சிறப்புக் கட்டுரை: கருணாநிதியும் சீர்திருத்தங்களும்!

Published On:

| By Balaji

b>

மனுராஜ் சண்முகசுந்தரம்

ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவரின் முற்போக்கான சட்டச் செயல்பாடுகள் தொடர்பாக ஒரு மதிப்பீட்டு அறிக்கையை முன்வைப்பது எளிதான பணி அல்ல. அவர் முதன்முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றது 1969 பிப்ரவரி 10. கடைசியாகப் பதவியிலிருந்து இறங்கியது 2011 மே 13 என்பது நினைவில் கொள்ளத்தக்கது. தமிழகத்தைப் பல்வேறு நிலைகளில் அவர் நிர்வகித்த அந்த 44 ஆண்டு காலகட்டத்தில் பொருளாதாரத் தளத்தைப் புரட்டிப்போட்ட மாற்றங்கள் நிகழ்ந்தன. இதை ஏற்க வேண்டுமெனில், 1970-71இல் இந்தியாவின் தனிநபர் நிகர தேசிய வருமானம் 10,016 ரூபாய்தான், இன்றிருப்பது போல் ரூ.82,269 அல்ல என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வரலாற்றுக் கட்டத்தில் சட்டபூர்வ நடவடிக்கைகளால் எட்டப்பட்ட சாதனைகளின் நீள அகலங்கள் அவரைப் போலவே மகத்தானவை. அரசியல் களத்து நெடிய பயணத்தில் அவர் கைக்கொண்ட அரவணைப்பு அணுகுமுறை தனித்துவம் மிக்கதாகும்.

சமூகச் சீர்திருத்தங்களுக்கு முதலிடம்

கருணாநிதி ஆட்சியின் தொடக்க ஆண்டுகளில், அதாவது 1969 முதல் 1976 வரை, மற்றவற்றைக் காட்டிலும் சமூகச் சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. தமிழகத்தின் காவிரி பாசனப் பகுதியில் விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியத்தை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களைச் சுரண்டும் நிலவுரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும், தமிழ்நாடு வேளாண் தொழிலாளர் நியாயக் கூலிச் சட்டம் – 1969 கொண்டுவரப்பட்டது. அதே ஆண்டில், குத்தகை விவசாயிகளின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கிற மற்றொரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அது, முதன்முறையாக, வருவாய்த் துறைப் பதிவேடுகளில் குத்தகை விவரங்கள் பதிவு செய்யப்படுவதை உறுதிப்படுத்தியது. அடுத்த ஆண்டில், தமிழ்நாடு நிலச் சீர்திருத்த (நில உச்சவரம்பு குறைப்பு) சட்டம் -1970 நிறைவேற்றப்பட்டது. நில உரிமைகளில் இருந்த பாகுபாட்டைக் குறைப்பதற்கான அந்தச் சட்டம் 30 ஏக்கர் என்ற உச்சவரம்பை 15 ஏக்கர் எனக் குறைத்தது.

இத்தகைய சீர்திருத்தங்கள் 1971இல் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகச் சட்டத்தின் மூலம் வேளாண்மையை மேம்படுத்துவதற்கும், வேளாண் அறிவியலைக் கற்பதற்கும் ஆராய்வதற்குமான சிறப்புப் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு இட்டுச்சென்றன. விவசாயம், விவசாய நிலம் தொடர்பான இந்தச் சட்டங்கள் ஊரகத் தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகக் கொண்ட முதல் தொகுப்பு நிர்வாக நடவடிக்கைகளாக அமைந்தன. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களது பிரச்சினைகளை நன்கு அறிந்திருந்தார் என்பதால், குளித்தலை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் பணியின் முதல் சுற்றிலேயே, 1957இன் நங்கவரம் பண்ணைத் தொழிலாளர் போராட்டத்தைப் பற்றி அவர் சட்டமன்றத்தில் பேசியதில் வியப்பில்லை.

