சிறப்புக் கட்டுரை: இந்திய விவசாயிகளின் பொருளாதார நிலை!

public

இந்திய விவசாயிகளின் நிலை (பாகம் – 3)

இந்திய விவசாயிகளின் தற்போதைய நிலை என்னவென்பது குறித்து டெல்லியைச் சேர்ந்த **சென்டர் ஃபார் தி ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சொசைட்டீஸ்** நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வு விளக்கும் இந்திய விவசாயிகளின் நிலையை மின்னம்பலம் வாசகர்களுக்காகத் தொடராக வெளியிட்டு வருகிறோம். அதன் மூன்றாம் பகுதி இன்று.

இந்திய விவசாயிகள் பயன்படுத்தும், அவர்களுடைய வீட்டில் வைத்திருக்கும் சாதனங்கள் குறித்தும் இந்த ஆய்வில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதன்படி 73 விழுக்காடு வீடுகளில் மொபைல்போன்கள் உள்ளன. 59 விழுக்காடு வீடுகளில் பசு, எருமை அல்லது ஒட்டகம் போன்ற கால்நடைகளும், 55 விழுக்காடு வீடுகளில் தொலைக்காட்சிகளும், 46 விழுக்காடு வீடுகளில் மின் விசிறி அல்லது குளிர்விப்பான்களும் உள்ளன.

மேலும், 35 விழுக்காடு வீடுகளில் ஏதேனும் ஓர் இருசக்கர வாகனமும், 31 விழுக்காடு வீடுகளில் காளை மாடுகளும், 31 விழுக்காடு வீடுகளில் எல்பிஜி சமையல் எரிவாயு இணைப்பும், 18 விழுக்காடு வீடுகளில் பம்பு செட்டுகளும், 18 விழுக்காடு வீடுகளில் குளிர்சாதனப் பெட்டியும், 9 விழுக்காடு வீடுகளில் டிராக்டர் ஹாரோவும், 7 விழுக்காடு வீடுகளில் டிராக்டரும், 5 விழுக்காடு வீடுகளில் கார், ஜீப் அல்லது வேன் போன்ற வாகனமும் உள்ளது.

பகுதி வாரியாகப் பார்த்தால் நாட்டிலேயே அதிகபட்சமாகத் தென்மாநில விவசாயிகளின் வீடுகளில் 75 விழுக்காடு வீடுகளில் தொலைக்காட்சி உள்ளது. அதற்கடுத்து 63 விழுக்காடு வடஇந்திய விவசாயிகளின் வீடுகளிலும், 56 விழுக்காடு மத்திய இந்திய விவசாயிகளின் வீடுகளிலும், 54 விழுக்காடு மேற்கிந்திய விவசாயிகளின் வீடுகளிலும் தொலைக்காட்சிகள் உள்ளன. நாட்டிலேயே மிகக் குறைவாக கிழக்கிந்திய விவசாயிகளின் வீடுகளில் 29 விழுக்காடு மட்டுமே தொலைக்காட்சிகள் உள்ளன.

மொபைல்போன்களைப் பொறுத்தவரையில் நாட்டிலேயே அதிகபட்சமாக வடஇந்திய விவசாயிகளின் வீடுகளில் 86 விழுக்காடும், தென்னிந்திய விவசாயிகளின் வீடுகளில் 77 விழுக்காடும், மத்திய இந்திய விவசாயிகளின் வீடுகளில் 70 விழுக்காடும், மேற்கிந்திய விவசாயிகளின் வீடுகளில் 69 விழுக்காடும், கிழக்கிந்திய விவசாயிகளின் வீடுகளில் 61 விழுக்காடும் மொபைல்போன்கள் உள்ளன.

இந்த ஆய்வில் பங்கெடுத்த நான்கில் மூன்று விவசாயிகள் வங்கிக் கணக்கு அல்லது தபால் அலுவலகங்களில் கணக்கு வைத்துள்ளனர். ஆனால், 50 விழுக்காட்டுக்கும் குறைவான விவசாயிகளிடம் மட்டுமே ஆதார் அட்டை உள்ளது. இதிலும் கூட தென்னிந்தியாதான் முன்னிலையில் இருக்கிறது. தென்னிந்தியாவில் 80 விழுக்காடு விவசாயிகள் வங்கிக் கணக்கு அல்லது அஞ்சல் அலுவலகக் கணக்கும், 79 விழுக்காடு விவசாயிகள் ஆதார் அட்டையும் வைத்துள்ளனர்.

வடஇந்தியாவில் 79 விழுக்காடு விவசாயிகள் வங்கிக் கணக்கும், 47 விழுக்காடு விவசாயிகள் ஆதார் எண்ணும் வைத்துள்ளனர். மேற்கில் 72 விழுக்காடு விவசாயிகள் வங்கிக் கணக்கும், 72 விழுக்காடு விவசாயிகள் ஆதார் எண்ணும் வைத்துள்ளனர். மத்திய இந்தியாவில் 73 விழுக்காடு விவசாயிகள் வங்கிக் கணக்கும், 63 விழுக்காடு விவசாயிகள் ஆதார் எண்ணும் வைத்துள்ளனர். ஆனால் கிழக்கில் 66 விழுக்காடு விவசாயிகள் வங்கிக் கணக்கும், 11 விழுக்காடு விவசாயிகள் ஆதார் எண்ணும் வைத்துள்ளனர்.

விவசாயிகளின் சமூக நிலைகளைப் பொறுத்தே அவர்கள் வங்கிக் கணக்கு வைத்திருப்பதும் மாறுபட்டுக் காணப்படுகிறது. நிலமற்ற விவசாயிகளைப் பொறுத்தவரையில் 61 விழுக்காட்டினர் மட்டுமே வங்கிக் கணக்கோ அல்லது அஞ்சல் அலுவலகக் கணக்கோ வைத்துள்ளனர். சிறு விவசாயிகளில் 73 விழுக்காடும், நடுத்தர விவசாயிகளில் 84 விழுக்காடும், பெரு விவசாயிகளில் 91 விழுக்காடும் வங்கிக் கணக்கு அல்லது அஞ்சல் அலுவலகங்களில் கணக்கு வைத்துள்ளனர்.

அதேபோல, 59 விழுக்காடு நிலமற்ற விவசாயிகளும், 44 விழுக்காடு சிறு விவசாயிகளும், 67 விழுக்காடு நடுத்தர விவசாயிகளும், 83 விழுக்காடு பெரு விவசாயிகளும் ஆதார் எண் வைத்துள்ளனர். அதேபோல 93 விழுக்காடு விவசாயிகள் ரேஷன் அட்டை வைத்துள்ளனர். அதில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்களுக்கான ரேஷன் அட்டையை 45 விழுக்காட்டினரும், வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கான ரேஷன் அட்டையை 42 விழுக்காட்டினரும், அந்தியோதயா அட்டையை 4 விழுக்காட்டினரும், அன்னபூர்னா அட்டையை 1 விழுக்காட்டினரும் வைத்துள்ளனர். 8 விழுக்காட்டினர் கைகளில் எந்தவிதமான ரேஷன் அட்டையும் இல்லை.

**வேளாண் முறைகள்**

நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்ன மாதிரியான வேளாண் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன, வேளாண்மை செய்ய என்னவெல்லாம் பயன்படுத்தப்படுகிறது, எந்தப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன, வருடத்துக்கு எத்தனை முறை பயிரிடப்படுகின்றன, ஒவ்வொரு வருடமும் ஒரே பயிர் மட்டுமே பயிரிடப்படுகிறதா அல்லது மாற்றுப் பயிர்கள் பயிரிடப்படுகின்றனவா, உற்பத்தியில் ஒவ்வொரு பகுதிக்கும் உள்ள வேறுபாடு ஆகியவற்றையும் இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.

இந்த ஆய்வின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக 28 விழுக்காடு விவசாயிகள் மட்டுமே இரண்டு முறைக்கு மேல் பயிரிடுகின்றனர். 46 விழுக்காடு விவசாயிகள் ஆண்டுக்கு இரண்டு முறையும், 26 விழுக்காடு விவசாயிகள் ஒரு முறையும் மட்டுமே பயிரிட முடிவதாகவும் கூறுகின்றனர். ஆனால், 24 விழுக்காடு விவசாயிகள் மூன்று முறையும், 4 விழுக்காடு விவசாயிகள் நான்கு முறையும் பயிரிடுகின்றனர். ஒவ்வொரு பகுதியின் மண்வளம், பாசன வாய்ப்புகள், பருவ நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இது மாறுபடுகிறது. சில பகுதிகளில் வெள்ளம் மற்றும் வறட்சி போன்றவற்றால் பயிரிடுதலில் பாதிப்புகள் ஏற்படுவதும் நடக்கிறது.

வருடத்திற்கு இருமுறை அல்லது அதற்கு மேல் பயிரிடும் விவசாயிகளாக வடஇந்தியர்கள்தான் உள்ளனர். வடஇந்தியாவில் 96 விழுக்காடு விவசாயிகள் வருடத்திற்கு இருமுறை அல்லது அதற்கு மேல் பயிரிடுகின்றனர். அதாவது வடஇந்தியாவில் ஒரு வருடத்திற்கு 58 விழுக்காடு விவசாயிகள் இரு முறையும், 33 விழுக்காடு விவசாயிகள் மூன்று முறையும், 5 விழுக்காடு விவசாயிகள் மூன்று முறைக்கு மேலும் பயிரிடுகின்றனர். 4 விழுக்காடு விவசாயிகள் மட்டும்தான் ஒருமுறை பயிரிடுகின்றனர்.

ஆனால், தென்னிந்தியாவில் 34 விழுக்காடு விவசாயிகள் இரண்டு முறையும், 21 விழுக்காடு விவசாயிகள் மூன்று முறையும், 3 விழுக்காடு விவசாயிகள் மட்டும் மூன்று முறைக்கு மேலும் பயிரிடுகின்றனர். நாட்டிலேயே அதிகபட்சமாக தென்னிந்தியாவில் மட்டுமே 42 விழுக்காடு விவசாயிகள் ஒருமுறை மட்டும் பயிரிடுகின்றனர். மேற்கில் 27 விழுக்காடு விவசாயிகளும், மத்திய இந்தியாவில் 22 விழுக்காடு விவசாயிகளும், கிழக்கில் 37 விழுக்காடு விவசாயிகளும் ஒருமுறை பயிரிடுகின்றனர். விவசாயிகள் பயிரிடும் பயிர்கள், பயன்படுத்தும் உரங்கள் மற்றும் பாசன முறைகள் ஆகியவை குறித்து நாளை காண்போம்.

*(தொடரும்…)*

பிரகாசு

[இந்திய விவசாயிகளின் நிலை – பாகம் 1](http://www.minnambalam.com/k/2018/11/26/10)

[இந்திய விவசாயிகளின் நிலை – பாகம் 2](http://www.minnambalam.com/k/2018/11/27/14)

**மின்னஞ்சல் முகவரி:** [feedback@minnambalam.com](mailto:feedback@minnambalam.com)�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *