சிறப்புக் கட்டுரை : உணவு – பானங்கள் கூடுதல் விலைக்கு விற்கத் தடை!

Published On:

| By Balaji

எந்தவொரு விற்பனைப் பொருளுக்கும் அதிகபட்ச சில்லறை விலை என்ற ஒன்று நியமிக்கப்படும். அது எம்.ஆர்.பி. (maximum retail price) எனப்படும். சினிமா அரங்குகள், ரெஸ்டாரண்டுகள், ஏர்போர்ட் போன்ற இடங்களில் எம்.ஆர்.பி. விலையைவிட அதிகமான விலைக்கு பொருட்கள் விற்கப்படுகின்றன. இந்தியாவில் எம்.ஆர்.பி. விலையைவிட அதிகமான விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதை தடை செய்த ஒரே மாநிலம் மகாராஷ்டிராதான். அதற்கடுத்தபடியாக, தற்போது ராஜஸ்தான் மாநிலம் எம்.ஆர்.பி, விலைக்கு அதிகமாக பொருட்கள் விற்பதை தடை செய்துள்ளது. மேலும் இரட்டை எம்.ஆர்.பி. (dual MRP) விலையில் பொருட்கள் விற்பனை செய்வதையும் தடை செய்வதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் ராஜஸ்தான் மாநில அரசு ஒரு உத்தரவு ஆணையை வெளியிட்டது. அதில் எம்.ஆர்.பி. கட்டணம் தொடர்பான அறிவிப்பை கடைபிடிக்க அனைத்து மாவட்ட ஆணையர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு உத்தரவிடுதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் மத்திய அரசு வெளியிட்ட ஒரு குறிப்பாணையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இரட்டை எம்.ஆர்.பி. கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் பிறகே ராஜஸ்தான் அரசு இந்த தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாகவே சினிமா அரங்குகள், விளையாட்டு அரங்கங்கள், மல்டிப்ளெக்ஸ்கள் போன்றவற்றில் உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களுக்கு இரட்டை எம்.ஆர்.பி. கட்டணம் வசூலிக்கப்படுவதாக நுகர்வோர் தரப்பிலிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதனைத் தொடர்ந்தே மத்திய அரசு இரட்டை எம்.ஆர்.பி. கட்டண தடை தொடர்பான உத்தரவை பிறப்பித்தது.

அதேபோல ஏர்போர்ட் மற்றும், சினிமா அராங்குகளில் மினரல் வாட்டர், பிஸ்கட் போன்றவை வெளியில் விற்கப்படுவதைவிட மிக அதிகமான விலையில் விற்கப்படுகின்றன. அதேபோல ஹோட்டல்களிலும் எம்.ஆர்.பி. கட்டணத்துக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஹோட்டல் உரிமையாளர்கள் ஏ.சி. போன்ற கூடுதல் சேவைகளை வழங்குவதால் அதை ஒரு காரணமாகக் கூறுகின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிர அரசு கூடுதல் கட்டணம் தொடர்பாக மாநில அளவில் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. விற்பனை விலை விதிகளை மீறியதாக 134 நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் ஒரே பொருளுக்கு வெவ்வேறு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஏழு தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது அம்மாநில அரசு.

மும்பை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள மால், மற்றும் மல்டிப்ளக்ஸ்களுக்கு சென்று சோதனை நடத்தியதில், மினரல் வாட்டர் போன்ற நுகர்வோர் பொருட்களுக்கு எம்.ஆர்.பி. கட்டணத்தைவிட 10 முதல் 30 சதவிகிதம் வரை கூடுதலாக வசூலிப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் மால் மற்றும் மல்டிப்ளக்ஸ்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் அச்சிடப்பட்டுள்ள எம்.ஆர்.பி. கட்டணமே வெளியில் விற்கப்படும் பொருட்களின் எம்.ஆர்.பி. கட்டணத்திலிருந்து மாறுபடுவதாக சோதனை அதிகாரிகள் கூறினர்.

ராஜஸ்தான் மாநில அரசு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் அரங்குகளில் – குறிப்பாக ஐபிஎல் – எம்.ஆர்.பி.யை விட அதிகமான கட்டணம் வசூலிப்பதை தடை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் பின்னர் இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பிலிருந்து அதற்கு உடன்படுவதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு முக்கியமான குற்றச்சாட்டு, வெளியிலிருந்து கொண்டு வரும் உணவுப் பொருட்களை பெரும்பாலான திரையரங்குகள் அனுமதிப்பதில்லை என்பது. இதனால் சாதாரண மனிதர்கள் திரையரங்குகளில் மிக அதிக விலைக்கு விற்கப்படும் மினரல் வாட்டர் பாட்டில்களை வாங்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது. ‘இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இது போன்ற தருணங்களில் நுகர்வோர் குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது புகாரளிக்கலாம்’ என்று ஒரு அதிகாரி கூறினார்.

அதேசமயம் ராஜஸ்தான் அரசு, சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் ரசீது கொடுப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆணையர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் உள்ள ஒரு பிரச்னைக்கு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ராஜஸ்தான் அரசு எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு உட்பட மற்ற மாநிலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் எப்போது எடுக்கப்படும் என்பது கேள்விக்குறியே!

தொகுப்பு : சன்ஜீப் முகர்ஜி

நன்றி : [பிசினஸ் ஸ்டேண்டர்ட்]( http://www.business-standard.com/article/economy-policy/rajasthan-becomes-2nd-state-to-prohibit-dual-mrp-on-packaged-items-117022400719_1.html)

தமிழில் : பீட்டர் ரெமிஜியஸ்�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share