சிறப்புக் கட்டுரை: ஆதார் எண் இல்லை என்றால் சாக வேண்டியதுதானா?

public

டி.எஸ்.எஸ்.மணி

உச்ச நீதிமன்றம் இந்த நிமிடம் வரை அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றாலும்கூட, அரியானா மாநிலம் முறை தவறாமல் இந்திய அரசின் ஆதார் கட்டாயம் என்ற கொள்கையைப் பின்பற்றிவருகிறது.

1999ஆம் ஆண்டு ஜூன் மாதம் கார்கில் போரில் இந்திய நாட்டைக் காக்கும் தேசப்பற்றுடன் போராடிய ஹவில்தார் லக்ஷ்மன்தாஸ் கொல்லப்பட்டார். அந்தத் தியாகியின் மனைவி சகுந்தலா தேவி, கடந்த வெள்ளிக்கிழமை அரியானா மாநிலம் சோனிபட் என்ற இடத்தில உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், நோய்வாய்ப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டார். அவரது மகன் தனது தாயை மருத்துவமனையில் சேர்க்கச் சென்றபோது, மருத்துவமனை ஊழியர்கள், உங்கள் தாயின் ஆதார் எண் எது என வினவினர். அந்த மகனால் தனது தாயாரின் ஆதார் எண்ணைக் கொடுக்க முடியவில்லை. சகுந்தலா தேவியைச் சிகிச்சைக்கு அனுமதிக்க அந்தத் தனியார் மருத்துவமனை மறுத்துவிட்டது. அதன் விளைவாக, சிகிச்சை எதுவும் இன்றியே அந்தத் தாய் மரணமடைந்தார்.

இந்த நாட்டைக் காப்பாற்ற ராணுவத்துக்குச் சென்று, எல்லையைப் பாதுகாக்கும் சிக்கலான கார்கில் போரில் தனது உயிரை கொடுத்து, இந்த நாட்டு எல்லையைப் பாதுகாத்த ஒரு ஹவில்தார் என அழைக்கப்படும், ராணுவத் தளபதியின் மனைவிக்கு நேர்ந்த கதி இது என்றால் இந்த நாட்டின் சாதாரணக் குடிமக்களுக்கு எப்படிப்பட்ட மரியாதை கிடைக்கும்?

துலிப் மருத்துவமனை என்ற அந்தத் தனியார் மருத்துவமனையின் நிர்வாகம், தங்கள்மீது எந்தத் தவறும் இல்லை எனவும், தங்கள் மருத்துவமனையின் விதிகளின்படி, ஒரு நோயாளியை அனுமதிக்க அவரது ஆதார் எண் அவசியம் என்பதால் அவரை அனுமதிக்கவில்லை. இதில் எங்கள் தவறு எங்கே இருக்கிறது எனக் கையை விரிக்கிறார்கள்.

இந்தப் பிரச்னை, அரியானா மாநில முதலமைச்சர் வசம் எடுத்துச் செல்லப்பட்டது. முதல்வர் மனோகர்லால் கட்டார் அதைக் கவனிப்பதாகக் கூறினார். எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. அரசு விசாரணை நடத்தும் என்றும், அதில் தவறு நடந்ததாகத் தெரியவந்தால், பிறகு சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்பட்டது.

**தலைவிதியைத் தீர்மானிக்கும் ஆதார்?**

இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. ஆதார் இல்லையென்றால், ஆவணப்படுத்தல் இல்லை. ஆவணப்படுத்தல் இல்லையென்றால், சிகிச்சை இல்லை. சிகிச்சை இல்லையென்றால், சாவுக்கு யாரும் பொறுப்பு இல்லை. இதுதானே நிலை. அப்படியானால், ஆதார் என்ற எண் இல்லாதவருக்கு இந்த அரசோ, தனியாரோ யாரையும் பொறுப்பாக்க முடியாது. ஆதார் எண் என்பது உயிர்ப்பலி வாங்கும் அளவு சக்தி வாய்ந்தது என்று பொருள் கொள்ளலாமா? அதேபோல, முதல்வரிடமே புகார் கொடுக்கப்பட்டும் விசாரணை இல்லையென்றால், அறிக்கை இல்லை. அறிக்கை இல்லையென்றால், நடவடிக்கை இல்லை – இப்படியும் இதற்குப் பொருளா?

உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே, 2018ஆம் ஆண்டு மார்ச் 31 வரை ஆதார் கட்டாயமில்லை என்றும், அடுத்த விசாரணை ஜனவரி மத்தியில் என்றும் உத்தரவிட்டுள்ளதே… அதற்கு மரியாதையே கிடையாதா? அதுவரை, நீங்கள் எந்த ஒரு தனியார் மருத்துவமனையும், ஆதார் எண் கட்டாயம் என்று கூறினால், அதையொட்டி நோயாளிக்குச் சிகிச்சை தர மறுத்தால், அது சட்ட விரோதச் செயல் என்பது அரியானா அரசுக்குத் தெரியாதா? அந்தக் குறிப்பிட்ட மருத்துவமனைமீது நடவடிக்கை பாய்ந்திருக்க வேண்டும் அல்லவா?

முதல்வர் மோகர்லால் கட்டார் வசம் கொடுக்கப்பட்ட புகார்மீது எந்த விசாரணையும் அவர் நடத்த வேண்டியதில்லை. இது பகிரங்கமாகத் தெரிந்த குற்றம். ஆகவே, அவர் நடவடிக்கையை நேரடியாகவே எடுத்திருக்க வேண்டும். இல்லையெனும் பட்சத்தில், அந்த மருத்துவமனையும் முதல்வரும் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்கு உள்ளாக வேண்டும். அப்படியே அவர்கள் வாதப்படியே இருந்தாலும் இந்த நாட்டின் சட்ட திட்டங்களைக் காரணம் காட்டி, நீங்கள் மனிதனின் அடிப்படை உரிமையான ஓர் உயிரைக் காக்கும் உரிமையை மறுக்கப் போகிறீர்களா?

அரியானா அரசாங்கம் ஏற்கெனவே அனைத்து மருத்துவமனைகளுக்கும் நோயாளியை அனுமதிக்கவே, ஆதார் எண் அவசியம் என்று சுற்றறிக்கை அனுப்பியிருந்தால், உச்ச நீதிமன்றம் 2018, மார்ச் 31 வரை ஆதார் கட்டாயம் கிடையாது என அறிவித்தபின், தனது சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழலில், முதல்வரான கட்டார், ‘விசாரணை செய்வோம்… அறிக்கை வந்தால் நடவடிக்கை’ என்று கூறுகிறாரே? முதல்வரே, உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும் பழைய சுற்றறிக்கையைத் திரும்பப் பெறாத அரசுத் துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை என்றல்லவா நீங்கள் கூறியிருக்க வேண்டும்? என்னய்யா அரசு நடத்துகிறார்கள்? மோகர்லால் கட்டார், கார்கில் போரில் இறந்த ஒரு தியாகியின் மனைவி மரணம் எனபதால், அதிக அக்கறையல்லவா காட்டியிருக்க வேண்டும்?

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இந்தத் தாய் நாட்டுக்காக அர்ப்பணித்த ராணுவத்தினருக்கு முதல் மரியாதை கொடுப்பதே எங்கள் ஆட்சியின் சிறப்பு என்று தனது 43 மாத ஆட்சி பற்றி அடிக்கடி கூறி வருகிறாரே என்றல்லவா முதல்வர் எண்ணியிருக்க வேண்டும்?

**அங்கு ஆதார் தேவையில்லையா?**

மஹாராஷ்டிராவில் மும்பையில் ஃபட்னாவிஸ் ஆட்சியில் லோயர் பரெல் பகுதியில் அனுமதியின்றி விருந்து கொண்டாட்டம் நடத்திய விடுதி ஒன்றில், சென்ற வாரம் நெருப்புப் பிடித்து 14 பேர் செத்துப் போனார்களே? ஏன் அனுமதியின்றி நடத்தினீர்கள் என நீங்கள் கேட்டதுண்டா? அதுபோல மும்பையில் எத்தனை விடுதிகள் இன்றும் அனுமதியின்றி நடக்கின்றன என உங்களுக்குத் தெரியுமா? உயிர் காக்கும் விவகாரத்தில் மட்டும் ஆதார் இல்லாவிட்டால் அனுமதியில்லை என்று கூறுகிறீர்களே?

1999இல் கார்கில் போரில் முஸகோத் பள்ளத்தாக்கில், 8ஆவது ஜாட் படையின் ஹவில்தார் லட்சுமணதாஸ் தன்னுயிர் ஈந்தார். அவரது விதவை மனைவி இதயநோயால், நுரையீரல் புற்று என சந்தேகிக்கப்பட்டபோது, தேவையான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல், தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போய்விட்டாரே? மகத்தான போர் வீரரின் தியாகம் அர்த்தமில்லாமல் ஆக்கப்பட்டுவிட்டதே? பிரதமர் பேசிய சொற்கள், வெறும் வீறாப்புக்காக என்பதாக ஆகிவிட்டதே?

மோடி அரசின் கட்டாயப்படுத்தலால், ஆதார் இல்லையேல் சிகிச்சை இல்லை என்பதோடு அது நிற்கவில்லையே? சிறு குழந்தைகளின் கல்வியையும் ஆதார் பாதிக்கத் தொடங்கிவிட்டதே? ‘ஆதார் இல்லையேல், மதிய உணவு இல்லை’, ‘ஆதார் இல்லையேல் ரேஷன் இல்லை’ என நீள்கிறதே? ஜார்கண்ட் மாநிலத்தில், 11 வயதே உள்ள சந்தோஷ் குமாரி என்ற ஏழைச் சிறுமி, வீட்டில் ஆதார் எண் இல்லாததால், ரேஷன் அட்டையுடன் இணைக்காததால், ரேஷன் பொருள் இல்லை. அதையும் தாண்டி, ஆதார் எண் ரேஷன் அட்டையுடன் இணைக்காததால், மதிய உணவு இல்லை என்ற நிலையில், அந்தச் சிறுமி பசியால் வாடி இறந்துவிட்டாள் என்ற செய்தி வருகிறதே? அந்த மாநில முதல்வரும், ‘நான் என்ன நடந்தது என்று பார்க்கிறேன்’ என்கிறாரே? நீங்கள் எல்லாம் பார்க்கப் போகிறீர்கள் என்று நாங்கள் காத்திருக்க வேண்டுமா?

**ஆதார் இல்லாமல் உணவும் இல்லை**

அது மாத்திரமல்ல. பாஜக ஆளாத மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜியின் ஆளுகையில், ஆதார் கட்டாயப்படுத்தலுக்கு எதிராக மம்தா ஓங்கிக் குரல் கொடுத்துவரும் வேளையில், உச்ச நீதிமன்றம் சென்று மம்தா அதை எதிர்த்து வழக்குப் போட்டுள்ள நிலையிலும், அங்குள்ள மேற்கு வங்க அரசின் கல்வித் துறை, நடுவண் அரசின் உத்தரவை, அப்படியே பின்பற்றி, ‘ஆதார் இல்லையேல், மதிய உணவு கொடுக்கக் கூடாது’ என ஒரு சுற்றறிக்கையை (மெமோ எண்: 522 [CMDMP] MDMS – 11 / 2017) டிசம்பர் 5 அன்று மாநிலமெங்கும் அனுப்பியுள்ளது. இது உணவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கே எதிரானது. மதிய உணவுத் திட்ட இயக்குநர் அதை கண்மூடித்தனமாக அமல்படுத்தியதால், பல ஏழை சிறுவர், சிறுமிகள், உணவின்றிப் பட்டினி கிடப்பதும், அதில் சாவுகள் நிகழ்வதும் தவிர்க்க முடியாததாகிவிட்டன. இதை ‘பஸ்ச்சிம் பங்க சேட் மஜுர் சமிதி’ என்ற தொண்டு நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது.

சமீப காலங்களில், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், கர்நாடகா மாநிலங்களிலிருந்து வரும் செய்திகள், ரேஷன் அட்டையில் ஆதார் இணைப்பு இல்லாததால், பட்டினிச் சாவுகள் அதிகரித்திருப்பதைக் காட்டுகின்றன. 2015ஆம் ஆண்டு எடுத்த பள்ளி செல்லும் குழந்தைகளை பற்றிய ஒரு புள்ளிவிவரத்தில், 6 வயது முதல் 13 வயது வரையிலான குழந்தைகள் மத்தியில், சத்துக்குறைவு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 23%. அவர்களில் பாதிப்பேர் அதாவது 54% குழந்தைகள், அதீத சத்துக் குறைவில் உள்ளனர்.

இப்படியே போனால், 2018 என்ற புதிய ஆண்டு ஆதார் இல்லாததால் அதிக மரணங்கள் என்ற பட்டியலை எதிர்கொள்ளுமா?

(டெல்லியில் வாழும், தமிழரான ராமன் சுவாமி எழுதியதைத் தழுவி எழுதப்பட்ட கட்டுரை)

(கட்டுரையாளர் டி.எஸ்.எஸ்.மணி, தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்துவருபவர். தொடர்புக்கு: manitss.mani@gmail.com)

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0