வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
நீண்ட காலம் எதிர்பார்ப்போடு காத்திருந்த காவிரிப் பிரச்னைக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிவிட்டது. ஐம்பதாண்டு தவிப்பில் தமிழகம் 264 டிஎம்சி தண்ணீரை கோரி நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவில் 205 டிஎம்சி தமிழகத்துக்கு வழங்க உத்தரவிட்டது. இதனை நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் 192 ஆக குறைத்தது. உச்ச நீதிமன்றம் இறுதியாக 177.25 டிஎம்சி ஆக குறைத்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு கதையான நிலை தான். 14 .75 டிஎம்சியைக் குறைத்த காரணங்கள் சரியானவையாக தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தின் இந்த இறுதித் தீர்ப்பு தமிழகத்தைப் பொறுத்தவரை எப்படியெனில் நன்றாக உபசரித்து, தலை வாழை இலை போட்டு சோற்றைப் பரிமாறி, அதற்கான கூட்டுப் பொரியல், சாம்பார், ரசம், பாயசம், தயிர் எனக் கொடுக்காமல் வெறும் சோற்றை உண்ணுங்கள் என்ற கதை தான்.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று ஆணையமும் அமைக்கலாம் என்று உத்தரவில் இருந்தாலும்கூட கர்நாடகம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் தன் எதிர்ப்புக் குரலைக் காட்டியுள்ளது. அம்மாநில முதல்வர் சித்தராமையா தண்ணீரைக் குறைத்துள்ளதைக் குறித்து, கர்நாடகத்தைக் காவிரித் தாய் காப்பாற்றினாள் என்று வரவேற்றுள்ளார். இப்படி மகிழ்ச்சியாகச் சொல்லிக்கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எப்படியான முரண்பட்ட நிலையில் கர்நாடகம் காவிரிப் பிரச்னையில் தொடர்ந்து நடந்துகொள்கிறது என்பதற்கு இதுவோர் எடுத்துக்காட்டு. இப்படி உச்ச நீதிமன்ற, நடுவர் மன்றத் தீர்ப்புகளை மதிக்காத அரசாகத்தான் கர்நாடகம் இருந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியானாலும், பாஜக ஆட்சியானாலும் இதுதான் கர்நாடக அரசின் நிலைப்பாடு. நியாயத்தை ஒரு போதும் மதித்ததே இல்லை கர்நாடகம்.
**கர்நாடக நிலைப்பாட்டின் வரலாறு**
இந்தப் பிரச்னையில், இன்னொரு அபத்தத்தையும் சொல்லியாக வேண்டும். முன்னாள் பிரதமர் தேவகவுடா. 1996இல் காவிரிப் பிரச்னையில் தமிழ்நாடு, புதுவை, கேரளத்தை எதிரிகளாகச் சேர்த்து பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பிரதமர் பொறுப்பையும் எப்படி ஏற்க முடிந்தது? இந்தக் கேள்வியை எழுப்பி, 1996இல் தேவகவுடா பிரதமர் பதவியில் இருக்கத் தகுதியற்றவர் என Quo Warranto ரிட் மனுவை நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். அதை விசாரித்த நீதிபதி கனகராஜ் பிரதமர் தேவகவுடாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதை அறிந்தவுடன் அலறியடித்துப் பிரதமர் தேவகவுடா தன்னுடைய மனுவைத் திரும்பப் பெற்றார். பிரதமர் பொறுப்புக்கு வந்த பின்னும் தமிழகம், கேரளம், புதுவை மாநிலத்தை எதிர் மனுதாரராக வழக்கைத் தாக்கல் செய்த மனுதாரர் தேவகவுடா, எப்படிக் கூட்டாட்சி இந்தியாவின் பிரதமராக உறுதிமொழி எடுக்க இயலும்?
மற்ற மாநிலங்களை எதிரியாகப் பார்க்கும் தேவகவுடா, முன்னாள் பிரதமருக்கான சலுகைகளை எப்படிப் பெற முடியும்? பொதுவான நபராக இருந்து, காவிரிப் பிரச்னையை மாநிலங்களிடையே மத்தியஸ்தம் செய்ய வேண்டிய இவர், வாட்டாள் நாகராஜன் போல உண்ணாவிரதம் இருப்பது முன்னாள் பிரதமருக்கு அழகா? அது மட்டுமா? இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த இ.எஸ்.வெங்கட்ராமையாவும், கர்நாடகத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து கர்நாடக அனைத்துக் கட்சியினரோடு டெல்லிக்கும் சென்றார்.
