சிறப்புக் கட்டுரை: காய்கறிகள் உற்பத்தியில் காஷ்மீர் புரட்சி!

public

அதார் பர்வைஷ்

ஸ்ரீநகரில் வாழ்ந்து வருபவர் ஃபரூக் அகமது ஷா. இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் புத்கம் மாவட்டத்திற்கு சென்று அங்குள்ள ஒம்போரா கிராமத்தில் உள்ள தனது மூதாதையர்களின் வேளாண் நிலங்களை பார்வையிட்டு வந்துள்ளார். அங்குள்ள விவசாயிகள் குறைவான விலைக்கு கனல் (ஒன்று முதல் எட்டு ஏக்கர் வரை) வேளாண் நிலத்தை வாடகைக்கு எடுத்து வேளாண்மை புரிவதைக் கண்டு ஆச்சர்யமடைந்துள்ளார்.

”நானும் ஒரு கனல் நிலம் வாடகைக்கு எடுத்து காய்கறிகள் விவசாயம் மேற்கொள்ள விரும்பினேன். எனக்கு ஆண்டுக்கு ரூ.30,000 வாடகையில் நிலம் வழங்க ஒரு விவசாயி ஒப்புக் கொண்டார். மேலும், தொடர்ந்து இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு அதே விலையில் வழங்கவும் விவசாயி உறுதியளித்தார். அதுமட்டுமின்றி அவர்களிடம் பேசி மேலும் சிலவற்றையும் உறுதிப்படுத்திக் கொண்டேன்” என்கிறார் அகமது ஷா. அதாவது இவ்வாறு நிலம் எடுத்து காய்கறிகள் உற்பத்தி மேற்கொள்வதன் மூலம் வாடகைக்கான தொகை செலுத்தப்பட்ட பிறகும், ஆண்டுக்குத் தோராயமாக ரூ.60,000 வரை சேமிக்க இயல்வதையும் விவசாயிகளின் பேச்சில் இவருக்குத் தெரிந்துள்ளது. விவசாயிகளிடம் பேசும்போது அவர்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் இதை உறுதிப்படுத்தியது.

புத்கம் மாவட்டத்தின் எல்லாப் பகுதிகளிலும் பரவலாகக் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. புத்கம் என்றாலே காய்கறிகள் உற்பத்திக்குத்தான் புகழ்பெற்றது. கீரைகள், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம், பட்டாணி மற்றும் மேலும் சில காய்கறிகளும் இங்கு அதிகமாக விளைகின்றன. உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து இங்குள்ள விவசாயிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கினர். தென்னிந்திய மாநிலங்களிலும் தற்போது வர்த்தகத்தை விரிவாக்கியுள்ளனர்.

பெரும்பாலானவர்கள் புத்கம் மாவட்டத்தை ஒரு குட்டி பஞ்சாப் என்றே கூறுவார்கள். காஷ்மீர் காய்கறிகள் வர்த்தகர் சங்கத்தின் துணைத் தலைவர் மெஹ்ராஜ்-யூ-தின் நாத். இவர் ஸ்ரீநகரில் உள்ள சப்ளி மண்டியில் வர்த்தகராக இயங்கி வருகிறார். இவரிடம் பேசுகையில், புத்கம் மட்டுமின்றி புல்வாமா, சோபியான், கண்டேர்பல், ஸ்ரீநகர், அனந்த்நாக், பாராமுல்லா, குப்வாரா மற்றும் பாண்டிபோரா மாவட்டங்களிலும் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றது என்றார். புள்ளிவிவரங்களின்படி பார்த்தோமேயானால், புத்கம்தான் காஷ்மீரின் அதிகளவில் காய்கறிகள் உற்பத்தி செய்யும் மாவட்டமாகும். நடப்பு காரிஃப் பருவத்தில் புத்கம் மாவட்டம் 175 டன் அளவிலான காய்கறிகளை உற்பத்தி செய்துள்ளது. காஷ்மீர் முழுவதுமாக உற்பத்தி செய்யப்பட்ட 700 டன்னில் இது 25 விழுக்காடாகும்.

1981ஆம் ஆண்டு சர்வேயின்படி காஷ்மீரின் காய்கறிகள் சாகுபடி பரப்பு 10,270 ஹெக்டேராகும். ஆனால் 2015ஆம் ஆண்டு கணக்குப்படி காய்கறிகள் சாகுபடி பரப்பு 31,250 ஹெக்டேராக அதிகரித்துள்ளது. அதேபோல காய்கறிகள் உற்பத்தியும் கடந்த முப்பது ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துள்ளது. ஜாவித் அகமது பாத் தற்போது தனது தோட்டத்தில் விதைத்த கீரைகளை அறுவடை செய்யத் தயாராகியுள்ளார். இவருடைய இரண்டு கனல் நிலத்திலும் கீரைகள் அடர் பச்சை நிறத்தில் அழகாய் காட்சியளிக்கின்றன. சாகுபடி செய்த 45 நாட்களில் கீரைகள் அறுவடைக்குத் தயாராகி விடுகின்றன. கீரை அறுவடை முடிந்த பின்னர் இவர் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யத் திட்டமிட்டுள்ளார். தான் வருடத்திற்கு நான்கு முறை கீரை பயிரிடுவதாகவும் அகமது பாத் கூறுகிறார். இவரிடம் உள்ள இரண்டு நிலங்களும் சிறிய அளவிலானவைதான். எப்போதும் இந்த நிலங்கள் காலியாக மட்டும் இருக்காது என்றும் உறுதியாகக் கூறுகிறார். இவர் காய்கறிகள் உற்பத்தி மூலமாக ஆண்டுக்கு ரூ.60,000 வரை வருவாய் ஈட்டி வருகிறார்.

ஃபயாஸ் அகமது புத்கமின் நர்கரா பகுதியைச் சேர்ந்த விவசாயி. இவர் கட்டிடத் தொழிலாளியாகவும் பணிபுரிகிறார். ஆனால் அதிகமாக என்னுடைய காய்கறிகள் உற்பத்தி மூலமான வருவாய் மீதுதான் நம்பிக்கை வைத்துள்ளேன். எனக்கு இரண்டு கனல் நிலங்கள் உள்ளன. குளிர்காலங்களில் பெரும்பாலும் கட்டிடப் பணிகளுக்குச் செல்லாமல் விவசாயத்தையே முற்றிலுமாக மேற்கொள்வேன்” என்கிறார் ஃபயாஸ் அகமது. மேலும் “என்னுடைய நிலம் எனது மூன்று குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. இரண்டு மகள்களும், ஒரு மகனும் தனியார் பள்ளிகளில்தான் படிக்கின்றனர். காய்கறிகள் உற்பத்தி மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டுதான் என்னுடைய குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தைக் கட்டுகிறேன்” என்றும் அவர் கூறுகிறார். இவர் காய்கறிகள் உற்பத்தி மூலமாக ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரையில் வருவாய் ஈட்டுவதாகவும் கூறுகிறார்.

இதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு விவசாயி முகமது யூசுப் பால். இவருக்கு வயது 57. இவருக்கு ஒரு கனல் நிலமும், ஒரு பசுமாடும் உள்ளது. இந்த நிலத்தைக் கொண்டு காய்கறிகள் உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலம்தான் அவருடைய வீட்டில் உள்ள ஐந்து பேருக்கும் உணவு கிடைப்பதாகக் கூறுகிறார். “காய்கறிகள் மற்றும் பால் விற்பனைதான் எனது குடும்பத்தின் உணவுக்கான ஆதாரமாக உள்ளன. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.60,000 வரை வருவாய் ஈட்டுகிறேன். அரை ஏக்கரில் அரிசி சாகுபடி செய்கிறேன். இது வீட்டுக்கான தேவையைப் பூர்த்தி செய்கிறது” என்கிறார் அவர்.

காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் காய்கறி அறிவியல் பிரிவின் தலைவர் கௌசர் பர்வீன் இதுபற்றிக் கூறுகையில், “காஷ்மீரைப் பொறுத்தவரையில் காய்கறிகளை உற்பத்தி செய்வதன் மூலம் விவசாயிகள் தானிய உற்பத்தியில் இருந்து கிடைப்பதைப் போல ஐந்து மடங்கு கூடுதலாகப் பெறுகின்றனர்” என்கிறார். ஸ்ரீநகரில் இருந்து வடமேற்குப் பகுதியில் 12 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது பன்சினாரா. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரியாஸ் பாத். இவர் தனது நிலத்தில் காய்கறிகள் உற்பத்தியும், ஆடுகளுக்குத் தேவையான தீவனமும் பயிரிட்டு வருகிறார். இதன்மூலம் இவருடைய குடும்பத்திற்கு தேவையான வருவாயைப் பெற்று வருகிறார். காய்கறிகள் உற்பத்தி மூலமாக ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரையில் வருவாய் ஈட்டி வருகிறேன் என்கிறார் ரியாஸ்.

பர்வீன் கூறுகையில், “கடந்த சில வருடங்களுக்கு முன்பு காஷ்மீர் மக்கள் குளிர்காலங்களில் நூக்கல், தக்காளி, சுரைக்காய் மற்றும் சில காய்கறிகளை வறட்சியடைந்த பின்னரே உண்டு வந்தனர். குளிர்காலங்களில் காஷ்மீரில் காய்கறிகள் உற்பத்தி செய்ய இயலாது என்பதாலேயே இவர்கள் வறட்சியடைந்த காய்கறிகளை உண்ண நேர்ந்தது. ஆனால் இப்போது முற்றிலும் பசுமையான காய்கறிகள் குளிர்காலங்களிலும் காஷ்மீரில் கிடைக்கிறது. “பருவநிலைகளைத் தாங்கும் விதமான தொழில்நுட்ப வசதிகளை விவசாயிகள் பயன்படுத்தத் தொடங்கியதே இந்த மாற்றத்திற்குக் காரணமாகும். இயற்கை உரங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயத்தையே மேற்கொள்கிறோம். இதன்மூலம் அதிக மகசூல் கிடைக்கிறது” என்கிறார் பர்வீன்.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் காஷ்மீர் பள்ளத்தாக்கு மிகுந்த மாறுபாட்டினைக் கொண்டுள்ளது. இருப்பினும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது காஷ்மீர் காய்கறிகள் உற்பத்தியில் முன்னேறியும் வருகிறது. கோடை காலங்களில் காய்கறிகளை உற்பத்தி செய்து ஏற்றுமதியும் செய்து வருகிறது இம்மாநிலம். காஷ்மீரிலிருந்து தினசரி நூற்றுக்கணக்கான சரக்கு லாரிகளில் பல்வேறு மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகிறது. “எங்கள் தேவைகளுக்காக மட்டும் காய்கறிகளை உற்பத்தி செய்வதில்லை. பல்வேறு மாநிலங்களுக்கும் நாங்கள் அனுப்பி வருகிறோம். குறிப்பாக விமானங்களில் தமிழ்நாட்டிற்கு பட்டாணி அனுப்புகிறோம். காய்கறிகள் உற்பத்தி காஷ்மீரில் நேரடியாகவும், எதிர்மறையாகவும் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது. காய்கறி உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், வாகன ஓட்டிகள் எனப் பல தரப்பினருக்கு இதன்மூலம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.” என்கிறார் மெஹ்ராஜ்-யூ-தின் நாத்.

இறுதியாக காஷ்மீர் வேளாண் அறிவியல் பல்கலைக்கழக நிறுவனத்தின் ஆசிரியரான நவீனா ஜபீன் கூறுகையில், “காஷ்மீரின் காய்கறிகள் உற்பத்தி நல்ல பொருளாதார நிலையையும், ஒட்டுமொத்த சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான முக்கியப் பங்கையும் கொண்டுள்ளது” என்றார்.

நன்றி: [வில்லேஜ் ஸ்கொயர்](https://www.villagesquare.in/2018/03/16/kashmirs-vegetable-farmers-reap-rich-dividends/)

**தமிழில்**: [பிரகாசு](https://www.facebook.com/prakash.dvk.1)

**மின்னஞ்சல் முகவரி**: [feedback@minnambalam.com](mailto:feedback@minnambalam.com)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *