ராஜன் குறை
“அச்சம் என்பது மடமையடா… ஆறிலும் சாவு, நூறிலும் சாவு” என்று பாடல் கேட்டிருக்கிறோம். “அஞ்சுவது அஞ்சாமை பேதமை” என்றும் கேட்டிருக்கிறோம். கொரோனா காலத்தில் பல அச்சங்கள் சாத்தியமாக இருக்கின்றன. நோயைக் கண்டு, அது கொண்டுவரும் மரணத்தைக் கண்டு அச்சம்; பொருளாதார வீழ்ச்சி, அதனால் ஏற்படும் கடும் பாதிப்புகளைக் கண்டு சமூகம் என்னவாகுமோ என்ற அச்சம்; பிரதமர் மோடியின் தலைமையில் இயங்கும் மத்திய அரசு, எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் இயங்கும் தமிழ் மாநில அரசு ஆகியவற்றின் மெத்தனம், திறமையின்மை, எதேச்சதிகாரப் போக்கு ஆகியவற்றைக் கண்டு இந்தியாவின், தமிழகத்தின் எதிர்காலம் குறித்த அச்சம் எனப் பல அச்சங்கள் பலர் மனத்திலும் குடியேறும் வாய்ப்பு இருக்கிறது. இந்த அச்சங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை அலசுவதே இந்தக் கட்டுரை.
**நோயைக் கண்டு அச்சம்**
நோயைக் கண்டு அஞ்சுவதற்கு மத்திய, மாநில அரசாங்கங்களே முக்கிய காரணம். மத்திய அரசு முதலில் ஒரு நாள் பரிசோதனை அல்லது குறியீட்டு அளவிலான ஊரடங்கு என்று கூறியது. அது முடிந்த இரண்டாம் நாளே நான்கே நான்கு மணி நேர அவகாசம் கொடுத்து 21 நாட்கள் தேசம் முழுவதற்குமான ஊரடங்கை அறிவித்தது. ஊரடங்கே அறிவிப்பதானாலும் அதை தேவையான அவகாசம் கொடுத்து அல்லது போதுமான திட்டமிடலுடன், அனைத்து தரப்பினரின் சிக்கல்களையும், தேவைகளையும் கலந்தாலோசித்து செய்திருந்தால் ஏதோ மாபெரும் ஆபத்து நம்மைச் சூழ்ந்துகொண்டுள்ளது என்ற எண்ணம் ஏற்பட்டிருக்காது. தமிழ் மாநில அரசும் பெரும் பீதியை உருவாக்கும் வகையிலேயே செயல்பட்டது. காவல்துறை தெருவில் செல்பவர்களை தாறுமாறாக தாக்கியும், அவமதித்து இழிவு செய்தும் ஊரடங்கை கடுமையாகச் செயல்படுத்தியது.
இப்போது 47 நாட்கள் கடந்த பின், லாக் டெளனால் நோய் பரவுதலை முற்றிலும் தடுக்க முடியாது என்பது நிதர்சனமாகி விட்டது. சோதனைகளை அதிகரித்தால் நோய் தொற்றியவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அறிகுறியற்று நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. நோய்த் தொற்று முற்றிலும் நீங்கிய பிறகுதான் லாக் டெளனை தளர்த்த வேண்டும் என்றால் அதற்கு எத்தனை மாதங்கள் ஆகும் என்பது நிச்சயமில்லை என்பதே யதார்த்தமாக இருக்கிறது. அதனால் திடீரென அரசாங்கங்கள் நாம் கொரோனா நோயுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என கூறத் தொடங்கி விட்டன. மக்கள் மத்தியில் இப்போது கடும் குழப்பம் நிலவுகிறது. இந்த நோய் ஆபத்தானதா, இல்லையா; லாக் டெளன் தளர்வுக்குப் பின் பணிக்குச் செல்வதா, வீட்டு வேலை செய்பவர்களை அனுமதிப்பதா, யாருமே வீட்டுக்கு வரக்கூடாதா என்பது போன்ற பல கேள்விகளுக்குச் சரியான விடை தெரியாமல் பலவித அச்சங்களுடன் வாழ்கிறார்கள். காய்கறிகளை ஒரு பக்கெட் நீரில் போட்டு குளிப்பாட்டி, அலசி எடுத்து பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள்.
அரசு இந்த 47 நாட்களில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியதுபோல எத்தனை பேரை சோதனை செய்ததில் எத்தனை பேருக்குத் தொற்று உறுதியானது, தொற்று உறுதியானவர்களில் அறிகுறியற்றவர்கள் எத்தனை பேர், நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், மரணமடைந்தவர்களில் பிற இணை நோய் காரணிகள் (கோ மார்பிடிடி என்னும் பிற நோய்கள்) உள்ளவர்கள் எத்தனை பேர், எந்த வயதினர் என்பது போன்ற பல விவரங்களை முழுமையாக வெளியிடாமல், அதிகரிக்கும் எண்ணிக்கையை மட்டும் காட்டி பயமுறுத்தினார்கள். இப்போது லாக் டெளனைப் பொருளாதார காரணங்களால் இதற்கு மேலும் நீடிக்க முடியாது என்னும் நிலையில் நாம் கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வோம் என்று சொல்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சொல்வதுபோல முதலில் இந்த நோய் வந்தவர்கள் எல்லாம் இறந்துவிட மாட்டார்கள் என்பதை அரசுகள் உரத்த குரலில் பிரச்சாரம் செய்யாவிட்டால் அவர்களால் சமூகத்தில் இயல்பு நிலையை மீட்டெடுக்க முடியாது. பல்வேறு சமூகச் சிக்கல்கள் உருவாகும்.
கொரோனா நோயைக் கண்டு அனைவரும் அஞ்ச வேண்டியதில்லை. வயதானவர்கள், பலவீனமானவர்கள், ஏற்கனவே நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனா நோயின் இறப்பு விகிதம் அதிகபட்சம் மூன்று சதவிகிதம் மட்டுமே என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏராளமானவர்கள் தொற்றிலிருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
**பொருளாதார வீழ்ச்சி குறித்த அச்சம்**
“அஞ்சுவது அஞ்சாமை பேதமை” என்ற சொல்லுக்குப் பொருத்தமானது பொருளாதார நிலைதான். ஏற்கனவே, கொரோனாவுக்கு முன்னமே பொருளாதார மந்த நிலை உருவாகியிருந்ததையும், உற்பத்தி குறைந்து வந்ததையும், பல தொழிலதிபர்கள் தற்கொலை செய்துகொண்டதையும் மறந்துவிட முடியாது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி குளறுபடிகள் ஆகியவற்றால் சிறு, குறு தொழில்கள் தள்ளாட, அடித்தட்டு மக்களின் வாங்கும் சக்தி மிகவும் பலவீனமடைந்தது. அப்போதே பொருளாதார நிபுணர்கள் மக்கள் கையில் பணம் சென்று சேர வேண்டும் எனக் கூறத் தொடங்கினார்கள்.
இப்போது நிலை மேலும் பன்மடங்கு மோசமடைந்துள்ளது. விவசாயிகள், தொழில் துறையினர், சிறு, குறு தொழில்முனைவோர், வர்த்தகர்கள் அனைவரும் பெரும் பொருள் இழப்பை, வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளனர். பெருவாரியான அன்றாட வருவாயை நம்பியுள்ள நாற்பது சதவிகித மக்கள் தங்கள் கையிருப்பையும், வாழ்வாதாரங்களையும் இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர். புலம்பெயர்ந்து வேலை செய்துவந்த கோடிக்கணக்கானவர்கள் திடீரென வேலையின்றி, சொந்த ஊருக்கும் செல்ல வழியின்றி அந்நிய நிலங்களில் மாட்டிக்கொண்டதில் பெரும் அவதியுற்று, வேலை செய்வதிலேயே விருப்பத்தை இழந்துவிட்டனர்.
இத்துடன் சேர்ந்தாற்போல உலக பொருளாதாரமே பெரும் மந்த நிலையை நோக்கிச் செல்வதால் இதெல்லாம் எப்படி சீர்பெறும், மீண்டும் உற்பத்தியும், வர்த்தகமும் பெருகும், பொருளாதார வளர்ச்சி என்பது எப்படி மீண்டும் சாத்தியமாகும் என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில் மத்திய மாநில அரசுகளின் ஆளும் திறனை நினைத்தால் எதிர்காலம் குறித்த அச்சம் பேரச்சமாகவே மாறிவிடும் சாத்தியம் இருக்கிறது.
**அரசாங்கங்களின் திறமையின்மையும், எதேச்சதிகாரமும்**
கொரோனா நோயுடன் அனைவரும் இணைந்து போராட வேண்டும் என்பது போன்ற சென்டிமென்ட்களால் அரசாங்கத்தை விமர்சிப்பதே பொதுநலனுக்கு எதிரானது போலவும், எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என்றும் ஜோடிப்பது சாத்தியமாகியது. ஆனால், இன்று நிதானமாக நடந்தவற்றை பரிசீலித்து யோசிக்கும்போது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற செயல்கள், எதேச்சதிகாரப் போக்கு யாருக்கும் தெளிவாக விளங்கும்.
ஊரடங்கு அறிவிக்கும்போதே யார் யார் சொந்த ஊர் செல்ல முற்படுவார்கள் என்பது குறித்து யோசித்து அதற்கு வகை செய்திருக்க வேண்டும். எல்லா நகரங்களிலும் லட்சக்கணக்கானவர்கள் பேருந்து, ரயில் நிலையங்களில் குவிந்த காட்சி பரிதாபமானது மட்டுமல்ல, லாக் டெளனின் நோக்கத்தையே கேலிக்குள்ளாக்கியது, முறியடித்தது. 21 நாட்கள் வேலையோ, கல்வியோ இல்லாவிட்டால், நோய்த் தொற்று எங்கும் பரவுகிறது என்றால் எல்லோருமே சொந்த ஊருக்குச் செல்லவும், குடும்பத்தினருடன், சுற்றத்தாருடன் இணைவதற்கும்தான் விரும்புவார்கள். இந்த உளவியலை, வாழ்வியல் தேவையை மத்திய மாநில அரசுகள் முற்றிலும் அலட்சியம் செய்து கோடிக்கணக்கான மக்களை சொல்லொண்ணா இன்னல்களுக்கு ஆளாக்கியது எதேச்சதிகாரத்தின் உச்சம் என்றால் மிகையாகாது. இந்த தவறு லாக் டெளன் தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே புலனான பின்பும், உடனடியாக அந்த மக்கள் ஊர் திரும்ப அவசரக் கால ஏற்பாடுகளைச் செய்யாமல் அவர்கள் நடந்து செல்லவும், பசியிலும், விபத்துகளிலும் உயிரிழக்கவும் செய்து வேடிக்கை பார்த்தன அரசாங்கங்கள். மக்கள் உயிரைக் காப்பதற்காகத்தானே லாக் டெளன்? பிறகு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நடந்தே சென்று மாய்ந்தவர்களெல்லாம் மக்கள் இல்லையா? 47 நாட்கள் ஆகியும் இந்த பிரச்சினை ஓயவில்லை. அதற்கடுத்த பெரிய சிக்கல் லாக் டெளன் தளர்த்தப்பட்டு தொழில்கள் மீண்டும் தொடங்கும் நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஊருக்குச் செல்லவே விரும்புகிறார்கள். அவர்களுக்கான மாற்று என்ன என்பது தொழில்முனைவோருக்குத் தெரியவில்லை. வேலை செய்ய விருப்பமற்றவர்களை கொத்தடிமைகளாகவா சிறை வைத்து வேலை வாங்க முடியும்? ஒருவேளை அதைத்தான் செய்வார்களோ, என்னவோ.
அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளுக்கும் பின்னால் இருப்பது கணித ரீதியாக நோய்த் தொற்று பரவலைக் கணிக்கும் கணினி தொழில்நுட்பம். உயிரியல் கணிதக்காரர்கள் கையிலுள்ள மென்பொருள் நிரலியில் பல்வேறு தகவல்களைப் பதிவு செய்து கணக்கு போடச் சொன்னால் அது இன்னம் மூன்று மாதங்களில் பல லட்சம் பேர் இறந்துவிடுவார்கள் என்பது போல ஒரு கணக்கைக் கூறிவிடும். நாம் தரும் தரவுகளுக்கு, கூறும் அளவீடுகளுக்கு ஏற்பத்தான் கணிப்பு இருக்கும். கணிதம் தொடர்புடையது என்பதால் இது உயிரியலுடன் தொடர்புடையது கிடையாது. உயிரியலை அப்படி கணிதமயமாக்க முடியாது. இந்த கணிதம் கிட்டத்தட்ட ஜோதிடம், ஆரூடம் போலத்தான். உயிரியல் செயல்பாட்டில் என்ன நடக்கும் என்பதை மெய்யுலகின் உயிரியல் நிகழ்வுகள்தான் தீர்மானிக்க முடியும். கொரோனா வைரஸ் எவ்வளவு தீவிரமான, பலவீனமான வடிவங்களை எடுக்கிறது, எப்படி உருமாறிப் பரவுகிறது போன்றவையெல்லாம் கணிதத்தால் கணிக்க முடியாது. இந்தியாவில் பரவும் வைரஸ் அமெரிக்காவில், ஐரோப்பாவில் பரவிய வைரஸ் போலவே செயல்படும் என்று கூற முடியாது. ஆனால், வெறும் எண்ணிக்கைகளைக் கொண்டு போடும் கணக்குகளால் அரசு வழிநடத்தப்படுவதால் முதலில் 21 நாட்கள் லாக் டெளன் முடிந்த பிறகும் மத்திய அரசு முற்றிலும் எதிர்பாராத வகையில் மேலும் 19 நாட்கள் லாக் டெளனை நீடித்தது. அதன்பின் மேலும் 14 நாட்கள் நீடித்தது. இதற்கு மேலும் நீடிக்க முடியாது என்ற நிலையில் கொரோனாவுடன் வாழ வேண்டியதுதான் என்று கூறுகிறார்கள். இதே முடிவை ஏப்ரல் 14ஆம் தேதியே எடுத்திருக்கலாம் என்பதுதான் நிதர்சனம்.
அரசாங்கம் லாக் டெளனை நடைமுறைப்படுத்துவதில் காட்டிய தீவிரத்தை, மக்களின் துயர் துடைப்பதில் காட்டவில்லை. இதன் பலனாக பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு, மக்கள் மனத்தில் அச்சமும், குழப்பமும், அவநம்பிக்கையும், விரக்தியும் பரவிய பிறகு, நோய் தொற்று நீங்காத நிலையில் நாம் கொரோனாவுடன் வாழப் பழக வேண்டும் என்று கூறி லாக் டெளனை நீக்கிவிட்டு மீண்டும் சமூகப் பொருளாதார இயக்கத்தைத் தொடங்கச் சொல்கின்றன அரசாங்கங்கள். டாஸ்மாக்கை திறந்துவிட்டுக் குடிக்கச் சொல்கிறது தமிழக அரசு. ஒன்று மட்டும் உயிரியல் கணித ஜோதிட உதவியுடன் கூறிக்கொள்ளலாம்; லாக் டெளன் இல்லாவிட்டால் நோய் தொற்று மேலும் கடுமையாக பரவியிருக்கும் என்பதுதான் அது. சாத்தியம்தான்; ஆனால் அதற்காகக் கொடுக்கப்பட்ட விலை என்ன என்பதுதான் சிக்கலான கேள்வி.
மேலும், அந்தக் கணக்கு மட்டுமே எதிர்காலத்தை உறுதி செய்துவிடாது. நோய்த் தொற்று, மாபெரும் பொருளாதார சரிவு இரண்டையுமே இந்த அரசாங்கங்கள் தொடர்ந்து எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்னும்போது, அவர்கள் தான்தோன்றி நடவடிக்கைகளை, செயலின்மையைக் கவனிக்கும் யாரும் எப்படி அச்சப்படாமல் இருக்க முடியும்? ஆனால் மக்கள் தங்கள் மேல், தங்கள் செயலாற்றலின் மேல் நம்பிக்கை வைத்து இந்த இடர்பாடுகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும். அரசாங்கத்தையும் மக்கள்தான் வழி நடத்த வேண்டும்.
**கட்டுரையாளர் குறிப்பு:**
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com�,”