~சிறப்புக் கட்டுரை: கார்க்கியின் கணினித் தமிழ்!

Published On:

| By Balaji

-இளம்பரிதி கல்யாணகுமார்

தமிழ் சினிமாவின் வியாபாரத்தையும், தொழில்நுட்பத்தையும் அடுத்த தளத்துக்கு எடுத்துச்சென்ற திரைப்படம் எந்திரன். சுஜாதா என்ற ஆளுமையின் இழப்போடு தொடங்கிய எந்திரனின் ஆக்கப் பணிகளை கார்க்கியின் துணைகொண்டு நிவர்த்திசெய்து வெற்றி கண்டார் ஷங்கர். பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கார்க்கியின் பங்கு எந்திரனின் வெற்றியில் அதிகம் இருந்தது. சிட்டியின் அப்கிரேடட் வெர்ஷன் 2.0 என்று எந்திரன் படத்திலேயே சொல்லப்பட்டுவிட்டதால் மற்றவற்றை தனியே வைத்துவிட்டு, 2.0-வுக்குள் செல்வோம்.

இந்த 2.0-வை அப்டேட்டட் எந்திரன் என்று எடுத்துக்கொள்ளாமல் இரண்டு ரோபோக்களின் கதை என்று அனுமானிக்கலாம். ரஜினி – எமி ஜாக்ஸனின் காதல், ரஜினி – அக்ஷய்குமார் மோதல் என்ற இரண்டு கதைகள் என்றும்கூட அனுமானிக்கலாம். “This world is not only for human” என்ற டேக்லைன் இருப்பதால் இந்த அனுமானங்கள் சரியானதாக இருக்கக்கூடும்.

எந்திரனைப் போலவே மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகியிருக்கும் 2.0 படத்தின் பாடல்கள், படத்தைப் போலவே பெரிய அளவில் துபாயில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

**எந்திர லோகத்து சுந்தரியே**

கார்க்கியின் முகத்தை உலகறியச்செய்த ‘இரும்பிலே ஒரு இதயம்’ பாடலின் அடுத்த வெர்ஷன் இந்தப் பாடல். ‘இரும்பிலே ஒரு இதயம்’ பாடல் பெண்மேல் காதல்கொண்ட ரோபோவின் கவிதை என்றால், இந்த ‘எந்திர லோகத்து சுந்தரியே’இரண்டு ரோபோக்களின் டெக்னிக்கல் டூயட். இந்தப் பாடல் முழுவதுமே சிட்டிக்கு ஒரு பெண் ரோபோ காதலியாக கிடைத்தால் எப்படி இருக்குமோ அப்படியே எழுதப்பட்டிருக்கிறது. எந்திரனில் ‘இரவின் நடுவிலே பேட்டரிதான் தீரும்’ என்று காதல் மறுத்த சனாவுக்குப் பதிலாக, 2.0-வின் பெண் ரோபோ ‘உயிரே உயிரே batteryயே’ என்று ஆண் ரோபோவிடம் பாடுகிறது.

‘எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றிக்கொள்வாயா? ரத்தம் இல்லாக் காதல் என்று ஒத்திப் போகச் சொல்வாயா?’ என சிட்டி கேட்டபோது, ‘காதல் செய்யும் ரோபோ, நீ தேவையில்லை போ போ’ என்று மறுத்த சனாவின் இடத்தைப் பூர்த்திசெய்ய 2.0-வில் முத்தம் பற்றி ‘ரத்தமில்லாக் கன்னம் ரெண்டில் முத்தம் வைக்கட்டா?’ என்று பாடுகிறார்கள். ‘என் எஞ்சின் நெஞ்சோடு உன் நெஞ்சை அணைப்பேன்’ என எந்திரனில் இருந்தது ‘எஞ்சினை அள்ளிக் கொஞ்சுறியே’ என்றாகியிருக்கிறது 2.0 படத்தில்.

உயிரின் Battery, மின்சார சம்சாரம், Java ரோஜா, Sensor-க்கு Cable வழி உணவு, கடவுச்சொல்லே, Data ஊட்டல், Bus-ன் Conductor-யே என்று அனைத்து வார்த்தையிலும் கார்க்கியின் முகங்கள். இல்லை, கார்க்கியின் டிஜிட்டல் முத்தங்கள்.

ரஹ்மானின் இசைக்கோர்ப்பு அதற்கேற்ற சித் ஸ்ரீராம் – ஷாஷா த்ரிபதி குரல் என இந்தப் பாடலின் Megabytes அதிகம். வழக்கமாக ரஜினியின் படங்களுக்கு ரஹ்மான் ஒரு ரசிகனாகவே இசையமைத்து விடுவார் (லிங்கா மட்டும் இதில் விதிவிலக்கு. இதைச் சொல்லவில்லை என்றால் என்னை அடிப்பீர்கள் என்று தெரியும்). ‘என் பணிமடி கணினி ரஜினி’ என்ற வரியின் பின்னணியில் ஒலிக்கும் ரஜினியின் Trademark சிரிப்பு ஒரு அக்மார்க் ரசிகமனம்.

**ராஜாளி பாடல்**

நேற்று வெளியான மற்றொரு பாடல் ‘ராஜாளி’. வில்லனை எதிர்க்கும் ஹீரோவின் பாடலாக இருக்கும். ‘ராஜாளி நீ காலி’ என்று பக்கா துள்ளலாகத் தொடங்குகிறது பாடல். முழுவதும் ஒலிக்கும் ரஹ்மானின் beats அதிர்கின்றன.

கதைப்படி அல்லது இந்தப் பாடல் காட்சிப்படி ரோபோ கதாபாத்திரம் அளவில் சிறியதாக வருகிறதென்பது கார்க்கியின், ‘நான் சுண்டக்கா size சூரன்டா’, ‘நான் குட்ட பாஸு’ போன்ற வரிகளால் புரிந்துகொள்ள முடிகிறது.

‘Microrobo, Nanoroboவோ என்னவோ?’, ‘நான் ரங்கூஸ்கி (எந்திரன் கொசு)’, ‘நான் மூக்குப் பொடி’ என்ற சொற்கள் அதை ஊர்ஜிதம் செய்கின்றன. இந்தப் பாடலின் வரிகள் ‘நான் ஈ’ படத்தின் ‘ஈ டா ஈ டா’ என்ற பாடலின் சாயலையும் கொஞ்சம் காட்டுகின்றன (அந்தப் படத்துக்கு தமிழில் வேலை செய்தவரும் மதன் கார்க்கி என்பதாலும்கூட இருக்கலாம்).

‘நான் ஆளே அம்பு, பீரங்கி நீ முள்ளங்கி’ என்று எழுதுவதெல்லாம் வார்த்தை அராஜகம். எந்திரனில் சிட்டியை ‘ஐசக் அசிமோவின் வேலை’ என்று எழுதியிருந்த கார்க்கி, இதில் ‘ஐசக் அசிமோவின் பேரன்டா’ என்று எழுதி ரத்தமற்ற உடலில் ரத்த பந்தம் கொடுத்துவிட்டார். சுஜாதா ரோபோட்டுக்கு உணர்வுகளைக் கொடுத்தார். கார்க்கி அந்த ஒயர்களின் வழியே ரத்தத்தைக் கொடுத்திருக்கிறார்.

மதன் கார்க்கி மீது அதிகம் வைக்கப்படும் விமர்சனம் அவர் செய்யும் அதீத வார்த்தைத் திணிப்புகள். தற்போதைய டிஜிட்டல் யுகத்துக்கான தமிழ் அகராதியாகவும் அவர் இருப்பதால், இவை பழக்கமாகச் சில காலம் ஆகும். ஆனால், கதை மாந்தர்களுக்குப் பாடல் எழுதும்போது அவர்கள் மொழியில் எழுதுவதே சிறந்தது என்பது கார்க்கியின் எண்ணம். அதனால்தான் இந்த மாதிரியான Digitalized வார்த்தைப் பிரயோகங்கள்.

பொதுவாகவே ஷங்கர் படத்தின் பாடல் காட்சிகளில் மெனக்கெடல் அதிகம் இருக்கும். இந்த வரிகளையும், அதைத் தரும் இசையையும் கேட்கும்போது ரோபோக்கள் ஆடிப் பாடும் இந்தப் பாடல்களை திரையில் காண ஆவல் அதிகரிக்கிறது. ரோபோக்களின் டிஜிட்டல் மொழியின் பூஜ்யமும் ஒன்றும் ரஹ்மானும் கார்க்கியும்தான்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share