சேது ராமலிங்கம்
அதானி குழுமக் கம்பெனிகள் வாங்கிய காட்டுப்பள்ளித் துறைமுகத்தின் விரிவாக்கத்திற்காக மிகப் பெரிய அளவில் கடற்கரைப் பகுதி அழிக்கப்படவுள்ளதாகச் சுற்றுச்சூழலியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காட்டுப்பள்ளித் துறைமுகத்தை அதானியின் துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் லிமிடெட் கம்பெனி முன்னதாக வாங்கியிருந்தது. அதானியின் கம்பெனிக்காக காட்டுப்பள்ளித் துறைமுகத்தை விரிவாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது காட்டுப்பள்ளித் துறைமுகத்தை மெரைன் இன்பிராஸ்டரக்சர் டெவலப்பர் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனி இயக்கிவருகிறது.
இந்தத் திட்டத்திற்கான சாத்தியப்பாடு அறிக்கை மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனத்துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டம் மொத்தம் 2120.28 ஹெக்டேர் பரப்பளவில் நிறைவேற்றப்பட உள்ளது. இதில் 440.8 ஹெக்டேர் அளவு நிலங்கள் கைவிடப்பட்ட உப்பளங்கள் ஆகும்.
திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுகள் செய்வதற்கான அதிகார வரம்புகளைப் பரிந்துரை செய்வதற்கான நிபுணர் மதிப்பீடுக் கூட்டம் கடந்த 4ஆம் தேதியன்று நடைபெற்றுள்ளது. விரிவாக்கத்திற்கான திட்டமானது கடற்கரை மண்டல ஒழுங்குமுறை 2011இன் விதிகளையும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டையும் மீறுவதாக உள்ளது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு மேற்கொள்வதற்காக எல் அண்ட் டி கட்டுமானக் கம்பெனியானது நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது கடந்த ஜனவரியிலிருந்து தொடங்கியுள்ளது. இது செப்டம்பர் 2018 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக்கப்படும் காட்டுப்பள்ளி துறைமுகம் ஆண்டுக்கு 259 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாளும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சரக்குகளில் திரவ நிலை எரிபொருட்களும் வாயுக்களும் அடங்கும். சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதியால் இந்தப் பகுதி முழுவதும் அடையவிருக்கும் சுற்றுச்சூழல் சேதம் கற்பனைக்கும் எட்டாதது.
காட்டுப்பள்ளியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் புலிக்காட்டு ஏரி உள்ளது. இந்த ஏரி நாட்டின் மிகப்பெரிய இரண்டாவது ஏரியாகும். சுற்றுச்சூழல்ரீதியாக மென்மையான பகுதியாகும். திட்டத்திற்குக் கடற்கரையிலிருந்து நிலங்கள் எடுத்துக்கொள்ளப்படுவதால் காட்டுப்பள்ளி பகுதி கடற்கரையிலிருந்து தொடங்கி புலிக்காட்டு ஏரி வரை மிகக் கடுமையான சேதம் அடையும்.
இது தொடர்பாக ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள கடலோரச் செயல்பாட்டுக் கூட்டமைப்பு, காட்டுப்பள்ளி துறைமுகத்தின் விரிவாக்கம் ஒரு தனியார் கார்ப்பரேட் கம்பெனிக்கான லாப வெறிக்காக மேற்கொள்ளப்படுகிறது எனக் கூறியுள்ளது. இதனால் ஏற்கனவே எண்ணூரிலுள்ள ரசாயனத் தொழிற்சாலைகளினால் கடற்கரை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது துறைமுக விரிவாக்கத்தினால் புலிக்காட்டு ஏரி அழியக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. புலிக்காட்டு ஏரி மட்டுமல்ல உப்பளங்களும் பாதிக்கப்படும் என்றும் அது கூறுகிறது.
2012இல் சாக் என்றழைக்கப்படும் இந்தியன் வானவியல் ஆராய்ச்சி அமைப்பின் வானவியல் அப்ளிகேஷன் மையம் (Space Application Centre – SAC) வெளியிட்ட அறிக்கையில், கடல் மட்டம் உயர்ந்துவருவதால் வரும் 2050இல் இந்தியாவிலுள்ள கடற்கரைப் பகுதிகளிலுள்ள 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட உள்ளனர். இதில் முக்கியமாக சென்னைக் கடற்கரையிலுள்ள 144 சதுர கி.மீ நிலமானது மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தினாலும் துறைமுகங்கள் அமைப்பது போன்ற செயல்பாடுகளினாலும் கடல் மட்டம் உயரலாம் எனத் தெரிகிறது.
எண்ணூர் துறைமுகத்தின் முதல் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான எம்.ராமன் சுற்றுச்சூழல் பாதிப்புகள் வரும் என்பதை 2012இல் அந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்போதே ஏற்றுக்கொண்டார். அவர் கூறுகையில், “எண்ணூர் துறைமுகத்திற்குச் சுற்றுச்சூழல் அனுமதி அளித்ததே சில நிபந்தனைகளின் அடிப்படையில்தான். எண்ணூர் துறைமுகத்தின் வடக்குப் பக்கத்தில் எந்த வளர்ச்சித் திட்டமும் அமைக்கக் கூடாது என்ற அடிப்படையில்தான் அனுமதி அளி்க்கப்பட்டது. ஆனால், முன்னதாக உள்ள காட்டுப்பள்ளித் துறைமுகமே 2004இல் இந்த நிபந்தனையை மீறித்தான் அமைக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது மேற்கொள்ளப்படும் துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டம் மேலும் சுற்றுச்சூழல் அழிவதற்கு வழி வகுப்பதாகும். எண்ணூர் துறைமுகத்தின் வடக்கு பகுதியில்தான் புலிக்காட்டு ஏரி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த கடற்கரை மற்றும் கடல் பகுதி மேலாண்மைத் திட்டத்தின் இயக்குநரகமும். புவியியல் துறை அமைச்சகத்தின் இயக்குநரகமும் எண்ணூருக்கான ஒரு கடற்கரை மேலாண்மைத்திட்டம் ஒன்றை தயாரித்துள்ளன. அதில், வடக்கு நோக்கி எந்த வளர்ச்சித் திட்டம் அமைக்கப்பட்டாலும் அது புலிக்காட்டுப் பகுதிக்கு தவிர்க்க முடியாத அச்சுறுத்தலாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.
அதானி குழுமத்திடமிருந்து பெற்ற ஆவணங்களில் திட்டத்திற்கான நிலங்கள் கையகப்படுத்துதல் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன. அதில் காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கமானது மொத்தம் 2120.28 ஹெக்டேர்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் 136.28 ஹெக்டேர்கள் தற்போது இருக்கும் பகுதியாகும். 761.8 ஹெக்டேர்கள் அரசு நிலங்களாகும். 781.4 ஹெக்டேர்கள் தனியார் நிலங்களாகும். கடற்கரை நிலங்களாக எடுத்துக்கொள்ளப்படும் நிலங்கள் 440.8 ஹெக்டேர் நிலங்களாகும்.
சமீபகாலமாக அரசு அதிகாரிகள் அதானி குழும அதிகாரிகளிடம் கடற்கரை நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாகப் பேசிவருகின்றனர் அவர்களின் திட்டப்படி கடற்கரையிலும் கடலிலும் அகழ்வுப் பணி மேற்கொண்டு அதில் கிடைக்கும் மணலைக் கொண்டு துறைமுகத்தினை ஆழப்படுத்தவும் அதன் மட்டத்தை உயர்த்தவும் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால் கடற்கரையின் சூழல் சமநிலை அளவில் பெரிதும் பாதிக்கப்படும்.
கடற்கரை மண்டல ஒழுங்குமுறைப் பகுதியிலுள்ள முதல் பகுதியில் அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தப் பகுதியில்தான் உப்பளங்கள் வருகின்றன. இப்பகுதி அழிக்கப்படுவதால் சூறாவளிப் புயல்கள் மற்றும் சுனாமி போன்றவற்றைத் தடுக்கும் இயற்கையான அரணாக உள்ள உப்பளங்கள் பாதிக்கப்படும்.
புலிக்காட்டுப் பகுதிக்கும் வங்காள விரிகுடாப் பகுதிக்கும் இடையே குறுகிய தடையாக மணல் திட்டு உள்ளது. இந்த மணல் திட்டு லைட் ஹவுஸுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தத் திட்டு ஏற்கனவே காட்டுப்பள்ளி துறைமுகத்தினால் அரிக்கப்பட்டுவருகிறது. துறைமுகம் விரிவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளதால் இந்த மணல் திட்டு கரைந்து, ஏரியானது கடலில் கலக்கும் மிகப் பெரிய பேராபத்து எற்படும். அது ஒட்டுமொத்தச் சூழல் அமைப்பையும் மீன்வளத்தையும் அழித்து விடும் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரிக்கின்றன.
புலிக்காட்டு எரியையும் சென்னையின் கடல் வளத்தையும் கடற்கரையையும் மாசுபடுத்திவிடக்கூடிய திட்டம் இது. கடலும் கடற்கரையும் மிகப் பெரிய அரிய வளங்கள். பூமியின் தட்பவெப்ப நிலையை சம நிலையில் வைத்திருக்கும் மாபெரும் சுற்றுச்சூழல் அமைப்பு இது. அதை அழிப்பதும் அதை குப்பைத் தொட்டியாகவும் கழிவு நீர்த்தொட்டியாகவும் பாவிப்பதும் மனித குலத்தையே அபாயத்திற்குள் தள்ளுவது ஆகும்.
*கட்டுரை எழுதத் துணை நின்றவை:*
1. கடலோரச் செயல்பாட்டுக் கூட்டமைப்பின் (Coastal Action Network—CAN) அறிக்கை –2012,2016-2017
2.எண்ணூர் துறைமுகத் திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை
3. CRZ Dossier (Coastal Regulation Zone Notification 1991 and Revised versions�,”