நடிகர்களுக்குச் சிலை வைப்பதா என்று ஆக்ரோஷப்படும் நிலையெல்லாம் தமிழகம் தாண்டிவந்து பல வருடங்கள் ஆகின்றன. தங்களது ரோல் மாடலாக யாரை மக்கள் எடுத்துக்கொள்கிறார்களோ அவர்களுக்குச் சிலை வைப்பது தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியாவுக்கே வழக்கம். அந்த ஆளுமை இறந்த பிறகு சிலை வைப்பதை வழக்கமாகக்கொண்ட இந்தியாவில், உயிரோடு இருக்கும்போதே சிலை வைத்து தங்களது அன்பை வெளிக்காட்டும் பழக்கம் சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் நிகழ்கிறது. தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி முதல் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி வரை சிலைகள் வைக்கப்பட்டு அரசியல் தளத்தில் சிலை பாதிப்பு இருக்கிறது.
தமிழகத்தின் அரசியல் தளத்திலும் இந்தச் சிலை சம்பவம் நடைபெறாத ஒன்றல்ல. திராவிடக் கொள்கைகளின் ஊற்றாகவும், அதன் வாழும் ஆதாரமாகவும் இருக்கும் கலைஞருக்கே சென்னை அண்ணா சாலையில் ஒரு சிலை வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தச் சிலை எம்.ஜி.ஆரின் மரணத்தின்போது ஏற்பட்ட கலகத்தால் தகர்த்தெறியப்பட்டது. கலைஞர் சிலையின் நெஞ்சில் கடப்பாரையால் குத்தும் படத்தை முரசொலியில் வெளியிட்டு, **தம்பி நெஞ்சில்தான் குத்துகிறார். முதுகில் குத்தவில்லை** என்ற தொனியில் கலைஞர் கவிதை ஒன்றை எழுதியிருந்தார். அந்தச் சிலை வைக்கப்பட்டதும் தகர்க்கப்பட்டதும் 1980-களில் நடைபெற்றவை என்பதால், அதன் படங்கள் எதுவும் இணையதளங்களில் இருக்காது.
எழுத்தாளர் அதிஷாவின் வலைப்பக்கத்தில் கலைஞர் சிலையின் படத்தைப் பகிர்ந்து, [அது கிடைத்த விதத்தையும்](http://www.athishaonline.com/2013/09/blog-post_6.html) எழுதிருக்கிறார். எம்.ஜி.ஆர். இறந்த பிறகும் கலைஞரின் சிலையை நிறுவ பல முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், எம்.ஜி.ஆருக்குப் பிறகு அதிமுக கட்சியின் பொறுப்பேற்ற மறைந்த ஜெயலலிதா அவர்களின் கடும் சட்டதிட்டங்களால், தமிழகத்தில் இனி யாருக்கும் சிலை வைக்கக் கூடாது என்ற நிலை தமிழகத்தில் உருவாகியது. கலைஞரின் சிலை தமிழகத்தின் எந்தப் பொது இடத்திலும், முக்கியமாக மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். இப்போதும்கூட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் சிலைகள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வைக்கப்பட முயற்சிகள் நடைபெறும்போது தொடர்ந்து பல பிரச்னைகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. நிற்க.
அரசியல் தளத்தில் இப்படிப்பட்ட நிலை இருக்கும்போது, இந்தச் சிலை வைக்கும் சடங்கு தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தை ஆட்சி செய்த முதல்வர்களையே கொடுத்த தமிழ் சினிமா இதில் மட்டும் பின்தங்கிவிடுமா என்ன?
முதன்முதலில் நடிகை குஷ்புவுக்குத் திருச்சியில் கோயில் கட்டப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆருக்கும் பெரம்பலூரில் கோயில் இருந்தது. ஆனால், அவர் அப்போது உயிரோடு இல்லை. குஷ்புவுக்கு கட்டிய கோயிலை எய்ட்ஸ் குறித்த அவரது கருத்தால் ரசிகர்களே உடைத்தெறிந்தனர்.
அதன்பிறகு ஒரு நடிகைக்கு கோயில் என்பது, 2013ஆம் ஆண்டு வெளியான ‘சூது கவ்வும்’ படத்தில் பாபி சிம்ஹாவால் நயன்தாராவுக்குக் கட்டப்பட்டது. அதன் பிறகுதான் சினிமா ரசிகர்களைக் கையில் பிடிக்கமுடியாமல் போகும் நிலை ஏற்பட்டது. அவர்களாகவே தங்களுக்குப் பிடித்த நடிகர்களுக்குச் சிலை வைக்கத் தொடங்கினார்கள். இதில் ரசிகர்களின் மூலம் அதிக சிலை வைக்கப்பட்ட நடிகர் என்ற பெயர் நடிகர் விஜய்க்குச் செல்லும்.
முதலில், நடிகர் விஜய்க்கு புனே மாநிலத்தில் சிலை வைக்கப்பட்டது. புனேவுக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்கலாம். ஆனால், விஜய்க்கு இதுவரை வைக்கப்பட்ட சிலைகளிலேயே, அவரது உண்மையான தோற்றத்துக்கும் சிலைக்குமான பொருத்தம் புனேவில் வைக்கப்பட்ட சிலைக்குத்தான் அதிகமாக இருக்கும்.
அதன்பிறகு, ‘கத்தி’ திரைப்பட ரிலீஸின்போது மதுரையில் ஒரு சிலை வடிவமைக்கப்பட்டு அதற்கு விஜய் என்று பெயர் வைத்தார்கள். அதேபோல, கேரளாவில் மார்பளவு கொண்ட ஒரு சிலையை வைத்தார்கள் கேரள ரசிகர்கள். தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் விஜய்யின் ரசிகர்கள் அதிகம் என்பதால் இவையெல்லாம் சாத்தியமாகின.
சமீபத்தில் நடைபெற்ற ‘Behindwoods’ கோல்டு மெடல் விருது விழாவில் விஜய்க்கு ஒரு சிலை வைத்திருந்தார்கள். இப்படியாக இவர்களையெல்லாம் தொடர்ந்து இயங்க வைத்துக்கொண்டிருந்தது உலகளவில் நடைபெறும் சிலை திறப்பு விழாக்கள். அதிலும் லண்டனில் இருக்கும் Madame Tussauds இந்தியாவின் பல திரை நட்சத்திரங்களுக்கும் மெழுகு சிலைகளைக் கடந்த சில ஆண்டுகளில் வைக்கத் தொடங்கியிருந்தது.
பாலிவுட் வரை மட்டுமே நீண்ட Madame Tussauds-இன் கண்கள் ‘பாகுபலி’ திரைப்படத்தின் வெற்றியால் தென்னிந்திய சினிமா வரை திரும்பியது. பிரபாஸுக்கும் சிலை திறக்க ஏற்பாடு நடைபெற்ற சமயத்தில்தான் இந்த மாதிரியான சிலைகள் அதிகமாக முளைக்கத் தொடங்கின. இதன் நீட்சியாக அல்லது பதிலடியாக, விஜய் ரசிகர்களுக்கு எப்போதும் வைரியாக தங்களை முன்னிறுத்திவரும் அஜித் ரசிகர்கள் இப்போது கும்பகோணத்தில் அஜித்தின் சிலை ஒன்றை நிறுவியிருக்கிறார்கள்.
ஒரு நூலகத்தை உருவாக்கி மக்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் இடமாக மாற்றி, அவற்றுக்கு நடுவே அஜித் சிலையை வைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்கு முன்பே சேலம் ரசிகர்கள் அஜித்துக்கு ஒரு சிலையை உருவாக்கியிருந்தார்கள். ஆனால், அந்த சிலைக்கும் அஜித்தின் தோற்றத்துக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லாமல் தோல்வியில் முடிவடைந்தது.
ஆனால், இம்முறை முயற்சி செய்கிறார்கள். வெற்றிபெற வாழ்த்துகள். சிலை வைக்கும் சாக்கில் மக்களுக்கும் பயன்படும் நூலகம் கிடைப்பதை பாராட்டலாமே தவிர, இந்தச் சிலை கலாசாரம் ‘நாளைய முதல்வரே’ என்று சொல்லி அவர்களது திரைப்படங்களுக்குப் பிரச்னையைக் கொண்டு சேர்க்காத வரை நல்லது.
சிலை வைப்பதற்காக பல லட்சங்களில் செலவு செய்து அரசும், அதேபோல அந்த மாநிலத்தின் இளைஞர்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது இடையில் யாரும் புகுந்து கருத்துசொல்ல முடியாது. அன்றே இயக்குநர் ரஞ்சித் சொன்னார், ‘போய் புள்ளைகுட்டிங்களைப் படிக்க வைங்கடா’ என்று. அவருக்குச் சிலை வைக்க வேண்டும் என்று யாரும் கிளம்பாத வரையிலும்கூட நல்லதுதான்.
– சிவா�,”