ர.ரஞ்சிதா
**இன்று (மே 17) ‘உலக இரத்த அழுத்தத் தினம்!’**
வளர்ந்துவரும் நவீன உலகில் வாழ்க்கைமுறையும், உணவுப் பழக்கவழக்கமும் மாறிவரும் சூழலில் குடும்பத்தில் ஒருவருக்கு என்ன சிலருக்குக்கூட பிபி, சுகர் போன்ற நோய்கள் இருப்பது சகஜமாகிவிட்டது. இளம் வயதிலேயே, அதிலும் 20 – 25 வயதிலேயே நூற்றில் பத்து பேருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
**இரத்த அழுத்தம்**
இரத்தம் அழுத்தத்தை இரத்தக் கொதிப்பு என்றும் அழைப்பார்கள். இரத்த அழுத்தத்தில் உயர் இரத்த அழுத்தம் (Hyper Tension), குறைந்த இரத்த அழுத்தம் (Hypo Tension) என்று இரண்டு வகை உண்டு. ஆண், பெண் இருவருக்கும் இயல்பான இரத்த அழுத்தம் 120/80 மி.மீ பாதரச அளவுதான் இருக்க வேண்டும். இந்த அளவு குறையும்போதும் அதிகரிக்கும்போதும் இரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்படுகிறது.
இரத்த அழுத்தத்துக்கான எல்லைக்கோடு 130/85 அளவில் வந்துவிட்டால் நாம் உஷாராகி, உடனடியாக உணவு மற்றும் வாழ்க்கைமுறைகளில் மாற்றம் செய்துகொள்வது நல்லது. மேலும் இரத்த அழுத்தம் 140/90க்குமேல் வந்த பிறகுதான் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. பொதுவாக 40 வயதைக் கடந்தவர்கள் ஆறு மாதத்துக்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பது அவசியம்.
**இளம் வயதிலே இரத்த அழுத்தம்**
பொதுவாக இரத்தக் கொதிப்பு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு என்கிறார், அப்போலோ மருத்துவனையில் பணிபுரியும் இதய நோய் சிறப்பு நிபுணர் செங்கோட்டுவேல். இரத்தக் கொதிப்பு தற்போது 20 வயதுடையவர்களுக்கும் வருகிறது. அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி போன்றவர்களிடமிருந்து பரம்பரையாக வரக்கூடியதனால் இளம் வயதிலேயே இரத்த அழுத்தம் ஏற்படும்.
நாம் வாழும் வாழ்க்கை முறையினாலும் இரத்த அழுத்தம் ஏற்படலாம். வாழ்க்கை முறையில் மன அழுத்தம், உணவு பழக்கவழக்கம் மற்றும் தூக்கமின்மை ஆகிய காரணங்களால்தான் இரத்த அழுத்தம் இளம் வயதிலேயே ஏற்படுகிறது. இதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து குணப்படுத்தலாம்.
**இரத்த அழுத்த அறிகுறிகள்**
களைப்பு ஏற்படுதல், தலைவலி, தலைச்சுற்றல், நடக்கும்போது மூச்சுவாங்குதல், மயக்கம், வாந்தி, நெஞ்சுவலி, கால்வீக்கம் ஆகியவை இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள். ஆனால் பெரும்பாலோருக்கு இந்த அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாது.
திடீரென்று ஒருநாள் பக்கவாதம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்போதுதான் தெரியவரும். உடலில் அமைதியாக இருந்து ஆளைக் கொல்வதால் இதை சைலன்ட் கில்லர் (அமைதியான ஆட்கொல்லி நோய்)” என்றும் அழைப்பர்.
** குறைவும் அதிகமும்**
இரத்த அழுத்தம் என்பது நமது உடலில் மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு செயலிலும் ஈடுபடும்போது இரத்த அழுத்த அளவுகளில் சற்று வித்தியாசம் இருக்கும். இதேபோன்று மகிழ்ச்சி, கவலை, கோபம், பயம், அதிர்ச்சி, தூக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றுக்குத் தகுந்தவாறு இரத்த அழுத்தம் சிறிது அதிகமாகவோ, குறைந்தோ காணப்படும்.
இரத்த அழுத்தத்தை வீட்டிலேயே அளவிடலாம். இரத்த அழுத்தமானது தூங்கும்போது குறைந்தும், உணர்ச்சிவசப்படும்போது உயர்ந்தும் காணப்படும். தூங்கும்போது இரத்த அழுத்தம் குறைந்து காணப்பட வேண்டும், அப்படி இல்லையென்றால் இரத்தக் கொதிப்பு அதிகமாகும்.
**மக்களும் இரத்த அழுத்தமும்**
இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 30 லட்சம் பேருக்கு மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதில் குறைந்தது எட்டு லட்சம் பேருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்படுகிறது. இரத்த அழுத்தம் மற்றும் சுகர் இருந்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும்.
இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்வதில் பக்கவிளைவு ஏதும் இல்லை. அவர்கள் மருந்துகளைத் தவிர்த்தால்தான் பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். இந்தியாவில் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களில் 30 சதவீதம் பேர்தான் மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் 33 சதவீத மக்கள்தான் மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். 33 சதவீத மக்கள் மருந்துகளைத் தவிர்த்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்காமல் இருக்கிறார்கள். இதில், தங்களுக்கு இரத்தத அழுத்தம் இருப்பதே தெரியாமல் 33 சதவீத மக்கள் இருக்கிறார்கள்.
**என்ன செய்யலாம்?**
இரத்த அழுத்தம் இருப்பதற்கான அறிகுறி தெரிந்த பின்தான் அதற்கான சிகிச்சை மேற்கொள்ள வருகிறார்கள். அப்படி இல்லாமல் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முன்பே அதைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆப்பிள், மாதுளை போன்ற பழ வகைகளையும், கால்சியம் நிறைந்த உணவுகளையும் உட்கொள்ளவேண்டும்.
இரத்த அழுத்தம் ஏற்பட இருக்கும் ஆரம்ப காலத்திலேயே அதைக் கண்டுபிடித்து, மன அழுத்தத்தைக் குறைத்துக்கொண்டு உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். தியானம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதினால் மன அழுத்தம் குறையும்.
உப்பு அதிகம் உள்ள ஊறுகாய், சிப்ஸ் போன்ற உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். கொழுப்பு அதிகமுள்ள உணவுகளான இறைச்சி வகைகள், நெய், வெண்ணெய், ஐஸ்க்ரீம், சாக்லெட் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும்.
பொதுவாக வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டுவந்தாலும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும். புகைப் பழக்கம், குடிப் பழக்கம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. அப்படிக் கட்டுக்குள் இல்லை என்றால் மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படும். இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது 7 மணி நேரமாவது தூங்கவேண்டும் என்று மருத்துவர் செங்கோட்டுவேல் தெரிவித்தார்.
**உப்பின் அளவு முக்கியம்**
இந்தியாவில் இரத்த அழுத்தம் அதிகம் ஏற்படுவதற்கான காரணம் உப்பின் (சோடியம் குளோரைடு) அளவு அதிகரிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதாக சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழுவைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் புகழேந்தி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு நாளைக்கு 3இல் இருந்து 5 கிராம் அளவிற்குத்தான் உப்பின் அளவு இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் ஒரு நாளைக்கு 15 கிராம் அளவிற்கு எடுத்துக்கொள்வதால், இங்கு இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகமாக இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக உணவுப் பழக்கவழக்கம், மன அழுத்தம், மாசுபாடுகள் மற்றும் ஹார்மோன் காரணங்களினால் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இந்தியாவில் வாழும் மக்களில் 60 சதவீதம் பேருக்கு தங்களுக்கு இரத்த அழுத்தம் இருப்பதே தெரியாமல் இருக்கிறது. சிறுநீரகப் பிரச்சினை, கண் பார்வை இழப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு சிகிச்சை மேற்கொள்ளும்போதுதான் தங்களுக்கு இரத்த அழுத்தம் உள்ளதாக மக்களுக்குத் தெரிகிறது.
**விழிப்புணர்வு தேவை**
இந்தியாவில் பொதுவாக இரத்த அழுத்தம் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. இரத்த அழுத்த நோயால் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கிராமப்புறங்களில் இருக்கும் மக்களுக்கு இரத்த அழுத்தம் குறித்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அங்கு அவ்வாறு செய்யப்படுகிறதா என்றால் கேள்விக்குறிதான். ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கும் சூழலைப் பொறுத்துத்தான் பரிசோதனை மேற்கொள்ளப்படும். உதாரணமாக மருத்துவனையில் நிறையக் கூட்டம், மருத்துவரின் அலட்சியம் மற்றும் மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது போன்றவற்றால்தான் மக்களுக்கு இரத்த அழுத்தம் இருப்பது ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடிக்கப்படாமல் போகிறது.
60 சதவீத மக்களுக்கு இரத்த அழுத்த பாதிப்பு இருப்பதே தெரியாமல் இருப்பதால் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் முறையாக இதுகுறித்து பரிசோதனை செய்து தெரிவிக்க வேண்டும்.
**ஷரத்து 47 தெரிவிப்பதென்ன?**
சுகாதாரத்தைப் பேணிக் காப்பது அரசின் கடமை என்று இந்திய அரசியலைப்புச் சட்ட ஷரத்து 47 கூறுகிறது. நாம் அன்றாடம் சாப்பிடுகின்ற உணவுகளில் உள்ள கலோரி, சோடியம் மற்றும் புரோட்டின் போன்ற உணவுப் பொருட்களின் தன்மையைப் பற்றி தெரிவிக்க வேண்டும். அமெரிக்காவில் உணவுப்பொருட்களின் தன்மையைக் குறித்து தெரிவிக்கும் சட்டம் கடுமையாக உள்ளது.
இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் அதிகாரத்தின் மூலம் உணவுப் பொருட்களின் தன்மை குறித்து வெளியிடப்படுகிறது. ஆனால் அதில் உண்மைத் தன்மை சரிவர இல்லை. பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் சிப்ஸில் எவ்வளவு சோடியம் உள்ளது என்று குறிப்பிடப்படவில்லை. நாம் வாங்கும் உறுகாய், வடகம் போன்றவற்றில் அதன் தன்மைகள் குறித்து விளக்கப்படவில்லை. முன்பு இருந்த உணவுப் பழக்கம் மாறி துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை உட்கொள்ளுவதாலும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
மாநில அரசு இரத்த அழுத்தம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனைக்குச் செல்ல இயலாத மக்கள் இங்கு நிறையப் பேர் இருக்கின்றனர். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று இரத்த அழுத்தப் பரிசோதனையை மேற்கொண்டால், ஆரம்பக் காலத்திலேயே இதைக் குறைக்கலாம். இதைத்தான் இந்திய அரசியலமைப்பு சட்டமும் சொல்கிறது.
**தரம் குறைந்த மாத்திரைகள்**
இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் தரம் குறைந்தவையாக உள்ளன. உதாரணமாக இரத்த அழுத்தத்திற்கு அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் அமிலோ என்ற மாத்திரை தரம் குறைந்ததாக இருக்கிறது.மேலும் அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் மாத்திரைகளுக்கான டெண்டர்களிலும் மிகப் பெரிய ஊழல் நடைபெறுகிறது.
அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் தரம் குறைந்தவையாக இருந்தால் மக்களுக்கு எப்படி நோய் குணமாகும்? இதனால் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல பணம் இல்லாத மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் மருத்துவச் செலவுக்காக சொந்தப் பணத்தை 75 சதவீத மக்கள் அதிகமாகச் செலவிடுகிறார்கள் என்று மருத்துவர் புகழேந்தி தெரிவித்தார்.
சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளின் காரணமாகத்தான், மனிதனின் உடலிலும் பல்வேறு நோய்கள் வருகின்றன. பரவும் நோய், பரவா நோய் என்று இருவிதமான நோய்கள் இருக்கின்றன. பரவும் நோய்களான டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் அரசு, பரவா நோய்களான இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பிலும், மருத்துவர்கள் தரப்பிலும் கூறப்படுகிறது.
�,”