சிறப்புக் கட்டுரை: கோடம்பாக்கத்தின் வெண்ணிறக் கனவுகள்!

Published On:

| By Balaji

சா.வினிதா

திரைப்படங்களில் நடிப்பவர்கள் வெள்ளை, சிவப்பு அல்லது சந்தன நிறமாகத்தான் இருக்க வேண்டுமென்ற மாயை உடைந்து பல ஆண்டுகளாகிவிட்டன. 1980களில் பாலுமகேந்திரா, பாலசந்தர், பாரதிராஜா போன்ற இயக்குநர்கள், இதற்கு முன்னுதாரணம் வகுத்துவிட்டனர். அவர்கள் காட்டிய தடத்தில் செல்லும் இளைய தலைமுறை இயக்குநர்களின் எண்ணிக்கையும் தற்போது சீராக அதிகரித்துவருவது பாராட்டப்பட வேண்டிய அம்சம். இதனையும் மீறி, பழைமையை வெளிப்படுத்தும் விதமாகச் சில துருத்தல்கள் தலைநீட்டத்தான் செய்கின்றன.

தென்தமிழக கிராமப் பகுதிகளில் வாழ்ந்துவரும் ஒரு கிராமத்துப் பெண் கதாபாத்திரத்துக்குக் கண்டிப்பாக ஐஸ்வர்யா ராய் தேவையில்லை. அந்தப் பாத்திரத்தைச் சிறப்புறச் செய்யக்கூடிய அவரது நடிப்புத் திறமை பற்றி, நாம் பேசப் போவதில்லை. அந்த வட்டாரத்திற்கான முகமோ, நிறமோ, உடல்வாகோ இல்லாத ஒரு நடிகை அந்தக் கதாபாத்திரத்தை ஏற்க வேண்டிய அவசியமென்ன? இந்தக் கேள்வியே, நல்ல சினிமா ரசிகனுக்குள் எழும்.

**திரைப்படத்தில் நிறத்தின் பங்கு என்ன?**

இந்த விவகாரம் பற்றி இப்போது ஏன் பேச வேண்டும்? இதற்கான காரணத்தை நமக்குத் தந்துள்ளார் நடிகர் கார்த்தி சிவகுமார். இவரது நடிப்பில் ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் இன்று வெளியாகிறது. இந்தப் படம் குறித்த சிறப்புப் பேட்டியொன்றில், நாயகிகளுள் ஒருவரான சாயிஷாவைக் கிராமத்துப் பெண்ணாக மாற்றுவதற்குக் கடுமையாகக் கஷ்டப்பட்டதாகக் கூறியிருந்தார் கார்த்தி. சாயிஷாவை கிராமத்துப் பெண்ணாக மாற்றுவதற்கு நான்கு லேயர் மேக்கப் போட்டதாகத் தெரிவித்திருந்தார். அதாவது, அவரை கறுப்பாகத் திரையில் காட்ட மெனக்கெட்டதைத்தான் அவ்வாறு சொல்லியிருந்தார்.

அவரது பேச்சிலிருந்து இரண்டு கேள்விகள் இயல்பாக எழுகின்றன. முதலாவது, அவ்வளவு வெளுப்பான நிறமுடைய ஒரு பெண்ணை கறுப்பாக மாற்றி நடிக்க வேண்டிய அவசியமென்ன? இரண்டாவது, இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் தோற்றத்துடனும் திறமையுடனும் தமிழ்த் திரைப்பட உலகில் வேறு நடிகைகள் எவரும் இல்லையா?

இயக்குநர் விஜய் மூலமாகத் தமிழில் ‘வனமகன்’ படத்தில் அறிமுகமானவர் சாயிஷா. அந்தப் படத்தில் நடித்ததன் மூலமாக, அவர் தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்தமானவராகிவிட்டார். தற்போது தமிழில் புகழ்பெற்றிருக்கும் நாயகர்கள் சிலரது படங்களில் நடித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாகவே, அவர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிப்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.

**தேர்வின் அடிப்படை எது?**

ஒரு கதாபாத்திரத்தின் சிறப்பைப் பிரதிபலிக்க நுணுக்கமான, விசேஷமான ஒப்பனை தேவைதான். ஆனால், ஒரு கிராமத்துப் படத்தில் நடிக்கும் காரணத்திற்காகவே சாயிஷாவின் வெண்ணிறத்தைக் கறுப்பாக்க ஏன் முயற்சிக்க வேண்டும்?

“கதாநாயகி என்ற பாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது அதற்கேற்ற நடிகைகளைத் தேர்வு செய்வதில் இயக்குநர்கள் கவனமாக இருப்பார்கள். அப்படி இல்லாமல் வெறுமனே ரசிகர்களைக் கவர்வதற்காக என்று கதாநாயகி கதாபாத்திரத்தை அமைக்கும்போது இந்த மாதிரியான தேர்வுகள் தவிர்க்க முடியாமல் போகின்றன” எனக் கூறுகிறார் பத்திரிகையாளர் கவிதா முரளிதரன். தான் வெண்ணிறமாக இல்லாததால் ஆரம்ப கட்டத்தில் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பிரியங்கா சோப்ரா சமீபத்தில் கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டும் கவிதா, அழகு இருந்தும், வெளுப்பு நிறம் இல்லாத சில நடிகைகள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறுகிறார்.

ஒரு படத்தில் கதாபாத்திரத்திற்கேற்ற நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்வதில், இயக்குநர்களே பெரும்பங்கு வகிக்கின்றனர். சில நேரங்களில் மட்டுமே விதிவிலக்குகள் நிகழும். ஏனென்றால், கதைக்கேற்ற நபர்களைத் தேர்வு செய்யும்போதுதான், அந்தக் கதை உயிரோட்டமானதாக இருக்கும்.

பொதுவாக, தென்னிந்தியாவில் வசிக்கும் பெண்களில் பெரும்பாலானவர்களின் நிறம் கருப்பு அல்லது மாநிறமாகவே உள்ளது. அதிக வெப்ப மண்டலப் பகுதியில் வாழ்ந்துவருவதாலும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதாலும், இந்த நிற அமைப்பு நம் தோற்றத்தில் நிறைந்துள்ளது. இதனைப் பிரதிபலிக்கிறேன் பேர்வழி என்று, கிராமத்தில் உள்ளவர்கள் அனைவருமே கறுப்பாகத்தான் இருப்பார்கள் என்ற முடிவைத் தமிழ்த் திரைப்படங்கள் முன்வைக்கின்றன. அதனை நடைமுறைப்படுத்துவதற்காக, மும்பையிலிருந்து அழைத்துவரப்படும் நாயகிகள் கிராமத்துப் பெண்ணாக நடிக்கும்போது அவர்களுக்குக் கறுப்பு பூசி அழகு பார்க்கின்றனர்.

‘புதிய வார்ப்புகள்’ படத்தில் ரதியை அறிமுகம் செய்து வைத்து, நாற்பதாண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற விவாதத்துக்கு வழிவகுத்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா. ராதிகா, ராதா, அருணா போன்ற வெளுப்பு நிறம் அற்ற நடிகைகளைத் தன் படத்தில் இடம்பெறச் செய்தவரும் இவர்தான் என்பது ஆகப் பெரிய முரண்.

ஷோபா, சரிதா, அர்ச்சனா போன்ற திறமையான, அழகான, வெளுப்பு நிறம் அற்ற நடிகைகள் எண்ணிக்கை தமிழில் அநேகம். இவர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டனர். நடிப்புத் திறமையை வெளிப்படுத்த நிறம் இவர்களுக்குத் தடையாக இருக்கவில்லை. இயக்குநர் சீனு ராமசாமியின் படங்கள் பாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்கள் தேர்வுக்குச் சமகால உதாரணங்களாக இருக்கின்றன. கதாநாயகியின் பாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள நீர்ப்பறவை என்ற படத்தில் நடித்த சுனைனா, கதாபாத்திரத்துக்கும் கதைக்கும் நன்றாகவே பொருந்தியிருப்பார். கதைக்களத்துக்கான தோற்றத்தையும் நடவடிக்கைகளையும், நன்கு பிரதிபலித்திருப்பார். நீர்ப்பறவை படத்தின் இயக்குநரான சீனு ராமசாமி இயக்கிய தர்மதுரை படத்தில் மூன்று நாயகிகளுக்கான கதாபாத்திரங்களும் தனித்துவத்தோடு அமைக்கப்பட்டிருக்கும். ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் அந்தப் பாத்திரங்களில் பொருந்திப் போயிருப்பார்கள்.

தர்மதுரை, தேவி ஆகிய படங்களில் தமன்னா நடித்தார். தேவி படத்தில் அவரைக் கிராமத்துப் பெண்ணாகக் காட்டுவதற்காக, அவரைக் கறுப்பாகக் காண்பிக்க முயற்சித்திருப்பார் அதன் இயக்குநர் ஏ.எல்.விஜய். தர்மதுரை படத்தில் மாநகரத்தில் வாழும் மருத்துவக் கல்லூரி மாணவியாக நடித்திருப்பார் தமன்னா. அவரது பாத்திரம் நாகர்கோயில் வட்டாரத்திலிருந்து வந்தது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். அதே படத்தில், மதுரை வட்டாரத்தைச் சேர்ந்த கிராமத்துப் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பார். தமன்னா, ஐஸ்வர்யா இரண்டு பேரின் கதாபாத்திரங்களை மாற்றியிருந்தாலும் இருவருமே நன்றாகத்தான் நடித்திருப்பார்கள். ஆனால், காஸ்ட்டிங் எனப்படும் பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுக்கும் வித்தை அந்தப் படத்தில் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

இதேபோல, பரதேசி படத்தின் கதாநாயகி வேதிகாவையும் திரையில் கறுப்பாகக் காட்டியிருப்பார்கள். வேதிகா பற்றிப் பேட்டியொன்றில் குறிப்பிட்ட அப்பட இயக்குநர் பாலா, அவர் கலராக இருக்கிறார்; ஆனால் அழகு இல்லை என்று கிண்டலடித்திருந்தார். வேதிகாவைத் தன் படத்தில் பாலா நடிக்க வைத்ததற்கு அவரது நடிப்புத் திறமை காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், இதுபோன்ற சொல்லாடல்கள் திரைக்குப் பின்னால் இருக்கும் வழக்கங்களை வெளியே கொண்டுவருகின்றன.

“நாங்களும் தமிழ்நாட்டு நடிகைகளைப் பயன்படுத்தவே விரும்புகிறோம். ஆனால், நடிகைகள் யாரும் கிடைப்பதில்லை. தமிழ்ப் பெண்கள் நடிக்க வராமல் இருப்பதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது” என்கிறார் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் இயக்குநர் பாண்டிராஜ். அதே நேரத்தில் எந்த நடிகையை எந்தக் கதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட இயக்குநரின் முடிவு என்கிறார். “இந்தப் படத்தின் கதைக்கு சாயிஷா பொருந்துவார் என்று தோன்றியதால்தான் அவரைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளேன். இந்தப் படத்தில் இன்னொரு நாயகியாக நடித்துள்ள பிரியா பவானி சங்கர் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான்” என்கிறார் அவர்.

எந்த நடிகையை எந்தப் பாத்திரத்தில் பயன்படுத்துவது என்பது குறித்த இயக்குநரின் முடிவு கதையோடு தொடர்புகொண்டதாக இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால், பல சமயம் இங்கே அப்படி நடப்பதில்லை என்பதுதான் யதார்த்தம். சாயிஷா குறித்த கார்த்தியின் வார்த்தைகளில், அவரது வெளுப்பான நிறம் பற்றிய ஆச்சரியமும் பெருமிதமும் தென்படுகின்றன. நிறத்தைப் பொறுத்தோ, தோற்றத்தைப் பொறுத்தோ, ஒருவருக்கான மதிப்பும் மரியாதையும் நிர்ணயிக்கப்படக் கூடாது என்னும் சிந்தனையின் அடிப்படையில்தான் இதுபோன்ற பெருமிதங்களையும் வியப்புகளையும் கேள்விக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.

“சென்ற தலைமுறையைச் சேர்ந்த இயக்குநர்களில் பாலு மகேந்திரா, பாலசந்தர் ஆகிய இயக்குநர்கள் நிறத்தை வைத்து நாயகிகளைத் தேர்வுசெய்யாமல் நடிப்புத் திறமை, பாத்திரத்துக்கேற்ற தோற்றம் ஆகியவற்றை வைத்துத் தேர்வு செய்தார்கள். இதுபோன்ற நடிகைகளுக்கு அதிக வாய்ப்புகளைக் கொடுக்கும் முயற்சியை அடுத்து வந்த இயக்குநர்கள் செய்திருக்க வேண்டும். பெரும்பாலான இயக்குநர்கள் இதைக் கவனத்தோடு செய்வதில்லை. இதுபோன்ற தடைகளை தாண்டி, தன்னுடைய திறமையினால் முன்னேறி வந்திருக்கின்ற நடிகைகளுக்குக் கிராமத்துப் பெண் கதாபாத்திரங்களில் மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், அனைத்துப் பாத்திரங்களிலும் வாய்ப்பு கொடுப்பதைப் பரவலாக்க வேண்டும்” என்று கவிதா கூறுவது தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் இருப்பவர்கள் மனங்கொள்ளத்தக்கது.

**மின்னஞ்சல் முகவரி: feedback@minnambalam.com**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share