h4>சேது ராமலிங்கம்
இலங்கையில் சில நாட்களுக்கு முன்னதாக ஆளுங்கட்சிகளுக்குள் பெரும் மோதல் வெடித்து அரசியல் நெருக்கடியாக மாறியது. இலங்கை அதிபர் மைதிரிபாலா சிறிசேனா கடந்த 26ஆம் தேதியன்று மூன்று அறிவிப்புகளை வெளியிட்டார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவைப் பதவி நீக்கம் செய்வதாக எழுத்துபூர்வமாக அறிவித்தார். அவருடைய கட்சியையும் கூட்டணி ஆட்சியிலிருந்து விலக்கினார். உடனடியாகப் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவி ஏற்பார் என்று அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார். அதே போல ராஜபக்சே பதவி ஏற்று அமைச்சரவையும் நியமித்தார். இது எந்த வகையிலும் இலங்கையின் அரசியல் சட்டத்திற்கு ஏற்புடையதல்ல என்றும் தான் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் கூறி நாடாளுமன்றத்தின் சபாநாயகர் முரண்பட்டார்.
இன்னொரு பக்கம் தனக்குப் பெரும்பான்மை இருப்பதாகவும் அதை நிரூபிக்கப் போவதாகவும் பதவி நீக்கம் செய்யப்பட்ட ரணில் கூறிவருகிறார். அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறிசேனாவினால் குறைக்கப்பட்டன. இதற்கிடையே ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் ரணிலின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஆங்காங்கே மோதல்களும் நடைபெற்றுவருகின்றன.
சில ஆண்டுகளாகவே ரணிலுக்கும் சிறிசேனாவுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்துவந்தன என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியமாகும். கடந்த ஏப்ரலில் ரணில் ஆட்சியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானம் சிறிசேனாவும் ராஜபக்சேவும் இணைந்த கூட்டணியால் கொண்டுவரப்பட்டது. ஈழத்தமிழர்களும் முஸ்லிம்களும் ரணிலை ஆதரித்ததால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது. தற்போது இரு தரப்பினருக்குமான மோதல் உச்சமடைந்து அரசியல் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் கூறுகின்றன.
**சீனாவின் ஆதிக்க அரசியல்**
இலங்கை முழுவதும் உறுதியற்ற அரசியல் நிலைமை காணப்படுகிறது. இந்த நிலைமைக்குக் காரணம் ரணிலுக்கும் ராஜபக்சேவுக்குமான இடையிலான அதிகாரப் போட்டி என்பதாக மட்டும் ஊடகங்கள் சித்திரிக்கின்றன. உண்மையில் தெற்காசியாவில் இந்திய – அமெரிக்கக் கூட்டணிக்கு எதிராகச் சீனா நடத்தும் ஆதிக்க அரசியல் போட்டியாகும். இந்த ஆதிக்க அரசியல் சதுரங்கத்தில் தற்போது சீனா தனது காய்களை வெற்றிகரமாக நகர்த்தியுள்ளது
இந்தியா மட்டுமே தெற்காசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்திவருவதாகக் கருதப்பட்டது. இலங்கையைத் தனது காலனிச் சொத்தாகவே இந்தியா கருதிவந்ததாகவும் இதில் யார் தலையிடுவதையும் இந்தியா விரும்பவில்லை எனவும் மதிப்பிடப்பட்டது. ஆனால், தெற்காசிய நாடுகளில் மட்டுமின்றி, ஆசியா முழுமைக்குமான ஆதிக்க சக்தியாக வளர்ந்துவரும் சீனாவின் பங்கு குறித்து யாரும் மதிப்பிடவில்லை.
தெற்காசியாவில் தனது ஆதிக்க நலன்களுக்கெதிராக உள்ள சக்திகளை நசுக்க இந்திய அரசைப் பயன்படுத்திக்கொள்ளுமளவுக்கு சீனா வளர்ந்துள்ளது. நான்காம் ஈழப் போரில் விடுதலைப் புலிகளை அழிக்க இந்தியாவின் உதவியைச் சீனா தந்திரமாகப் பயன்படுத்திக்கொண்டது. இந்தியா, அமெரிக்காவுடனான தனது உறவைப் பலப்படுத்த துவங்கியபோதே அதற்கு எதிரிடையாகவே சீனா தனது ஆதிக்கத்தை தெற்காசியாவில் வளர்க்கத் தொடங்கியது என்பது இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
**உறவைப் புதுப்பித்த சீனா**
இந்திய அமைதிப் படை இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர், இலங்கை அரசு சீனாவுடன் தான் கொண்டிருந்த உறவைப் புதுப்பித்துக்கொண்டு அதை வளர்க்கத் தொடங்கியது. அதற்காகத் தயாராக இருந்த சீனாவும், இலங்கையின் அரவணைப்பைப் பயன்படுத்திக்கொண்டு இப்பகுதியில் கால் ஊன்றத் தொடங்கியது.
1993இல் தென்மேற்கு இலங்கையிலுள்ள கல்லே நகரத்தில் உள்ள கப்பற்படைத் தளத்தில் சீனாவைச் சேர்ந்த ‘நோரிங்கோ’ நிறுவனம் பிரமாண்டமான ஆயுத கிடங்கு ஒன்றைத் திறந்து விற்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி இலங்கை அரசு தனக்குத் தேவையான அனைத்து ராணுவத் தளவாடங்களையும் இக்கிடங்கைத் தவிர வேறு யாரிடமும் வாங்கக் கூடாது.
**ஈரானுக்கு அனுமதி ஏன்?**
சீனாவுடன் மேலும் நெருக்கமான உறவைக்கொள்ள சீனாவின் ஆதரவு நாடான ஈரானை நட்பு நாடாக்கிக்கொள்ள அந்நாட்டுக்குச் சில சலுகைளுடன் சபுகஸ்கந்தா என்ற பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதிக்கப்பட்டது. அதேபோல் தென்னிலங்கையில்உள்ள உமா ஆற்றில் 100 மெகாவாட் திறனுக்கான நீர் மின் நிலையம் அமைப்பதற்கும் ஈரானுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சபுகஸ்கந்தா சுத்திகரிப்பு நிலையத்தை விரிவாக்குவதற்குத் தேவையான நிதி என்று ஈரான் முன்வைத்த தொகையானது மிக அதிகமாக (300 விழுக்காடு) இருந்தாலும் இத்திட்டம் கைகூடினால் இலங்கைக்கு ஒரு பெரும் தொகையை வளர்ச்சி நிதியாக அளிக்க ஈரான் முன்வந்தது. எதிர்காலத்தில் இந்தியா, இலங்கைக்கு எதிராகத் திரும்பும் சூழ்நிலை உருவானால் இலங்கை மண்ணில் ஈரான் இருந்தால் அது தனக்கு உதவிக்கரம் நீட்டும் என்ற எதிர்பார்ப்புடன் இலங்கை இத்திட்டத்தை அமல்படுத்தப்படத் தொடங்கியது.
இலங்கையின் தென்கோடிக் கடற்கரையிலுள்ள அம்பாந்தோட்டை நகரை ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் துறைமுக நகராக உருவாக்கிடவும் சீனாவுக்கு இலங்கை அரசு அனுமதியளித்துள்ளது. சீனாவின் தனியார் நிறுவனங்களால் கட்டப்படும் இத்திட்டத்தின் முதல் கட்டமானது விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டத்திலேயே பெட்ரோல், டீசல் ஆகியவற்றைச் சேமித்து வைக்கும் கண்டெய்னர் துறைமுகம், எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலை, விமான நிலையம் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுவிடும்.
**கடலடிக் கம்பி வடம் எதற்கு?**
இதற்கும் மேலாக 2008 ஏப்ரலில் இருந்து தூத்துக்குடியையும் கொழும்புவையும் இணைக்கும் கடலடிக் கம்பி வடத்தையும் (கேபிளையும்) சீனா கைப்பற்றியுள்ளது. இந்தியாவின் தொலைபேசியையும் இணைய வசதியையும் உலகத்தோடு இணைப்பதில் கடலடிக் கம்பி வடங்களே முக்கியப் பங்காற்றுகின்றன. டாட்டாவுக்குச் சொந்தமான கடலடிக் கம்பி வடங்களும் ரிலையன்ஸ் அம்பானிக்குச் சொந்தமான ஃபிளாக் என்ற கம்பி வடங்களும் ஏர்டெல்லின் சுனில் மிட்டல் மற்றும் சிங்டெல்லுக்குச் சொந்தமான 121 கம்பி வடங்களும் இந்தப் பணியைச் செய்துகொண்டிருக்கின்றன. இத்துறையில் தனியாரைப் போலவே பிஎஸ்என்எல்லும் 2006இல் இலங்கை டெலிகாம் நிறுவனத்துடன் சேர்ந்து 306 கிமீ நீளமுள்ள கடலடியில் செல்லும் கம்பி வடச் சேவையை தூத்துக்குடிக்கும் கொழும்புவுக்கும் இடையில் நிறுவியது.
ஜப்பானின் தனியார் நிறுவனம் ஒன்றினால் 180 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்ட கம்பி வடச் சேவை 2006 அக்டோபர் முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இப்போது இக்கம்பி வடச் சேவை சீன உளவாளி என்று சந்தேகிக்கப்படும் ஆனந்தகிருஷ்ணன் என்ற மலேஷியத் தொழிலதிபரின் நிறுவனத்திடம் சிக்கியிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவிலிருந்து பிஎஸ்என்எல் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் தொலைபேசி மற்றும் இணையதள மின்னஞ்சல் தகவல்களை ஒட்டுக் கேட்பதும் பதிவு செய்யவும் சீன உளவு நிறுவனங்களினால் முடியும். வெற்றிகரமாக முடிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் விழாவில் ராஜபக்சே சகோதரர்கள் நேரடியாகக் கலந்துகொண்டனர்.
**களத்தில் இறக்கப்பட்ட நாடுகள்**
இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், இந்திய – அமெரிக்க ராணுவம் ஒப்பந்தங்கள் மற்றும் இந்திய – அமெரிக்க கப்பற்படைகள் கூட்டாக மேற்கொண்ட பயிற்சிகள் ஆகியவை தொடங்கிய 2006இலிருந்து இன்று வரை இவற்றுக்கு எதிரிடையாகச் சீனாவானது இலங்கையின் பல துறைகளிலும் வெகு வேகமாகக் கால் பதித்துள்ளது. ஆயுத உற்பத்தி, மின் உற்பத்தி, தொலைத் தொடர்பு, சாலைகள் அமைத்தல், தொடர் வண்டித் தொழில் மற்றும் துறைமுகத் துறை ஆகிய துறைகளில் தனது முதலீட்டைக் குவித்துத் தொழிலை மேம்படுத்திக்கொண்டிருக்கிறது. 1990களைப் போல இந்தச் செயல்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு அது தன்னுடைய நாட்டையும் ஹாங்காங் தொழில் நிறுவனங்களையும் மட்டுமே நம்பியிருக்கவில்லை. தனது ஆதரவு நாடுகள் அனைத்தையும் களத்தில் இறக்கியுள்ளது. 2006 டிசம்பரில் இருந்து 2007 ஜூலைக்குள் இலங்கையிலும் இந்தோனேசியாவிலும், மலேஷியாவிலும், வங்க தேசத்திலும், பாகிஸ்தானிலும் சீன அரசுடன் தொடர்புடைய மேற்கூறிய நிகழ்ச்சிகள் நடந்திருப்பதாகத் தகவல்கள் தெரியவந்துள்ளன.
**சாதகமான முதலாளிகளை உருவாக்குவது**
பிற நாடுகளில் தனக்குச் சாதகமான ஒரு முதலாளி வர்க்கத்தை (பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் செய்தது போன்றது) உருவாக்கும் முயற்சியில் அது ஈடுபட்டிருக்கிறது. இதனால், இலங்கையில் இந்திய முதலாளிகளின் மூலதனம் இல்லை எனத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. இலங்கையில் 25 இந்திய நிறுவனங்களின் 1500 லட்சம் அமெரிக்க டாலர்கள் முதலீடு உள்ளது. ஆனால், இது சீனாவின் முதலீட்டை ஒப்பிடும்போது குறைவே. இலங்கையில் சீனாவின் நேரடி முதலீடே ஆயிரம் கோடி டாலர்களுக்கு மேலானது (உதாரணமாக ஹம்பத்தொட்டா துறைமுக நகர் உருவாக்குவதற்கான முதலீடு மட்டும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்) சீனா மறைமுகமாகத் தன்னைச் சார்ந்துள்ள ஹாங்காங், மலேஷியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் மூலமாகப் பல கோடி டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
சீனா நேரடியாகவும் மறைமுகமாகவும் தெற்காசியாவில் மட்டுமின்றி ஆசியா முழுமைக்கும் பொருளாதார ராணுவத் திட்டங்களைப் பிற நாடுகளில் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது, பிறப்பில் சீனர்களல்லாத முதலாளிகளின் கூட்டமொன்றைத் திட்டமிட்டு அது வளர்த்து வருகிறது. இதற்கு என்ன காரணம்? இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவை அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் குறுகிய காலத்தில் எப்படி வளர்த்தெடுப்பது? அதற்கு முதல் தேவை எவருக்கும், குறிப்பாக இந்தியாவுக்கு, சந்தேகம் ஏற்படாமல் ரகசியமாகச் செயல்படுவதுதான். இப்படி சீனாவின் நிறுவனங்களோ அல்லது ஹாங்காங்கிலிருந்து செயல்படும் சீனாவின் நிறுவனங்களோ செயல்பட்டால் அவை சந்தேகத்தை உருவாக்கும். ஆனால், சீனாவின் நல்லுறவுடன் உள்ளதும் சீனர்கள் அதிகமாக வாழ்கின்றதுமான நாடுகளான சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவின் முன்னணி தொழில்நிறுவனங்களைக் கொண்டு வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியும்.
**திட்டமிட்டே காய் நகர்த்தும் சீனா**
இந்த நிறுவனங்களைச் சீன அரசுடன் தொடர்புடைய நிறுவனங்கள் என்று இந்திய அரசு அவ்வளவு சுலபமாக ஒதுக்கிவிட முடியாது. அப்படிப்பட்ட நடவடிக்கையை இந்திய அரசு எடுக்கும்பட்சத்தில் மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் சீனாவின் பக்கம் சேர்ந்துவிடும் அபாயம் உண்டு. அதனால் இந்தியாவினால் ஒன்றுமே செயல்பட முடியாது என்று திட்டமிட்டே சீனா காய் நகர்த்திவருகிறது.
இதற்கு எல்லாம் உச்சமாக சீனா அனைத்து விதமான ராணுவத் தளவாடங்களையும் ஆலோசனைகளையும் நிதி உதவியையும் இலங்கை அரசுக்கு அள்ளிக் கொடுத்தது ஏன்? இது ஒரு எளிமையான தந்திரம்தான். சீனாவை நம்பினோர் கைவிடப்பட மாட்டார் என்பதுதான். சீனாவுடன் கூட்டு வைத்துக்கொள்ளும் நாடுகள் இலங்கையைப்போல திட்டவட்டமான ராணுவ வெற்றிகளை அடைய முடியும் என்பதை சம்பந்தப்பட்ட உறவு நாடுகளின் அரசுகளுக்கு இந்த நான்காம் ஈழப் போரின் ராணுவ முடிவுகள் மூலம் தீர்க்கமாக அறிவிப்பதே சீன அரசின் நோக்கம். ஆனால், சீனா திட்டமிட்டதற்கு மாறாக இந்திய அரசு 2015இல் ராஜபக்சேவை அதிகாரத்திலிருந்து நீக்கிட ரணிலுக்கும் சிறிசேனாவுக்கும் ஒரு மத்தியஸ்தம் செய்து வைத்து ஆட்சிக்குக் கொண்டுவந்தது. இதன் நோக்கம் தொடக்கத்திலிருந்தே சீனத்தின் ஆதரவாளரான ராஜபக்சே இலங்கையில் சீனாவுக்கு அதிக இடமளிப்பார் என்பதுதான். இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது ராஜபக்சே மூல உத்தியாக சீனாவை இலங்கையில் அனுமதித்ததுதான்.அம்பாந்தோட்டை துறைமுகத்தைத் கட்ட அனுமதித்தது, இலங்கையின் கடல்வெளியில் சீனத்தின் நீர்மூழ்கிக் கப்பல்களை அனுமதித்தது ஆகிய ராஜபக்சேவின் நடவடிக்கைகள் இலங்கையைச் சீனத்தின் சொத்தாக மாற்றும் அளவுக்குச் சென்றன. இதனால்தான் இந்தியா ரணில் – சிறிசேனாவின் கூட்டணியைக் கொண்டுவந்தது. அதற்குப் பின்னர் இந்தியா இலங்கையின் விவகாரத்தில் மூன்று மாத காலம் முக்கிய கவனம் செலுத்தவில்லை.
இந்த நிலையில் தன்னையும் மற்ற இரு அமைச்சர்களையும் கொல்ல ரா நிறுவனம் சதி செய்ததாகவும் சிறிசேனா உணர்ச்சிவசப்பட்ட நாடகத்தனமான அறிவிப்பை வெளியிட்டார். அதற்கு இந்தியாவிலிருந்து மறுப்புத் தெரிவிக்கவே, இது பிரதமருக்குத் தெரியாமல் நடந்திருக்கலாம் என்று சமாளித்தார். இதனையடுத்து மிக வேகமான முறையில் ஆட்சிக் கவிழ்ப்பானது சீனாவின் ஆதரவுடன் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளான ஐரோப்பிய நாடுகளும் இதை எதிர்த்தன. இலங்கையின் அரசியல் சாசனத்தின்படி ஜனநாயக நெறிகளுடன் செயல்படுமாறு அறிவுரை கூறின. இந்தியாவும் பவ்யமாக அதனை வழிமொழிந்துள்ளது. ஆதிக்க அரசியலின் ஒற்றுமை இதுதான். இதிலிருந்தே அந்த அணிக்கு எதிராக உள்ள சீனத்தின் செயல்பாடுகளையும் புரிந்துகொள்ளலாம்.
**இந்திய நலன்கள் பாதிக்கப்படுமா?**
தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்ட ரணில் இந்திய – அமெரிக்க ஆதரவு அணியாகவும் எதிர்த் தரப்பில் சீன ஆதரவு அணியாக சிறிசேனாவும் ராஜபக்சேவும் உள்ளனர். ராஜபக்சே பிரதமரானது இலங்கையின் மீதான இந்திய நலன்களைப் பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில், ராஜபக்சே தலைமையிலான இலங்கை சுதந்திரா கட்சியினர் இலங்கை முழுவதும் இந்திய எதிர்ப்பைப் பரப்புரை செய்துகொண்டே சீனத்துக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கின்றனர். இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்னரே அந்நாட்டின் துறைமுக வளர்ச்சித் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கே ஈஸ்டர்ன் கன்டெய்னர் டெர்மினலை இந்தியாவுக்குத் தர மாட்டோம் என்று அறிவித்தார். இது 2017இல் இலங்கை இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறுவதாகும். இந்தியாவுக்குத் திட்டமிட்டபடி, முக்கியமான திட்டங்களான திரிகோணமலை எண்ணெய் கிணறுகள், யாழ்ப்பாணத்திலுள்ள பலாய் விமான நிலையம், அம்பாந்தோட்டையில் மாட்டாலா விமான நிலையம் மற்றும் கொழும்புவுக்கு வெளியே எரிவாயு கிணறுகள் ஆகியன அளிக்கப்பட வேண்டியவை. ஆனால், இனி என்ன ஆகும் என்பதை உறுதியாகக் கூற முடியாது.
இலங்கையின் வரலாறே அந்நாடு உலக மேலாதிக்க நாடான அமெரிக்காவின் ஏஜென்டாக இருந்து அதன் சார்பாக இலங்கை மேலாதிக்கம் செய்யப்படும் நாடாகவே இருந்துள்ளது. தற்போது இரு தரப்பினரிலும் யார் வெற்றி பெறுவார் என்பதில் நிச்சயமற்ற நிலை இருந்தாலும் தற்போது சீன ஆதரவு (ராஜபக்சே – சிறிசேனா) அணியினரின் கையே ஓங்கியுள்ளது என்பதுதான் உண்மை.
**ஆதாரங்கள்:**
1.Times of India, October 27,2018
2.Red cat and white cat – Contradictions of market socialism, by Robert Weil. Published by monthly review, Newyork.
3. Foreign Investment of China, China – A Modern Social – Imperialist Power (an integral part of the capitalist-imperialist system)�,”