கப்பிகுளம் ஜெ.பிரபாகர்
ஆதிச்சநல்லூரில் அரும்பொருளகம் அமைக்கப்படும் என மத்திய அரசின் அறிவிப்பு வெளியானதும், அரிக்கமேடு, பூம்புகார், கொடுமணல், பொருந்தல், பையம்பள்ளி, கீழடி, குடியம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இல்லாத சிறப்பு ஆதிச்சநல்லூருக்குக் கிடைத்துள்ளதே, ஆனாலும் வரவேற்கிறோம் என்று தமிழ்நாட்டின் குரல் கேட்டது.
ஏழாம் அறிவு தமிழ்த் திரைப்படத்தில் போதி தர்மரின் ஆதியைத் தேடும் குழுவினர் நடிகர் சூர்யாவுக்கு மரபணு சோதனை நடத்தி கண்டுபிடிப்பதாக ஒரு காட்சி வரும். சாமி திரைப்படத்தில், “அவன் காது ஆடிச்சு பாத்தியாலே, அவன் நம்ம பயலே” என்று நடிகர் விக்ரமின் காது அசைவை வைத்தே சாதியைக் கண்டுபிடிப்பார்கள். அதுபோலத்தான் ஆதிச்சநல்லூரிலும், மூக்கு புடைப்பாக உள்ளது, நெற்றி விரிந்திருக்கிறது என உருவ அமைப்புகளின் அடிப்படையில் அங்கே வாழ்ந்தவர்கள் யார் என்ற புதுக்குழப்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
**ஆதிச்சநல்லூர் பெயர்க்காரணம்**
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் மடத்து அச்சம்பேடு கிராமத்தில் கிடைத்த பொது ஆண்டுக்குப் பின் (கி.பி) 1645ஆம் ஆண்டின் கல்வெட்டில் “ஆதிச்ச நாடாவான்” என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இதுவே ஆதிச்சநல்லூர் பெயருக்கான காரணம் என்று கூறுகிறார்கள். ஆதிச்சன், ஆதித்த சோழன் என்ற பெயருடைய கல்வெட்டுகள் தமிழ்நாட்டின் பல இடங்களில் கிடைத்துள்ளன. தஞ்சாவூர் பெரிய கோவில் பகுதியில் கிடைத்த கல்வெட்டில் வீணை வாசிக்கும் ஆதிச்சன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே ஆதிச்சன்புதூர் என்ற ஊர் உள்ளது.
ஆதிச்சநல்லூர் தொல்லியல் மேட்டில் அமைந்துள்ள புளியங்குளம் கிராமத்தில் பொ.ஆ.பி.1176ஆம் ஆண்டில் ஆதிநித்தன் குடும்பன் என்பவர் வெட்டிய கிணறு உள்ளது. ஆதிநித்தன் குடும்பன், வைத்தியம்மாள் தம்பதியரின் சிற்பங்களுடன் நினைவிடமும் இருக்கிறது. ஆதிநித்தன் கோட்டைகட்டி வாழ்ந்த இடமென்று இப்போது பாண்டியராஜா கோயில் இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். பாண்டுராஜா கோயில் என்றும் அழைக்கிறார்கள். ஆதித்தன் என்றால் ஞாயிறு/கதிரவன், ஆதிநித்தன் வேளாண்மை செய்த இடம், நெல்லூர், நல்லூராக மருவி ஆதித்தநல்லூர் என்று மாறியிருக்கலாம் என செவிவழிக் கதைகளை முன்வைக்கிறார் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. சங்க இலக்கியங்களோடு ஆதிச்சநல்லூரை ஒப்பிட்டு பேசியுள்ளார் ஆதிச்சநல்லூர் பெரியவர் சிதம்பரம்.
வருவாய்த் துறையின் அடங்கல் பதிவேடுகளில் வெள்ளூர் ஆதிச்சநல்லூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 114 ஏக்கர் நிலப்பரப்பு, வெள்ளூர் ஆதிச்சநல்லூர், கருங்குளம் புளியங்குளம் ஆகிய இரண்டு கிராமங்களுக்கும் உட்பட்ட நிலப்பகுதியாகும். இது எல்லாமே ஓர் ஊருக்கான பெயர்க்காரணங்கள்தான், தொல்லியல் வரலாறு கிடையாது.
செப்புப் பட்டயங்கள், கல்வெட்டுகள் மன்னர் காலங்களுக்குப் பிறகு உருவானது. அதற்கும் முந்தையது ஓலைச்சுவடிகள் கொண்டது சங்ககாலம். அதற்கும் முந்தைய காலத்தில் குறியீடுகள், வட்டெழுத்துகள், தமிழ் பிராமி இருந்துள்ளன. ஆதிச்சநல்லூரில் எழுத்துகள் கிடைக்கவில்லை, உலோக காலம், இரும்புக்காலம், கற்கால அடையாளங்கள் கிடைத்துள்ளன.
மன்னர் காலம், சங்க காலம், வேத காலம், களப்பிரர் காலம், இருண்ட காலம், காட்டுமிராண்டி என்றெல்லாம் சொல்கிறார்களே அவற்றுக்கெல்லாம் முன்பே நாகரிகமாக வாழ்ந்த தமிழர்களின் வேர்தான் ஆதிச்சநல்லூர் என்கிறார் ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன்.
ஆதிச்சநல்லூர் என்பது தமிழர்களின் மூதாதையர்கள் (Pre Tamilian) அல்லது அதற்கும் முற்பட்ட, தமிழர்களின் ஆதி தமிழர்கள் (Proto Tamilian) நாகரிகம் என்கிறார் எழுத்தாளர் சாத்தான்குளம் அ.ராகவன்.
ஆதிச்சநல்லூர் மக்கள் வாழ்ந்த பகுதியாக கொங்கராயன்குறிச்சி உட்பட பொருநை ஆற்றங்கரையோரம் பல பகுதிகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. இதுவரை குடியிருப்புகள் கண்டறியப்படவில்லை. இப்போது ரேடார் தொழில்நுட்பம் மூலமாகத் தமிழக அரசின் தொல்லியல் துறை அந்த முயற்சியில் இறங்கியுள்ளது.
**ஆதிச்சநல்லூரில் ஆய்வுகள்**
திருநெல்வேலி மாவட்டத்தில் 1850இல் பேராயர் ராபர்ட் கால்டுவெல் (Rev Robert Caldwell) சில தொல்லியல் பொருட்களை சேகரித்து தனது நாட்டுக்குக் கொண்டு சென்றார்.
பொருநை ஆற்றின் வெள்ளப்பெருக்கு, திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே தொடர் வண்டிப் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக ஆதிச்சநல்லூர் பகுதியிலும் புதைபொருட்கள் கிடைத்தன.
இதையறிந்து இந்தியா வந்த ஜெர்மனி ஆய்வாளர் டாக்டர் ஜாகர் (Dr Friderich Jagor) 1876இல் ஆய்வு நடத்தினார். மூன்று முறை ஆசியப் பயணம் மேற்கொண்ட ஜாகர், ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இந்தியாவின் பல இடங்களில் 10,000 தொல்பொருட்களைச் சேகரித்துள்ளார். அவையனைத்தும் பெர்லின் இனவியல் அரும்பொருளகத்தின் தெற்காசியப் பிரிவில் 1963இல் புதிதாக உருவாக்கப்பட்ட இந்தியக் கலைகள் (Department of Indian art, south/southeast Asia at the Berlin Ethnological Museum) என்ற துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இங்கிலாந்தின் அலெக்ஸாண்டர் ரே (Alexander Rea) 1899இல் ஆதிச்சநல்லூர் வந்தார். 1905 வரை ஐந்து கட்டங்களாக ஆய்வை நடத்தி முடித்தார். 114 ஏக்கர் நிலம் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. பாண்டிய மன்னர்களின் காலத்துக்கு முற்பட்ட நாகரிகம் ஆதிச்சநல்லூர் என்று அலெக்ஸாண்டர் தனது ஆய்வில் கண்டறிந்தார். அவர் எழுதிய “வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய பழம்பொருட்களின் பட்டியல்” நூல் ஆதிச்சநல்லூர் நாகரிகத்தின் முதல் ஆவணம். ரே கண்டறிந்த 90 வகையான இரும்பு பொருட்கள், 30 வகையான வெண்கலப் பொருட்கள், 110 வகை சுடுமண்பாண்டங்கள் சென்னை அரும்பொருளகத்திலும், பாளையங்கோட்டை அரும்பொருளகத்திலும் வைக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் ஆய்வாளர் லூயிஸ் லாபிக் (M.Louis Lapicque) 1903 – 1904இல் ஆய்வு நடத்தினார். மண்டை ஓடுகளை ஆய்வு செய்த லாபிக் ஆதிச்சநல்லூரில் வாழ்ந்தது நெக்ராய்டு (Negroid race) எனும் முற்கால திராவிடர்கள் என்றார். அவர் எடுத்த தொல்பொருட்கள் பாரீஸ் அரும்பொருளகத்தில் (Museum national d’Histoire naturelle in Paris) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த மண்டை ஓட்டை ஆய்வு செய்த, டாக்டர் சி.மக்ளீன் (Dr.C.Maclean) அதே கருத்தை வழிமொழிந்தாலும், அதற்கும் முந்தைய இனமாகக்கூட இருக்கலாம் என்றார். சென்னை அரும்பொருளகத்தில் பணியாற்றிய தர்ஸ்டன் 1909இல் வெளியிட்ட “தென்னிந்திய சாதிகள் மற்றும் பழங்குடிகள்” என்ற கட்டுரையில் ஆதிச்சநல்லூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் தொடர்பு இருந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து லண்டன் பல்கலை பேராசிரியர் ஜி.எலியட் சுமித் (Prof. Elliot Smith) ஆதிச்சநல்லூரின் இரண்டு மண்டை ஓடுகளை ஆய்வு செய்து மனித இனத்தின் நகர்வு குறித்த குறிப்புகளை 1927இல் வெளியிட்டார். ஆஸ்திராலாய்டு, திராவிட அடையாளங்களோடு அந்த இரண்டு மண்டை ஓடும் இருந்ததாகச் சொல்கிறார். மேலும், இத்தாலி நாட்டில் கிடைத்த ஒரு பெண்ணின் மண்டை ஓடும், ஆதிச்சநல்லூர் மண்டை ஓடும் ஒரே வகை என்றும் சுமித் தெரிவித்துள்ளார். எலியட் சுமித்தின் ஆய்வை டாக்டர் ஜான் பிட்டி தொடர்ந்தார். அதன் பிறகு எஸ்.ஜக்கர்மன் (Solly Zuckerman) ஆய்வை நிறைவு செய்தார். ஆதிச்சநல்லூர் மண்டை ஓடுகள் என்ற தலைப்பில் அந்த ஆய்வை சென்னை அரும்பொருளகம் 1930இல் வெளியிட்டது.
**ஆதிச்சநல்லூர் வாழ்விட மக்கள்**
சிந்துவெளியிலும், பலூசிஸ்தானிலும் கண்டறிந்த பொருட்கள், இந்தியாவின் தென்கோடி ஆதிச்சநல்லூரில் இருந்து அறுந்து போகாத சங்கிலித்தொடர்போல, திராவிடப் பண்பாட்டை எடுத்துக்காட்டுகிறது என்று மொகஞ்சதோராவை ஆய்வு செய்த வங்கதேச ஆய்வாளர் ஆர்.டி.பானர்ஜி (R.D.Banerji) 1972 டிசம்பரில் மாடர்ன் ரிவியூ இதழில் எழுதியுள்ளார். தமிழர் நாகரிகம் வட இந்தியாவுக்கும், பிற நாடுகளுக்கும் பரவியதாகத் தொல்பொருட்களை ஒப்பிட்டுக் காட்டுகிறார்.
தமிழ்நாட்டிலும், சிந்துவெளியிலும் கிடைத்த பொருட்களை ஒப்பிட்டு ப்ரோட்டோ திராவிட நாகரிகம் (Proto – Dravidian) என்றும் குறிப்பிடுகிறார்கள்.
ஆதிச்சநல்லூர் எலும்புகளை 1963இல் ஆய்வுசெய்த இந்திய மானுடவியல் ஆய்வாளர்கள் பி.கே.குப்தா, பி.சட்டர்ஜி ஆகியோர் இலங்கையில் வாழ்ந்த தமிழர்களான வேதா பழங்குடிகளோடு தொடர்புடைய வேதிக் ஆஸ்ட்ராய்லுடுகள் என்றும், திராவிட இனத்தின் தாக்கம் உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர். இது இறுதி முடிவாகத் தெரியவில்லை. பழங்கால மானுடவியல் கொள்கைகளை ஆதிச்சநல்லூர் வெளிப்படுத்துகிறது என நியூயார்க் கார்னெல் பல்கலை பேராசிரியர் கென்னத் கென்னடி (Kenneth Kennedy) 1986இல் வெளியான தனது Hauntings at Adhichanallur: An anthropological ghost story கட்டுரையில் தெரிவிக்கிறார்.
மாறிவரும் காலநிலை, தட்பவெப்பம், புவிச்சூழல் காரணமாக உயிரினங்களின் தகவமைப்பும் மாறிக்கொண்டேதான் இருக்கின்றன. உயிரினங்கள் என்றாலே தட்டையான, குட்டையான, உயரமான, கறுப்பு, சிவப்பு, மஞ்சள் மனிதர்களும் அதில் அடங்குவார்கள். மானுடவியல் ஆய்வுகள் அதையும் கருத்தில்கொள்கின்றன.
**ஆய்வறிக்கை வெளிவராத ஆய்வு**
நூறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், முனைவர் தியாக சத்தியமூர்த்தி தலைமையிலான குழுவினர் 2004 பிப்ரவரி 4 முதல் ஜூலை 5 வரை முதற்கட்ட ஆய்வை நடத்தினர். தலையில் துளையிட்டு அல்லது கச்சிதமாக வெட்டப்பட்டு அறுவை சிகிச்சை நடத்தும் (Trepanation) தொழில்நுட்பத்தை ஆதிச்சநல்லூரில் கண்டறிந்ததாக Indus to Tamaraparani என்ற கட்டுரையில் சத்தியமூர்த்தி தெரிவிக்கிறார். அந்த ஆய்வின் முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டுமென எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கு விசாரணையின்போது, ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் பொது ஆண்டுக்கு முன் (கி.மு) 905 மற்றும் பொ.ஆ.மு 791 என்று அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள தொல்லியல் ஆய்வகம் கண்டறிந்துள்ளதாக மத்திய அரசின் தொல்லியல் துறை 2019 ஏப்ரல் 4இல் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.
ஆதிச்சநல்லூரில் காலக்கணக்கீடு, வாழ்வியல் முறைகள், பண்பாடு குறித்து முதற்கட்ட ஆய்வையும், மானுடவியல் தொடர்பாக இரண்டாம்கட்ட ஆய்வையும் முனைவர் தியாக சத்தியமூர்த்தி குழுவினர் நடத்தி முடித்தனர். இதில் மானுடவியல் தொடர்பான இரண்டாம்கட்ட ஆய்வறிக்கை 2013இல் முடிக்கப்பட்டு மத்திய அரசின் தொல்லியல் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. பண்பாடு பற்றிய முதற்கட்ட ஆய்வு இன்னமும் முடிக்கப்படவில்லை. 15 ஆண்டுகள் கடந்தும் ஆய்வறிக்கை வெளியிடவில்லை. அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத அந்த ஆய்வின் முடிவுகள் குறித்து கருத்தரங்குகள், கட்டுரைகள், வெளியீடுகளின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அதிலிருந்துதான் பல்வேறு சர்ச்சைகளும் தொடங்கியுள்ளது.
**ஆரியர்கள் வாழ்ந்த ஆதிச்சநல்லூர்?**
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய இலங்கையைச் சேர்ந்த முனைவர் பத்மநாதன் ராகவன் 2004 – 2005இல் எடுக்கப்பட்ட ஆதிச்சநல்லூரின் 170 எலும்புக் கூடுகளில் 24ஐ ஆய்வுக்குட்படுத்தி, அதில் 35% காகசாய்டு, 30 மங்கோலாய்டு, 14% நெக்ராய்டு, 5% ஆஸ்ட்ராலாய்டு, 8% திராவிடம், 8% கலப்பினர் என்று வகைப்படுத்தியுள்ளார். இது மொத்த ஆய்வுப் பகுதியான 114 ஏக்கரில் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான இடங்களில், 600 சதுரமீட்டர் பரப்பில் கிடைத்த பொருட்கள்தான். முழுமையான ஆய்வைத் தொடர வேண்டும் என்கிறார் முனைவர் தியாக சத்தியமூர்த்தி.
இதில் காகசாய்டு (Caucasoid) இனம் ஐரோப்பிய, மத்திய ஆசியா தொடர்புடையது. நீக்ராய்டு (Negroid) ஆப்பிரிக்கா தொடர்புடையது, மங்கோலாய்டு (Mongoloid) சீனா, ஜப்பான், வியட்நாம், கம்போடியா தொடர்புடையது, ஆஸ்ட்ராலாய்டு (Australoid) ஆஸ்திரேலியா தொடர்புடையது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்த மக்களை மானுடவியல் அடிப்படையில் நான்கு வகையாகப் பிரிக்கின்றனர். அந்த நான்கு பிரிவினரும் ஆதிச்சநல்லூரில் வாழ்ந்துள்ளதாக ஆய்வாளர் ராகவன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வாழ்ந்த மக்களை வடஇந்திய மூதாதையர்கள் (Ansestral North Indians – ANI), தென்னிந்திய மூதாதையர்கள் (Ancestral South Indian – ASI) என்று ஆய்வாளர்கள் பிரித்துள்ளனர். அதாவது வடஇந்தியாவில் வாழ்ந்தவர்களை காகசாய்டு, ஆஸ்ட்ராலாய்டு பிரிவில் சேர்க்கின்றனர். ஆரியர்கள் எனப்படும் பிராமணர்கள் காகசாய்டு பிரிவின் துணைப்பிரிவு என்று மானுடவியல் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. பேராசிரியர் பத்மநாதன் ராகவன் ஆய்வின் அடிப்படையில் பார்த்தால் ஆதிச்சநல்லூரில் வாழ்ந்தவர்கள் 35 விழுக்காடு ஆரியர்களாகவும், 8 விழுக்காடு திராவிடர்களாகவும் இருக்கிறார்கள். வெளிநாட்டவர்களும் வாழ்ந்துள்ளார்கள். அவர்கள் எல்லாம் வந்தவர்களாகக்கூட இருக்கலாம் என்றால், வாழ்ந்தவர்கள் யார், அதற்கான ஆய்வுகள் எங்கே என்ற பெரும் கேள்விதான் இப்போது எழுந்துள்ளது.
**பண்பாட்டில் தனித்துவத்துடன் தமிழ்நாடு**
தமிழர்களை ஆங்கிலேயர் காலத்தில் திராவிடர் என்று குறிப்பிட்டதால், அதன்பின் வந்த ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும் திராவிடம் / திராவிட நாகரிகம் என்ற பதத்தையே பயன்படுத்தி வருகின்றனர். திராவிடர் என்பது குமரி முதல் வேங்கடம் வரை எல்லையாகக்கொண்ட தமிழ்நாட்டின் பூர்வகுடிகளான தமிழர்களையே குறிக்கிறது என்கின்றனர் தமிழ் அறிஞர்கள்.
இந்தியாவை விந்திய மலைத்தொடரும், தக்காண பீடபூமியும் நிலவியல் அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கிறது. வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் நீர்வழிப் போக்குவரத்து மட்டுமே இருந்துள்ளது. அதனால், காடுகளையும், மலைகளையும் தாண்டி வடஇந்தியர்களும், வடஇந்தியாவுக்குள் கலந்த வெளிநாட்டவரும், தென்னிந்தியாவுக்குள் வர இயலவில்லை. ஆகவே கலாச்சாரம், பண்பாடு, மொழி, பழக்க வழக்கம் அனைத்திலும் தென்னிந்தியர்கள் தனித்துவத்துடன் விளங்குகிறார்கள். தென்னிந்தியாவின் மொழிகளும் பண்பாடும் சிதையாமல் வேர்ப்பிடிப்புடன் தொடர்கிறது. இந்திய மரபியல் அடிப்படையின் மையமாக வேற்றுமையில் ஒற்றுமையே இருந்துள்ளது என்று ஆய்வாளர் டோனி ஜோசப் தனது “Early Indian : The Story of Our Ancestors and Where We Came From” புத்தகத்தில் எழுதியுள்ளார்.
**தமிழர் நாகரிகம்**
கண்டறிதல், பொருள் விளக்கம், அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மட்டுமின்றி, மக்களின் பண்பாடு, பழக்கவழக்கம், தொழில், புழங்குபொருட்கள், உணவுமுறைகள், உடல் அமைப்பு, குடும்ப உறவுகள் உட்பட பல்வேறு காரணிகளையும் ஒப்பிட்டுத்தான் மானுடவியல் ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்படுகிறது. ஆதிச்சநல்லூரில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, நெசவு, கடல் வாணிகம், உலோகங்களை உருக்கும் தொழில்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. மண்வெட்டி, கொழு வேளாண் கருவிகள் மட்டுமின்றி ஈட்டி, வாள் போன்ற போர்க்கருவிகளும் கிடைத்துள்ளன. மக்கள் உடல்வலிமையோடு வாழ்ந்துள்ளார்கள். குடும்ப உறவு முறைகளில் தாய்வழி சமூகமாகவே வாழ்ந்துள்ளனர். வேட்டையாடும் பழக்கமும் இருந்துள்ளது. ஆதிச்சநல்லூரிலும், கீழடியிலும் மான், காட்டுப்பன்றி, வெள்ளாடு போன்ற விலங்குகளை உணவுக்காகப் பயன்படுத்தினார்கள் என அறிவியல் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இறந்தவர்களைப் புதைக்கும் பழக்கம் இருந்துள்ளது. குடியிருப்புக்கு தெற்கே இடுகாடு அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். புதைக்கப்பட்ட தாழியில் நெல், தினை தானியங்களும், புதுத்துணியும் இருந்துள்ளன. தங்க நெற்றிப்பட்டங்கள் கிடைத்துள்ளன. இன்றும் ஆதிச்சநல்லூர் சுற்றுவட்டாரக் கிராமங்களில் கொடை விழாக்களில் ஊர்ப்பெரியவர்களுக்குப் பட்டம் கட்டுவது, மண விழாக்களில் மணவாட்டிக்குப் பட்டம் கட்டுவது, இறந்தவர்களின் பேரப்பிள்ளைகளுக்குப் பட்டம் கட்டுவது எனும் நெற்றிப்பட்டம் கட்டும் பழக்கம் தொடர்கிறது. இதையெல்லாம் முன்வைக்கும் தமிழ் ஆய்வாளர்கள் உலகுக்கே முன்னோடி தமிழர் நாகரிகம்தான் என்று ஆதாரபூர்வமாக கூறுகிறார்கள்.
**வந்தவர்களும் வாழ்ந்தவர்களும்**
ஆரியர்கள், கிரேக்கர்கள், பார்த்தியர்கள், சாகர்கள், சைத்தியர்கள், குஷானர்கள், ஹீனர்கள், துருக்கியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் இமயமலையின் கைபர், போலன், குர்ரம், கோமல் கணவாய் வழியாக படையெடுப்பு, வணிகம், சமயங்களைப் பரப்புதல், குடியேறிகள் எனப் பல்வேறு காரணங்களால் இந்தியாவுக்குள் நுழைந்தனர். அதே போல மேற்குத்தொடர்ச்சி மலையின் பாலக்காட்டு கணவாய் வழியாக ரோமானியர்களும், வங்காள விரிகுடா, அரபிக்கடல் வழியே கிரேக்கர்களும் தென்னிந்தியாவுக்கு வந்துள்ளனர். தமிழர்களும் உலகம் முழுக்க சென்றுள்ளனர்.
தொண்டை மண்டலத்து பல்லவர்கள் என்று தமிழ் இலக்கியங்கள் சுட்டிக்காட்டினாலும், பொ.ஆ.பி 250 முதல் பொ.ஆ.பி 350 வரை பிராகிருத மொழியும், பொ.ஆ.பி 350 முதல் பொ.ஆ.பி 550 வரை வடமொழியும், பொ.ஆ.பி 250 முதல் பொ.ஆ.பி 350 வரை வடமொழி, தமிழ் கலந்தும் பல்லவர்களின் கல்வெட்டுகளில் கிடைத்துள்ளதால், தக்காணத்தில் ஆட்சி செய்த வாகாடர்கள் என்ற ஆரிய அரசகுலத்தின் ஒரு பிரிவுதான் பல்லவர்கள் என சில வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். ஆனால், அதற்கான ஆதாரங்கள் எதுவுமே கிடைக்கவில்லை. சாதவாகனர்களின் ஆட்சியை வீழ்த்தி பல்லவர்கள் ஆட்சியைப் பிடித்தனர். அதனால் சாதவாகனர்களின் மொழியில் கல்வெட்டுகள் அமைத்தார்கள் என்று தமிழ் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கீழடியில் பொ.ஆ.மு 580இலும், இலங்கை அநுராதபுரத்தில் பொ.ஆ.மு 450இலும் தமிழ் பிராமி எழுத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எழுத்தறிவு பெற்ற சமூகமாக தமிழர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்று தக்காணம் மற்றும் தென் தீபகற்ப பண்டைய வழித்தடங்கள் என்ற நூலில் வரலாற்று ஆய்வாளர் பத்மஸ்ரீ திலீப் கே.சக்ரவர்த்தி குறிப்பிடுகிறார்.
**ஆதிச்சநல்லூர் தமிழர்கள்**
உட்கார்ந்து இருக்கும் நிலையில் தாழிகளைப் புதைக்கும் வழக்கம் சமணர்களுக்கும் முந்தைய ஆசீவகர்களிடையே இருந்தது என்று,
“தாழி கவிப்பத் தவஞ்செய்வார் மண்ணாக
வாழிய நோற்றனை மால்வரை”
தொல்காப்பிய இலக்கியத்தை எடுத்துக்காட்டுபவர்கள், ஆசீவகம் ஆதிச்சநல்லூர் தமிழர்களின் வழிவந்த முறையாக இருக்கலாம் என்கிறார்கள்.
அரியானா மாநில அரசின் மூலமாக அரப்பா நாகரிகம் என்பது சரஸ்வதி நதி நாகரிகமாக மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன. வேதங்களில் சரஸ்வதி என்ற நதி உள்ளது. நிஜத்தில் அப்படி ஒரு நதியே இல்லை. இந்த நதிதான் அந்த நதி என்று சொல்கிறார்கள்.
தமிழ் இலக்கியங்களில் பொருநை ஆறு, பொதிகை மலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தன் பொருந்தம் என்று கல்வெட்டுகளில் உள்ளது. ஆனால், பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பொருநை ஆறு என்ற தமிழ் பெயர் மாற்றமடைந்து தாமிரபரணி நதி என்கிற வடமொழிச்சொல் நிலைப்பெற்று விட்டது. பொதிகை மலை அகத்திய மலையாக மாறிவிட்டது. ஆதிச்சன் என்ற வடமொழிச் சொல்லும், நல்லூர் என்ற தமிழ்ச் சொல்லும் இணைந்து இப்போதைக்கு ஆதிச்சநல்லூராக இருக்கிறது.
வேதங்களும், இதிகாசங்களும், புராணங்களும் குறிப்பிட்ட பெயர்களையும், நபர்களையும், ஊர்களையும், சம்பவங்களையும் அதுதான் இது என்று வரலாறாகவும், அறிவியல் ஆதாரங்களாகவும் மாற்றும் முயற்சி, திரிக்கும் செயல்பாடுகள் இன்னமும் தொடர்கிறது. இது அறிவியல் காலம். அதனால்தான் அரப்பா நாகரிகத்தின் வேர்களை, வேதங்கள் அல்ல மரபணு சோதனைகள் முடிவு செய்கின்றன.
**தொடரவேண்டிய தொல்லியல் ஆய்வுகள்**
ஆங்கிலேயர் காலத்திலும் சரி, அதன் பிறகு நடக்கும் விடுதலை இந்தியாவிலும் சரி, வடஇந்தியா அளவுக்குத் தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெறவில்லை. கீழடிக்கு முன்புவரை தமிழ்நாட்டில் அதன் முக்கியத்துவம் அறியப்படவில்லை.
மொகஞ்சதாரோவில் சுமார் இருநூறு ஹெக்டேர் பரப்பில் தொல்லியல் ஆய்வு நடைபெற்றது. சிந்துவெளியின் கோட் டிஜி, ராஜஸ்தானில் காலிபங்கன், பஞ்சாபில் ரூபார், அரியானாவில் பினவாலி, குஜராத்தில் லோத்தல், சுர்கோடாடா, தோலவிரா உள்ளிட்ட இடங்களில் சுமார் நூறு ஹெக்டேர் பரப்பில் ஆய்வு செய்தார்கள். ஹரப்பா மொகஞ்சதாரோ சிந்து ஆய்வுகள் இருபது ஆண்டுக் காலம் நடந்துள்ளது. குஜராத்தில் பத்து ஆண்டுகள் நடந்தது. அதனைப் போன்று தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பெரிய பரப்பிலோ, அதிக நாட்களோ, தொடர் ஆய்வுகள் நடைபெறவில்லை. கீழடியில் இரண்டு ஏக்கர் பரப்பில்தான் சில மாதங்கள் ஆய்வு செய்தார்கள். ஆதிச்சநல்லூரில் மூன்று கிலோமீட்டர் சுற்றளவில், 114 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டு இருந்தாலும் சுமார் ஒரு ஏக்கருக்கும் குறைவான பரப்பில் மட்டுமே ஆய்வு நடந்துள்ளது. அதிகவனம் செலுத்தி தொடர் ஆய்வுகள் நடத்தும்போது தமிழர்களின் பொருநை நாகரிகம், “பன்னாட்டு நாகரிகத்தின் தொட்டில்” என்ற நிலையை அடைந்தாலும் ஆச்சரியமில்லை.
ஆதிச்சநல்லூர் அரும்பொருளகம் அமைக்கப்படுமென நிதியமைச்சர் அன்பழகன் சொன்னார், தொல்லியல் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.பாண்டியராஜன் சொன்னார்கள். தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழாவில் அரும்பொருளகம் அமைப்பதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ஆசிஷ்குமார் வெளியிட்டார். இப்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அறிவித்துள்ளார். பல ஆண்டுக் காலமாகக் கோரிக்கைகளும் அறிவிப்புகளும் அப்படியேதான் இருக்கின்றன. சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளாமல் தொடர் ஆய்வுகளுடன், அதே இடத்தில் அரும்பொருளகம் அமைத்தால் சரிதான்.
�,”