சிறப்புக் கட்டுரை: இலக்கியம்: கற்புடை மொழி? – போகன் சங்கர்

public

தமிழில் இலக்கியவாதியாக இருப்பதின் சிரமங்களில் ஒன்று யாராவது ஒருவர் வந்து, “சார் நான் கவிதை எழுதறேன். ஆனா ஒற்றுப் பிழை நிறைய வருது. நல்ல இலக்கணம் படிக்க வழிகாட்டி நூல் ஒண்ணு சொல்லுங்க” என்பார்கள். நான், என்னுடைய தோழியும் தமிழ் ஆசிரியரும் கவிஞருமான ஒருவரிடம் போன் பண்ணிக் கேட்பேன் (மருந்து தெரிந்தாலும் பட்டம் வேண்டுமல்லவா வைத்தியம் செய்வதற்கு?). அவர் அரை மணி நேரம் இக்கால மாணவர்களின் இலக்கண அறியாமையைப் பற்றி புலம்பிவிட்டு இறுதியாக எந்த மருந்தையும் பரிந்துரைக்காமல் வைத்துவிடுவார்.

இன்னொரு அபாயமும் உண்டு அந்த இலக்கண நோயாளி ஒரே வாரத்தில் எனக்கு அவரது ‘தற்போது மேம்படுத்தப்பட்ட’ கவிதையை அனுப்பி “எல்லா‘க்கும் சரியாப் போட்டிருக்கேன். இப்பவும் கவிதை இல்லைன்னு சொல்றாங்களே?” என்பார். கவிதை என்பது ‘க்’குகளால் அல்லது காதல் கவிஞராக இருந்தால் ‘ச்’சுகளால் மட்டுமே ஆனதில்லை என்று அவருக்கு எப்படிப் புரியவைப்பது?.

இந்த இலக்கண நூல்களைப் பரிந்துரைப்பதில் சில தார்மிகப் பிரச்னைகள் எனக்கு உள்ளன. அதுவும் ஒரு காரணம். தொல்காப்பியம் கூறும் இலக்கண / புணர்ச்சி விதிகள் யாவையும் கவிதைக்கு உரியவை. கவிதையில் ஒலி முக்கியம். தமிழில் வடமொழி போன்றோ மலையாளம் போன்றோ நான்கு ‘க’ நான்கு ‘ச’ கிடையாத நிலையில் புணர்ச்சி விதிகள் ஒற்று மிகுதல் மிகாதிருத்தல் முக்கியம். மலையாளத்தில் ஒற்றுப் பிரச்னைகள் இருந்தாலும் அவற்றின் ஏராள ‘கா’கங்கள் பிரச்னையைச் சமாளித்துவிடுகின்றன.

**இலக்கணம் உருவான விதம்**

உரைநடைக்குத் தமிழில் இலக்கணம் இல்லை. தமிழில் உரைநடை உருவாகவில்லை. அது இங்கு இறக்குமதி செய்யப்பட்டது. அதற்கு இலக்கணம் என்று நாம் இப்போது உடுத்திவிடுவது தொல்காப்பியர் கவிதைக்குப் போட்ட சட்டைதான். அல்லது ஆங்கில இலக்கணத்தை அடியொற்றி உருவாக்கப்பட்டது.

இது நிறைய பிரச்னைகளைக் கொண்டுவருகிறது. தமிழுக்குள் அதன் வரிவடிவத்தால் எழுத முடிவதைக் காட்டிலும் புதிய ஒலிகளும் புதிய உணர்வுநிலைகளும் வந்துவிட்டன. சமீபத்தில் கோவை புத்தகக் காட்சியில் பேராசிரியர் ஜெயந்தி பாலகிருஷ்ணன் மலையாளத்திலிருந்து ‘வரும் வராதிருக்கில்லா’ என்ற எம்.டி.வாசுதேவன் நாயரின் ஒற்றை வரியை மொழிபெயர்க்கப்பட்ட கஷ்டத்தை விவரித்தார்.

நல்ல தமிழில், நவீன தமிழில் ‘வருவான் வராதிருக்க மாட்டான்’ என்றோ ‘வருவாள் வராதிருக்க மாட்டாள்’ என்றோ ‘வருவார் வராதிருக்க மாட்டார்’ என்றோ மொழிபெயர்க்க வேண்டும். கவனிக்கவும் மலையாளத்தில் இது கொச்சையல்ல, வட்டார வழக்கும் அல்ல.

இங்கே வரும் என்பது அஃறிணையைக் குறிக்கும் சொல் இல்லை. அணுக்கத்தைக் குறிக்கும் சொல். தெற்கத்திப் பகுதிகளில் இப்போதும் அணுக்கமானவர்களை அது இது என்று சொல்வதுண்டு. நான் என் அப்பாவை ‘அது வந்துச்சு’ என்றுதான் சொல்வது. கோயம்புத்தூர்க்காரர்கள் வந்து திகைத்துப்போவார்கள். போகும்போது ‘இந்த தின்னவேலிப் பசங்களுக்கு மரியாதையே கிடையாது’ என்ற மனப்பதிவுடன் போவார்கள். என் வீட்டுக்கு அருகிலேயே உள்ள திருவில்லிப்புத்தூர் குடும்பத்திலோ மகனையேகூட தம்பி வாங்க போங்க என்றுதான் அழைப்பார்கள் என்பது அவருக்குத் தெரியாது.

**அதிகாரத்தின் மொழி?**

பேராசிரியர் வேதசகாயகுமார் கவிதை எப்போதுமே அதிகாரத்தின் மொழி என்பார். உரை அல்லது வசன நடைதான் சாமானியர்களின் மொழி. அது நெகிழ்வாகத்தான் இருக்கும். இருக்க வேண்டும். நவீன கவிதைகளில் பெரும்பகுதி வசன நடையிலேயே இருப்பதால் அதே நெகிழ்வு ஜனநாயகத்தன்மை அவற்றுக்கும் பொருந்தும்.

மொழித் தூய்மை என்பது சர்வாதிகாரத்துக்கு மிக நெருக்கமான ஒரு கருத்தாகும். அதனால்தான் எல்லா தேசியங்களும் மொழியை கையில் எடுத்துக்கொள்கின்றன. சற்றுக் கூர்ந்து கவனித்தால் எந்த ஒரு மொழியும் தேசியத்தின் வரலாறானது, மொழித் தூய்மையின், மொழி அடிப்படைவாதத்தின் வரலாறும் ஆகும்.

ஒரு மொழி இறுக்கமாகக் கட்டப்பட வேறு மொழிச் சொற்கள் மட்டுமில்லாது வேறு மொழி பேசும் மக்களும் கலப்பு மொழி பேசும் மக்களும் அந்த மொழியின் நிலத்திலிருந்து வெளியே தள்ளப்படுகிறார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்த மொழி தனக்குள்ளேயே நிலவும் வட்டார வழக்குகளையும் நோக்கி முகம் சுளிக்க ஆரம்பிக்கும். ஏனெனில் வட்டார வழக்குகள் பெரும்பாலும் பிறமொழிகளுடன் கூடி ஏற்பட்ட கலப்புச் சொற்களால் ஆனவை. இந்த மொழித் தூய்மைக் கோட்பாட்டுக்கும் பெண் தூய்மைக் கருத்தாக்கங்களுக்கும் தொடர்புண்டு என்ற பார்வையும் உண்டு. மொழித் தூய்மைவாதிகள் அடிப்படையில் கலாச்சார அடிப்படைவாதிகளாகவும் இருப்பது இதனால்தான்.

மலையாளம் ஒருகட்டத்தில் கொஞ்சம் ‘தூய மலையாளம்’ உருவாக்க முயன்றது. அதன் இறுக்கும் தன்மையை உணர்ந்து விட்டுவிட்டது. ஒப்பீட்டளவில் மலையாளப் பெண்கள் சுதந்திரமாக இருப்பதன் காரணம் அங்கே ‘தூய மலையாளம்’ கோஷம் வலுவாக இல்லை என்பதும் ஒரு காரணம் என்பது என் புரிதல்.

**தூய்மையான மொழி என ஒன்று உண்டா?**

ஒரு மொழியின் இலக்கணத்தை ஒருவர் அறியாதிருக்க வேண்டும் என்பதல்ல. ஆனால், மொழியின் மதில்கள் விரிந்துகொண்டே செல்பவை என்பதையும் ஒருவர் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். குறிப்பாக ஒரு படைப்பாளி.

நான் ஒருதடவை வடக்கில் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது ஒரு இந்தி இலக்கியவாதியைப் பார்த்தேன். அவர் அடிக்கடி ‘Chaste Hindi’ என்ற வார்த்தையைச் சொல்லிக்கொண்டிருந்தார். நான் அதை விளக்கும்படி சொன்னேன். அவர் உருது நீக்கப்பட்ட இந்தியைத்தான் அப்படிச் சொல்கிறார் என்பது புரிந்தது. நான் அவரிடம் சொன்னேன், ‘கற்புடைய இந்தி என்று ஒன்றும் கிடையாது. அப்படி ஒன்று இருந்திருந்தால் இந்தியே பிறந்திருக்காது’ என்றேன்.

உண்மையில் கற்பு என்று ஒன்று இருந்திருந்தால் எந்த மொழியுமே பிறந்திருக்க முடியாது.

கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: போகன் சங்கர்… கவிஞர், சிறுகதை ஆசிரியர். தொடர்புக்கு: boganath@gmail.com

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *