h4>முத்துராசா குமார்
*அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை*
(அதிகாரம் 112 – நலம் புனைந்து உரைத்தல் – குறள் 1115)
மு.வ விளக்க உரை:
*அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.*
நமது தொன்ம இசையான பறையிசை வரலாற்றுக்கு தமிழ் இலக்கியங்களும், புனைவு எழுத்துகளும், ஆய்வுக் கட்டுரைகளும், நூல்களும் தவிர்க்க முடியாத சான்றுகளாக நிறைய இருக்கின்றன. அதேநேரத்தில் பறையிசை மற்றும் பறையிசைக் கலைஞர்கள் மீதான சாதிய ரீதியிலான தீட்டுகளும் தமிழ் சமூகத்தில் காலந்தொட்டு இருந்து வருகின்றன. அந்தப் பொதுபுத்தி தீட்டுகளை உடைக்கக் கூடிய அளவில் பறை சார்ந்த உரையாடல்களும், செயல்பாடுகளும் கடந்த சில வருடங்களில் தமிழகத்தில் மிகத்தீவிரமாக சாத்தியமாகிக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் கடைத்தட்டு மக்களுக்கான அடிப்படை வாழ்வாதார உரிமை மீட்புப் போராட்டக் களங்களில் விடுதலை இசையாகப் பறை இருக்கிறது. பலதரப்பட்ட நிகழ்ச்சிகள், விழாக்கள் பறையிசையோடு தொடங்கப்படுகின்றன. பறையிசைக்கென்று கலைத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிற்சிப் பட்டறைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாதி, மத, பாலினப் பிரிவினைகளற்று பல துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வமாகப் பறையிசையைக் கற்கின்றனர். பறையிசைப் பயிற்சிப் பள்ளிகளும், குழுக்களும் அதிகரிக்கின்றன. ஏராளமான இயக்கங்களும், அமைப்புகளும் பறையிசைக் கலைஞர்களுக்கான அங்கீகாரங்களை வழங்கி வருகின்றன. இணையதளங்களிலும், கல்விப் புலங்களிலும், பிறவடிவ கலைகளிலும் பறையின் பங்களிப்பு இருக்கிறது. ஒப்பீட்டளவில் முன்பைவிட இப்போது இவ்விஷயங்கள் சமூகத் தடுப்புகளைத் தாண்டி முன்னேறுகின்றன.
சாதிய அடையாளத்திற்குள் அடைக்கப்படும் பறையை, மனிதத்துக்கான பொது கலையாகவும், மண்ணின் தொல்லிசையாகவும், பெருமையாகவும் மீட்டெடுக்கும் இந்த வலுபயணத்தில் பறையிசை ஆசான்களின் பங்கும், உழைப்பும் அதிமுக்கியமான ஒன்று. நடப்புகால தமிழகத்தில் பலரது கடும்முயற்சியால் பறைக்கென்று உண்டாக்கப்பட்ட சமத்துவ வெளியும், மேடைகளும் ஆசான்களுக்கு அவர்களது காலத்தில் கிடைத்திருக்காது. அகத்திலும், புறத்திலும் அவர்களின் மேல் நிகழ்த்தப்படும் தீண்டாமைக் கொடுமைகளை வலியுடனும், சினத்துடனும் தாங்கிக்கொண்டு பறைச்சூட்டில் கலைவாழ்வை ஒப்புக்கொடுத்தவர்கள். தற்போதைய சூழலில் பறையிசைக் கலையை அச்சூட்டின் தகிப்பு தணியாது, சக மனிதர்களுக்குக் கற்றுக்கொடுக்கின்றனர். அந்தவகையில் தமிழகத்தின் அதிமுக்கியமான பறையிசை ஆசான்களில் ஒருவர், ‘சமர் கலைக்குழு’ இரா.வேல்முருகன் (எ) வேலு ஆசான்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இராமையா – பந்தானம் தம்பதியினருக்கு ஆறாவது பிள்ளையாகப் பிறந்தவர் வேலு ஆசான் (வயது 51). தந்தை இராமையா டூரிங் டாக்கீஸில் பட அறிவிப்புகளுக்கும், விளம்பரங்களுக்கும் பறையிசைத்துள்ளார். மற்ற நேரங்களில் கிடைக்கின்ற கூலி வேலைகள் அனைத்துக்கும் போய் குடும்பத்தைக் காப்பாற்றியுள்ளார். சிறு வயதிலேயே அப்பாவையும் அவருடைய பறையிசையையும் பார்த்து வியந்த ஆசான், அப்பாவிடம் பறையிசைக்கக் கற்றுக்கொடுங்கள் என்று கேட்டுள்ளார். தான் சொல்லிக்கொடுக்கக் கொடுக்க தீப்பெட்டியில் அடித்துக் காட்டச்சொல்லியுள்ளார் அப்பா. ஆசானும் தீப்பெட்டியில் அடித்துக் காட்டியுள்ளார். வேலு ஆசானின் முதல் பறை வாத்தியார் அவரது அப்பா இராமையா வாத்தியார்தான். வேலு ஆசானின் அப்பாவுடன் கூடப்பிறந்தவர்கள் யாரும் பறையிசைக்கவில்லை. ஆசானுடன் பிறந்தவர்களும் பறையிசைக்கவில்லை.
அதனால், வேலு ஆசான் பறை மீது ஆர்வம் செலுத்துவது வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை. பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த ஆசானுக்குப் படிப்பின் மீது நாட்டமே வரவில்லை. வேண்டா வெறுப்பாகத்தான் பள்ளிக்குப் போய் வந்துள்ளார். முனியாண்டி, முத்தாலம்மன், அய்யனார் தெய்வங்களுக்கு வருடா வருடம் ஊரில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வருடத்துக்கான சாமி சாட்டுதல் விழாவில் சேவுகன் வாத்தியாரும் அவருடன் இருந்தவர்களும் பறையிசைத்து சாமிகளை உருவேற்றியுள்ளனர். பக்கத்தில் சிறுபிள்ளையாக நின்றுகொண்டிருந்த ஆசானுக்கும் உருவேறியுள்ளது. இதைப் பார்த்த சேவுகன் வாத்தியார் ஆசானின் கையில் பறையைக் கொடுத்துள்ளார். ஆசானும் படு உக்கிரமாகப் பறையை அடித்துள்ளார். சேவுகன் வாத்தியார் அவரை மகிழ்ந்து பாராட்டியுள்ளார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட ஆசானது சித்தப்பா, ஆசானைக் கடுமையாகத் திட்டியுள்ளார்.
பிறகு, யாருக்கும் தெரியாமல் பக்கத்து ஊர்களில் நடக்கும் கிடாவெட்டு, சாவு வீடுகளுக்குப் போய் பறையிசைத்துள்ளர். அதில் அதிக அளவாக பத்து, பதினைந்து ரூபாய் வரை கிடைத்துள்ளது. எப்படியோ ஐந்தாம் வகுப்பு வரை வந்துவிட்ட ஆசான், ஒற்றைக்காது அறுந்த மஞ்சப்பையில் காலண்டர் அட்டையை வைத்துக்கொண்டு முழுப்பரீட்சைக்குப் போய்க்கொண்டிருக்கும்போது, ஊர்க்காரர் ஒருவர் வந்து பக்கத்து ஊரில் விழுந்த கேதத்திற்கு பறையடிக்க ஆசானைக் கூப்பிட்டுள்ளார். ஆசானோ பரீட்சை இருக்கிறதென்று சொல்லியுள்ளார். திண்டுக்கல் பன்னீர் வாத்தியார் குழு வந்திருக்கிறார்கள் அவர்கள்தான் பெரிய குழு என்று சொன்னவுடன், ஆசான் மிகுந்த ஆர்வத்தில் பையைக் கெடாசிவிட்டு பன்னீர் வாத்தியார் குழுவைப் பார்க்க போய்விட்டார். அந்தத் தருணத்திலிருந்து வேலு ஆசானின் கல்வி முற்றாகிவிட்டது. அதன்பின் சைக்கிள் கடை, பஞ்சாலை, சர்க்கரை ஆலை, அட்டைக் கம்பெனி என்று பல இடங்களில் வேலைப் பார்த்துவிட்டு மூட்டை சுமக்கும் தொழிலாளியாகவும் இருந்துள்ளார். போன எல்லா இடங்களிலும் ஆசானின் மதிக்குள் பறையிசைக் கேட்டபடியே இருந்திருக்கிறது. சுவர்கள், பெட்டிகள் என்று கிடைக்கும் பொருட்களிலெல்லாம் தாளம் போட்டுள்ளார். எதுவும் கிடைக்காதபட்சத்தில் வயிற்றில் தாளம் தட்டியுள்ளார். பறையிசை எங்கு கேட்டாலும் ஓட்டமாய் ஓடிப் பார்த்துள்ளார்.
நிரந்தர வேலைகள் இல்லாததால் வீட்டிலும் நாளுக்கு நாள் வசவுகள் அதிகமாகியுள்ளன. கோபித்துக்கொண்டு தனது அம்மா ஊரான மட்டப்பாறைக்கு நடந்தே போயுள்ளார். அந்த நேரத்தில் அப்பகுதியிலுள்ள வாடிப்பட்டி, வண்ணம்பட்டி, தருமத்துப்பட்டி, சிலுக்குவார்பட்டி பறையிசைக் குழுவினர் ஜிகினா உடைகள், கிலுகிலுப்பையுடன் வேகமாக பறையிசைத்துக் கொண்டே ஆடுவதில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளனர். கட்டபாஸ் வாத்தியார் ஆட்ட அடவுகளை வேலு ஆசானுக்குச் சொல்லிக் கொடுத்துள்ளார். மட்டப்பாறையில் செல்வராசு வாத்தியார் ஆசானுக்கு சின்னச் சின்ன சந்துகளுக்குள் ஆடும் நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்துள்ளார். சொல்லித் தந்தும் சரியாக ஆடவில்லையென்றால் வெற்றிலைப் போடும் பழக்கமுள்ள செல்வராசு வாத்தியார் முன்னே போகவிட்டு பின்னால் வெற்றிலை எச்சிலைத் துப்பிவிடுவாராம். பிறகு, வாத்தியார்கள் மலைச்சாமி, மகாமுனி, ராஜேந்திரன், மாரியப்பன், பாண்டி, முருகன் ஆகியோருடன் பயணித்து பறையிசையினைக் கடுமையாகக் கற்றுக்கொண்டுள்ளார். பெரும்பறைகள், இரும்புபறைகள் என்று அனைத்தையும் சுமந்துகொண்டு கால்நடையாகவே பல ஊர்களுக்குப் போய் நல்லது, கெட்டதுகளுக்குப் பறையிசைத்து ஆடியுள்ளனர். கால்கள் வலிக்கும்போதும், கண்மாய்கள், நீர்நிலைகளைக் கடக்கும்போதும் ஆசானைத் தோள்பட்டையில் தூக்கிக்கொண்டு நடப்பார்களாம்.
பல போராட்டங்களுக்குப் பிறகு தனது 26 வயதில் குமுதம் என்பவரைக் காதல் திருமணம் செய்துள்ளார் ஆசான். ஒரு ஆண், இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்துள்ளன. தமிழகம் முழுக்க உதிரியாகப் போய் பறையிசைத்து வந்துள்ளார். விடிய விடிய அடித்தாலும் சொற்ப வருமானம்தான் கிடைத்துள்ளது. குடும்பச் சுமைகள், வறுமைகள், சமூக ஒடுக்குமுறைகள் சூழ்ந்த நிலையில் பல்வேறு வேலைகளைப் பார்த்துள்ளார். இருந்தாலும் ஆசானைப் பறை விடுவதாகயில்லை.
நீண்ட இடைவேளைக்குப் பின் மதுரை அரசரடியில் நடந்த தலித் கலை விழாவில், தஞ்சையைச் சேர்ந்த பறையிசைக் குழுக்களின் ஆட்டத்தைப் பார்த்துள்ளார். அடுத்தடுத்த காலவோட்டத்தில் பறையிசைக் குழுக்கள் பெருக, அவர்களின் தாளங்களும், ஆட்டங்களும் மாறிக் கொண்டிருந்தன. எல்லாவற்றையும் கவனித்த ஆசான், சில வருடத்திற்குள் ‘அம்மன் ட்ரம் செட்’ என்ற குழுவினைத் தொடங்கியுள்ளார். பிறகு, தனது மகன் பெயரில் ‘முனீஸ்வரன் ட்ரம் செட்’டாக அதை மாற்றியுள்ளார். பல அவமானங்கள், புறக்கணிப்புகளைத் தொடர்ச்சியாக எதிர்கொண்டு இருந்திருக்கிறார். தனது வாத்தியார்களிடம் கற்றுக்கொண்ட எல்லா பாடங்களையும் ஒன்றுவிடாமல் நினைவுபடுத்தி திரும்பவும் உள்வாங்க ஆரம்பித்துள்ளார். அதுவரை கேத வீடுகள், திருவிழாக்களில் பறையிசைத்து ஆடிய வேலு ஆசான், தனது குழுவோடு மதுரை வடக்கு மாசி வீதியில், 1996ஆம் ஆண்டு முதன்முதலாக பெரியாரிய இயக்கத்தினரின் மேடையில் ஆடியுள்ளார்.
நாடகப் பயிற்சியாளரும், ஆசிரியருமான K.S.முத்து என்பவர், ஆசானின் குழுவுக்குப் புதிதாக ‘சமர் கலைக் குழு’ என்ற பெயரை வைத்துள்ளார். அதன்பின்னே பறை, பறையிசை சார்ந்த வரலாறுகள், பெருமைகள், அதன் வீரியங்களை அதிகமாகக் கேட்டு தெரிந்துகொண்டுள்ளார் ஆசான். தொன்றுதொட்ட அடக்குமுறைகளைக் களைய தமிழகம் முழுக்கப் பயணித்து பறையிசையைப் பயிற்சியாகக் கொடுக்கத் தொடங்கியுள்ளார். மாணவர்கள் பெருகியுள்ளனர். முதன்முதலாக 2008ஆம் ஆண்டு கலை விழாவுக்காக சீனாவுக்குப் பயணப்பட்டுள்ளார் ஆசான். அங்கு பல நாடுகளின் இசைக்கருவிகளின் மத்தியில் பறையிசைத்து ஆடியுள்ளார். அதிலிருந்து கர்னாடக இசை அது சார்ந்த இசைக் கருவிகள் மட்டுமின்றி மற்ற இசைக் கருவிகளையும், அதன் இசைகளையும் கூர்மையாக கவனிக்கத் தொடங்கியுள்ளார். பறையிலும் புதுப்புது தாளயிசை முயற்சிகள், அடவுகளை உருவாக்கி வருகிறார்.
தமிழகத்தின் எல்லா மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் பயணித்த ஆசான் மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை என்று பல நாடுகளுக்கும் பறையிசையைக் கொண்டுசேர்த்துள்ளார். அரசு விழாக்கள், கலை விழாக்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்குப் போய் நிகழ்ச்சிகள் நடத்தி பயிற்சிகள் தருகிறார். வேலு ஆசானிடம் பறையிசைக் கற்றுக்கொண்ட மாணவர்கள் பலர், அடுத்த தலைமுறை மாணவர்களை உருவாக்கி வருகின்றனர். எண்ணிலடங்கா பறையிசைக் கலைஞர்கள் ஆசான்களாக உருவாகியிருக்கின்றனர். நிறைய கலைக்குழுக்கள் உருவாகியதற்கும், உருவாகி வருவதற்கும் வேலு ஆசான் ஆணி வேராக இருந்துவருகிறார்.
அய்யா அழகர்சாமி விருது, சிறந்த மக்கள் கலைஞன் விருது, ஞானப்பறை, பறையிசை சிற்பி, கிராமிய கலைச்சுடர், தந்தை பெரியார் விருது, பாவலர் ஓம் முத்துமாரி விருது என்று பல விருதுகளைப் பெற்றுள்ள வேலு ஆசான், அதுபற்றிய துளியும் பெருமிதமில்லாது, வெள்ளந்தியாகப் பேசத் தொடங்கினார்,
‘கேத வீடுக, திருவிழாக்கள்ல போதையப் போட்டுக்கிட்டு மனுசங்க எல்லாம் மிருகமா மாறிடுவாய்ங்க. சாதியச் சொல்லித் திட்டுவாய்ங்க. குடும்பத்துலயும், சமூகத்துலயும் அவ்வளவு ஒடுக்கிருக்காய்ங்க. இந்தக் கொடுமைகள தாங்காம ஆரம்பகாலத்துல நிறைய பறைக் கலைஞர்கள், மத்த தோல்வாத்தியங்கள வாசிக்கப் போயிட்டாங்க. அந்த ரணத்தையெல்லாம் உள்ளுக்குள்ளேயே அடக்கி, பறையில இசையா வெளிக்காட்டி கடந்து வந்திருக்கோம். பறைதான் என் மூச்சு. பறைக்காக நான் வாழ்கையில நெறையா எழந்திருக்கேன். ஆனால், இப்ப வரைக்கும் அந்தப் பறை என்னைய விட்டுக் கொடுத்ததே கெடையாது. இத்தனக் காலத்துல ஒருநாள் கூட நான் பறை வாசிக்காம இருந்ததேயில்ல. பறை இழிவானதுன்னு சொல்றதெல்லாம் சுத்தப் பொய். பறை மேலயும், பறைக் கலைஞர்கள் மேலயும் இருக்கிற சாதித் தீண்டாமை சமீபமா கொஞ்சங்கொஞ்சம் கொறஞ்சுக்கிட்டு வருது. முழுசா கொறஞ்சுருச்சுன்னு சொல்ல மாட்டேன். பல பேரு ஆர்வமா கத்துக்கிட்டு இருக்காங்க. கூடிய சீக்கிரம் எல்லாரும் பறைய கையில எடுப்பாங்கன்னு நம்பிக்கை இருக்கு.
மனுஷன் நிரந்தரமில்லாதவன். கலை மட்டும்தான் நிரந்தரம். ஒரு கலை ஒசத்தி மத்த கலையெல்லாம் கொறச்சல்ன்னு சொல்லி தாழ்த்தி நடத்தக் கூடாது. மற்ற இசைக்கலைக்கும், இசைக் கலைஞர்களுக்கும் தர்ற மரியாதையையும், அங்கீகாரத்தையும், பொருளாதாரத்தையும் நம்ம மண்ணோட ஆதியிசையான பறைக்கும் தரணும். இசையும் ஆட்டமும் சேர்ந்து மனசையும், உடம்பையும் ஒரே நேரத்துல சீரா வச்சுக்கிற கலையிது. இன்னிக்கு தமிழ்நாட்டுல பறை சார்ந்த கலைக்குழுக்கள் நெறையா வந்துக்கிட்டு இருக்குறது ரொம்ப சந்தோசம். அதேநேரத்துல நம்மளோட பாரம்பரிய இசையான பறைக்கு பிளாஸ்டிக் தோல் மாட்டி அடிக்கிறது, கலையோட அழிவுக்கு வழிபண்ற வேல அது. நம்ம கலையோட வரலாறு, பெருமைய நம்ம மொதல உள்ளூற உணரணும். பறையிசைக் கலைஞர்களுக்கு கவர்ன்மென்ட் தர்ற ஊக்கத்தொகை, பென்ஷன் எல்லாமே இன்னும் முறைப்படுத்தி ஒழுங்குப்படுத்தணும்.
நான் என்னிக்குமே விருதுகள் மேல ஆசைப்பட்டது கெடையாது. தெறமையும் ஒழைப்புமிருந்தா இந்த விருதக, பாராட்டெல்லாம் நிச்சயமா தானா தேடிவரும். தமிழ்நாட்டுல ஒவ்வொரு மாவட்டத்துக்கும், வட்டாரத்துக்கும் தனித்துவமான பறைகள், தாளங்கள், அடவுகள், சொற்கட்டுகள், வாய்ப்பாடுகள், உடைகள் இருக்கு.
**(சென்னைப் பல்கலைக்கழகம், இதழியல் & தொடர்பியல் துறையின் ‘முற்றம்’ தமிழக நாட்டார்கலைகள் அரங்கக் குழு இயக்கிய, Parai is my Life – Velu aasan (2019) ஆவணப்படத்திலிருந்து)**
அந்தந்த மாவட்டத்துக்கு ரெண்டு மூத்த கலைஞர்களைத் தேர்வு செஞ்சு, அவுங்க மேற்பார்வையில ஆரம்பத்துலயிருந்து இப்ப வரைக்கும் அதுக எல்லாத்தையும் ஒண்ணுவிடாம எழுதி புத்தகங்களா போட்டு எல்லாருக்கும், எல்லா எடத்துக்கும் கொண்டு போய் சேர்க்கணும். ஒசத்தினு சொல்லிக்கிற மத்த தோல் வாத்திய இசை எல்லாத்தையும் பறையில இன்னும் சாத்தியப்படுத்திக் காட்டணும். இதுகளுக்குண்டான வேலைகளைத் தொடங்கிட்டேன். என் உயிர் போறதுக்குள்ள இதை நான் நடத்திக் காட்டுவேன்’ என்றார் ஆசான்.
ஆசானின் மகன் முனீஸ்வரனும் (வயது 23) தற்போது முழுநேர பறையிசைக் கலைஞராகப் பல்வேறு தளங்களில் திறம்பட பயணித்து வருகிறார். தனது வாழ்க்கையை வேலு ஆசான் என்னிடம் எவ்வித பாசங்குமற்று பகிர்ந்து முடித்தவுடன், ‘புல்லரிப்பு’ என்ற எனது கவிதையை வேலு ஆசானுக்கும், பறையிசைக்கும், பறையிசைக் கலைஞர்களுக்கும் படையலிடத் தோன்றியது,
**- புல்லரிப்பு -**
எங்கோ ஒரு மூலையில்
செத்த மாட்டின் தோல்
மயிர்கள் உதிர்த்து அம்மணமாகிறது.
சாணைப் பிடித்த வெயில் வெட்டி
அம்மணத் தோல் இறுகுகிறது.
வெயில் படிந்து
இறுகியத் தோல் பறையாகிறது
பறையில் விழுந்த செத்தை சத்தத்தில்
செவி திறக்கிறது.
வாட்டசாட்டமான தீ வாட்டிய
பறையின் வாசத்திற்கு
மூக்குத் துவாரங்கள் விடைக்கின்றன
லேசாய் கண் விழிக்கிறேன்
கொல்லப்பட்ட
மூதாதையர்களின்
அழுகிய உறுப்புகளைக் கிளறி
கைகளை மட்டும் பிய்த்தெடுத்து
அடிக்குச்சி சுண்டுக்குச்சியாக்கி அடிக்கிறேன்
அடித்த அடியில்
ஆடியக் கோப அடவுகளில்
மூதாதையர்களின் கைகளில் புல்லரிக்கிறது
எரிந்து கொண்டிருக்கும்
எனது சடலத்திலிருந்து
கைகளைப் பிடுங்கிச்சென்று
புல்லரிக்க வையுங்களென கொழுப்பு வடிய
எழுந்து முறுக்கி ஆடுகையில்
கனத்த கம்பு
எனது நெஞ்செலும்பை
அடித்து நொறுக்கி படுக்க வைக்கிறது
கம்பெங்கும் புல்லரிப்பு.
**கட்டுரையாளர் குறிப்பு**
முத்துராசா குமார் சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் M.A, M.Phil முடித்துள்ளார். விகடனில் முன்னாள் மாணவப் பத்திரிகையாளர். சுயாதீனப் பத்திரிகையாளராக இயங்கிவருகிறார். அச்சு மற்றும் இணைய இதழ்களில் கவிதைகளும், சிறுகதைகளும் எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள:
minnanjalpetti@gmail.com
�,”