சிறப்புக் கட்டுரை : உன் பேரை சொல்லும்போதே! -ஸ்ரேயா கோஷல்

Published On:

| By Balaji

வசந்தபாலனின் இயக்கத்தில் வெளிவந்த ‘வெயில்’ திரைப்படத்தில் ‘உருகுதே மருகுதே …’ வில் உருகிப் போகாத இசைப் பிரியர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கண்களை மூடி ‘உருகுதே.. மருகுதே.. ஒரே பார்வையாலே… உலகமே… சுழலுதே… உன்னப் பார்த்ததாலே.. ‘ எனப் பாடி ‘சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா..’ எனக் காதலில் கரையும்போது சொக்கிப்போவோம் நாம் அனைவரும்.

இந்தப் பாடலைப் பாடிய ஷ்ரேயா கோஷல், தமிழில் ‘ஆல்பம்’ திரைப்படத்தில் ‘செல்லமே செல்லம்…’ பாடலின் மூலம் அறிமுகமானார். ‘லாலலலாலா லாலாலா.. லாலலலாலா லாலாலா…’ என நமக்கு அறிமுகமான அந்தப் பாடலைத் தொடர்ந்து அவர் கண்ணசைப்புக்கு இணங்கித் தலையசைக்க வைத்துக்கொண்டேயிருக்கிறது அந்தக் குரல்.

தன் குரலால் பலரது மனதைக் கட்டிப்போட்டிருக்கும் ஷ்ரேயா கோஷல், மேற்கு வங்கத்தில் மார்ச் 12, 1984-ல் பிறந்தவர். நான்கு வயதில் இசையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கிய ஷ்ரேயா, பின்பு கஸல், க்ளாசிக்கல், பாப், பஜன் என அத்தனை பிரிவுகளிலும் அடித்து நொறுக்கத் தொடங்கினார். தனது முதல் ஆல்பமாக ‘பென்தெக்கி பீனா’வை 1998-ன் தொடக்கத்தில் வெளியிட்டார்.

இந்தியத் திரை இசையில் சலில் சௌத்ரி, எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன், அனில் பிஸ்வாஸ், பப்பி லஹிரி, இன்றைய ப்ரீதம் சக்கரவர்த்தி எனப் பல முன்னணி இசையமைப்பாளர்கள் பெங்காலியிலிருந்து வந்தவர்கள்தான். அங்கிருந்து புறப்பட்ட பாடகர்களான பங்கஜ் மல்லிக், ஹேமந்த் குமார், கிஷோர் குமார், மன்னா டே, கீதா தத் போன்ற அனைவருமே இந்தியா முழுவதும் அறியப்பட்டவர்கள். ஆனால், அது இந்தி திரையிசைப் பாடல்கள் வழியாக மட்டும்தான். பெங்காலியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குப் பிறமொழிகளில் சுலபமாக பாடுவதென்பது பல சமயம் ஒரு சவாலாகத்தான் இருந்திருக்கிறது. மன்னா டே, பங்கஜ் மல்லிக், கீதா தத் போன்றவர்களுக்கெல்லாம் இந்தியில் பாடும்போதுகூட பெங்காலி சாயலுள்ள மொழி உச்சரிப்பு இருந்திருக்கின்றன. ஆனால், ஷ்ரேயா கோஷல் பெங்காலியில் பாடும்போதும் பேசும்போதும் மட்டும்தான் அவர் பெங்காலி.

அஸ்ஸாமியில் பாடும்போது ஷ்ரேயா, ஓர் அஸ்ஸாமியப்பாடகி. மலையாளத்தில் அவர் மலையாளப்பாடகி. தமிழர்களுக்கோ முற்றிலுமாக அவர் ஒரு தமிழ்ப் பாடகி. எந்த ஒரு மொழியிலும் சொல்லிக்கொடுப்பதை நுட்பமாகப் புரிந்துகொண்டு கச்சிதமான உச்சரிப்புடன் பாடும் வல்லமை படைத்த இத்தகைய ஒரு பாடகி இந்தியாவிலேயே இவர் ஒருவராகதான் இருக்க முடியும். காரணம், இந்தியாவின் வானம்பாடி என்றழைக்கப்படும் மராத்தியரான லதா மங்கேஷ்கர் தமிழிலும் மலையாளத்திலும் ஒரு சில பாடல்களைப் பாடியிருக்கிறார். அப்போது அவருக்கு பல உச்சரிப்பு பிரச்னைகள் இருந்திருக்கின்றன. இவ்வாறாக லதா மங்கேஷ்கரைக்கூட எளிதாக தாண்டிச்செல்ல ஷ்ரேயா கோஷால் முடிந்திருக்கிறது. இசையின் எந்தவொரு தளத்தில் நின்று யோசித்தாலும் மிக அரிதான ஒரு பாடகிதான் ஷ்ரேயா கோஷல் என்பதை மறுக்க முடியாது.

தனது பதினாறாம் வயதில் – 2000-ம் ஆண்டு ‘ஜீ’ தொலைக்காட்சியில் சக்கைப்போடு போட்ட ‘ச ரி க ம ப’ ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று டைட்டில் வின்னரானார். பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் தாயார் இவரது பாடும் திறனை வியந்து தன் மகனை அழைத்து நிகழ்ச்சியைப் பார்க்கச் சொல்ல, அவரும் குரலில் மயங்கி தன் அடுத்தப் படத்தில் ஷ்ரேயாவை அறிமுகப்படுத்தினார்.

“இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. பாடலைப் பதிவு செய்வதற்கு முன்பு ஒருமுறை ஒத்திகை பார்ப்பதற்காகப் பாடச் சொன்னார்கள். நான் மெல்லக் கண்களை மூடி இடைவெளியின்றிப் பாடி முடித்து, கண்களைத் திறந்தபோது ரிக்கார்டிங் அறைக்கு வெளியே பரபரப்பான சூழலை உணர்ந்தேன். சஞ்சய்ஜி சொன்னபிறகுதான் தெரிந்தது, நான் சிறப்பாகப் பாடிய ஒத்திகையையே பாடலாகப் பதிவு செய்துவிட்டது” என நெகிழ்கிறார்.

2003-ம் ஆண்டில் ‘ஜிஸம்’ படத்தின் பாடலுக்காக ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். 2005-ம் ஆண்டு ‘பஹேலி’ படத்தில் இடம்பெற்ற ‘திரே ஜால்னா’ பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை இரண்டாவது முறையாகப் பெற்றார். 2007-ல் ‘ஜப் வீ மெட்’ படத்தின் பாடலுக்காக மூன்றாவது தேசிய விருதையும் தன்வசமாக்கினார். பின்னர், தொடர்ந்து தனது நான்காவது மற்றும் ஐந்தாவது தேசிய விருதுகளை அடுத்தடுத்த ஆண்டிலேயே கைகளில் ஏந்தினார். இசைக்காக இவர் பெற்ற விருதுகளின் பட்டியல் மிக நீளமானது.

‘ஆஷிக் பானாயா அப்னே’ பாடலில் தனது மயக்கும் குரலால் இந்திய இசைப்பிரியர்களின் நெஞ்சத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். ‘தாவணி போட்ட தீபாவளி’யாக தமிழ் ரசிகர்களுக்கு இசைவிருந்து படைத்தும் பல காதலர்களின் தேர்வாக இன்றும் இருக்கும் ‘முன்பே வா.. என் அன்பே வா..’ என சில்லுனு ஒரு காதலை இளைஞர்களிடம் விதைத்துவிட்டு, பருத்திவீரனில் ‘அய்யய்யோ …’ என அசரடித்துப் பறக்கிறது இந்தக்குயிலின் இசைச் சிறகுகள். இடைப்பட்ட காலமெல்லாம் தன் குரல்கொண்டு உயிர்சுண்டியிழுக்கும் வித்தைகள் புரிந்து, இப்போதும்கூட ‘மிருதா மிருதா ‘ என மென்சோகத்தைக் குரலில் தாங்கி, நம் காதுகளின் வழியாகக் கடத்திக் கொண்டிருக்கிறார் ஷ்ரேயா. ‘உன் பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில்..’ எனக் கண்மூடிப் பாடி பலரது இரவுகளை உறக்கமின்றித் தின்றுகொண்டிருக்கும் தேவதைக்குப் பிறந்தநாள் இன்று.

பல்வேறு தென் மற்றும் வட இந்திய மொழிப்பாடல்களுக்கு உயிர்கொடுக்கும் ஷ்ரேயாவுக்கு தமிழ் தெரியாது என்பதுதான் நம்ப முடியாத அதிசயம். ‘ஆனாலும், எப்படி… தமிழில் இத்தனை இனிமையாக, உச்சரிப்பு சுத்தத்தோடு..?’ என்று கேட்டபோது, ‘‘தமிழ் எனக்கு ரொம்பப் பிடிச்ச மொழி. தமிழ்ல இருக்கிற வார்த்தைகளின் வளமை என்னை பிரமிக்க வைக்குது. ஒரு பாடகரின் முழுத் திறமையையும் வெளியே கொண்டு வர்ற சக்தி தமிழ் மொழிக்கு உண்டு. தவிர, இளையராஜா சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார் போன்று ரொம்பத் திறமையான பல இசையமைப்பாளர்கள் தமிழில் இருக்காங்க. அதனால்தான் தமிழ்ல பாட வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் எப்படியாவது நேரம் ஒதுக்கி உடனே பறந்தோடி வந்துடறேன்’’ என்கிறார்.

2015-ம் ஆண்டு தன் பால்ய நண்பரான ஷில்ஆதித்யா முக்கோபாத்யாயாவை மணந்த ஷ்ரேயா, பின்னணிப்பாடகி எனும் அடையாளம் தவிர்த்து சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் கவர்னரால் கௌரவிக்கப்பட்டு 2015-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி ‘ஷ்ரேயா கோஷல் நாள்’ என அறிவிக்கப்பட்டது. உலகின் தலைசிறந்த ‘ஃபோர்ப்ஸ்’ இதழில் இந்தியாவின் நூறு சிறந்த பிரபலங்களில் ஒருவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை பெற்றவர். இந்த இசை தந்த தேவதை, இன்னும் இன்னும் தன் குரல்கொண்டு நம்மைக் கிறங்கடிக்க வாழ்த்துவோம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஷ்ரேயா!�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share