தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் மீதான எதிர்பார்ப்பை நாடே எதிர்பார்க்கிறது.
பாட்னாவின் காந்தி மைதானத்தில், ஆளுநரின் புத்தக வெளியீட்டு விழா வருகைக்காக நாங்கள் காத்திருந்தபோது, விழா தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பாக கம்பீரமான, உயர்ந்த மிடுக்கான தோற்றத்துடன் அவர் வந்து சேர்ந்தார். காரின் கதவு திறந்தவுடன், நான் அவரை அறிமுகப்படுத்தி வரவேற்றேன். என் கையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டு, ‘உன்னைப்பற்றி எந்த அறிமுகமும் தேவையில்லை’ என்றார்.
பொதுவாக, இன்றைய அரசியல்வாதிகள் இதுமாதிரியான நிகழ்ச்சிகளில் சந்திக்கும்போது பொதுமக்கள் கேலி செய்வதுண்டு. மேலும், பெரும்பாலான அரசியல்வாதிகள் இதுபோன்ற நூல் வெளியீட்டு விழாவில் கையெழுத்துப் போடுவதோடு சரி. ஆனால், அவர் இந்தப் பண்புகளுக்கு நேர்மாறானவராக, முதிர்ந்தவராக, கண்ணியமானவராக இருக்கிறார். கவர்னர் என் புத்தகத்தை ஏற்கெனவே வாசித்திருப்பதைக் கண்டேன். அவர் எனது நூலில் மேற்கோள்காட்டியுள்ள பகுதிகள் என்னுடைய உரையாடலுக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததாகும். அவரது சிந்தனையும், நான் நினைப்பதைப் போன்றே உள்ளதா என்ற கேள்வி என் மனத்தில் பரவியது.
விழாவில் நான் பேசும்போது, நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவரும், நோபல் பரிசு பெற்றவருமான சினுவா அஷபெ கூறியுள்ள ‘சிங்கங்கள் தங்கள் வரலாற்றாளர்களைக் கொண்டிருக்கும்வரை வேட்டையின் வரலாறு எப்போதும் வேட்டைக்காரரை மகிமைப்படுத்தும்’ என்ற மிகச்சிறந்த உவமையை சுட்டிக்காட்டிப் பேசினேன். அதன்பின்னர், நான் பேசி முடித்தபிறகு, ‘உங்கள் கருத்துகள் தற்போதைய இந்தியச் சூழலில் மிகவும் நம்பகமானவை!’ என்று என்னிடம் கவர்னர் கூறினார். விழாவில் அவரது பேச்சு மிகச் சுருக்கமாகவும், ஆழ்ந்த கருத்துகளையும் கொண்டதாக இருந்தது. அவர் விடைபெறுவதற்கு முன்னர், அவரது கண்ணியமான இயல்பு, அறிவார்ந்த ஆழம், சமூக அர்ப்பணிப்பு போன்றவை விழாவுக்கு வந்திருந்த அனைவரது மனத்திலும் ஒரு முத்திரையைப் பதித்திருந்தது.
இதிலிருந்து, ராம்நாத் கோவிந்த்தைப் பற்றித்தான் நான் பேசுகிறேன் என்று இப்போது நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். அவரது கல்வி பின்னணி, ஆழ்ந்த கருத்துகள் மற்றும் அவரது ஆளுமைத்திறன் போன்றவையே அவரை ஜனாதிபதி பதவிக்குத் தேர்வு செய்துள்ளது. அவரை வேட்பாளராக அறிவித்ததும் பலர் ஆச்சர்யமடைந்தனர். ஏனென்றால், நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவைப்போல் அவர் எப்போதும் தன்னைப்பற்றி குறைவான சுய விவரத்தையே கொண்டிருந்தார். நரேந்திர மோடி, அமித்ஷா ஆகிய இருவரும் ஸ்மார்ட்டான அரசியல் நடவடிக்கைகளைக் கொண்டிருந்து பின்னாளில் தீவிர அரசியலில் ஈடுபட்டனர்.
கோவிந்த் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். ஒவ்வோர் அரசியல் கட்சியும் அவரை எதிர்ப்பதற்கு முன்பாக இரண்டு முறை யோசிக்கும். ஏனென்றால், தலித்துக்கு விரோதமானவர்கள் என்ற முத்திரை தங்கள்மீது குத்தப்படுவதைத் தவிர்க்கும் வகையாக. முந்திய காங்கிரஸ் ஆட்சியின்போது ஜனாதிபதி பதவிக்கு கே.ஆர்.நாராயணன் பெயரை பரிந்துரை செய்தபோது, இதேநிலையைத்தான் எதிர்க்கட்சிகள் சந்தித்தன.
அவரது வெற்றியின் சாதனை இன்னும் முறியடிக்கப்படாமல் அப்படியே உள்ளது. தலித் பிரதிநிதியை ஆளும்கட்சித் தரப்பில் வேட்பாளராக நிறுத்தியதன் காரணமாக எதிர்க்கட்சிகளும் தலித் பிரதிநிதியான மீரா குமாரை தங்கள் வேட்பாளராக நிறுத்தவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.
புகழ்பெற்ற தலித் தலைவர் ஜகஜீவன்ராமின் மகளான மீரா குமார், மக்களவையின் சபாநாயகர் பதவி உள்பட பல்வேறு உயர்ந்த பதவிகளை வகித்துள்ளார். ஜனாதிபதி பதவிக்கு முதன்முறையாக, தகுதி வாய்ந்த இரண்டு தலித் தலைவர்கள் ஒருவருக்கொருவர் எதிராக கடும் போட்டியில் உள்ளனர். மீரா குமார் போட்டியிடுவதன் மூலம் தனது தலித் ஆதரவினை அப்படியே வைத்திருக்க முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது.
இந்நிலையில், பாஜக தலைவர்கள் முஸ்லிம் வாக்குகளைத் தாங்கள் ஒருபோதும் பெறமுடியாது என்பதை நன்கு உணர்கிறார்கள். எனவே, அவர்கள் பாரம்பர்யமாக காங்கிரஸின் வாக்கு வங்கியாக இருந்துவரும் தலித் மக்களை இழுக்க விரும்புகிறார்கள்.
ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, அம்பேத்கர் ஆண்டு விழாவில் அமித்ஷா, தலித் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு மதிய உணவு சாப்பிட்டார். உத்தரப்பிரதேசத்தில் கோலி சமூகத்தில் பிறந்த கோவிந்த்துக்கு, மாநிலத்தில் உள்ள வாக்காளர்களால் அதிகம் பாதிப்பில்லை. மேலும், பீகாரில் அவர் கவர்னராக இருப்பதால், ஜனதாதளத்தின் (ஐக்கிய) அல்லது ஜே.டி.(யு) ஆதரவுடன் பாஜக கூடுதல் ஆதரவைப் பெறுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமல்லாமல், ஜே.டி.(யு) மற்றும் அஇஅதிமுக-வினரின் ஆதரவும் ராம்நாத் கோவிந்த்துக்கு கிடைத்துள்ளது. இந்தத் தேர்தலானது, எதிர்க்கட்சிகளுக்கு நெருப்பின்மீது நடப்பதைப் போன்றதாகும். ஏனென்றால், வருகின்ற 2019ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலுக்கு இதை ஓர் ஒத்திகையாக மக்கள் பார்க்கின்றனர். கோவிந்தின் வெற்றி நிச்சயம் என்பது தெளிவாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தடையை ஏற்படுத்தும் விதத்தில் போட்டியிடுகின்றனர்.
ராம்நாத் கோவிந்த்தைக் குறை கூறுபவர்கள், கடந்த இருமுறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தபோதிலும் அவர் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்று சொல்லலாம். மேலும், அதன் காரணமாகவே அவருக்குக் கடந்த 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட அவருக்கு சீட் கிடைக்கவில்லை என்று கூறினர். அதைத் தொடர்ந்து, அவர்மீது பொறாமை கொண்டவர்கள், ஜனாதிபதி அலுவலகத்தை அடைவதற்கு அவர் குறுக்குவழியை தேர்வு செய்துள்ளார் என்றனர்.
இந்நிலையில், ஆபிரகாம் லிங்கன் வாழ்க்கை சம்பவத்தில் நடைபெற்றதை எந்த விவாதமின்றி இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர், தனது வாழ்க்கையில் பல தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியையே சந்தித்து திவாலாகிப் போனார். ஆனால், உலகின் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் அலுவலகத்துக்கு நடைபெற்ற தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தபோது, அவர் அடிமைத்தனத்தை அகற்றினார்.
இந்திய ஜனாதிபதிக்கும் நிறையக் கட்டுப்பாடுகள் இருப்பதால், குடியரசுத் தலைவர் பதவியை அடைந்ததும், ராம்நாத் கோவிந்த்தின் தேவைக்கேற்ற நிறைய விஷயங்களைச் செய்ய முடியும். இன்றும்கூட, தலித்துகளின் குரல்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட குரல்களைக் கேட்க விரும்பவில்லை. அவர்களில் இருந்து எழுந்த ஒரு நபர் சூழ்நிலையை மாற்றுவதற்கு முன்முயற்சி எடுக்க வேண்டும். அவர் சினுவா அஷபெபின் கூறியதை மனத்தில் வைத்துக் கொள்வாரா? வரலாறு ராம்நாத் கோவிந்த்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
நன்றி: லைவ் மின்ட்
கட்டுரையாளர்: ஷாஷி சேகர். இந்துஸ்தான் இதழின் தலைமை ஆசிரியர்.
மொழியாக்கம்: இ.சி.பிர்லா�,