாந்த வடிவத்தில் எழுந்து நின்ற சிக்கல்களுக்குத் தேவையான முகம் கொடுத்தார். அவரது பண்பியல் நெருடல்களைச் சரிசெய்து கொள்ளக் காலம் வழங்கிய வாய்ப்புகள் இவை. ஸ்டாலின் அவற்றைப் பயன்படுத்திக்கொண்டார்.
ஸ்டாலினின் ஆளுமைப் பண்பு என்ன?
ஆனால், தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்கவில்லை, நீட் தேர்வால் அனிதா உயிரிழந்தபோது தீவிரமாகச் செயல்படவில்லை என்கிற விமர்சனங்கள் ஸ்டாலின் மீது எழுந்தன. அரசுக்கு எதிரான அதிதீவிரமான போராட்ட உணர்வுகளோடு மக்கள் எழுந்த நிலையில், அதற்குத் தக்க வடிவம் கொடுக்கும் தீவிரத்தன்மையும், போராட்டக் குணமும் ஸ்டாலினிடம் இல்லை என விமர்சனம் எழுந்தது.
ஸ்டாலினின் ஆளுமையைப் புரிந்துகொள்ள இவை இரண்டும் தேர்ந்த உதாரணங்கள். ஒரு செயலை முன்னெடுக்கும்போது நகர் விளைவு, உப விளைவு, கூட்டு விளைவு போன்றவற்றைக் காட்டிலும் இறுதி விளைவிலேயே அவருக்கு அதிக கவனம் இருப்பதை இவை காட்டின.
அதிமுக ஆட்சியைக் கலைக்கும் செயலில் ஈடுபடுவது ஓர் அரசியல் சாகசம். ஒருவேளை அதில் சறுக்கினால் ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையே கேள்விக்குள்ளாகும். ஆட்சியைக் கலைப்பதில் வெற்றி பெற்றாலும், காலம் முழுக்கப் பதவி வெறி பிடித்தவர் என்கிற விமர்சனத்தை எதிர்கொள்ள நேரிடும். இரண்டுக்கும் பதிலாக ஆட்சியைக் கலைக்காமல் விட்டால், ஜனநாயகவாதி, மாநில சுயாட்சியில் நம்பிக்கையுள்ளவர் என்கிற சித்தாந்தச் சார்பு அடையாளம் கிடைக்கக்கூடும். ஸ்டாலின் இதையே தேர்வுசெய்தார். அரசியல் சாகசங்கள் தரும் கிளர்ச்சிகளில் நம்பிக்கை இல்லாதவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
அனிதாவின் மரணத்தின்போது இளைஞர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு நிலவியது. ஏதாவது செய்ய வேண்டும் என்கிற இளைஞர்களின் தவிப்புக்குப் போராட்ட வடிவம் கொடுக்க வேண்டிய புற அழுத்தம் ஸ்டாலினுக்கு இருந்தது. ஆனால், ‘அனிதாவைக் கொலை செய்துவிட்டு ஆட்சிக்காக திமுக நாடகமாடுகிறது’ என்கிற அவதூறுகளும் பொய்ப் பிரச்சாரமும் அப்போதே தொடங்கிவிட்டன. அனிதா மரணத்தையொட்டி நடத்தும் போராட்டம் வலுப்பெற்று ஒருவேளை வன்முறையில் முடிந்திருந்தால் அதுவும் ஸ்டாலினுக்கு மிகப் பெரும் கரும்புள்ளியாகவே சேர்ந்திருக்கும்.
எனவே, அவப்பெயர்கள் வரக்கூடிய, திருப்பித் தாக்கப்படுவதற்கோ, திசைமாறுவதற்கோ வாய்ப்புள்ள களங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதிலிருந்து ஸ்டாலின் விலகிக்கொண்டார்.
ஆனால், அவப்பெயர் உண்டாவதற்கான வாய்ப்புகள் இல்லாத, அதேநேரத்தில் திமுகதான் தவறு செய்தது என்கிற நீண்டகால விமர்சனங்கள் இருக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்காக மிகப் பெரிய தொடர் போராட்டங்களை நடத்தியும், மோடிக்குக் கறுப்புக் கொடி காட்டியும் கள அரசியலிலும், சித்தாந்த அரசியலிலும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.
கை கொடுத்த நிதானம்
ஒருகட்டத்தில் ஸ்டாலினின் நிதானப் போக்கு, ஆர்ப்பாட்ட குணமின்மை, உரத்த குரலில் அடித்துப் பேசும் ஜம்பமின்மை போன்றவை கடும் சலிப்பை ஏற்படுத்தின. தொண்டர்களுக்கே அயர்ச்சியூட்டக்கூடிய அளவுக்கு அவர் நிதானமாக இருந்தார்.
ஆனால், மிக மிகச் சிக்கலான பிரச்சினையான கருணாநிதியின் நல்லடக்க விவகாரத்தில் அதே நிதானமும் பொறுமையும் ஆர்ப்பாட்டமின்மையும் மென்மையும் ஸ்டாலினுக்கு உதவின.
அவர் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தில் அவர் பழக்கப்படுத்திக்கொண்ட நிதானம் அவரது அரசியல் வாழ்வை அர்த்தப்படுத்தியது. அந்த அர்த்தப்படுத்தலிலிருந்துதான் ஸ்டாலினின் அடுத்த அரசியல் அத்தியாயம் தொடங்குகிறது.
ஸ்டாலினின் நவீன யுகக் கனவுகள், திராவிடச் சித்தாந்தத்தின் மூலங்களை நவீன வடிவங்களாகக் கட்சி – ஆட்சி ரீதியில் முன்னெடுக்க வேண்டிய அவசியம், இதுவரையிலான நாயகத் தலைமைகளுக்கு மாற்றாக இயல்பாக உழைத்து முன்னேறிய அரசியல்வாதியாக முன்னிற்கும் தலைமை, ஆர்ப்பாட்டமில்லாத ஆளுமை குணம் இவை நான்கும்தான் ஸ்டாலினை வழிநடத்தப்போகின்றன.
ஆனால், இன்னமும் ஸ்டாலினின் கனவுகளுக்கு முற்றான வடிவம் கொடுக்கும் பண்பாட்டு மாற்றத்தை திமுக உள்வாங்கவில்லை. நிதானச் செயல்பாட்டுக்கும், அசட்டைத்தனமான கோட்டைவிடுதலுக்கும் பொதுப்புத்திக்கு வித்தியாசம் தெரியாது. அந்தச் சிக்கல் திமுகவுக்கு உள்ளும் புறமும் நீடிக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி அதற்கு ஓர் உதாரணம்.
இந்த யதார்த்த சிக்கலைக் களைந்து இதே நிதானம், ஆர்ப்பாட்டமின்மை, வெளிப்படைத்தன்மையுடன் ஸ்டாலின் தேர்தல் வெற்றிகளைக் குவிப்பாரேயானால் திராவிட இயக்க மரபில் உண்மையிலேயே புதிய அத்தியாயமாக அது இருக்கும்.
புதுயுகத்தின் பிரதிநிதிகளும், ஸ்டாலினின் கனவும்!
2011 தேர்தல் தோல்விக்குப் பிறகு ஸ்டாலின் மேற்கொண்ட தொடர் பயணங்கள், சந்திப்புகள்தான், கட்சி நிர்வாகத்தில் மண்டிக் கிடக்கும் பிரச்சினைகளை அவர் கண்கூடாகக் கண்டுகொள்ள உதவின. 2ஜி ஊழல் புகார்கள், நில அபகரிப்புப் புகார்கள் எனச் சிதைந்துகொண்டிருந்த கட்சியின் வாக்கு வங்கியைத் தக்கவைத்ததில் ஸ்டாலினின் பங்கு மிகப் பெரியது. அன்றைக்குக் கட்சியை மீட்டெடுக்க அவர் தொடங்கிய பயணம் இன்னமும் மிச்சமிருக்கிறது.
கருணாநிதி மறைவின் தாக்கம் இளம் தலைமுறையிடம் ஏற்படுத்தியிருக்கும் விவாதம் திராவிடச் சித்தாந்தத்தின் அடுத்த கட்டத்துக்கான விதை என்றே கொள்ளலாம். ஒருபக்கம் அறிவுப் புத்தாக்கத்தோடும், இன்னொரு பக்கம் உலகமயமாக்கலின் சிக்கலோடும் வளர்ந்துவரும் இளைஞர்களை திமுகவோடு அவர் எப்படி இணைக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே, அடுத்த தலைமுறைக்கும் சேர்த்துக் கட்சியை அவர் எப்படி வழிநடத்தப் போகிறார் என்பதை உறுதி செய்யும்.
எந்தவோர் அரசியல் கட்சியையும் ஆதரிப்பது பாவம் எனக் கருதிக்கொண்டிருக்கும், எல்லாரையும் வெறுத்து, யாருமே சரியில்லை எனச் சொல்வதே உன்னத அரசியல் என்கிற கருத்தாக்கத்துக்குப் பலியாகியிருக்கும் 90களிலும் புத்தாயிரத்திலும் பிறந்த தலைமுறைகளை நோக்கித் தன் அரசியலை ஸ்டாலின் நகர்த்த வேண்டும். இன்றைக்கு இந்தத் தலைமுறையைச் சித்தாந்தமயப்படுத்தாவிட்டால், நாளை அவர்கள் பணம், அதிகாரம் என்கிற தனிமனித லாப அரசியலுக்குப் பலியாகும் அபாயம் இருக்கிறது.
இன்றைய சவால்கள்
சமூக வலைதளங்கள் தொடங்கி, சமூகத்தின் எல்லாப் படிநிலைகளிலும் இயங்கிக்கொண்டிருக்கும் இளைஞர்களிடம் இயக்க உரையாடலை நிகழ்த்த வேண்டிய இடத்தில் திராவிட இயக்கம் உள்ளது. களத்தில் அதை வழிநடத்தும் பொறுப்பு திமுகவையே சாரும்.
இந்துத்துவ நெருக்கடி, வடக்கு இந்தியா – தெற்கு இந்தியா முரண்கள், இன தேசிய எழுச்சி எனச் சித்தாந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் மீள்விவாதமாயிருக்கும் திராவிடச் சித்தாந்தத்துக்கு இது மறுமலர்ச்சிக் காலம். ஒரு தலைமுறைக் கழிவைச் சந்திக்கும் நிலையில், தாராளமயமாக்க யுகத்துக்கு ஏற்ப கிராம – ஊரக – நகர்ப்புற இளைஞர்களை அரசியல்மயப்படுத்துவதே ஸ்டாலின் தன் கனவுகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான செயல் களமாக இருக்கும்.
கட்சியின் வெற்றிகளுக்குச் சேதாரம் ஏற்படுத்தாமல் தான் விரும்பும் இந்த நல்லியல்பு மாற்றங்களைச் சாதித்து முடிப்பதில்தான் ஸ்டாலின் என்கிற நிதானப் போராளியின் இரண்டாம் அத்தியாயம் மதிப்புறும்.
**கட்டுரையாளர்:**
விவேக் கணநாதன், எழுத்தாளர்.
தொடர்பு எண்: 9600904697.
மின்னஞ்சல் முகவரி**: [writetovivekk@gmail.com](mailto:writetovivekk@gmail.com)
**முகநூல் பக்கம்:** [விவேக் கணநாதன்](https://www.facebook.com/vivek.saamurai)
�,”