பேரா.நா.மணி
நம் பள்ளிக் கூட சத்துணவு மையங்களில், குழந்தைகள், முட்டையை பிட்டுத் தின்னும் அழகை கண்டு ரசித்திருக்கிறீர்களா? மஞ்சள் கருவை சாப்பாட்டில் பிசைந்து பிசைந்து அள்ளி அள்ளி வாயில் போடும் மகிழ்ச்சி மிக்க தருணங்களை கண்டு களித்திருக்கிறீர்களா? அதனைக் கண்ணுறும் சில ஆசிரியர்கள் முகம் சுழிக்கக் கூட செய்வர். முட்டையை தனியாக தின்றால் என்ன என்று கேட்டுக் கூட பார்ப்பார்கள். ஆனால் குழந்தைகள் எதையும் கண்டு கொள்ளாது. அந்த அலாதியான சந்தோஷம் இழந்து நாட்கள் 90 கடந்து விட்டது.
இந்த 90 நாட்களில் அந்த முட்டையின் மணத்தைக் கூட பெரும் பகுதி மாணவர்கள் நுகர முடியவில்லை. முட்டையில் இருக்கும் புரோட்டீன், வைட்டமின்கள், கொழுப்பு சத்து கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் உள்ளிட்ட அரிய தாதுப் பொருட்கள் இருப்பது தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை. ஆனால் முட்டையை ரசித்து, ருசித்து சாப்பிடும் குழந்தைகளின் ரசனையில் ஏதோ ஒரு சுகம் இருக்கிறது என்று நினைக்கதத் தோன்றுகிறது. இத்தனை விதமான சத்துக்கள் இருக்கிறது என்று பகுத்து பார்க்கும் போதுதான் தெரிகிறது. சத்துணவில் முட்டை தவிர உருளைக் கிழங்குகள், சுண்டல், கீரைகள், காய்கறிகள், மீல் மேக்கர் என இன்னும் பல சத்துக்கள் ஊட்டப்படுகிறது. இது தொடர்ந்து மேன்மைப் படுத்தப்பட்ட சத்துணவு. இதனையெல்லாம் ஆழமாக ஆய்வு செய்த நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் அவர்கள், ‘ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்குவதை தமிழ் நாடு போன்ற மாநிலங்கள் ஓர் அரசியல் வலிமையோடு செய்கிறார்கள்’ என்று மனம் உருகிப் பாராட்டினார்.
கொரோனா பாதிப்பில் நிலைகுலைந்து விட்டவர்கள் ஏழை எளிய மக்கள். அவர்களின் துயரம், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் துயர் போல் வெளிப்படவில்லை. ஆனால் இவர்களின் துயரங்களையும் குறைத்து மதிப்பிட முடியாது. இலவச அரிசி மட்டும் இல்லாமல் போயிருந்தால் பட்டினி மரணங்கள் கூட சம்பவித்து இருக்கலாம். இலவச அரிசி போதாதென்று தாங்கள் ஓட்டுப் போட்டு தேர்வு செய்த ஆளும் கட்சி எம் எல் ஏ விடம் உரிமையோடு கேட்டவர்கள் போராடியவர்கள் என எல்லோருக்கும் ஒரே பதில்தான் கொடுத்தார்கள். அது ‘அம்மா உணவகங்கள் செல்லுங்கள்’ என்ற ஆலோசனைகள்தான். உழைத்து உண்டு பழகிய மனமும் பாதுகாத்து வந்த மானமும் தன்னைப் பிடுங்கித் தின்ன கால்கள் அங்கு செல்ல மறுக்கிறது அவர்களுக்கு. தினமும் அரிசி, ரசத்தை ஒத்த பருப்புக் குழம்பு, சில நேரங்களில் ரசம் மட்டுமே. கஞ்சியாக காய்ச்சிக் குடித்து வரும் வீடுகள் கூட உண்டு. வெங்காயம், கொஞ்சம் கத்திரிக்காய், மீறி மீறிப் போனால் விலை மலிவு காய்களை தேடிப் பிடித்து கொஞ்சம் வாங்கி குழம்பில் வாசனை காட்டும் சூழல்.
தினமும் ஒரு வகை சோறு, தினமும் ஒரு முட்டை, அதிலும் கூட செய்யும் முறை பலவிதம். அனுதினமும் சாம்பார் சாதம் என்று இருந்த நாட்களில் பாதி வயிறு உண்ட குழந்தைகள் வாரம் ஒரு நாள் தான் சாம்பார் சாதம் என்று வந்தபோது இன்னும் கொஞ்சம் கேட்டு வாங்கி சாப்பிடும் குழந்தைகள் நிறையவே இருக்கிறார்கள். முட்டையின் மசாலாவிற்காக மகிழ்ந்து உண்ணும் குழந்தைகள் உண்டு. சுண்டல், கீரைகள், காய்கறிகள் என்று பள்ளிக் கூடத்தில் சாப்பிட்ட குழந்தைக்கு வாரம் ஒரு முட்டை கூட வாங்கித் தர வக்கில்லையே என்ற இயலாமை நெஞ்சை அறுக்கிறது பெற்றோர்களுக்கு.
பள்ளிகள் திடீரென்று மூடப்பட்டு மாதங்கள் மூன்று ஆகிவிட்டது. இந்த தொண்ணூறு நாட்களில் மே மாதத்தில் வரும் முப்பது நாட்களை கழித்து விடுங்கள். மீதம் உள்ள 75 நாட்களில் 75 முட்டைகள் காய்கறிகள் உருளைக்கிழங்கு சுண்டல் கீரைகள் காய்கறிகள் மீல் மேக்கர் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிட்டு இருந்தால் எத்தனை வகையான சத்துக்கள் கிட்டியிருக்கும்? குழந்தைகளின் ஆரோக்கியம் எந்தளவு மேம்பட்டு இருக்கும்? இவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒன்று இரண்டு அல்ல. சுமார் அறுபது இலட்சம் குழந்தைகள், ஐம்பதாயிரம் மையங்களில் சத்துணவு சாப்பிட்டு வந்த குழந்தைகள் பற்றி ஆட்சியாளர்களுக்கு ஒரு துளியும் இதுவரை ஞாபகம் வரவில்லை. அவர்கள் எதிர்காலம் ஆரோக்கியம் ஆகியவற்றை ஒரே ஒரு கணம் எண்ணிப் பார்க்க முடியவில்லை.
220 நாட்கள் சத்துணவு உத்தரவாதம் செய்யப்பட்ட குழந்தைகளுக்கு சற்றேறக்குறைய 60 நாட்கள் கழிந்து விட்டது. 27 விழுக்காடு நாட்கள் கடந்து விட்டது. அதாவது 27 விழுக்காடு ஆரோக்கியம் அழிந்து விட்டது. ஆரோக்கியமும் கற்றல் செயல்பாடுகளும் இரண்டறக் கலந்தது. அப்படி இருந்தும் ஏன் இந்த அலட்சியம்? குழந்தைகளின் ஆரோக்கியத்தை பறித்து அவர்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க போகின்றோமா? முறையாக சத்துணவு பெற்று வரும் குழந்தையை கொரோனா தாக்கினால் கூட ஊட்டச் சத்தால் தடுத்து ஆட்கொள்ள முடியுமே! ஏன் அரசு இதுபற்றி சிந்திக்க வில்லை. ஏன் வழிகாட்டவில்லை பல்வேறு துறை நிபுணர்கள்?
வீட்டிலும் சத்தான உணவு இல்லை. பள்ளியும் செல்ல முடியவில்லை. 75 நாட்களில் திட்டமிட்டு கொடுக்கப்பட்டு வந்த ஊட்டம் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. என் குழந்தைக்கு சத்துணவு கொடுங்கள் என்று கேட்பதைக் கூட அவமானமாக பெற்றோர் நினைக்கலாம். ஆட்சியாளர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? தேர்வுகளை நடத்தியே தீருவோம் என்று ஓயாமல் சிந்தித்து வந்த ஆட்சியாளர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு என்ன செய்வது என்று கமிட்டி போட்டு யோசிப்பவர்கள், உலகம் போற்றும் சத்துணவு திட்டத்தை இந்தக் கல்வியாண்டிலேனும் தொடங்க வேண்டும் என்று ஏன் கருத்தில் கொள்ள வில்லை ?
சத்துணவா? ஆன்லைன் வகுப்புகளா? தேர்வுகளா? என்ற கேள்விகளை யார் ஒருவரிடம் முன் வைத்தாலும் மிகவும் எளிதாக சத்துணவே என்று ஓங்கி உரைப்பார்கள். மாநிலம் தழுவிய கடுமையான எதிர்ப்பால் தேர்வுகளை தள்ளி வைத்து, இப்போதும் கூட ஆன்லைன் வழி கல்வி பற்றி தீவிரமாக யோசிக்கும் அரசு, முதல் தேவை, அதிலும் அடிப்படை தேவை சத்துணவு. இதனை ஏன் இன்னும் பூர்த்தி செய்ய நடவடிக்கையும் எடுக்கவில்லை?. கல்விப் புலத்தில் அரசோடு இணைந்தும் தனியாகவும் கால் நூற்றாண்டுக்கு மேலாக பணியாற்றி வரும் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் போன்ற அமைப்புகள் இப்போது கோரிக்கைகளை வலுவாக இந்த கோரிக்கையை எழுப்புகின்றன.
சத்துணவு வழங்க குழந்தைகளை பள்ளிக்கு வரவழைத்தல், ஆசிரியர்களை வைத்து தனிநபர் இடைவெளி விட்டு உணவு பரிமாறினால், தேர்வு நடத்துதல் போன்ற தொற்றுக்கு வழிகோலும் அபாயம் ஏற்படாது. கொரோனா காலம் முடியும் வரை சத்துணவு மையங்களை ஆங்காங்கே இருக்கும் அங்கன்வாடி மையங்களோடு இணைத்து உணவைப் பறிமாறுதல் ஒன்றும் கடினமாக செயல் அல்ல. தேவைப்பட்டால் தன்னார்வலர்களையோ மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டப் பணிகளின் பணியாளர்களையோ இணைப்பது ஒன்றும் பெரிய கடினமான செயல் அல்ல. ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் நினைத்தால் இழந்த ஊட்டத்தை பெறும் வகையில் சுண்டல், பயிறு வகைகள் போன்றவற்றை கொடையாளர்கள் மூலம் ஒழுங்கு செய்து இழந்த ஊட்டத்தைப் பெற முயற்சித்து பார்க்கலாம். கொரோனாவை காட்டி இன்னும் சத்துணவு பெறுவதை தள்ளிப்போட்டால் இந்த தலைமுறையின் ஒட்டுமொத்த எதிர்காலம் ஆரோக்கியம் ஆகியவற்றை எந்தவிதமான அக்கறையும் இன்றி தள்ளிப்போடுவதாக அமையும்.
**கட்டுரையாளர் குறிப்பு:**
பேராசிரியர் நா. மணி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் தலைவர். ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொருளாதாரத் துறைத் தலைவர் . தொடர்பு மின்னஞ்சல்: tnsfnmani@gmail.com
�,”