சிறப்புக் கட்டுரை : ஒன்பதாண்டுகளில் மூவாயிரமாண்டு சாதனை!

public

தமிழகத்தை ஆட்சி செய்த முதலமைச்சர்களில் சிறந்த முதல்வராகக் கருதப்படுபவர் ‘பெருந்தலைவர் காமராஜர்’.

தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜர் ஆட்சி செய்த ஒன்பது ஆண்டு கால ஆட்சி தமிழகத்தின் “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியவர். தனது உழைப்பால், படிப்படியாக உயர்ந்த இவர், பெரும் தலைவர், தென்னாட்டுக் காந்தி, படிக்காத மேதை, கர்ம வீரர், கல்விக்கண் திறந்த காமராஜர் என்ற பல்வேறு சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு நன்மைகள் பல செய்த தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, காமராஜரின் மறைவிற்கு பின்னர் 1976ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருது வழங்கிக் கவுரவித்தது. நாட்டின் மிகச் சிக்கலான நேரத்தில், பிரதமர் பதவி தன்னைத் தேடிவந்தபோதும், அதை ஏற்காமல் இரண்டு முறை பிரதமர்களை உருவாக்கி, இந்தியாவின் ‘கிங்மேக்கராகப்’ போற்றப்படும் காமராஜரின் 115-வது பிறந்த தினம் இன்று ஜூலை 15ஆம் தேதி நாடு முழுவதும் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும் நிலையில், அவரது எளிய வாழ்க்கை, அரசியல் பிரவேசம், சாதனைகள் மற்றும் கொள்கைகளை நாம் காணலாம்.

**பிறப்பு:**

தமிழகத்தின் அன்றைய திருநெல்வேலி மாவட்டம், விருதுபட்டியில் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி காமராஜர் மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் காமாட்சி. அவருடைய தாயார் மிகுந்த அன்போடு, அவரை ராஜா என்று அழைத்து வந்தார். அதுவே, பின்னர் (காமாட்சி + ராஜா) காமராஜர் என்று பெயர் வரக் காரணமாக அமைந்தது.

**ஆரம்ப கல்வி:**

காமராஜர் தனது ஆரம்பக் கல்வியை 1908ஆம் ஆண்டு தனது சொந்த ஊரில் உள்ள ஏனாதி நாராயண வித்யா சாலையில் சேர்ந்து படித்தார். அதன் பிறகு, அங்கிருந்த உயர்நிலைப் பள்ளியான சத்ரிய வித்யா சாலா பள்ளியில் சேர்ந்தார். காமராஜருக்கு ஆறு வயதிருக்கும்போது, அவரது தந்தை இறந்ததால், அவரின் தாயாரின் தன்னிடமிருந்த நகைகளை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றினார். அதையடுத்து, பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட காமராஜர், 1914ஆம் ஆண்டு ஆறாம் வகுப்புடன் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திக் கொண்ட பின்னர் தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

**விடுதலைப் போராட்டத்தில் பங்கு:**

ஆனால், உறவினரின் கடைக்கு வேலைக்குச் செல்வதில் ஆர்வமின்றிருந்த காமராஜர், தனது சிறிய வயதிலேயே, டாக்டர் வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார் மற்றும் ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசத்தலைவர்களின் பேச்சுக்களால் கவரப்பட்டு, சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஹோம் ரூல் இயக்கத்தின் ஒரு அங்கமாக மாறிய அவர், பல போராட்டங்களிலும் கலந்துகொண்டார். பிறகு, இந்திய தேசிய காங்கிரஸில் முழு நேர ஊழியராக, 1920ஆம் ஆண்டில், தனது 16வது வயதில் சேர்ந்தார். உப்பு சத்யாகிரஹத்தின் ஒரு பகுதியாக, 1930ஆம் ஆண்டு, சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் வேதாரண்யத்தை நோக்கி நடந்த பேரணியில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஆண்டே, காந்தி இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டார்.

அதையடுத்து, ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாக்கிரகம், நாக்பூர் கொடி சத்தியாகிரகம் போன்றவற்றில் பங்கேற்ற காமராஜர், சென்னையில், வாள் சத்தியாக்கிரகத்தைத் தொடங்கி, நீல் சிலை சத்தியாகிரகத்திற்குத் தலைமைத் தாங்கினார். மேலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்கள், மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற அவர், ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

**சத்திய மூர்த்தியுடன் :**

காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தியை தன்னுடைய அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், 1935ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காங்கிரஸ் பொன்விழா விருதுநகரில் காமராஜர் தலைமையில் கொண்டாடப்பட்டது. 1936ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றபோது, காமராஜரைச் செயலாளராக நியமித்தார். அதைத்தொடர்ந்து, 1937ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சாத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது, விருதுநகர் நகர்மன்றத் தேர்தலில் 7-வது வார்டில் போட்டியிட்டு வென்றபோது, நகராட்சித் தலைவராகும்படி பலரும் வலியுறுத்தியும் மறுத்து விட்டார். அதன் பின்னர், 1940-இல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்.

1941ஆம் ஆண்டில் யுத்த நிதிக்கு பொதுமக்கள் பணம் கொடுக்க வேண்டாம் என்று அவர் பிரசாரம் செய்ததால், பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும்போதே மே 31ஆம் தேதி விருதுநகர் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, 1946ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தலில் வெற்றி பெற்றார். அதே ஆண்டு சென்னை சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே, சத்திய மூர்த்தி இறந்துவிட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் சத்திய மூர்த்தி வீட்டிற்குச் சென்று காமராஜர் தேசியக்கொடியை ஏற்றினார்.

**தமிழக முதல்வராக:**

1953ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், ராஜாஜியின் செல்வாக்கு குறைந்ததோடு, காங்கிரஸ் கட்சியிலும் மதிப்புக் குறைந்தது. இதனால், ராஜாஜி பதவியிலிருந்து விலகி, சி. சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். ஆனால், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி தமிழக முதல்வராக 7 அமைச்சர்களுடன் பொறுப்பேற்றார். காமராஜர் தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்பதற்கு முன், சத்திய மூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.

**சுயநலம் இல்லாதவர்:**

காமராஜர், தன்னுடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாக அமைத்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார். முதல்வரான பின்னர், தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார். மேலும், 17000-த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்து, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தினை ஏற்படுத்தி, பள்ளிகளுக்கு மாணவர்களை வரச்செய்தார்.

இதுகுறித்து, கல்வித்துறையின் அப்போதைய இயக்குனர் சுந்தர வடிவேலுவிடம் காமராஜர் பேசியபோது, அதிகம் செலவாகுமே என்று கல்வித்துறை இயக்குனர் கூறியதற்கு, பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம்; வசதியுள்ளவர்களிடம் பிச்சை எடுத்தாவது திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார் காமராஜர். இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்வி கற்போரின் எண்ணிக்கை காமராஜர் ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது. தமிழகத்தில் கல்லாமையை இல்லாமை ஆக்கியவர் காமராஜர். சுயநலம் இல்லாதவர்.

தமிழகத்தில் ஆரம்பத்தில் ஆதிதிராவிடர்களுக்குத் தான் இலவச கல்வி சலுகை அளிக்கப்பட்டது. இச்சலுகையை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறியவர்களுக்கும் 1957-58ஆம் ஆண்டில் காமராஜர் அரசு உத்தரவிட்டது. இதனால் பலரும் பலன் பெற்றனர். ஆண்டு வருமானம், ஆயிரத்து 200 ரூபாய்க்குக் கீழ் இருந்தால் உயர்கல்வி வரை இலவச கல்வி என 1960ஆம் ஆண்டில் உத்தரவிடப்பட்டது. அதையடுத்து, அனைவருக்கும் உயர்நிலைப் பள்ளி வரை இலவச கல்வி என 1962-இல் மாற்றப்பட்டது. இதே ஆண்டு 6-11 வயது வரை உள்ள அனைவருக்கும் கட்டாயக்கல்வியாக அறிமுகப்படுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற 1954ஆம் ஆண்டில் 6 முதல் 11 வயது குழந்தைகளில், 45 சதவீதம் பேர் வரை மட்டுமே பள்ளிக்கு சென்றனர். ஆனால் 1963ல் அதே வயது பிரிவை சேர்ந்த 80 சதவீதம் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றனர். 1954-இல் 18 லட்சம் சிறுவர் மட்டுமே பள்ளிக்கு சென்றனர் என்ற நிலை மாறி 1963ஆம் ஆண்டில் பள்ளிக்குச் சென்ற சிறுவர்களின் எண்ணிக்கை 47 லட்சமாக உயர்ந்தது.

இடைநிலை கல்வியை பொறுத்தவரை 1954ல் ஆயிரத்து 6 பள்ளிகளில் 4 லட்சத்து 89 ஆயிரம் மாணவர்கள் பயின்றனர். இது காமராஜரின் ஆட்சியில், இரண்டு மடங்காகியது. 195இல் இருந்த 141 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், காமராஜரின் ஆட்சியில் 209 ஆக உயர்ந்தது. கல்வித்துறையில் காமராஜர் செய்த புரட்சி, தமிழக மக்களிடையே கல்வி கற்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தமிழகத்தில் “ஆரம்ப பள்ளிகள் இல்லாத கிராமமே இல்லை’ என்ற நிலை, காமராஜர் காலத்தில் உருவானது. நூலகங்கள் இல்லாமல் இருந்த தமிழ்நாட்டில் 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும் இவரது ஆட்சியில் திறக்கப்பட்டன. காமராஜர் மாற்றுக்கட்சித் தலைவர்களும் பாராட்டும் தலைவராக விளங்கினார். காமராஜரையும், காங்கிரசையும் கடுமையாகத் தாக்கிய ஈ.வே.ரா., பச்சைத்தமிழன் என்று காமராஜரைப் பாராட்டினார். காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைமையையும் துவக்கக் காலத்தில் கடுமையாக விமர்சனம் செய்த கருணாநிதி ,அண்ணா ,எம்ஜிஆர் போன்றோர் தனிப்பட்ட முறையில் காமராஜர் மீது மரியாதையையும் அன்பும் செலுத்தினர்

அவர் முதல்வராக இருந்தபோது, தாயார் சிவகாமி, தண்ணீர் பற்றாக்குறையால், நகராட்சி அதிகாரிகளிடம் குடிநீர் வசதி செய்து தரக் கேட்டார். முதல்வரின் தாயார் என்பதால் அதிகாரிகளும் அவரது வீட்டுக்குள்ளே குடிநீர் குழாய் அமைத்தனர். இதை அறிந்த காமராஜர், தன் வீட்டுக்குக் குழாய் போட்ட அதிகாரி யார் என அறிந்து, அவரிடமே, 24 மணி நேரத்திற்குள் வீட்டில் உள்ள குழாயை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டதையடுத்து, காமராஜரின் வீட்டில் போடப்பட்ட புதிய குடிநீர் இணைப்பு அகற்றப்பட்டது .

**தொழில் வளர்ச்சி**

ஜவாஹர்லால் நேரு ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முதலாவது, இரண்டாவது ஐந்தாண்டு திட்டங்களின் முழுப் பலனையும் தமிழகம் பெற்று முன்னேறும் வகையில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக தமிழகத்தில் தொழில் புரட்சி நடந்தது. சென்னை – பெரம்பூரில் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை, சென்னை, கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை, ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை, திருச்சி, திருவெறும்பூரில் உயர் அழுத்த கொதிகலன் தொழிற்சாலையான பெல் நிறுவனம் அமைப்பதற்கு 750 ஏக்கர் பட்டா நிலமும், 2,400 ஏக்கர் புறம்போக்கு நிலமும் வழங்கப்பட்டன. இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்று, பொதுத்துறை நிறுவனங்களிலேயே அதிக லாபத்தைத் தருகிற மகாநவரத்தினா என்ற தகுதியை பெற்றுள்ளது பெல் நிறுவனம்.

பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உட்பட்ட ஆவடி டாங்க் ஃபேக்டரி தொழில் வளர்ச்சியில் அரசுத் துறையோடு, தனியார் துறையும் இணைந்து பல தொழில்கள் தொடங்கப்பட்டன. மதராஸ் இண்டஸ்டிரியல் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன், அசோக் லேலண்ட் தொழிற்சாலை, டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலை, சிம்சன், இந்தியா பிஸ்டன்ஸ், டி.வி.எஸ், லூகாஸ் இவையெல்லாம் அந்தக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டவைதான். 1951-ல் தமிழகத்தில் 71-ஆக இருந்த நெசவாலைகளின் எண்ணிக்கை, 1962 முடிவில் 134-ஆக உயர்ந்தது. அதேபோன்று கூட்டுறவுத் துறையில் நூற்பு ஆலைகள் தொடங்கப்பட்டன. சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து எட்டாக உயர்ந்தது.

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது ‘மெட்ராஸ் சிமெண்ட்ஸ் லிமிடெட்’ என்ற ஒரு புதிய சிமெண்ட் ஆலை ராஜபாளையத்தில் தொடங்கப்பட்டது. 1962-ல் சேலம், சங்கரி துர்க்கம் என்ற இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டது. கரூரில் மற்றொரு ஆலைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது, கூடுதலாகப் பல சர்க்கரை ஆலைகள் தொடங்க ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. ஆண்டொன்றுக்கு 20 ஆயிரம் டன் காகிதம் உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை ஈரோடு அருகே பள்ளிப்பாளையத்தில் சேஷசாயி காகிதம் மற்றும் போர்டுகள் லிமிடெட் நிறுவனம் தொடங்கியது. அதே போன்று, மாநிலத்தில் கூடுதலாக காகிதக்கூழ் மற்றும் வைக்கோல் அட்டைகள் தயாரிக்க எட்டு ஆலைகள் தொடங்குவதற்கு உரிமை வழங்கப்பட்டது. கோவை மாவட்டம் மதுக்கரை, திருச்சி மாவட்டம் டால்மியாபுரம், ராமநாதபுர மாவட்டம் துலுக்கப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து என நான்கு சிமெண்ட் தயாரிக்கும் ஆலைகள் தொடங்கப்பட்டன.

**தொழிற்பேட்டைகள்**

காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொழில் வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பு வழங்கவும் தொழிற்பேட்டைகள் சென்னை, கிண்டி, விருதுநகரில் தொடங்கப்பட்டன. இவற்றின் பயன்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி, விருத்தாசலம், கும்பகோணம், திண்டுக்கல், தேனி, ராஜபாளையம், கோவில்பட்டி, நாகர்கோவில் மற்றும் அம்பத்தூர் போன்ற இடங்களில் தொழிற் பேட்டைகளை உருவாக்குதவற்காக ரூ.4.08 கோடி ஒதுக்கப்பட்டது. இவற்றைத் தவிர திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் மார்த்தாண்டம் ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டன.

**தமிழக அணைகள்**

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு தமிழகம் தனது நீர்வளத்தைப் பெருக்க உரிய பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகக் காமராஜர் ஆட்சியில், கீழ்பவானி அணை, மணிமுத்தாறு அணை, மேட்டுர் அணை, ஆரணியாறு அணை, அமராவதி அணை, வைகை அணை, சாத்தனூர் அணை, கிருஷ்ணகிரி அணை, காவிரி கழிமுக வடிகால் திட்டம் ஆகியவை கட்டப்பட்டன. இவை தவிர, புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைத் திட்டம், வீடூர் நீர்த்தேக்கத் திட்டம், கொடையாறு வாய்க்கால் திட்டம், நெய்யாறு திட்டம், பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம் ஆகிய ஏழு புதிய திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.

**மின் உற்பத்தி**

காமராஜர் ஆட்சிக்காலத்தில் மின் உற்பத்தியில் வியக்கத்தக்கச் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. மின் உற்பத்தியிலும், அதைப் பயன்படுத்துவதிலும் தமிழகம் இந்தியாவில் மூன்றாவது இடத்தை வகித்தது. காமராஜர் ஆட்சியில்தான் பெரியார் நீர்மின் உற்பத்தித் திட்டம், குந்தா நீர்மின் உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டது. நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் ரூ. 86 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் மின் உற்பத்தியில் மகத்தான சாதனைகள் நிகழ்ந்தன. இன்று ரூ.1,500 கோடிக்கும்மேல் லாபம் ஈட்டித்தரும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக வளர்ந்தது. தமிழகத்தின் மின்பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக 5 லட்சம் கிலோவாட் மின்உற்பத்தித் திறன்கொண்ட அணுமின் நிலையத்தைக் கல்பாக்கத்தில் அமைக்க முயற்சி செய்து அதை நடைமுறைப்படுத்தினார் காமராஜர்.

**பஞ்சாயத்துச் சட்டம்**

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, பஞ்சாயத்து ஆட்சி செயல்படுத்தப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நேரு தொடங்கியதையொட்டி தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1958-ல் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் காமராஜர் ஆட்சியில் 373 பஞ்சாயத்து யூனியன்களும், 12 ஆயிரம் பஞ்சாயத்துக்களும் தொடங்கப்பட்டுச் செயல்படத் தொடங்கின.

**தமிழ்நாடு**

சென்னை மாகாணத்தின் பட்ஜெட்டை 1957-58-ல் தமிழிலேயே சமர்ப்பித்தார் காமராஜர். 1956-ல் தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் கொண்டுவந்ததும் காமராஜர் ஆட்சியே. 1959 ஜனவரியில், தமிழ் அறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராகக் கல்வி அமைச்சர் நியமிக்கப்பட்டார். கல்லூரிப் பாடங்களைக் கற்பிக்கும் மொழியாக தமிழைக் கொண்டுவரவும் மலிவான விலையில் உயர் கல்விக்கான பாடநூல்களைத் தமிழில் வெளியிடவும் இந்த அமைப்பு செயல்பட்டது. இத்துடன் தமிழ்ப்பாடநூல் வெளியீட்டுக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படிப்பவர்களுக்கு மாத ஊக்கத்தொகையும், அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும் வழங்கப்பட்டன. பாடங்கள் தொடர்பான ஆங்கில நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.

காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் கலைச்சொல் அகராதி 1960-ல் வெளியிடப்பட்டது. 1956-ல் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டவுடன் மெட்ராஸ் ஸ்டேட் என்பதை ‘தமிழ்நாடு’ என்று மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து சட்டமன்றத்தில் 24.2.1961-ல் நடந்த விவாதத்தில் உரையாற்றிய சி.சுப்பிரமணியம், மெட்ராஸ் ஸ்டேட் என்று குறிப்பிடப்படும் இடத்தில் சென்னை ராஜ்யம் என்று எழுதுவதற்குப் பதில் தமிழ்நாடு என்று எழுதலாம் எனப் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். காமராஜர் ஆட்சியின் இறுதியில், தமிழகம் தொழில் வளத்தில் வடநாட்டு மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி, இரண்டாம் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

**அகில இந்திய காங்கிரஸ் தலைவர்:**

மூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்ட காமராஜர், பதவியை விட தேசப்பணியும், கட்சிப்பணியுமே முக்கியம் எனக் கருதி கே-ப்ளான் எனப்படும் காமராஜர் திட்டத்தினை கொண்டு வந்தார். அதன்படி, கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைத்து விட்டு, கட்சிப்பணியாற்ற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். அதன் பேரில் அக்டோபர் 2, 1963ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் துறந்த காமராஜர் பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு, டில்லிக்குச் சென்றார். பிறகு, அதே 1963ஆம் ஆண்டில் அக்டோபர் 9ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். இத்திட்டத்தினை நேரு போன்ற பெரும் தலைவர்கள் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், லால்பகதூர் சாஸ்திரி, மொராஜி தேசாய், ஜெகஜீவன்ராம், பட்டேல் போன்றோர் பதவியைத் துறந்து இளைஞர்களிடம் ஒப்படைத்தனர். இதனால், கட்சியினரிடமும், தொண்டர்களிடமும், மக்களிடமும் மரியாதைக்குரியவராக மாறி, அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.

**கிங் மேக்கர்:**

இந்நிலையில், 1964ஆம் ஆண்டு, பிரதமர் ஜவர்ஹலால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரியை, இந்திய பிரதமராக முன்மொழிந்தார். அதன் பிறகு, 1966ஆம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தையடுத்து, பிரதமர் பதவி ஏற்கும்படி அகில இந்திய அளவில் பலர் அவரை வலியுறுத்தினர். ஆனால், பிரதமர் பதவியை காமராஜர் துச்சமென கருதி, நேருவின் மகள் இந்திரா காந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கி இரண்டு பிரதமர்களை உருவாக்கிய கிங் மேக்கராக திகழ்ந்தார் காமராஜர்.

**இறப்பு:**

தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சமூகத்தொண்டு செய்வதிலேயே அர்ப்பணித்துக்கொண்ட காமராஜர், 1975ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி தன்னுடைய 72-வது வயதில் இறந்தார். அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி உடனடியாக சென்னைக்கு விரைந்து வந்து காமராஜர் உடலுக்கு மலர்வளையம் வைத்து கண்ணீர் மல்க கதறி அழுதது கூடியிருந்த பொதுமக்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. மேலும், தமிழக கவர்னர் கே.கே.ஷா, முதல்வர் கருணாநிதி உள்பட பல்வேறு மாநில முதல்வர்களும், மத்திய அமைச்சர்களும் காமராஜரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.

**சொத்து:**

சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த அவர், இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோதும் கடைசி வரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து வந்தார். அவர் சேர்த்து வைத்த சொத்து 4 கதர் வேட்டிகள், 4 கதர் சட்டைகள் மற்றும் 4 துண்டுகள், ஒரு மூக்கு கண்ணாடி, சில புத்தகங்கள் மற்றும் சட்டைப்பையில் இருந்த 100 ரூபாயும், அவரது வங்கி கணக்கில் இருந்த 150 ரூபாய் மட்டும்தான். இப்படிப்பட்ட உன்னதமான நேர்மையான இன்னொரு தலைவனைத் தமிழக வரலாறு மட்டுமல்ல, உலக வரலாறும் இனி சந்திக்குமோ என்பது சந்தேகமே?

**காமராஜரைப் பாராட்டிய பெரியார்:**

1961-ஆம் ஆண்டு தேவகோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் தந்தை பெரியார் பேசும்போது கூறியதாவது, தோழர்களே! எனக்கு 82 வயதாகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம் போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம் மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது முவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் ஆட்சியில்கூட, நமது கல்விக்கு நல்லது செய்யவில்லை.

தோழர்களே நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால், இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டு விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே கிடைக்காது. காமராஜரின் ஆட்சிக் காலம் தமிழகத்தின் பொற்காலம் என்பதற்கு இதைவிட வேறு யார் சான்று கூறுவது ? அது மட்டுமன்றி, எதிர்க்கட்சி தலைவர்களான அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்கள் கூட காமராஜர்மீது சிறு குற்றச்சாட்டு கூறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருப்பவர்களை மட்டுமன்றி எதிரியாக நினைப்பவர்களையும் காமராஜர் அரவணைத்துச் சென்றதால் அப்பழுக்கற்ற மாபெரும் தலைவராக அவர் திகழ்ந்தார்.

**ரியல் ஹீரோ:**

இந்தியாவின் இரண்டு பிரதமர்களை உருவாக்கி, இந்தியாவின் கிங்மேக்கராகத் திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் படிக்காத மேதையாகத் திகழ்ந்தார். இன்றைய சினிமா ஹீரோக்களைப்போல இல்லாமல், நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோவாக வாழ்ந்து காட்டியவர். அரசியலில் நேர்மை, வாய்மை, தூய்மை, நாணயம் என அனைத்தையும் கற்பித்த மாமனிதராக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவராக விளங்கியவர்.

– இ.சி.பிர்லா�,”

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *