அ.குமரேசன்
**தொழிலாளர் உரிமைகளைப் பெற்ற வரலாறும் சமகாலத்தின் சவால்களும்**
ஐடி ஊழியர்களில் பெரும்பாலோர் ‘ஸ்ட்ரெஸ்’ எனப்படும் மன அழுத்தச் சிக்கலுக்கு உள்ளாவது பற்றிய செய்திகள் அவ்வப்போது வருகின்றன. அதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கான விடையின் ஒரு பகுதியாக, இவர்களது எட்டு மணி நேர வாழ்வு, அவர்களது ஒப்புதலுடனேயே, மறுக்கப்பட்டதையும் சேர்க்கத்தானே வேண்டும்?
**துப்பறியும் நிர்வாகம்!**
முப்பதாண்டுகளுக்கு முன் மதுரையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது நடந்த நிகழ்வு ஒன்று நினைவுக்கு வருகிறது. எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர் மதுரையின் தொழில்/வணிக அடையாளங்களில் ஒன்றாகிய, வாகனத் தயாரிப்பு சார்ந்த ஒரு பெரும் நிறுவனத்தில் எந்திரங்களைப் பழுதுபார்க்கும் தொழில்நுட்பத் தொழிலாளி. அங்கே அனுமதிக்கப்பட்டிருந்த தொழிற்சங்கம் நிர்வாகத்துக்குச் சாதகமாகவே செயல்படுவது பற்றி அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். மாற்றுச் சங்கம் தொடங்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்த அவரை, சிஐடியு சங்க மாவட்ட அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றேன். ஆளுக்கொரு சைக்கிளில் சென்றோம். நான் என்னுடைய மூன்று வயது மகனை சைக்கிளின் முன்பக்கம் பொருத்தப்பட்ட கூடை இருக்கையில் அமர வைத்துக்கொண்டு போயிருந்தேன். சங்க அலுவலகத்தில் இருந்த தலைவரிடம் நண்பரை அறிமுகப்படுத்தினேன். நண்பர் நிறுவன நிலைமைகளையும், அங்குள்ள சங்கத்தின் அணுகுமுறைகளையும் விளக்கினார். அதெல்லாம் ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் பொறுமையாகக் கேட்டார் தோழர். போட்டிச் சங்கம் தொடங்குவதே சரியான வழி என்றார் நண்பர்.
“அவசரப்பட வேண்டாம். போட்டிச் சங்கம் ஆரம்பித்தால் முளையிலேயே கிள்ளி எறிய எல்லா நடவடிக்கைகளும் எடுப்பாங்க. உங்களைப் போன்றவங்களை ஏதாவது பொய்யான குற்றச்சாட்டிலே வெளியேத்தவும் முயற்சி செய்வாங்க. அதனால, அந்தச் சங்கத்துக்குள்ளேயே இருந்து பிரச்சினைகளைப் பத்திப் பேசுங்க… ஏன் அதிலேயெல்லாம் தலையிட மாட்டேங்கிறீங்கன்னு கேளுங்க… உங்களுக்கு ஆதரவா கணிசமான தொழிலாளர்கள் வருகிற நிலைமையை ஏற்படுத்துங்க…” என்றெல்லாம் ஆலோசனைகள் கூறி அனுப்பிவைத்தார் தோழர். நிறுவனத்துக்குள் செங்கொடிச் சங்கம் நுழைவதற்குக் கிடைக்கிற வாய்ப்பைத் தோழர் தள்ளிப்போடுகிறாரே என்று வெளியே வந்த பிறகு வியப்போடு கூறினார் நண்பர். அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நான் மகனோடு கடைத்தெருவுக்குப் போய்விட்டேன்.
மறுநாள் நண்பரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. “சார், இன்னிக்குக் காலையிலே வேலைக்குப் போனதும் பர்சனல் மேனேஜர் அவரோட ரூமுக்கு வரச் சொன்னதாகத் தகவல் வந்தது. என்னோட ஹெல்த் பத்தியெல்லாம் பேசினாரு. டெலிவரிக்காக ஊருக்குப் போயிருக்கிற என் மனைவி நல்லா இருக்காங்களான்னு கேட்டாரு. அப்புறம், ‘நேத்து சாயங்காலம் சிஐடியு ஆபீஸ் பக்கம் போயிருந்தியாமே… உன்கூட ஒரு தாடிக்காரர் சைக்கிள்ல குழந்தையோட வந்திருந்தாராமே… சிஐடியு ஆபீஸ்ல ஒரு மணி நேரம் இருந்திருக்க போல இருக்கு… என்ன விஷயம்பா? ஏதாவது புது யூனியன் ஸ்டார்ட் பண்றதா யோசனையா? இருக்கட்டும்… இருக்கட்டும். அது உங்களோட உரிமை, சும்மா தெரிஞ்சிக்கிடத்தான் கேட்டேன். அப்புறம் டெலிவரிக்குப் போயிருக்கிற உன் ஒய்ஃபுக்கு ஏதாவது உதவி வேணும்னா தயங்காம கேளு’ன்னு சொன்னாரு…” என்று படபடப்போடு கூறினார்.
மனைவி பிரசவத்துக்காகப் பெற்றோர் வீட்டுக்குப் போயிருப்பது பற்றி அந்தப் பணியாளர் துறை மேலாளர் கேட்டதில் இருந்தது தொழிலாளியின் குடும்ப நலன் பற்றிய அக்கறை அல்ல, இந்த நிலைமையிலே உன்னை வேலையிலிருந்து தூக்கினால் குடும்பத்தின் கதி என்ன ஆகும் என்ற மறைமுக அச்சுறுத்தலே அல்லவா? அதை உணர்ந்துகொண்டது நண்பரின் படபடப்பில் வெளிப்பட்டது.
பின்னர் விசாரித்ததில், அந்த நிர்வாகம் இதற்கென்றே பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கிற ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தின் ஆட்கள் எங்கும் வளைய வந்துகொண்டிருப்பது தெரியவந்தது. நாடெங்கும் கிளை பரப்பியிருக்கிற தனியார் துப்பறியும் நிறுவனங்களுக்கு வருகிற வேலைகளில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம், தொழிற்சங்க நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்காகத்தான் என்று படித்திருந்த செய்தியின் உண்மையை நெருக்கமாக உணர முடிந்தது.
பல மாதங்களுக்குப் பிறகு, அந்த நிறுவன வாசலில் சிஐடியு வழிகாட்டலில் தொடங்கப்பட்ட ஒரு சங்கத்தின் கொடி உயர்த்தப்பட்டது. அது வலுவான சங்கமாக வளர்ந்தது, நிர்வாகத்துக்கு ஆதரவாகச் செயல்பட்ட பழைய சங்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டது என்ற மகிழ்ச்சிகரமான தொடர்ச்சி இதிலே உண்டு. அதேவேளையில், இது அப்போது சாத்தியமானதற்கு ஒரு முக்கியமான காரணம், அன்றைய நிலையில் ஆலையின் அனைத்துத் தொழிலாளர்களும் நிரந்தர அடிப்படையில் எடுத்துக்கொள்ளப்பட்டவர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களோ, இன்றைய யுக்தியாகிய ‘அவுட்சோர்சிங்’ (அயலாக்கம்) பணியாளர்களோ அல்ல.
இரண்டாண்டுகளுக்கு முன் கள ஆய்வுச் செய்தி ஒன்று வந்தது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய வட்டாரத்தில் உள்ள பல்வேறு விடுதிகளில் இயங்கிய பாலியல் தொழில் பற்றிய அந்தச் செய்தி, வாடிக்கையாளர்களில் கணிசமானோர் ஐடி நிறுவனங்களைச் சேர்ந்த இளைஞர்களே என்று தெரிவித்தது. இது அவர்களது ஒழுக்கக்கேடு பிரச்சினையா? பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் இறக்குமதியான கலாச்சாரச் சீர்கேடு என்று விமர்சித்துவிட்டுப் போவது இன்னும் எளிது. ஆனால், வாழ்வுக்கான எட்டு மணி நேரம் மறுக்கப்பட்டதோடு சேர்ந்த பிரச்சினை அல்லவா இது?
**எதிர்பார்க்கப்படும் தலைமுறை வார்ப்பு**
வணிக ஆக்கிரமிப்பின் உலகமயமாக்கல் சூழலில், பன்னாட்டு, உள்நாட்டுப் பெரு நிறுவனங்களைப் பொறுத்தவரையில் கேள்வி எழுப்பாத, தட்டிக் கேட்காத தலைமுறைகளே தேவை. ஒரே மாதிரியான பிளாஸ்டிக் பொம்மைகளாக வார்க்கப்பட்ட ஊழியர்களே தேவை. அதற்குத் தொழிற்சங்கங்கள் பெரும் முட்டுக்கட்டை. ஆகவே அவற்றை முடக்கியாக வேண்டும். அதற்காகத் தொழிலாளர்களை, ஓர் அமைப்பாகத் திரளவிடாமல் சிதறடிக்கிற வியூகங்களில் ஒன்றுதான், அந்தத் தேவையை ஈடுகட்டும் வகையில் தொழிலாளர் சட்டங்களை வளைத்துக்கொடுக்கும் அரசாங்கக் கொள்கை. பல்வேறு நாடுகளிலும் ஜனநாயக முறைப்படி, தொழிலாளர்களும் சேர்ந்து தேர்ந்தெடுத்த அரசுகள், அதே ஜனநாயகத்தின் பெயரால் இதைச் செய்கின்றன.
தொழிலாளர்களைச் சிதறடிப்பது ஒரு வியூக யுக்தி என்றால், தமிழகத்தில் பெண் தொழிலாளர்களை ஒரே இடத்தில் குவிப்பது இன்னொரு வியூக யுக்தி. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இளம் பெண்களை, வேலை நேரம் போக மற்ற நேரமெல்லாம் டிவி பெட்டி முதலிய வசதிகள் உள்ள ஒரு கூடாரத்துக்குள் அடைத்துவைத்து, ஒப்பந்த முடிவு காலத்தில் மொத்தமாகப் பணம் கொடுத்து அனுப்புகிற ‘சுமங்கலி திட்டத்தை’ வேறு எப்படிக் குறிப்பிடுவது?
தொழிலாளர் ஆற்றல் குவிவதைத் தடுக்கும் பிற வியூகங்களாக மதவெறி, இனவெறி ஆகியவை வகுக்கப்படுகின்றன. பல நாடுகளில் இன்று மதவெறியையும் இனவெறியையும் கையிலெடுத்த வலதுசாரி சக்திகள் ஆட்சியதிகாரத்துக்கே வந்திருப்பதும், அந்த நாடுகளில் தொழிலாளர் உரிமைகள் நசுக்கப்படுவதும் தற்செயலானதல்ல. இந்தியாவில் ஒற்றை மத ஆதிக்கவாதத்தோடு இணைந்த அரசியல், இந்தியாவின் தனித்துவ இழிவாகிய சாதியப் பாகுபாடு ஆகியவை அந்த வியூகம் சார்ந்தவையேயாகும்.
**நம்பிக்கை ஒளி**
இப்படி எங்கும் ஒளி மங்கிய காட்சிகளாகவே புலப்பட்டுக்கொண்டிருக்க, இதையெல்லாம் மீறி மே தின அணிவகுப்புகளில் தொழிலாளர்கள், குறிப்பாக இளம் தொழிலாளர்கள் கம்பீர நடைபோட்ட காட்சி நம்பிக்கை ஒளி பாய்ச்சுகிறது. அதிலும் இவ்வாண்டு நடந்த பேரணிகளில் மற்ற தொழிலாளர்களோடு ஐடி துறை சார்ந்த இளம் கரங்களும் உயர்ந்து முழக்கங்களை எழுப்பிச் சென்றது, அந்த ஒளியை வண்ணமயமாக்குகிறது.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ. குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர். இவரைத் தொடர்புகொள்ள: [theekathirasak@gmail.com ](mailto:theekathirasak@gmail.com).
*
**திருத்தமும் வருத்தமும்**
ஏப்ரல் 25ஆம் தேதிய மின்னம்பலம் இதழில் வெளியான ‘[அவர்கள் நம் மகள்களாகத்தான் இருக்க வேண்டுமா](https://www.minnambalam.com/k/2018/04/25/30)’ கட்டுரையில், விவேகானந்தர் அமெரிக்கா சென்றிருந்தபோது தனது உரையை *“சகோதரர்களே சகோதரிகளே”* என்று தொடங்கியதாகக் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் அவர் *“அமெரிக்க சகோதரிகளே சகோதரர்களே”* என்றுதான் தொடங்கியிருக்கிறார் என நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
ஆகவே, அக்கட்டுரையில் “… “லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்” என்று பேசிப் பழகிய அந்த நாட்டில் இந்த அழைப்பு மாறுபட்டதாக இருந்தது, வியப்புடன் வரவேற்கப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் “லேடீஸ்” என்று முதலிடம் தரப்பட்ட பெண்கள் “சகோதரிகளே” என்று இரண்டாமிடத்துக்கு இறக்கப்பட்டார்களே! ..” என்ற விமர்சனம் பொருத்தமற்றதாகிறது. சரிபார்த்துக்கொள்ளாமல் இவ்வாறு எழுதியதற்கு வருந்துகிறேன்.
மற்றபடி அதே உரை தொடர்பாக நான் எழுதியுள்ள, “… “லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்” என்று கூறுகையில் நீங்கள் என்ன உறவாக வேண்டுமானாலும் – காதலர்களாகக்கூட – இருந்துவிட்டுப் போங்கள்” என்ற உள்ளார்ந்த ஒப்புதல் இருக்கிறது. சகோதர உறவைச் சொல்கையில் இந்த விசால வெளி சுருங்கத்தானே செய்கிறது?…” என்பது உள்ளிட்ட மற்ற கருத்துகளில் உறுதியாக இருக்கிறேன்.
**அ.குமரேசன்**�,”