ப்ளஸ் டூ முடித்த மாணவர்களுக்குத் தேர்வு முடிவு வந்துவிட்டது. இது பட்டப்படிப்பையும் கல்லூரியையும் தேர்வுசெய்யும் காலம். முந்தைய காலத்தில் ப்ளஸ் டூ முடிவு வந்தால், அத்தனை மாணவர்களும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம்பிடிக்க அலைமோதிக் கொண்டிருந்த காலமாக இருந்தது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது. மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு இந்த ஆண்டில் இருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பின் மீதான ஆர்வம் சற்று குறைந்தே காணப்படுகிறது. பொறியியல் படிப்பை எடுத்துக்கொண்டால் தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து பதினைந்து இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளைத் தவிர மற்ற கல்லூரிகளில் உள்ள பல இடங்கள் கடந்த ஆண்டு காலியாகவே இருந்தன. அதனால் பல கல்லூரிகள் மூடுவதற்கு விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எல்லோரும் மருத்துவம், பொறியியல் என்று செம்மறியாட்டுக் கூட்டம் போல் செயல்படாமல் தற்போது கால்நடை மருத்துவம், வேளாண்மை, மருந்தாக்கவியல், சட்டவியல், மீன்வளம் மற்றும் கலை அறிவியல் படிப்புகளுக்கு வரவேற்பு ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தப் பட்டப்படிப்புகளுக்கு எப்படிப்பட்ட வருங்காலம் இருக்கிறது, எந்த கல்லூரியில் நடத்தப்படுகிறது என்பதை கீழே காண்போம்…
**1) கால்நடை மருத்துவம்:**
எம்.பி.பி.எஸ். படிப்புக்கு எவ்வளவு மதிப்பும் தேவையும் இருக்கிறதோ அதுபோல பி.வி.எஸ்.சி. படிப்புக்கும் வாய்ப்புகள் உள்ளன. கால்நடை மருத்துவர் பணி மட்டுமல்லாமல், முதுநிலைப் படிப்பு முடித்தால் ஆசிரியர் பணிக்கு செல்லலாம். ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம் என்பதோடு வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. பல மாணவர்கள் யு.பி.எஸ்.சி. மற்றும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று இந்திய குடிமைப் பணிகளுக்கும், உயர் அதிகார பதவிகளுக்கும் செல்கின்றனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பி.வி.எஸ்.சி. 320 இடங்களும், பி.டெக் (உணவு தொழில்நுட்பம்) 20 இடங்களும், பி.டெக் (கோழியின உற்பத்தி தொழில்நுட்பம்) 20 இடங்களும், பி.டெக் (பால் பொருள்கள் தொழில்நுட்பம்) 20 இடங்களும் வழங்கப்படுகிறது. இந்தப் படிப்புகள் அனைத்துக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது.
**2) வேளாண் படிப்பு:**
வேளாண் பட்டப்படிப்பில் முதன்மையானது இளமறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture). அடுத்தது தோட்டக்கலை, வனவியல், பட்டு வளர்ப்பு ஆகிய படிப்புகள் இடம்பிடிக்கின்றன. தொழில்நுட்ப படிப்புகளில் ஏழு படிப்புகள் உள்ளன. இதில் இளமறிவியல் வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்குக் காரணம், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற நாட்டின் முதன்மைப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களில் வேளாண் பட்டப்படிப்பை முடித்தவர்கள் நிறைய பேர் தேர்வாகின்றனர். வங்கித் தேர்வுகளிலும் நிறைய வேளாண் பட்டதாரிகள் வேளாண் அதிகாரியாக (Agricultural Field Officer) தேர்ச்சி பெற்று வங்கிகளில் பணிபுரிகின்றனர்.
தமிழகத்தில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராமப் பல்கலைக்கழகத்திலும் வேளாண்மை சார்ந்த பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. தனியார் வேளாண் கல்லூரிகளைத் தேர்வு செய்யும்போது மட்டும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் தேர்வு செய்யும் கல்லூரியில் ஆய்வக வசதி இருக்கிறதா, அங்கீகாரம் இருக்கிறதா என பார்ப்பது நலம். வேளாண் பட்டயப்படிப்பு (Diploma in Agriculture) இரண்டு ஆண்டுகள் நடத்தப்படுகிறது. இந்தப் படிப்புக்கு தனியார் துறையில் மார்கெட்டிங் பணிகளும், அரசுத்துறையில் உதவி வேளாண் அலுவலர் பணி வாய்ப்பும் உள்ளது. போட்டித் தேர்வு எழுத விரும்புபவர்கள் பட்டயப்படிப்பை தவிர்ப்பது நலம். சில தனியார் நிறுவனங்கள் வேளாண் பட்டயப்படிப்புக்கு நன்கொடை வாங்கிக்கொண்டு அட்மிஷன் நடத்துகின்றன. அவற்றை தவிர்ப்பது நல்லது.
**3) மருந்தாக்கவியல் படிப்பு:**
பார்ம் டி (Doctorate in Pharmacy-Pharm D) ஆறு ஆண்டு முனைவர் பட்டப்படிப்பு ப்ளஸ் டூ முடித்த மாணவர்களுக்குச் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் தனியார் கல்லூரிகளிலும் நடத்தப்படுகின்றன. இந்தப் படிப்பு மருத்துவ படிப்புக்கு இணையானது. இப்படிப்பை முடித்தவர்கள் தனியார் நிறுவனங்களில் மருந்தாக்கவியல் ஆய்வாளராகவும், ஆராய்ச்சியாளராகவும், கல்லூரிகளில் விரிவுரையாளராக பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன. வெளிநாடுகளில் இந்தப் படிப்புக்கு நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளன. இது மட்டுமல்லாமல் பி.பார்ம், டி.பார்ம் படிப்புகளும் உள்ளன.
**4) சட்டப் படிப்பு:**
மூன்று ஆண்டு எல்.எல்.பி. சட்டப்படிப்பை காட்டிலும் ப்ளஸ் டூ முடித்தவுடன் சேரக்கூடிய ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்குத் தற்போது வரவேற்பு அதிகரித்து வருகிறது. சட்டம் படித்தால் வழக்கறிஞர் பணி மட்டுமல்லாமல் தனியார் மற்றும் அரசுத்துறைகளில் சட்ட அதிகாரி பணி, சட்ட ஆலோசகர் பணி வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ – எல்.எல்.பி, பி.காம் – எல்.எல்.பி, பி.சி.ஏ – எல்.எல்.பி, பி.பி.ஏ – எல்.எல்.பி ஆகிய நான்கு படிப்புகள் ப்ளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் படிக்க இடம் வழங்கப்படுகிறது.
**5) மீன்வளப் படிப்பு:**
நாகை மாவட்டத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பி.எஃப்.எஸ்ஸி (Bachelor of Fisheries Science) 50 இடங்களும், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள கல்லூரியில் 60 இடங்களும், அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின மையத்தில் 60 இடங்களும் உள்ளன. இரண்டு பல்கலைக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். அரசுத்துறைகளில் மீன்வள ஆய்வாளர், மீன்வளத்துறை உதவி இயக்குநர் போன்ற பணிகளும் தனியார் துறைகளில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களிலும் பணி வாய்ப்புகள் உள்ளன.
**6) கலை மற்றும் அறிவியல் படிப்புகள்:**
முன்பு இருந்ததைவிட தற்போது கலை அறிவியல் படிப்புகளில் நிறைய மாணவர்கள் சேருகின்றனர். காரணம் ஆசிரியர் பணி வாய்ப்பு, விரிவுரையாளர் பணி என பல பணிகள் கொட்டிக் கிடக்கின்றன. கலை படிப்புகளில் ஆங்கிலம் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. பி.காம், பி.ஏ. கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப், அறிவியல் படிப்புகளில் கணிதம் ஆகியவற்றுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத நினைக்கும் மாணவர்களுக்கு அரசியல் அறிவியல், பொது நிர்வாகம் ஆகிய படிப்புகளில் சேரலாம்.
நல்லப் படிப்பை தேர்வுசெய்து நலமுடன் வாழ வாழ்த்துகள்!
**கட்டுரையாளர்: மு.ஜெயராஜ்**
சேலம் மாவட்டத்தில் உள்ள நாவக்குறிச்சியில் பிறந்தவர். இளமறிவியல் வேளாண்மை படிப்பை சிதம்பரம் அண்ணாமலை கல்லூரியில் படித்தவர். சூழலியல், தற்சார்பு இயற்கை வேளாண்மை, தொழிற்நுட்பம் போன்ற கட்டுரைகளை எழுதியுள்ளார். மொழிப்பெயர்ப்பில் ஆர்வமுள்ளவர். டெல்லியில் மத்திய வேளாண் துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு சார்பாக பங்கேற்று உரையாற்றியுள்ளார்.
�,”