சிறப்புக் கட்டுரை: காங்கிரசுக்கு குஜராத் சொல்லும் பாடம்

Published On:

| By Balaji

களந்தை பீர் முகம்மது

குஜராத் சட்டமன்றத் தேர்தலின் முடிவு அபூர்வமானது. ராகுல்காந்தியின் நாளதுவரையிலான அரசியல் வாழ்க்கை பொருள் செறிந்திருக்கிறது. பிரதமர் மோடி கொண்ட கனவுகளின் வண்ணங்களைக் கலைத்த எச்சரிக்கையாகவும் அமைந்திருக்கின்றது. வென்றவர் தோற்றுப்போன முகபாவத்துடன்; தோற்றவர் வெற்றிக் களிப்புடன்.

இதுவரையிலான இந்தியத் தேர்தல்களில் இந்த அளவுக்கு விபரீதமான முடிவுகள் அமைந்ததில்லை. காங்கிரஸை மனதார வெறுத்திருந்த பலரும் இம்முறை அது வெற்றிபெற்றிருந்தால் மகிழ்ந்திருப்பர். மோடியின் காலம் காங்கிரஸுக்கு வசந்தத்தை உருவாக்கியுள்ளது.

மோடி – அமித் ஷா கூட்டுக்கான மாற்று உண்டா இல்லையா என்ற கேள்வி இருந்தது. இதைக் கேள்வியாக எழுப்பியவர்களே பதிலையும் சொல்லிக்கொண்டார்கள் – அவர்களின் தலைமைக்கு மாற்று இல்லையென்று! பிரதமராக பா.ஜ.கவைச் சேர்ந்த வாஜ்பாயும் இந்தியாவை ஆண்டிருக்கிறார். ஆயினும் குடிமக்கள் இவ்வளவு பெரிய அச்சத்தை உணர்ந்ததில்லை. இந்தியாவின் வரலாற்றுச் சோலையிலிருந்த தேன்கூட்டைக் கல்லெறிந்து கலைத்தது மோடியின் ஆட்சி. இந்த விளைவுக்குள் மனம் சிதைந்தவர்களைப் புதுத் தெம்பூட்டி இயல்பான வாழ்க்கைக்குள் இருத்திவைத்துள்ளது குஜராத் தேர்தல்.

**குஜராத் மாடல் என்னும் மாய உரு**

2014 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில், குஜராத் மாடல் முன்னிறுத்தப்பட்டது. அது ஒரு வேதாந்தம் போல. அதற்கான விளக்கமோ திட்டமான வரைபடமோ இல்லை. இருப்பினும் அந்தரத்தில் மிதந்துகொண்டிருந்த அந்த மாய உருவுக்கு ஓர் இருப்பிடம் அமைத்துக்கொடுத்தது 2014 தேர்தல். கால விபரீதமாக குஜராத் தேர்தலை இன்று எதிர்கொண்டதில் மோடி தன் மாடலின் மௌனத்துக்குள் புதைந்திருந்தார்.

பணமதிப்பழிப்பும் ஜிஎஸ்டியும் இதர மாநிலங்களில் ஏற்படுத்திய பாதக விளைவுகளை விடவும் குஜராத்தில் ஏற்படுத்திய பாதகங்கள் அதிகம். தனது இலக்குகளில் ஒன்றான அகண்ட பாரதக் கனவை ஒரே நாடு – ஒரே வரி என்பன போன்ற திட்டங்கள் நிறைவேற்றிவிடும் என்ற மிதப்பில் மோடி இருந்தார். கருப்புப் பணத்தை ஒழித்துக்கட்டுவதென்று பணமதிப்பிழப்பு அறிவிப்பை வர்ணித்தார். இந்த அறிவிப்புகள் குஜராத் மாடலை இந்திய மாடலாகப் பரிணமிக்கச் செய்யவில்லை. குஜராத்தியர்களின் செவிகள் மூடிக்கொண்டன.

இந்நிலையில் தன் பிரச்சாரம் தொடர்ந்து ஒளிமங்கிப் போவதை அவரே உணர்ந்தார். இருப்பைத் தக்கவைப்பதெனில் அதற்கு மதவாதமே முதல் ஔஷதம். பரப்புரையின் இறுதிக் கட்டத்தில் அவர் கையாண்ட உத்திகள் மிகவும் கவலைக்குரியன. அவருக்கெனக் கொள்கை முழக்கங்கள் உள்ளன; பிரதமர் பதவியும் தனித்த அக லட்சணங்களைக் கொண்டது. அவர் இருநிலைகளிலும் சஞ்சரிக்க விரும்பலாம். ஆனால் சிறகுகள் இரண்டென்றாலும் அவற்றை ஒரே திசை நோக்கிய பயணத்திற்குத்தான் பயன்படுத்த முடியும். எது நாட்டின் ஒற்றுமைக்கும் வலிமைக்கும் ஏற்ற பாதையோ அதையே அவர் தேர்ந்தெடுக்க வேண்டும். அதை மீறி அவர் நேரடியாகப் பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டும் மேடைப் பேச்சை வளர்த்தார். இந்தியத் தேர்தலுக்குள் பாகிஸ்தானின் தலையீடு என்றதும் அவரின் பலவீனத்தைச் சுட்டுவதாகும்.

இப்போது குஜராத்திற்கு வெளியே இருந்து பார்க்கும் ஒவ்வொருவரும், அவரின் வெறுப்புரைதான் இந்த வெற்றியைத் தந்திருப்பதாகக் கருதுகிறார்கள். அது சரியல்ல. பல இரவுகள் விழித்திருந்து பாடம் படித்த ஒருவன் பரிட்சையில் எண்பது மதிப்பெண்களேனும் எடுத்தால்தான் மதிப்பாகும். மோடி பரிட்சையில் தேறிவிட்டார் என்றாலும் அந்தத் தேர்ச்சி பலவீனமானதாக இருப்பதைக் கவனிக்க வேண்டும்.

**வயிறும் வாழ்க்கையும் பேசும் மொழி**

இந்திய மனம் சாதியிலும் மதத்திலும் உறைந்துபோயிருக்கிறது. அப்படியிருந்தாலும் வாழ்க்கை நிலை தடுமாறுமெனில் அந்த உணர்வுகளைக் கைவிட அந்த மனம் தயார். பிரதமர் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாக குஜராத்திலேயே தங்கியிருந்திருக்கிறார். கட்சியின் தலைவரும் குஜராத்காரர். புயல்வேகப் பரப்புரையை இருவரும் செய்கிறார்கள். ஆன்மிகமும் கோயிலும் நேரடியான பேசுபொருள்களாயின. முன்னாளைய பிரதமரையும் காங்கிரஸையும் நாட்டின் எதிர்மைச் சக்திகளாகக் கட்டமைக்கிறார்கள்.

இந்த நிலைமைகளைக் கணக்கெடுத்தால் வெற்றி எப்படியிருந்திருக்க வேண்டும்? இரட்டை இலக்கத்துக்குள் சாதனையை முடித்துக்கொண்டது பாஜக. வயிறும் வாழ்க்கையும் தம் மொழியைப் பேசும்போது எதிரே கிளர்த்தப்படும் உணர்ச்சிவாதங்கள் தீப்பற்றா. இதுதான் மோடிக்கும் பாஜகவுக்கும் நிகழ்ந்துள்ளது. போதுமான அளவுக்கு மதவாதமும் ஆன்மிகமும் பேசப்பட்டுவிட்ட நிலைமையில் இனிவரும் தேர்தல்கள் என்ன ஆகும்? அவர்கள் எதைக்கொண்டு தம் வாக்காளர்களைச் சந்திக்க முடியும்? எங்கிருந்து வெற்றிக்கணக்கு தொடங்கியதோ அதே இடத்திற்கு அது தோல்விக் கணக்காய்த் திரும்பியிருக்கிறது.

**காங்கிரசுக்கான பாதை எது?**

இதற்கு எதிர்நிலையில் நிற்கும் காங்கிரஸை நாம் எப்படி நோக்குவது? அது செயல்பட இனி எதைத் தேர்ந்தெடுத்தால் சரியாக இருக்கும்?

இந்த முறை காங்கிரஸுக்கு விரிவான களம் அமைந்திருந்தது. அதற்கு எண்ணற்ற விளையாடல்கள் கைவசம். அடித்து ஆட வேண்டிய கட்டம். ஆனால் அப்படி நடக்கவில்லை. ராகுல் காந்தி இளம் தலைவராயிருக்கலாம். ஆனால் மாமனிதரின் குடும்ப ஜோதி அவர். தடைகளுள்ள ராஜபாட்டையிலும் விரைந்துவரும் தேர் அவருக்குண்டு. எனினும் பொருளாதார ரீதியிலான பின்னடைவுகளை முன்வைத்து காத்திரமான உரையாற்ற அவரால் முடியவில்லை. இரு கட்சிகளும் உலகமயத்தில் கட்டுண்டவைதாமே! அவற்றின் நுட்பங்களைப் பிரித்துக் காட்டும் நிறப்பிரிகை ராகுலிடம் இல்லை; காங்கிரஸிடமும் கிடையாது. அதனால் மோடியின் பாதையிலேயே அவர் பயணம் செய்தார். அவர்கள் போட்டுவைத்த தடைகளைத் தாண்டவும் அவர்கள் பறக்கவிட்ட மாஞ்சா பட்டங்களைச் சிக்கெடுக்கவும் பிரயத்தனப்பட்டார்.

மோடியின் கைக்குக் குஜராத் சென்ற பிறகு அது வேறொரு தன்மையைப் பெற்றது. வேறான அரசியல் கருத்தியல் உருவானது. அது இந்தியப் பன்முகத்தன்மைக்கு எதிரான போர். இன்று நாம் குஜராத்தின் எந்தவொரு அரசியல், பொருளாதார ரீதியிலான கூறுகளைப் பேசுவதாக இருந்தாலும் அது மோடியின் 2002ஆம் ஆண்டிலிருந்தே தொடங்குகிறது. அவரை ஏற்பதும் நிராகரிப்பதுமான மையம் 2002தான். இந்தியாவின் நாகரிகத்திற்கு உலைவைத்த அந்த நிகழ்வுகள் உலக அளவில் கடும் விமர்சனத்திற்குள்ளாயின. மோடி தனிமைப்படுத்தப்பட்டார். பல நாடுகள் அவரைத் தம் நாட்டிற்கு வரவிடாமல் தடை செய்தன. இதைப் பயன்படுத்தும் லாயக்கற்ற நிலையில் காங்கிரஸ் இருந்தது. இத்தேர்தலை காங்கிரஸ் சகல தரப்பினருக்குமான பொதுநிலையிலிருந்து அணுகவில்லை. ஜனநாயக சக்திகளின் கவலை இன்று இதுதான்.

காங்கிரஸ் இந்திய விடுதலைப் போரை நெஞ்சுக்கு நேராக எதிர்கொண்ட பெரும் இயக்கம். இந்தியாவின் அனைத்துப் பகுதி மக்களையும் தன் கீழே சாதி, மத, இன பேதங்களின்றி அணிதிரட்டிய இயக்கம். அதனுள்ளே காந்தியும் படேலும் போன்றவர்கள் ஆன்மிகக் கருத்தியலாக இந்து மதத்தை அணுகி நின்றவர்கள். அங்கேயே இந்துத்துவாவை அரசியல் ரீதியான வகைப்பாடாக எடுத்துக்கொண்ட லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர் போன்றோருண்டு. நேருவைப் போன்று மதத்தை விட்டு விலகி நின்ற நாத்திகவாதிகளும் உண்டு. இவ்வாறான பல்வேறு கலவைகளோடு காங்கிரஸ் இருந்தாலும் அது ஒருநாளும் மக்களைப் பிளவுபடுத்த முயன்றதில்லை. மதரீதியிலான மோதல்களுக்கு அரசின் சார்பை அது முன்வைத்ததில்லை.

ராகுல் காந்தி இந்த இடத்திலிருந்துதான் குஜராத் தேர்தலை அணுகியிருக்க வேண்டும். 2002ஆம் ஆண்டின் குருதிப் படிவங்களோடு பரவிக் கிடக்கும் குஜராத் மண்ணின் நிறத்தை மாற்றுவதற்கான சிந்தனையை வாக்காளர்களிடம் உருவாக்கியிருக்க வேண்டும். அதற்கான யத்தனிப்பை வழங்க வாக்காளர்கள் தயாரான நிலையில் இருந்தார்கள். என்னதான் குஜராத் மாடலாக இருந்தாலும் அது இந்திய மாடலாக மாறுவதற்கு பாஜக பெரும் முதலாளிகளையும் பன்னாட்டு நிறுவனங்களையுமே நாடி நிற்கிறது என்ற உண்மையைக் குஜராத்திகள் இம்முறை தெளிவாக அறிந்திருந்தார்கள். தம் மண்ணின்மீது தூவப்பட்ட காவி விதைகள் தம்முடைய வாழ்க்கை நலன்களுக்கானவையல்ல என்று அவர்கள் தெளிந்துவிட்டிருந்தார்கள். ஒரே நாடு , ஒரே வரி, வளர்ச்சி, 2022இல் புதிய இந்தியா என்று மூளைக்குள் சாயமேற்றப்பட்ட எல்லா திட்டங்களும் செயல்பாடுகளும் தம்முடைய வாழ்க்கை நிழலைப் பறித்துவிட்டதெனும் பட்டறிவு விரிந்திருந்தது. இந்நிலையில் ராகுல் காந்தி இத்தகைய அவலங்களின் மீது போர்தொடுத்திருக்க வேண்டும். அதனை விரிவுபடுத்தியும் ஒருங்குபடுத்தியும் பாஜகவின் மதவாதம் உந்திச்சென்ற வளர்ச்சியின்மையை அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்.

**குஜராத்துக்கும் அப்பால்…**

சந்திப்பது ஒற்றை மாநிலத்தின் தேர்தலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் புதிய எழுச்சிக்கான யுத்தக் களம். வீரியமான கொள்கைத் திறமும் நாட்டின் பன்முகத்தன்மையின் மீதான கவலையும் ராகுலுக்கு இருந்திருக்க வேண்டும். குஜராத் தேர்தலை எதிர்கொள்ளும் அதே வாய்ப்பில் நின்று, வருங்கால இந்தியத் தேர்தலுக்கான அஸ்திரமாகவும் கொண்டிருக்க வேண்டும். ஒற்றைக் கல் – பல மாங்காய்கள்! இதை ராகுல் நழுவவிட்டார்; காங்கிரஸ் நழுவவிட்டது.

2002ஆம் ஆண்டின் இன வன்முறையைப் பேசினாலும், எதிரே கண்ட கோயிலுக்குள் தரிசனம் கொள்ளாமல் திரும்பினாலும் தேர்தலில் கட்சிக்குப் பின்னடைவு நேரும் என்று ராகுல் கருதினார். களத்தில் அவர் காட்டிய வேகமும் உறுதியும் பாஜகவின் மகுடத்தைப் பறிக்கவும் தேர்ச் சக்கரத்தை முறிக்கவுமான அஸ்திரங்களாக இல்லையே!

காலம் நவீனமானதாக இருந்தாலும் பழைய கதைகளைப் பேசி, பழைய ஆயுதங்களை எடுத்துப் போர்புரிந்தார் ராகுல். இவரின் போக்குகளைக் கண்காணித்துக்கொண்டிருந்த மோடி, ராகுலை அங்குமிங்கும் அசையவிடாமல் அம்புகளை எய்துவித்தார். ஜாதிரீதியிலான பிரிவினையை ராகுல் பேசுகிறார் என்று மோடி கூறினால், மோடி மதரீதியாக நாட்டைப் பிளவுபடுத்துகிறார் என்று ராகுலால் பேச முடியவில்லை.

குஜராத்தின் 2002 இன வன்முறையைச் சங்கப் பரிவாரங்கள் நடத்தின. அது குஜராத் மக்களின் ஒட்டுமொத்த பங்கேற்பல்ல. இதைக் காங்கிரஸ் புரிந்துகொள்ளவில்லை. அநேகமாக எல்லாக் கட்சிகளின் நிலையும் இதில் பரிதாபமாகத்தான் இருக்கின்றன. பாஜகவின் தந்திரம் செய்த வேலை, குஜராத் ஒட்டுமொத்தமாகவே மதவாத பூமியாகிவிட்டது என்ற தோற்றத்தை உருவாக்கியதுதான். இந்திய அரசியல் சட்டம் வகுத்துக்கொடுத்த மதச்சார்பின்மை, சோஷலிசம் ஆகியன கெட்ட சொற்களாகிவிட்டன. பரிவார சக்திகள் குஜராத்தின் குரலைத் தாமே ஓயாது பேசிவந்ததன் விளைவு இது. பரிவாரக் குரலையும் மக்கள் குரலையும் தனித்தனியே இனம் பிரிக்கத் தெரியாமல் இன்று தேசியக் கட்சிகள் தடுமாறுகின்றன.

இடதுசாரிகளும் தம்மை வலிமைப்படுத்திக்கொள்ள மாற்றுக் குரலை ஓயாமல் ஒலித்திருக்க வேண்டும். அவற்றுக்கு எந்த இழப்பும் இல்லை; இனிமேலும் நசுங்கிட வாய்ப்பில்லை. நாட்டின் மொத்தச் சூழலும் அவை களமாகும் வாய்ப்பைத்தான் கொடுத்துள்ளன. இதை இடதுசாரிகள் உணர்ந்திருந்தால் புதிய உத்திகளை வகுக்கலாம். நாட்டின் ஐக்கிய உணர்வுக்கான கருத்துகளை வலிமையாக இங்கேயும் இந்தியா முழுவதும் பரப்ப முடியும். இந்த உள்ளொடுங்கிய தன்மையினால் பெரும் தடுமாற்றத்துக்கு ஆளானது வழக்கம்போலவே காங்கிரஸ் கட்சிதான்.

இப்படியாக, பாதுகாப்பான இடைவெளியைப் பெரும்பான்மைவாதத்துக்கும் தமக்கும் இடையில் ராகுல் வைத்துக்கொண்டார். வாக்குவங்கியை நோக்கிய ராகுல் காந்தி குஜராத் இனக் கலவரங்கள் குறித்து வாய்திறக்கவில்லை.

இன வன்முறை ஊட்டும் பேரழிவு ஒரு சமூகத்துக்கு உரித்தானதல்ல; அது குஜராத்திலிருந்து நாட்டை நோக்கித் தாவியிருக்கிறது. பிளவு கொண்ட மனப்பான்மை மிக்க நாடு வளர்ச்சியை நோக்கியும் வலிமையை நோக்கியும் ஓரடிகூட நகராது. காங்கிரஸ் இந்தப் பார்வையை முன்வைத்திருந்தால் பாஜகவின் மாற்று சக்திகளை ஒருங்கிணைத்திருக்க வாய்ப்புண்டு.

இவையெல்லாவற்றையும் மீறி, காங்கிரசுக்கும் ஜனநாயகச் சக்திகளுக்கும் இத்தேர்தலின் முடிவுகள் பெரும் நம்பிக்கையைத் தருகின்றன. மிகச் சிறியதும் சரியல்லாததுமான எதிர்த் தரப்பினரின் இந்தப் பரப்புரைக்கே குஜராத் வாக்காளர்கள் மனங்கனிந்திருக்கிறார்கள்; எனில் இது சரியாகவும் விசாலமாகவும் அமைந்திருக்குமேயானால் எத்தகைய வெற்றிகள் கிடைத்திருக்கும் என்பதை அனுமானிக்கலாம்.

தாகமெடுத்த தருணத்தில் காங்கிரஸுக்குக் கோப்பை கிடைத்திருக்கிறது. அதை இனி பானத்தால் நிரப்ப வேண்டும்.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: களந்தை பீர் முகம்மது எழுத்தாளர், ஊடகவியலாளர், இஸ்லாமியச் சமூகம் குறித்து பரந்துபட்ட பார்வையுடனும் முற்போக்குக் கண்ணோட்டத்துடனும் எழுதிவருபவர். திரைபப்டம் இலக்கியம், அரசியல் குறித்தும் நுண்ணுணர்வுடன் தன் சிந்தனைகளைப் பதிவுசெய்துவருகிரார். அவரைத் தொடர்புகொள்ள: kalanthaipeermohamed@gmail.com)

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel