சிறப்புக் கட்டுரை: கிரிக்கெட்டில் காணாமல் போனவை!

Published On:

| By Balaji

1877ஆம் ஆண்டு மார்ச் 15 டெஸ்ட் கிரிக்கெட் என்னும் வரலாறு பிறந்த தினம். அன்றிலிருந்து இந்த 141 ஆண்டுகால கிரிக்கெட் வரலாறானது 60 ஓவர் கிரிக்கெட், 50 ஓவர் கிரிக்கெட், 20 ஓவர் கிரிக்கெட், பவர்ப்ளே, டக்வொர்த் – லீவிஸ், ஃப்ரீ ஹிட், டிஆர்எஸ் ரிவ்யூ எனப் போட்டி வடிவங்களிலும், அதன் விதிமுறைகளிலும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. முன்பெல்லாம் மைதானத்தில் ஸ்கோர் போர்டு என்று ஒன்று இருக்கும். அதில் ஒவ்வொரு பந்துக்கும் ரன்கள், ஓவர்கள், விக்கெட்டுகளை மாற்றம் செய்ய அதற்கென தனியே ஒரு குழுவும் இருக்கும். தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் வரவால் சர்வதேச போட்டிகளிலிருந்து அந்த ஸ்கோர் போர்டு முறை ஒழிக்கப்பட்டது. இது மட்டுமா? அன்றைய கால கிரிக்கெட்டில் இருந்துவந்த பல முக்கிய அம்சங்கள் இந்த நவீன கால கிரிக்கெட்டில் காணாமலே போய்விட்டது.

**டெஸ்ட் விடுமுறை**

ஐந்து நாட்கள் நடக்கும் ஒரு டெஸ்ட் போட்டியின் இடையே ஒருநாள் கட்டாய விடுமுறை என்பது வழக்கத்தில் இருந்துவந்தது. ஆம்; உண்மைதான். மூன்றாவது நாளுக்கு மேல் வீரர்கள் தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள கோல்ஃப் விளையாடுதல், மீன் பிடித்தல் ஆகிய காரணங்களுக்காக அந்த விடுமுறை அளிக்கப்பட்டது. நாளடைவில் அது மறைந்து சூரிய கிரகணம் (மும்பை 1980), பொதுத் தேர்தல் (லார்ட்ஸ் 1970) என அவ்வப்போது விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த வழக்கமும் கைவிடப்பட்டது.

**ரசிகர்களின் அன்பு மழை**

இன்று ஒரு பேட்ஸ்மேன் அரை சதமோ, சதமோ அடித்தால் ஹெல்மெட்டைக் கழற்றி பேட்டை காற்றில் வீசுவது, தரையில் முத்தமிடுவது இப்படி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். ஆனால், முன்பு ஒரு பேட்ஸ்மேன் அரை சதம் அல்லது சதம் கடந்தால் பார்வையாளர்கள் மைதானத்துக்குள் வந்து அவர்களை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றனர். 1994ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில் சச்சின் தெண்டுல்கர் அதிரடியாக 82 ரன்கள் குவித்தார். அந்தப் போட்டியில் அவர் அரைசதம் கடந்த பின் [பார்வையாளர் ஒருவர் மைதானத்துக்குள் வந்து அவரை முத்தமிட முயற்சிப்பார்](https://www.youtube.com/watch?v=WfXtkwv2WS8). அதெல்லாம் இன்றைய கிரிக்கெட் ரசிகர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

**பயிற்சி ஆட்டங்கள்**

ஓர் அணி மற்றொரு நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்து போட்டிகளில் ஆடும் முன் அங்குள்ள உள்ளூர் அணிகளுடன் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்பது வழக்கம். 1996ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடருக்கு முன் இந்தியா பங்கேற்ற பயிற்சி ஆட்டங்களில் இந்தியாவைச் சேர்ந்த விக்ரம் ரத்தோர் 749 குவித்தது அப்போது பெரிதாகப் பேசப்பட்டது. அதே போல் 1992-93ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா தொடரின் பயிற்சி போட்டியில் அஜய் ஜடேஜா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் குவித்ததை யாராலும் மறக்க முடியாது. அத்தகைய பயிற்சி ஆட்டங்கள் தற்போது குறைந்துவருகின்றன.

**காணாமல் போன மைதானங்கள்**

நியூசிலாந்தின் கரிஸ்பரூக், சண்டிகரில் உள்ள செக்டார் 16, மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள ஆன்டிகுவா ரிகிரியேசன் மைதானம் இவையனைத்தும் பல சர்வதேசப் போட்டிகளை நடத்திய ஆடுகளங்கள். ஆனால், தற்போதைய ஐசிசி காலண்டரிலிருந்து இவையனைத்தும் காணாமல் போய்விட்டன.

**உள்நாட்டு அம்பயர்கள்**

நவீன கிரிக்கெட்டில் அம்பயர்களுக்கு உதவ டிஆர்எஸ், ஸ்னிக்கோ மீட்டர் தொழில்நுட்பம், ஸ்டம்பில் ஒளிரும் பைல்ஸ் இப்படிப் பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. ஆனால் முன்பெல்லாம் பெரும்பாலான போட்டிகளில் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அம்பயர்களாக இருப்பர். அவர்கள் வழங்கும் ஒவ்வொரு தீர்ப்பையும் குறிப்பாக எல்பிடபிள்யூவை ஆராயாதவர்கள் யாரும் இருக்க முடியாது. காரணம், உள்ளூர் அம்பயர்கள் சொந்த நாட்டுக்கு சாதகமாகத் தான் தீர்ப்புகளை வழங்குவார்கள் என்ற கருத்து நிலவிவந்தது.

**இயற்கை உபாதைகள்**

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு இங்குள்ள உணவுமுறைகள் ஒப்புக்கொள்ளாமல் பலமுறை இயற்கை உபாதைகளில் சிக்கியுள்ளனர். 1993ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது இங்கிலாந்து வீரர் கிரஹாம் கூச்சுக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டது. அதே போல் 1988ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வயிற்றுக் கோளாறால் பாதிக்கப்பட்ட நியூசிலாந்து வீரருக்குப் பதில் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த அந்நாட்டின் முன்னாள் துணைக் கேப்டன் ஜெரேமிகோனே ஃபீல்டிங் செய்திருக்கிறார்.

**கேமராக்களின் வளர்ச்சி**

இப்போது ஒவ்வொரு போட்டியிலும் அல்ட்ராமோஷன் கேமரா, ஸ்பைடர் கேமரா, ஸ்டம்ப் கேமரா, அம்பயர் கேமரா, வீரர்கள் கேமரா என குறைந்தபட்சம் 30 கேமராக்கள் வரை பயன்படுத்தப்படுகிறது. முன்பெல்லாம் ஒரே ஒரு கேமரா தான் பயன்பாட்டில் இருந்தது. அது நிலையான இடத்தில் வைக்கப்பட்டிருப்பதால் தொலைக்காட்சியில் போட்டியைக் காணும் ரசிகர்களுக்கு பேட்ஸ்மேனுக்கு [முன்புறம் ஒரு ஓவரும், பின்புறம் ஒரு ஓவரும்](https://www.youtube.com/watch?v=60GAhXvU90k) வீசப்படுவது போன்ற காட்சியைத் தரும்.

**அழிந்துபோன வாத்துக்கள்**

ஆஸ்திரேலியாவில் டக் அவுட் ஆவதை எந்த ஒரு வீரரும் விரும்ப மாட்டார். காரணம், அவர் அவுட் ஆகி வெளியேறும்போது டிவி திரையில் காமிக்ஸ் நாடகத்தில் வரும் வாத்து ஒன்று சோகமாக வெளியேறுவதைப் போன்ற காட்சி சித்திரிக்கப்படும். தற்போதைய நவீன கிரிக்கெட்டுடன் சேர்ந்து அந்த வாத்தும் பல மடங்கு கிராபிக்ஸில் மாற்றத்தைச் சந்தித்தாலும் பழைய காமிக்ஸ் வாத்துக்கு ஈடாகாது.

**கம்பிகள் இல்லா ஹெல்மெட்**

ஆலன் பார்டர், அரவிந்த டி சில்வா, அர்ஜுனா ரணதுங்கா, பிரையன் லாரா, டேரில் கல்லினன் இவர்கள் எல்லாம் கம்பியில்லா ஹெல்மெட்டைப் பயன்படுத்திய கடைசித் தலைமுறையினர். அன்றைய காலகட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வேகப் பந்துவீச்சைத் தைரியமாக எதிர்கொண்ட வீரர்களும் இருந்திருக்கிறார்கள். உதாரணம், சுனில் கவாஸ்கர், விவியன் ரிச்சர்ட்ஸ்.

**வெள்ளை கோட் அம்பயர்கள்**

முன்பெல்லாம் அம்பயர்கள் வேதியியல் ஆய்வகத்தில் உள்ள பேராசிரியர்களைப் போல நீளமான வெள்ளை கோட்டை அணிந்துகொண்டுதான் களத்தில் நிற்பார்கள். இந்த வெள்ளை நிற கோட், டிக்கி பேர்ட், டேவிட் ஷெப்பர்ட் ஆகிய அம்பயர்களின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

(தொடரும்….)

**தகவல்கள் ஆதாரம்: [க்ரிக்இன்ஃபோ](http://www.espncricinfo.com/25/content/story/1141159.html)**

**தொகுப்பு: முத்துப்பாண்டி யோகானந்த்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share