இப்படி அரசியல் சாசனக் கடமைகள், மரபுகள், பண்பாடுகளைக் கடைப்பிடிக்காத நபர்கள் கர்நாடகத்தில் காவிரிக்கு உரிமை கோரி முரட்டுத்தனமாக, அர்த்தமற்ற முறையில் நடந்துகொள்வதையும் மத்திய அரசு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு கூடாது என்று சொன்னவுடன் மத்திய அரசு என்ன சொன்னது? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று சொன்னது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏன் மத்திய அரசு மதிக்கவில்லை? இப்படியும் மத்திய அரசு முரணாக நடந்துகொள்கிறது. எல்லாம் தேர்தல் அரசியல்.
பெங்களூரு நகரம் சர்வதேச அந்தஸ்து பெற்றுள்ளது என்றும், அதற்காகக் கூடுதலாகத் தண்ணீர் தருகிறோம் என்றும் உச்ச நீதிமன்றம் ஒரு வாதத்தைத் தெரிவித்தாலும், ஏற்கனவே பெங்களூரு மாநகரம் நாளென்றுக்கு 140 கோடி லிட்டர் காவிரி நீரைப் பெற்று அதில் 52% வீணாக்குகிறது என்று சமூகப் பொருளாதார ஆய்வுக் கழகமே தனது அறிக்கையில் கூறுகிறது. பெங்களூருவில் பிரமாண்டமான பூங்காக்களிலும், மால்களிலும், மைதானங்களிலும் ஆடம்பரத்துக்காகக் குடிநீர் வீணாக்கப்படுகிறது.
**இனி தமிழகம் செய்ய வேண்டியது என்ன?**
நதிகள் தேசியச் சொத்தாகும். இயற்கையின் அருட்கொடை. எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது. இதுகுறித்து 1983இல் நான் தாக்கல் செய்த நதிகளை தேசியமயமாக்கி, கங்கை முதல் கிருஷ்ணா – காவிரி – வைகை – தாமிரபரணி – குமரியின் நெய்யாறு வரை இணைத்து கங்கை குமரியைத் தொட வேண்டும் என்ற என்னுடைய வழக்கில் உச்ச நீதிமன்றம் 2012இல் அளித்த தீர்ப்பில் அப்போதே இதைக் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் நிலத்தடி நீர் அளவு 20 டிஎம்சியாகக் கணக்கில் வைத்துக்கொண்டு, தமிழகத்துக்கு வர வேண்டிய 14.75 டிஎம்சி நீரை உச்ச நீதிமன்றம் குறைத்துவிட்டது. கர்நாடகத்தில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதையும், அங்குள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருப்பதையும், அது குடிநீராகப் பயன்படுத்த ஏற்புடையது என்பதை உச்ச நீதிமன்றம் ஏன் பரிசீலிக்கவில்லை? ஐநா அமைப்பின் UNDP என்ற நிறுவனம் 1972இல் அளித்த அறிக்கையையும், இந்திய அரசு 1980இல் வழங்கிய அறிக்கையையும் கொண்டு உச்ச நீதிமன்றம் தமிழகத்தின் நிலத்தடி நீரைக் கணக்கிட்டுள்ளது. ஏன் இதேபோல கர்நாடகத்தையும் கேரளத்தையும் கணக்கிடவில்லை? 20 டிஎம்சி நிலத்தடி நீர் என உச்ச நீதிமன்றம் எப்படிக் கணக்கில்கொண்டது என்பது குறித்தும், தமிழக அரசின் வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தில் இந்தப் பிரச்னை குறித்து சரியாக எடுத்துவைத்தார்களா என்பது குறித்தும் சந்தேகமாக உள்ளது.
*இக்கட்டுரையின் தொடர்ச்சி நாளை காலை 7 மணிப் பதிப்பில்*
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: வழக்கறிஞர். கே.எஸ்.இராதாகிருஷ்ணன் திமுக செய்தித் தொடர்பாளர், கதைசொல்லி இதழின் இணையாசிரியர், பொதிகை – பொருநை கரிசல் பதிப்பகத்தின் நிறுவனர். இவரைத் தொடர்புகொள்ள: rkkurunji@gmail.com)
�,”