சிறப்புக் கட்டுரை: எம்.ஜி.ஆரின் சமூக நலத் திட்டங்கள்

public

(எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா தொடங்கவுள்ள இத்தருணத்தில் அவரை நினைவூட்டும்வகையில் இந்த சிறிய கட்டுரை வெளியிடப்படுகிறது.)

எம்.ஜி.ஆர். என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 1917ஆம் ஆண்டு, ஜனவரி 17ஆம் நாள் பிறந்தார். அவர், முன்னாள் தமிழக முதல்வராக இருந்தகாலத்தில் அவரால் நடைமுறைப்படுத்தப்பட்ட நல்ல திட்டங்கள் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் ஒரு பார்வை.

தமிழ்த் திரையுலகில் தனது திரைப்படப் பாடல்கள் மூலம் மக்களுக்கு பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தவர் எம்.ஜி.ஆர். அவர், 1977ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 1௦ வருடங்கள் 3 முறை தமிழக முதல்வர் பதவியில் இருந்தார். காரணம், பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கும் உதவிய அவரின் பயனுள்ள சில திட்டங்களே என்று கூறலாம்.

அதற்குமுன்னர், பல்வேறு தலைவர்கள் அதேபோன்ற சில திட்டங்களைக் கொண்டு வந்திருந்தாலும், இவரின் ஆட்சியில் இத்திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட்டன. அதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சில திட்டங்கள்பற்றி காண்போம்.

பொது விநியோகம்

எம்.ஜி.ஆருக்கு முன்னர் ஆட்சியில் இருந்த தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் என்ற ஒன்றை 1972ஆம் ஆண்டில் அறிமுகம் செய்து, பொது விநியோகத் திட்டத்தில் நேரடிக் கொள்முதல் பகுதியைத் தொடங்கினார். அதன் முக்கியக் காரணம், தமிழ்நாட்டில் நிலவிய உணவு தானிய பற்றாக்குறை. அதுவரை, பொது விநியோகத்துக்குத் தேவையான தானியத்தை மத்திய தொகுப்பிலிருந்தே தமிழகம் பெற்றுவந்தது. தேவையான நேரத்தில் தேவையான அளவு உணவு தானியத்தை தமிழகத்துக்கு வழங்காத மத்திய அரசை இனி சார்ந்திருப்பது ஒருபோதும் சரி வராது என எண்ணி **தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை** அறிமுகம் செய்தார். அதன்மூலம் நமது மாநிலத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களை அதிகம் விளையும் இடங்களில் நாமே கொள்முதல் செய்து, அனைத்து மக்களுக்கும் பயன்படும்வகையில் நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யும் திட்டத்தை கொண்டு வந்தார். 1977ஆம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்ற எம்.ஜி.ஆர். இத்திட்டத்தின்கீழ் செயல்படும் கடைகளை அதிகரித்தார். அதன்படி, ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுக்கென தனித்தனியே நியாய விலைக் கடைகளை தொடங்கிவைத்தார். அதன்மூலம் பல்வேறு மக்களும் பயன் பெற்றனர். அந்த நடைமுறை இன்றும் செயல்பட்டு வருகிறது. மேலும் பொது விநியோகத் திட்டத்தில் அரிசித் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்தார். இதைத் தொடர்ந்தே, தற்போது வழங்கப்படும் இலவச அரிசி திட்டமும் நடைமுறைக்கு வந்தது என்றே கூறலாம்.

மதிய உணவுத் திட்டம்

1920களிலேயே நீதிக் கட்சி, மதிய உணவுத் திட்டத்தை சென்னை மாநகராட்சியின் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தினர். காரணம், பள்ளிக்கு வர இயலாத வறுமையான மாணவர்களை ஈர்க்க இதுபோன்ற திட்டத்தைச் செயல்படுத்தினர். அதைத்தொடர்ந்து, முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்கள் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். பதவியேற்ற பிறகு, பள்ளி விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட சத்துணவுத் திட்டம் என்ற ஒன்றை செயல்படுத்திட கல்வி அதிகாரி வெங்கடசுப்பிரமணி அவர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பின்னர் வந்த காலங்களில் விடுமுறை தினங்களில் சத்துணவு வழங்கப்படாமல் போனாலும், அவரின் சிறப்பான வாழ்நாள் சாதனைத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகவே இருந்து வருகிறது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்புத் திட்டம்

குழந்தை வளர்ச்சியில் ஊட்டச்சத்து குறைபாடு பெரும் சிக்கலாக இருந்துவந்த காலத்தில் சிறப்பான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தார் எம்.ஜி.ஆர். குழந்தைகள் 5 வயதை எட்டியபின்னரே பள்ளிகளுக்குச் செல்கின்றனர். அதுவரை, உணவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் வகையில் கொண்டுவந்த திட்டம் இந்த **ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்புத் திட்டம்.** நடுவண் அரசு ஒதுக்கிய தொகையைவிட அதிகமாக ஒதுக்கி அத்திட்டம், தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் செயல்படுத்த ஏற்பாடு செய்தார். அது இன்றளவும் தொடர்கிறது.

இட ஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற சிறப்பான திட்டத்தை பெரியார் அவர்கள் முன்மொழிந்தாலும், 2௦ சதவிகிதம் மட்டுமே வழங்கப்பட்டதால் பெருமளவிலான மக்களுக்கு பயனில்லாமல் போனது. அதை, தனது ஆட்சியின்போது 5௦ சதவிகிதமாக மாற்றினார் எம்.ஜி.ஆர். அதன்பின்னர், இன்று வரை பள்ளிகள் மட்டுமின்றி பல்வேறு இடங்களிலும் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது.

�,”

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *