சரவணன் சந்திரன்
அந்தப் பக்கமும் நிறைய நண்பர்கள் இருப்பதால் இதைப் பேசிவிடக் கூடாதெனத் தவிர்த்தே வந்திருக்கிறேன். ஆனாலும், எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக இதை எழுதுகிறேன்.
சினிமா துறையைச் சேர்ந்த நண்பர் ஒருத்தர் உடனடியாகச் சென்னைக்குக் கிளம்பி வந்து என்னைச் சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் செய்துவரும் வர்த்தகம் தொடர்பான அழைப்பு அது. பொருள் உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள்தானே வர வேண்டும் என்று சொன்னேன். அதைக் கேட்டுச் சிரித்த அவர், நான் ரெண்டு படம் பண்ணியிருக்கேன் என்றார்.
இத்தகைய பேச்சு எனக்குப் புதிதல்ல. எனக்காக ஒரு ஐந்து நிமிடங்கள் ஒதுக்குவீர்களா எனக் கேட்டுவிட்டுப் பொறுமையாக இப்படி அவருக்கு விளக்கிச் சொன்னேன்.
**இன்னொரு கோணம்**
உங்கள் துறை பலரால் அறியப்பட்ட துறையாக இருப்பதில் உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சி. பத்து லட்சம் பேர் அறியப்பட்ட மனிதராகவும் நீங்கள் இருப்பது கொடுப்பினைதான். என் உறவினர்கள், அண்ணன்கள், நண்பர்கள் பலர் அந்தக் கொடுப்பினையைப் பெற்றிருப்பதில் எனக்கு கர்வம்கூட உண்டு. அதேசமயம் இதில் இன்னொரு கோணமும் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
உங்களைப் பத்து லட்சம் பேருக்குத் தெரியும் என்பதற்காகவே இன்னொரு துறையில் வெறும் பத்துப் பேரால் மட்டுமே அறியப்பட்டவர் சிறியவர் ஆகிவிட மாட்டார். எனக்குத் தெரிந்த அண்ணன் ஒருத்தர் இந்தியா முழுவதிற்கும் இளநீர் வியாபாரம் செய்கிறார். சில வெளிநாடுகளுக்கும்கூட ஏற்றுமதி செய்கிறார். ஒரு தடவை அவரிடம், உங்களைப் பற்றி ஏதாவது பத்திரிகைகளில் எழுதச் சொல்லவாண்ணே என்றேன். “வேண்டாம் தம்பி. அது துயரமா போயிடும். டெய்லி யாராவது வந்து நின்னு வேலையக் கெடுப்பாங்க. தவிர அதில் எனக்கு விருப்பமும் இல்லை” என்றார் பணிவாக.
இரண்டு படங்கள் எடுத்தும் பேங்க் பேலன்ஸை அடிக்கடி எடுத்துப் பார்க்கும் நிலையில்தான் பெரும்பாலானவர்களை அந்தத் துறை வைத்திருக்கிறது. ஆனால் இளநீர் விற்கும் அந்த அண்ணன் மாதத்துக்கு ஒரு கார் புக் பண்ணிக்கொண்டிருக்கிறார்.
**சரஸ்வதிய விக்கக் கூடாதுண்ணே**
அவரை விடுங்கள். பணத்தை வைத்து எதையும் எடை போடக் கூடாது. தம்பியொருவன் டி.பி சத்திரத்தில் மிகச் சிறந்த மெக்கானிக். இருபத்தாறு வயதுதான் ஆகிறது. ஊரில் உள்ள அத்தனை மெக்கானிக்குகளும் அவனிடம் சந்தேகம் கேட்க வருவார்கள். எல்லார்ட்டயும் காசு கேளுடா என்றால், “அண்ணே சரஸ்வதிய விக்கக் கூடாதுண்ணே. என் குருநாதர் என்னிடம் காசு வாங்கிட்டா கத்துக் கொடுத்தார்?” என்றான். அவன் துறையில் அவன் பிஸ்த்து.
இப்படி தமிழ்நாட்டில் பல துறைகளில் பல பிஸ்த்துக்கள் இருக்கிறார்கள். திறமையிருந்தாலும் இன்னொரு துறையில் நுழைவதற்கு விருப்பம் இல்லாமல்கூட அவர்கள் இருக்கக்கூடும். அவர்கள் மேல் வெளிச்சம் பாய்வதில்லை. யாரும் அவர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுவதுமில்லை. அதற்காக அவர்கள் சிறியவர்கள் ஆகிவிட மாட்டார்கள். சினிமாவே பார்த்ததில்லை என்று சொன்ன பல பெரிய ஆட்களைப் பார்த்திருக்கிறேன். அதில் இந்த பல பிஸ்த்துகளும் அடக்கம். ஓர் உதாரணத்துக்காகச் சொல்கிறேன்.
பத்து லட்சம் பேரால் அறியப்பட்டவர்களும் பத்துப் பேரால் அறியப்பட்டவர்களும் இந்த பூலோகத்தில் கிடைக்கிற பெறுமதிகளுக்காகத்தான் முட்டி மோதிக்கொண்டிருக்கிறோம். சந்திர மண்டலத்தில் என்ன நடக்கிறது என்று ஆராய்ச்சி செய்கிற விஞ்ஞானியை ரெண்டு பேருக்குக்கூடத் தெரியாது. அதற்காக அவர் சிறியவர் ஆகிவிடுவாரா? நட்சத்திரங்களைக் கிட்டத்தில் போய் எண்ணுகிற விஞ்ஞானிகள் நமது திரை நட்சத்திரங்கள் எவரைக் காட்டிலும் பெரிய நட்சத்திரங்கள் இல்லையா?
**நட்சத்திரங்கள் கையில் நாப்கின்களை ஏந்தவைத்தவர்**
பல்வேறு துறை சார்ந்து பலர் சத்தமில்லாமல் இது போல சாதனைகளை நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கின்றனர். பாலிவுட் நட்சத்திரங்களைக் கையில் சானிடரி நாப்கின்களை ஏந்த வைத்தவர் ஒரு சாதாரண கிராமத்தான்தானே? வானத்தில் இருந்து குதித்து வந்தவர்களைப் போல நட்சத்திரங்கள் நடந்துகொள்ளக் கூடாது என கங்கணா ரணாவத் என்னும் நடிகை சொல்லவில்லையா? வெற்றி என்பது எது என்பது குறித்த அறியாமை நிலவுகிற சமூகத்தில் இதைத் தெரிந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
உங்களது துறையிலும்கூட கங்கணா போல நன்னம்பிக்கையாளர்கள் பலர் அப்படி இருக்கத்தான் செய்கிறார்கள். நம் துறையில் நாம். அவர்கள் துறையில் அவர்கள். வேறு எவரைக் காட்டிலும் ஒரு கலைஞனுக்கு அந்தப் புரிதல் வேண்டும். அப்போதுதான் கலை கைகூடி வரும். முடிந்தால் அந்த மெக்கானிக் தம்பியைப் போய் ஒரு தடவை தேடிச் சந்தித்து அவனோடு ஒரு தேநீர் அருந்திவிட்டு அவனோடு கைகுலுக்கி விட்டு வாருங்கள். இருவரது உள்ளங்கைச் சூடும் ஒன்றாகத்தான் இருக்கும் எனப் புண்படாத தொனியில் விளக்கிச் சொன்னேன்.
உலகம் எல்லோருக்குமானது. அதில் அவரவருக்கு அவரவர் இடமுண்டு. அதில் அவரவர் பேட்டையில் அவரவர் தாதா!
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: சரவணன் சந்திரன், ஊடகவியலாளர், எழுத்தாளர். நான்கு நாவல்களை எழுதியிருக்கிறார். பயணமும் வேளாண்மையும் இவரது செயல்பாடுகளின் மையம். தொடர்புக்கு: saravanamcc@yahoo.com)
�,”