மாற்றத்தை முன்னெடுத்த சீர்திருத்தங்கள்

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற தொடக்க ஆண்டுகளில், சில மிக முக்கியமான ஆணையங்களை அமைத்தார் கருணாநிதி. முதலாவதாக அவர் அமைத்தது மத்திய – மாநில உறவுகளை ஆராய்வதற்கும், மாநிலங்களிடம் எந்தெந்த அதிகாரங்கள் மாற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைப்பதற்குமான குழு. மத்திய அரசின் கையில் குவிந்திருக்கும் அதிகாரங்களை மாநிலங்களுக்கு மாற்றுவதற்கு ஏற்ப அரசமைப்பு சாசனத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று கனவு கண்டவர் முன்னாள் முதலமைச்சர் அண்ணா. அந்தக் கனவை நிறைவேற்றுவதற்காகச் செயல்பட்டவர் கருணாநிதி. முதலமைச்சர் என்ற முறையில் முதன்முறையாக 1969 மார்ச் மாதத்தில் புது டெல்லி சென்றிருந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்திய – மாநில உறவுகள் குறித்து ஆராய வல்லுநர் குழுவொன்றை அமைப்பது தொடர்பாக தமது அரசு பரிசீலித்துவருவதாகக் கூறினார்.

பின்னர், அதே ஆண்டு ஆகஸ்ட்டில், முனைவர் பி.வி. ராஜமன்னார் தலைமையில் மூன்று உறுப்பினர் குழு அமைக்கப்பட்டிருப்பதை அறிவித்தார். நிர்வாகம், சட்டமியற்றல், நீதித் துறை ஆகியவற்றில் அதிகபட்ச மாநில சுயாட்சியைப் பெற்றுத்தரக்கூடிய வகையில், அரசமைப்பு சாசனத்தில் உள்ள ஏற்பாடுகளை ஆராய்ந்து பரிந்துரை செய்வதற்காக அந்தக் குழு அமைக்கப்பட்டது. 1971 மே 27 அன்று ஒப்படைக்கப்பட்ட ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள், மேலும் கூடுதலான கூட்டாட்சி சார்ந்த அரசமைப்பு சாசனத்தை நோக்கிச் செல்வதற்கான சாலை வரைபடத்தை அளிக்கின்றன. அனைத்து மாநில முதலமைச்சர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட, பிரதமர் தலைமையிலான மத்திய – மாநில இடைமன்றத்தை ஏற்படுத்துவது தொடங்கி, ஆளுநர்கள் நியமனம் வரையில், நெடிய தாக்கங்களை ஏற்படத்தக்கூடிய பரிந்துரைகளை இக்குழு வழங்கியது. முதலமைச்சர் நியமனம், பெரும்பான்மையை இழந்த மாநில அரசு கலைப்பு உள்ளிட்டவை தொடர்பான வழிகாட்டல்களை ராஜமன்னார் குழு முன்வைத்தது.

பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் நலன்களை முன்னேற்றுவதற்கான பரிந்துரைகளை வழங்க ஏ.என்.சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில், கல்வி நிறுவனங்களிலும் அரசாங்க வேலை வாய்ப்புகளிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 25 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாகவும், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகளுக்கான இட ஒதுக்கீட்டை 16 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகவும் அரசு அதிகரித்தது.

இதே காலகட்டத்தில், காவல் துறையினர் ஊதியத்தை உயர்த்துவது தொடர்பாகப் பரிந்துரைக்க ஆர்.ஏ.கோபால்சாமி தலைமையில், காவல் துறை ஆணையம் ஒன்றை அமைத்தார் கருணாநிதி. அதன் அறிக்கையைத் தொடர்ந்து, காவலர் ஊதிய விகிதங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டன. சிறப்பாகப் பணிபுரியும் காவல் துறையினரைப் பாராட்டி ஆண்டுதோறும் விருது வழங்குவது தொடங்கியது. அரசாங்க ஊழியர்களுக்கான இரண்டாம் ஊதியக் குழு பரிந்துரைகள் ஏற்பு, அவர்களைப் பற்றிய ரகசியக் கோப்பு முறையை ஒழிக்க ஒப்புதல் ஆகியவையும் இக்கால கட்டத்தின் முக்கிய நிர்வாகச் சீர்திருத்தங்களாகும்.

அவரது மற்றொரு முக்கியமான, ஆனால் பெரிதும் பேசப்படாத நிர்வாக நடவடிக்கை, தலித், பழங்குடி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட திட்டங்களாகும். தொடர்ச்சியாகப் பள்ளிக்கு வரும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டதை தமிழ்நாடு மாநில நிர்வாக அறிக்கை (1969-75) தெரிவிக்கிறது. அந்தப் பரிசுகள் புத்தாடைகளாக வழங்கப்பட்டன. இதேபோல், 100 சதவிகித மாணவர் வருகையை நிலைநாட்டிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. 1974-75ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் ஆதி திராவிடர் நலப் பள்ளிகளின் மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்திற்கென ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

9, 10ஆம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அரசுத் திட்டத்தின் மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. 1969 முதல் 1975 வரையிலான காலகட்டத்தில் ஊக்கத் தொகை அடிப்படையிலான திட்டங்கள், கடன் வசதிகள், கல்வி உதவித்தொகைகள் ஆகியவை விரிவுபடுத்தப்பட்டன. 1970இல் ஓர் அரசாணை மூலம், பல்கலைக்கழகப் பட்டப்படிப்புக்கு முந்தைய வகுப்பு (பியுசி) வரையில் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடிச் சமூகங்களின் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. தொழில்சார் படிப்புகளைத் தேர்வு செய்த மாணவர்களுக்கு 1972இல் அரசாணை ஒன்றின் மூலம் வட்டியில்லாக் கடன் வழங்கப்பட்டது. 1970-71 முதல் 1974-75 வரையில் 377 மாணவர்கள் இத்திட்டத்தால் பலனடைந்தனர். அவர்களுக்கு மொத்தம் ரூ.4,46,200 வழங்கப்பட்டது.

மற்றொரு திட்டத்தின் மூலம் இந்தச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களில் ஐந்து பேர் வழக்குரைஞர் பயிற்சி பெறவும், ஐந்து பேர் கணக்குத் தணிக்கையாளர் பயிற்சி பெறவும் நிதியுதவி வழங்கப்பட்டது. இச்சமூகங்களைச் சேர்ந்தோர் தமிழ்நாடு அரசு பொதுத் தேர்வாணையத் தேர்வுகளை எழுதுவதற்குப் பயிற்சியளிக்க 1966-67ஆம் ஆண்டில் நான்கு மையங்கள் இருந்தன. 1973-74இல் அவற்றின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்தது என அரிசன நலத்துறைத் தகவல் தெரிவிக்கிறது.

குஜராத் போன்ற மாநிலங்களின் பிற்படுத்தப்பட்ட சமூகங்களையும் உயர் சாதிகளையும் சேர்ந்த, உடல் எடைக் குறைவான மாணவர்களின் எண்ணிக்கையை விட தமிழகத்தில் அத்தகைய மாணவர்களின் எண்ணிக்கை குறைவு என்று 2015ஆம் ஆண்டின் ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 1969 – 1976 கால கட்டத்தில் கருணாநிதி தலைமையிலான அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட கல்வி தொடர்பான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சீர்திருத்தங்களின் ஆக்கபூர்வமான தாக்கத்துக்கு இது ஒரு சான்று. இந்தக் காலகட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின் உதவியோடு பல்லாயிரக்கணக்கான தலித் மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்க முடிந்தது, வேலைவாய்ப்புகளைப் பெற முடிந்தது, தங்கள் குடும்பங்களை வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்க முடிந்தது.

முன்னோடி முயற்சிகள்

முதலமைச்சராக மூன்றாவது முறை கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்ட 1989ஆம் ஆண்டு வரையில், இந்துக் குடும்பங்களில் மகன்களுக்கும் மகள்களுக்குமான சொத்துரிமைகளிலும் வாரிசுரிமைகளிலும் வேறுபாடுகள் இருந்துவந்தன. தந்தையின் சொத்துகளை மகன்கள் முழுமையாக அனுபவிக்க முடியும், மகள்களோ திருமணமாகிற வரையில் மட்டுமே இந்த உரிமையை அனுபவிக்கலாம் என்ற நிலைமை இருந்துவந்தது. 1929 பிப்ரவரியில் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாடு இதில் பெண்களுக்குச் சம உரிமையை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது. 1989ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு இந்து வாரிசுரிமைச் சட்டம், சமமான வாரிசுரிமைகளை உறுதியாக்கியது. பாலின சமத்துவமின்மைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இந்தச் சட்டம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து அடக்கியே வாசிக்கப்பட்டு வந்திருக்கிறது. பரம்பரைச் சொத்துகளில் சம உரிமை நிலைநாட்டப்பட்டதைத் தொடர்ந்து, பெண்கள் இயல்பாகவே குடும்பத்துக்குள் பொருளாதாரப் பங்காளிகளானார்கள், முடிவெடுக்கிற இடத்தைப் பெற்றனர். தேசிய அளவில், இத்தகைய சட்டத் திருத்தம் 2005இல்தான் கொண்டுவரப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதிலும் தமிழகம் முன்மாதிரியாக உள்ளது. 2007இல் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியச் சட்டம் கொண்டுவரப்பட்டது, 2009ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென்றே ஒரு தனித் துறை ஏற்படுத்தப்பட்டது ஆகியவை இதற்கான சான்றுகளாகும். மத்திய அரசில் கூட, 2012 மே 12 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தனித் துறை ஏற்படுத்தப்படும் வரையில் தனித் துறையாக இல்லாமல், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஒரு பிரிவாகவே இருந்து வந்தது.

மாற்றுப் பாலினத்தவர்களுக்காக என தமிழ்நாடு அரசின் சமூகநலத் துறையின் கீழ் 2018, ஏப்ரல் 15 அன்று திருநங்கையர் நல வாரியம் அமைக்கப்பட்டது. திருநங்கையர் சமூகத்துக்குப் பாதுகாப்பையும் சமூக மதிப்பையும் உறுதிப்படுத்தும் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துகிற பணி இந்த வாரியத்திற்கு அளிக்கப்பட்டது. மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் தமிழகத்தின் இத்தகைய முன்னோடி முயற்சிகள், 2014ஆம் ஆண்டில் தேசிய சட்டச் சேவைகள் ஆணையத்துக்கும் இந்திய அரசுக்கும் இடையேயான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த அட்டகாசமான தீர்ப்புக்கு முன்பே மேற்கொள்ளப்பட்டன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. மத்திய அரசு இன்னும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் 2016ஆம் ஆண்டின் மாற்றுப் பாலினத்தவர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்ட முன்வரைவை நிறைவேற்றாமலிருக்கிறது என்பது கவலைக்குரியது.

நுகர்வோருக்கு முக்கியத்துவம்

திராவிடர் பொருளாதார மாதிரியமைப்பை “நுகர்வோர் சோஷலிசம்” என்று சிறப்பாகச் சித்திரித்தார் அண்ணா. இந்த மாதிரியமைப்பின் காரணமாக நுகர்வோர் அல்லது குடிமக்கள் நலன்களை மையமாகக் கொண்ட தொழில் துறை வளர்ச்சிக்கு வழிசெய்கிற அல்லது தூண்டுதலாக அமைகிற பங்களிப்பு அரசாங்கத்துக்கு வாய்த்தது. கருணாநிதி அரசின் தொடக்கக் கட்டப் பொருளாதாரத் தலையீடுகள் மாநிலத்தில் தொழில் தொடங்கிட குறு, சிறு, நடுத்தர, பெரு நிறுவனங்களை வரவழைத்ததன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதில் முனைப்புக் காட்டின.

சிறிய அளவிலான நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவிட 1970இல் தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டுக் கழகம் (சிட்கோ) ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு தொழில் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) நிறுவப்பட்டதானது, வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் 730 ஏக்கர் நிலப் பரப்பில் ஒரு தொழிற்பேட்டை உருவாக வழி செய்தது. இந்த நடவடிக்கையால் 107 புதிய தொழில் நிறுவனங்கள் உதயமாகின, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகின. இந்த முயற்சிகளைத் தளமாகக் கொண்டு, தொழில் நிறுவனங்களின் வேகமான, முறைப்படுத்தப்பட்ட வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவிடும் வகையில், 1997ஆம் ஆண்டில், தமிழ்நாடு தொழிற்சாலை நகரிய வட்டார மேம்பாட்டு ஆணையச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

பெருந்தொழில் நிறுவனங்களை ஏற்படுத்துவதற்கு நிலம் கையகப்படுத்தப்படுவது ஒரு முக்கியத் தேவை என்பதால், 1998இல் தமிழ்நாடு தொழில் துறை நோக்கங்களுக்கு நிலம் கையகப்படுத்துதல் சட்டம் நிறைவேற்றப்பட்டது முன்னோடி நடவடிக்கையாகும். இவையும், பயிற்சி பெற்ற தொழிலாளர்கள், சட்டத்தின் ஆட்சி, செயல்திறன்மிக்க அதிகாரிகள், அனைத்து மட்டத்திலுமான சமூக உள்கட்டமைப்பு ஆகியவையுமாகச் சேர்ந்து, தமிழகம் முதலீடுகளுக்கு இணக்கமான மாநிலமாக உருவெடுப்பதை உறுதிப்படுத்தின.

டிட்கோ (தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்), எல்காட் (தமிழ்நாடு மின்னணுக் கழகம்) ஆகிய இரண்டு அரசுத் துறைகளுக்கும் இடையேயான கூட்டுத் திட்டமாக, நவீன தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்றை கருணாநிதி அரசு ஏற்படுத்தியது. 2000, ஜூலையில் அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் திறந்துவைத்த டைடல் பூங்கா, மென்பொருள் நிறுவனங்கள் மிகவும் விரும்பி நாடுகிற இடமாக சென்னையை மாற்றியது.

30 ஆண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட வலுவான அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டு சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போக்குவரத்து சார்ந்த தயாரிப்பு தொழில் நிறுவனங்கள் பரவின. 2008ஆம் ஆண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களில் 23 சதவிகிதமும் லாரிகள் மற்றும் இருசக்கர வண்டிகளில் 15 சதவிகிதமும் சென்னை, ஓசூர் நகரங்களிலிருந்து வந்தவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆண்டில் மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்புத் துறையைப் பொறுத்தவரையில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு புதிய முதலீடுகள் தமிழகத்துக்கு நேரடியாக வந்தன. தயாரிப்புத் துறையில் ஒரு தலைமையிடத்தை பிடித்த சென்னை மாநகரம் ‘தெற்கு ஆசியாவின் டெட்ராய்ட்’ என்று பெயர் பெற்றது.

(சமூகநீதி, கல்வி, ஆலயங்களில் சாதி வேறுபாட்டை ஒழித்தல் முதலான மேலும் பல்வேறு துறைகளின் கருணாநிதி நிகழ்த்திய சாதனைகள் நாளை…)

**நன்றி: ஃப்ரன்ட்லைன்**

**தமிழில்: அ.குமரேசன்**

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

**சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…**

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

**பீம் (BHIM) [Android](https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp) / [IOS](https://itunes.apple.com/in/app/bhim-making-india-cashless/id1200315258?mt=8)**

**டெஸ் (TEZ) [Android]( https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user) / [IOS](https://itunes.apple.com/in/app/tez-a-payments-app-by-google/id1193357041?mt=8)**

**போன்பே (PhonePe) [Android](https://play.google.com/store/apps/details?id=com.phonepe.app) / [IOS](https://itunes.apple.com/in/app/phonepe-indias-payments-app/id1170055821?mt=8)**

**பேடிஎம் (Paytm) [Android](https://play.google.com/store/apps/details?id=net.one97.paytm) / [IOS](https://itunes.apple.com/in/app/paytm-payments-bank-account/id473941634?mt=8)**

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

**[en.minnambalam.com/subscribe.html](https://en.minnambalam.com/subscribe.html)**

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

**சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share